தீமைகள் புயலாய் வீசும்போது…!

Share this:

 

ங்கள் ஊரிலும் உங்கள் சமூகத்திலும் மக்கள் வெளிப்படையாக இறைவனுக்கு மாறு செய்கிறார்கள் – சமூகத் தீமைகள் தொற்றுநோய் போல் பரவி இருக்கின்றன. இத்தகைய நிலையில் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?…

‘தனிப்பட்ட வாழ்வில் நல்லவனாக இருந்தால் போதும்’ என்று திருப்தி அடைந்து, சமூகத் தீமைகளைக் குறித்து கண்ணை மூடிக் கொண்டு அசையாமல் உட்கார்ந்து விடுவீர்களா…? அல்லது தீமைகளை எதிர்த்துப் போராட தீவிரமாய் பாடுபடுவீர்களா?

இது மிகவும் பொறுப்பு வாய்ந்த – திட்டவட்டமாகப் பதில் காண வேண்டிய கேள்வியாகும். இது ஏதோ வாய்ப் பந்தல் போடுவதற்காக கேட்கப்படும் கேள்வி அல்ல.

நீங்கள் ஏதேனும் கருத்தரங்கிலோ, பட்டிமன்றத்திலோ கலந்து கொண்டு, உங்கள் வாதத்தை சுவை மிக்கதாக்கக் கூடிய கேள்வியோ, தலைப்போ அல்ல இது!

உங்களுடைய சாதுர்யமான பேச்சு, நாவன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தி, மக்கள் உள்ளத்தில் மதிப்பச்சத்தை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தக் கூடிய தலைப்பும் அல்ல இது!

மாறாக, மிகவும் தீர்க்கமாக விடை காண வேண்டிய கேள்வியாகும் இது. உங்கள் சமய நம்பிக்கைக்கு சோதனை வைக்கும் வினாவாகும் இது! வாயளவில் அல்ல, செயல் முறையில் பதில் அளிக்க வேண்டிய கேள்வியாகும் இது.

இந்த கேள்விக்கு நீஙகள் அளிக்கும் செயல்முறைப் பதில்தான் உங்களுடைய சமய ஆளுமை எப்படிப்பட்டது என்பதையும், இறைநெறியுடன் நீங்கள் கொண்டுள்ள தொடர்பையும் விளக்கும்.

அந்தச் செயல்முறைதான் நீங்கள் சத்தியத்தை பேணுபவரா அல்லது அதனை அலட்சியப்படுத்துபவரா என்பதை நிர்ணயிக்கும்.

அந்தச் செயல்முறைதான் நீங்கள் இறைநெறிக்கு வாய்மையானவரா, அல்லது தன்னலவாதியா என்பதை முடிவு செய்யும்.

உங்கள் அதிபதியாகிய இறைவனுக்கு நீங்கள் நம்பிக்கையானவரா அல்லது நம்பிக்கையற்றவரா என்பதையும் அதுதான் சொல்லும்!

இறைவனுக்காகவும் இறைநெறிக்காகவும் இன்னல்பட்டு, இறைவழியில் உறுதியாக நிலைத்து நிற்பவரா அல்லது அஞ்சி நடுங்கும் கோழையா என்பதையும் அக்கேள்விக்கு நீங்கள் அளிக்கப் போகும் செயல்முறை பதில்தான் தீர்மானிக்கும்.

அனைத்துக்கும் மேலாக இக்கேள்விக்கான பதில்தான் நீங்கள் இறைவனிடம் வெகுமதிக்கு உறியவரா அல்லது இழிவு தரும் தண்டனைக்கு உறியவரா என்பதையும் நிர்ணயிக்கும். ஆகவே மிகவும் பொறுப்பார்ந்த முறையில் விடை காண வேண்டிய கேள்வியாகும் இது!

தீமைகள் மலிந்திருக்கும் நகரில் காணப்படும் மூன்று பிரிவினர்:

ஓர் ஊரில் வாழும் மக்களில் மனசாட்சி என்பதே மரத்துப் போய்விட்டால், அந்த மக்கள் இறைவனைப் பற்றியோ, மறுமை நாள் பற்றியோ எந்தக் கவலையும் இல்லாமல் அலட்சியமாக வாழ்வார்கள். தீமைப் புயல் வேகமாக வீசத் தொடங்கும்போது அங்கு வாழும் மக்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.

1. முதல் வகையினர்: இறைவனை மறந்து அவன் விதித்த வரம்புகளை மீறுபவர்கள், இறைச் சட்டங்களை உடைத்து பாவங்களில் மூழ்கிக் கிடப்பவர்கள்.

2. இரண்டாம் வகையினர்: தன்னைப் பொறுத்தவரை பாவங்களில் இருந்தும், மாறு செய்வதிலிருந்தும் ஒதுங்கி நிற்பவர்கள். மற்றவர்கள் “எக்கேடு கெட்டால் என்ன” என்று கவலைப்படாமல் வாழ்பவர்கள்.

3.மூன்றாம் வகையினர்: இறைவழியில் உழைப்பவர்கள். தஙகளது இறுதி மூச்சு உள்ள வரை “இறைவனின் பூமியில் அவனுடைய சட்டங்களுக்கு மாறாக செயல்படுவோரை அவ்வாறு செயல்பட அனுமதிக்க மாட்டோம்” என்று முழங்குபவர்கள். அதற்காகப் பாடுபடுபவர்கள். இவர்கள் இறைவனுக்கு வாய்மையாக அடிபணிபவர்கள். மேலும் படைப்பினங்கள் மீது அக்கறை கொண்டவர்கள் ஆவர்.

இந்த மூன்று பிரிவினரில் முதல் பிரிவினரின் விவகாரம் மிகத் தெளிவானது. இறைவனின் கோபத்திற்கும் கடும் தண்டனைக்கும் உரித்தான கூட்டம் அது. மூன்றாவது பிரிவினரின் நிலையும் மிகத் தெளிவானதே! இவர்கள் இறைவனுக்கு வாய்மையாக அடிபணிந்து, தீமைகளை எதிர்த்துப் போராடுகின்றனர். ஆதலால் இறுதி வெற்றியும் ஈடேற்றமும் இவர்களுக்கு உண்டு.

இப்போது எழும் கேள்வி, இரண்டாவது பிரிவினரை பற்றியதே! இவர்களை எந்த வரிசையில் சேர்ப்பது?

தீயவர்களுக்கு உடன்படுவது இறைவனுக்கு மாறு செய்வதாகும்:

இந்த இரண்டாம் பிரிவினரின் மனநிலை இதுதான். “மனிதன் தன்னைப் பொறுத்தவரையில் தீமையிலிருந்து விலகி வாழ வேண்டும்; இறை தியானத்தில் மூழ்கியிருக்க வேண்டும்; தீயவர்கள் மற்றும் அக்கிரமக்காரர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடாது; தீயவர் செயல் குறித்து மனம் நொந்து பேசியோ அவர்களுடன் மோதலில் ஈடுபட்டோ தம் பொன்னான நேரத்தை வீணாக்கி விடக்கூடாது; உலகத்தை இப்படி பகைத்துக் கொள்ளத் தேவையில்லை. இறைவனுக்கு துரோகம் செய்பவர்களின் பின்னால் சென்று கொண்டிருப்பதை விட “பாதுகாப்பாக” இருந்து கொண்டு இறைநெறியைப் பேணினால் போதும்!

இந்த மனநிலை, தீமைகளுடன் – தீயவர்களுடன் உடன்பாடு கொள்ளும் மனநிலையாகும். தீமைகளுக்கு எதிராக களத்தில் குதிப்பதற்குப் பதிலாக அவற்றை சகித்துக் கொள்ளும் மனநிலையாகும் இது. தன்னுடைய கடுமையான முயற்சிகள் மற்றும் உழைப்பைக்  கொண்டு சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, அமைதியாக ஒரு மூலையில் அடங்கி விடும் மனநிலையாகும் இது. தனிப்பட்ட சமயப்பற்றில் மனநிறைவு கண்டு, சமூகத்தை ஷைத்தானிய சக்திகளிடம் ஒப்படைத்து விட்டு, தான் “பாதுகாப்பாக” இருக்க நினைக்கும் மனநிலை இது.

மேலோட்டமாக பார்க்கும்போது இத்தகைய மனநிலை, அமைதியை விரும்பக்கூடியது போலவும், யாருக்கும் தீங்கு விளைவிக்காதது போலவும், தீமையை வெறுப்பது போலவும் தெரிகிறது. அதனுடைய வெகுளித்தோற்றம் கண்டு நமக்கு பரிதாபம்தான் ஏற்படுகிறது.

ஆனால் ஒரு இறைநம்பிக்கையாளனின் கூர்மையான ஞானப் பார்வையிலிருந்து இந்த மனநிலையை நாம் அலசிப் பார்த்தால், இறைநெறி குறித்து “ரோஷம் இழந்த” மனநிலை இது என்பதைப் புரிந்துக்கொள்ளலாம். தீன் அல்லது வாழ்க்கை நெறி குறித்த இத்தகைய உணர்வின்மை ஒருவித ஒழுக்கக் கோழைத்தனமாகும். தன் இறைவனிடம் காட்டும் வாய்மையற்ற போராகும். மிக மோசமான அறியாமையும் மூடத்தனமும் ஆகும்.

 

 

குர் ஆன் மற்றும் நபி வழியின் ஒளியில் இந்த மனநிலையை உற்று நோக்கினால் – இறைநெறியின் முழு உணர்வுடன் இந்த மனநிலையை ஆராய்ந்துப் பார்த்தால் – வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் இதனைச் சற்று ஆய்வு செய்தால் – நீங்கள் மிகத் தெளிவாக பின்வரும் முடிவுக்குதான் வருவீர்கள்:

ஒரு முஜாஹிதீனுடைய – இறைவிருப்பத்திற்காகத் தன் உயிர், பொருள் ஆவி அனைத்தையும் அர்பணிக்கும் உணர்வுள்ள இறைநம்பிக்கையாளனுடைய மனநிலையாக இருக்க முடியாது இது! மாறாக மிகவும் கோழைத்தனமான, வாய்மையற்றவர்களின் மனநிலையாகும் இது. இறைவழியில் போராடி, விழுப்புண் ஏற்கும் நெஞ்சுறுதி இல்லாத – மலர்ப்பாதையில், நிழல்களின் கீழிருந்தே சுவனத்தை அடைய கணவு காண்போரின் மனநிலையாகும் இது.

இத்தகைய மனநிலை கொண்டவர்கள் எதிரிகளின் வாள் முனையை அல்ல தங்கள் பாதங்களில் சிறு முள் குத்துவது கூட பொறுத்துக் கொள்வதில்லை. இவர்கள் “இறைநெறியைப் பேணுகிறோம்” என்று சொல்லித் தங்களை தாங்களே ஏமாற்றத்தில் ஆழ்த்தி, மற்றவர்களையும் ஏமாற்ற விரும்புகிறார்கள்.

ஒருவருடைய வீட்டை சிலர் கோடாலியாலும், கடப்பாரையினாலும் தாக்கி நாசமாக்குகிறார்கள். தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். ஆனால் அவரோ அமைதியாக “இறை தியானத்தில்” மூழ்கி விடுகின்றார். நிலைமையை அவர் ஏறிட்டும் பார்ப்பதில்லை. இப்படிப்பட்டவரை “வீட்டை பாதுகாப்பவர்” என்றோ அதனை நேசிப்பவர் என்றோ அறிவுலகம் ஒப்புக்கொள்ளுமா? அவருடையை இந்த போக்கு வீட்டைப் பாதுகாக்கும் – நேசிக்கும் போக்கு அல்ல. இத்தகைய நடத்தையை மேற்கொண்டு “நான் வீட்டைப் பாதுகாப்பவன்” என்று அவர் வாதிடுகிறார் எனில் அதற்கு என்ன மதிப்பு இருக்க முடியும்? வீட்டின் பாதுகாப்பு பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தவர்கள், இவருடைய வாதத்தைக் கேட்டு மயங்குவார்களா அல்லது இவரை தண்டிப்பார்களா?

நன்மைகளை நிலைநாட்ட தீமைகளுடன் போராட வேண்டும்!

ஒளியை நீங்கள் நேசிக்கின்றீர்கள். அது பரவ வேண்டும் என்றும் விரும்புகின்றீர்கள். இருளை வெறுக்கின்றீர்கள். அது பரவக்கூடாது என்று ஆசைபடுகின்றீர்கள். அப்படியானால் இருளை எதிர்த்து போராட வேண்டி இருக்கிறது. இது மிகவும் தெளிவான ஓர் உண்மையாகும். இதற்கு வாதமோ, சான்றுகளோ தேவையில்லை.

ஓர் இடத்தில் இருளை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். அது படர்ந்திருப்பது குறித்து அலட்சியமாக இருக்கிறீர்கள் எனில் அதன் நேரடி பொருள், ஒளி மங்கி விடுவதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதே ஆகும். உண்மையை நீங்கள் விரும்புகிறீர்கள் எனில், பொய்யை வளர விடாமல் தடுக்க பாடுபடவேண்டியது அவசியமாகும். வாழ்வின் எந்த துறையிலாவது பொய் இருப்பது அனுமதித்து விடுவீர்கள் எனில், அந்தத் துறையில் உண்மைக்கு விடை கொடுத்து அனுப்பி விட்டீர்கள் என்று பொருள்.

தனிப்பட்ட – சமூக வாழ்வின் துறைகளில் அசத்தியத்தின் ஆட்சி நிலவுகிறது. சத்தியம் அமுக்கப்பட்டுக் கிடக்கிறது எனில் – எங்கெங்கு இவ்வாறு அசத்தியம் மேலோங்கியுள்ளதோ அங்கெல்லாம் சத்தியம் அமுக்கப்பட்டு அழிந்து விடும்.

 

 

அசத்தியம் மேலோங்குவதை அல்லது நிலைத்திருப்பதை நீங்கள் அனுமதித்தால் அதன் பொருள், நீங்கள் சத்தியத்தை அழிய விட்டு விட்டீர்கள்; சத்தியம் அழிவதில் மனநிறைவு கொண்டு விட்டீர்கள் என்பதே ஆகும்.

இந்த நிலையில் “நாங்கள் சத்தியத்தில்தான் இருக்கிறோம்” என்று நீங்கள் கூறினால் அது ஏமாற்று வாதமே ஆகும்.

அசத்தியத்துடன் செய்து கொள்ளும் உடன்படிக்கையின் தர்க்க ரீதியான பொருள் ஒன்றே; அதனைத் தவிர மற்ற அனைத்தும் தவறு என்றுக் கருதி, சத்தியம் அழிவதில் மனநிறைவு கொள்கிறீர்கள்! எங்கெல்லாம் தீமைகள் மலிந்துள்ளனவோ, எங்கெல்லாம் நன்மைகள் மங்கி விடுகின்றனவோ அங்கு தீமையை சகித்துக்கொள்வதன் பொருள், நன்மையை அழிக்கத் துணை போகிறீர்கள் என்பதே ஆகும்.

தீமைப் புயல் வீசும்போது இறையச்சமுள்ள வாழ்வும் பாதுகாப்பாக இருப்பதில்லை

இறைவனுக்கு மாறு செய்பவர்களும், அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவர்களும் இறைவரம்புகளை வெளிப்படையாக முறிக்கும்போது அதனை அனுமதிப்பது.

நாணயமற்ற – ஒழுக்கமற்ற செயல்கள் பரவ வாய்ப்பு அளிப்பது. அவற்றைத் தடுக்காமல் இருப்பது – இதற்கு பெயர் இறையன்போ. இறைவனுக்கு வாய்மையாக இருப்பதோ அல்ல. மாறாக, இறைவனுக்கு துரோகம் செய்யும் போக்காகும். சத்தியம் குறித்த ரோஷமற்ற போக்காகும். தீன் – இறைநெறியின் உணர்வுகளை முற்றிலும் இழந்தவர்களின் நடத்தையாகும். யாருடைய மனசாட்சி அறவே அழிந்துவிட்டதோ, தீனுடைய ஆழ்ந்த பார்வை யாருக்கு இல்லையோ அவர்களின் நடத்தையாகும்.

இறைவனுக்கு மாறு செய்யும் செயல்கள் தொற்று நோய் போல் பரவும்போது, தீமை வெள்ளம் கரை புரண்டு ஓடும்போது பெயரளவுக்கு “இறையச்சமுள்ள வாழ்வைப் பேணுகிறோம்” எனச் சொல்வதும், அந்த வாழ்வு பாதுகாப்பாக இருக்கும் என நினைப்பதும் பகற்கனவேயாகும்.  நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்தத் தீமைகள் உங்களைப் பாதிக்கவே செய்யும். பிறகு அவற்றுக்கு அஞ்சத் தொடங்குவீரகள். நாளடைவில் அவற்றுக்கு மரியாதை செலுத்தத் தொடங்கிவிடுவீர்கள். பிறகு உங்களுடைய நன்மைகள் அனைத்தும் பயனற்றுப் போய்விடும். தீமைகளுடைய அழுத்தம் வலுவடைந்துக் கொண்டே போகும். இறுதியில் தீமைகளை எதிர்த்துப் போரிட இயலாதவராகி விடுவீர்கள். பிறகு “நன்மையின் பாதை பாதுகாப்பானது அல்ல” என்று நீங்களே முடிவுக்கு வந்துவிடுவீர்கள். இவ்வாறு தீமைகள் பரவுவதற்கு உங்கள் நடத்தையும் போக்குமே துணையாக இருக்கும்போது – அதில் நீங்கள் மனநிறைவும் அடையும்போது — அனைத்தையும் அறிகிற, பார்க்கிற அந்த அதிபதி இதற்கு நேர் எதிரான விளவைத் தருவான் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

மார்க்க உணர்வற்ற நிலையின் உச்சக்கட்டம்

நீங்கள் சத்தியத்தை உண்மையாகவே நேசிக்கிறீர்கள்; இறை நெறிக்கு வாய்மையாக நடந்து கொள்கிறீர்கள்; நன்மைகளையும் நற்செயல்களையும் உளமார விரும்புகிறீர்கள் எனில்-

உங்கள் அதிபதியிடம் (இறைவனிடம்) வாய்மையாக நடந்து கொள்கிறீர்கள்; இந்த வாழ்க்கை நெறி குறித்து ஆழ்ந்த அறிவைப் பெற்றுள்ளீர்கள் எனில்-

உங்கள் உள்ளத்தில் தீமைகளைக் குறித்து கடுமையான வெறுப்பு தோன்றாமல் இருக்கவே முடியாது. இறைவனுக்கு மாறு செய்வதை எதிர்க்கும் உணர்வு உங்களிடம் இல்லாமல் இருக்க முடியுமா?

மாறு செய்தல் வெளிப்படையாக நடக்கும்போது, ஒழுக்கமற்ற செயல்களால் இறைவரம்புகள் மீறப்படும்போது, ஷரீயத் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது; நபிவழி கைவிடப்பட்டுக் கொண்டிருக்கும்போது நீங்கள் ஒரு மூலையில் முடங்கி உட்கார்ந்து தனிப்பட்ட முறையில் நாம் செய்யும் நன்மைகள் போதுமானவை என்று மனநிறைவு அடைவதோ, அவற்றைக் குறித்து உங்கள் உள்ளத்தில் அமைதியின்மை தோன்றாமல் இருப்பதோ சாத்தியமே இல்லை!

தீனுக்காக ரோஷம் கொள்ளும் பண்பு உங்களிடம் இருந்தால், சத்தியம் அழிவதைப் பார்த்து எப்படி உங்களால் அமைதியாக இருக்க முடியும்? சத்தியத்தை நேசிக்கும் உங்கள் மனதில் தீமைகளை எதிர்த்து, சத்தியத்திற்கு துணை போகும் ஆர்வ அலைகள் எப்படி எழாமல் இருக்க முடியும்?

தாம் இறைநம்பிக்கை கொண்டதன் காரணமாக, தீமைகளைக் கண்டு அமைதி இழந்து அவற்றை எதிர்த்துப் போராட சிலர் களத்தில் இறங்கி, கொடுமையாளர்கள் மற்றும் நாணயமற்றவர்களைத் தடுக்க முயல்கிறார்கள்; தீமைகளை அழிக்கக் கடுமையாகப் பாடுபடுகிறார்கள் எனில், இக்காட்சியைப் பார்த்த பிறகும், “நாம் தனித்து மூலையில் ஒதுங்கி நன்மை புரிந்து கொண்டிருக்கலாம்” என்ற ரீதியில் செயல்படுவது, மார்க்க உணர்வு மங்கிப் போனதன் உச்ச கட்டமாகும்.

தீமைகளை எதிர்த்துப் போராடுபவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் நீங்கள் தனித்து வாழ்ந்தால் அதன் பொருள் என்ன? அவர்களின் முயற்சிகளையும் கடும் உழைப்பையும் நீங்கள் மதிப்பதில்லை; அத்தகைய உழைப்பு, ஈடுபாடு, தீனை உயிர்ப்பிக்கும் முயற்சிகளிலிருந்து அவர்களைத் தடுக்கிறீர்கள் என்பது தான் பொருள். அதுமட்டுமல்ல, உங்களுடைய மார்க்க உணர்வு மங்கிப் போய் விட்டதால் அந்த போராட்ட வீரர்களைப் பார்த்து இவ்வாறு கூறுவீர்கள்; “சமூகத்திலுள்ள மோசமானவர்களின் பின்னால் ஏன் சென்று கொண்டிருக்கிறீர்கள்? அவர்களோ படிப்பினை மிக்க தண்டனைக்கு உரித்தானவர்களாய் உள்ளனர். அவர்களுக்கு அறிவுரைகள் சொல்வது வீண் வேலை. சமூகத்தைச் சீர் திருத்த வாய்ப்பே இல்லை. ஆகவே, நேரத்தை வீணாக்காமல் நீங்களும் ஒரு மூலையில் முடங்கி உட்காருங்கள்!”

இந்த “ஆலோசனைகளை” மேலோட்டமாகப் பார்க்கும் போது அப்பாவித்தனமாகவும், மார்க்கப் பற்று கொண்டது போலவும் தெரியலாம். ஆனால் இவை முஜாஹீதீன்களின் — போராட்ட வீரர்களின் உணர்வை மங்கச் செய்யும் ஆலோசனைகளாகும்: ஜிஹாத் செய்வோரின் உணர்வு நெருப்பை அனைத்துவிடும் ஆலோசனைகளாகும்: களத்தை விட்டு புறமுதுகிட்டு ஓடச் சொல்லும் ஆலோசனைகளாகும். இறைவனுக்கு வாய்மையாக வாழ விரும்புவோரை அவ்வாறு வாழாமல் இருக்கச் செய்வதற்கான ஆலோசனைகளாகும். இவை குர் ஆனுக்கும் நபிவழிக்கும் மட்டுமல்ல, அறிவுக்கும் புறம்பானவையாகும். வரலாறும் இதற்குச் சான்று பகர்கிறது.

இறைவனுக்குப் பணிந்து வாழாத ஓர் ஊரின் படிப்பினை மிக்க வரலாறு

வாருங்கள்! இந்த பிரச்னை குறித்து திருமறை என்ன கூறுகிறது என்று பார்ப்போம். இஸ்ராயீல்களின் வரலாற்றி லிருந்து படிப்பினையூட்டும் ஒரு நிகழ்ச்சியை வான்மறை நமக்கு எடுத்துரைக்கிறது. மிகச்சுருக்கமாக – ஆனால் விவேகத்துடன் மனத்தை ஈர்க்கும் பாணியில் அது எடுத்துரைக்கிறது.

தீமைகள் புயலாய் வீசும்போது ஓர் இறை நம்பிக்கையாளனின் மனம் எப்படி இருக்க வேண்டும்? ஓர் ஊரில் மக்கள் வெளிப்படையாக இறைவனுக்கு மாறு செய்கிறார்கள்: நாணமற்ற செயல்களைச் செய்கிறார்கள். தீமைகளிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். இச்சூழ்நிலையில் ஒரு மூமின் – இறை நம்பிக்கையாளன் – என்ன செய்ய வேண்டும்? எத்தகையச் சிந்ததனையும் செயலும் விரும்பத்தக்கவை. எத்தகையச் சிந்தனைப்போக்கு விரும்பத்தகாதது? எத்தகையச் செயல் ஈடேற்றம் தரவல்லது? எந்தச் செயல் இறைத் தண்டனைக்குரியது?

படிப்பினை மிக்க அந்த ஊரின் வரலாற்றை வான்மறை கூறுகிறது:

“கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்த ஓர் ஊரைப் பற்றியும் இவர்களிடம் நீர் கேளும். அங்கு வாழ்ந்த மக்கள் ஸப்த் – சனிக்கிழமைகளில் இறைக்கட்டளையை மீறியதை (இவர்களுக்கு) நினைவூட்டும்! அந்தச் சனிக்கிழமைகளில் அவர்களுடைய மீன்கள் தண்ணீரின் மேல்மட்டத்தில் உயர்ந்து அவர்களிடம் வரும். மேலும் சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவ்வாறு அம்மீன்கள் அவர்களிடம் வரமாட்டா. அவர்கள் கீழ்படியாதிருந்த காரணத்தினால் அவர்களை இவ்வாறு சோதனைக்குள்ளாக்கியிருந்தோம். மேலும் இவர்களுக்கு நினைவூட்டும்; அவைகளில் ஒரு குழுவினர் (மற்றொரு குழுவினரிடம்) எந்த மக்களை அல்லாஹ் அழிவிருக்கின்றானோ அல்லது கடுமையான தண்டனைக்கு ஆளாக்க இருக்கின்றானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுரை வழங்குகின்றீர்கள், என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “நாங்கள் உங்கள் இறைவனிடம் தகுந்த காரணம் கூறவேண்டும் என்பதற்காகவே இவர்களுக்கு நல்லுரை கூறுகின்றோம். மேலும், இதன்மூலம் இவர்கள் இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளவும் கூடும்” என்று பதில் கூறினார்கள். இறுதியில், அவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டிருந்தவற்றை முற்றிலும் அவர்கள் மறந்து விட்ட போது தீமைகளிலிருந்து தடுத்துக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம். அநீதி புரிந்த அனைவரையும் அவர்கள் கீழ்ப்படியாமலிருந்த காரணத்தால் கடுமையான வேதனை கொடுத்து தண்டித்தோம். (7: 163 – 165)

இந்த வசனங்களில் “ஊர்” என்பதற்கு அரபி மொழியில் “கரிய்யா” எனும் வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது. பெரிய நகரங்களும் இந்த வார்த்தையில் அடங்கும். மக்கா போன்ற பெரிய நகரங்களை குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

இஸ்ராயீல்களின் அந்த நகரம், போக்குவரத்து முதற்கொண்டு அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு முக்கிய நகரமாக இருந்து வந்தது. அந்த ஊர் மக்கள் மிகவும் செழிப்பாகவே வாழ்ந்து வந்தனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றுப்படி, அது மக்கா நகர் போன்ற புகழ் வாய்ந்த நகரமாக இருந்தது. ஆய்வாளர்கள் அதனை ஈலா அல்லது ஈலாத், அல்லது ஈலூத் என்று குறிப்பிடுகின்றனர். அந்தப் பகுதியில் இன்றைக்கு இஸ்ராயீல் நாட்டுத் துறைமுகம் அமைந்துள்ளது. அதற்கு அருகில்தான் ஜோர்டானின் முக்கிய துறைமுகமான “ஹூக்பா” உள்ளது.

அந்தக் காலத்தில் இந்த ஊர் பெரும் வணிகக் கேந்திரமாக விளங்கியது. சுலைமான் நபி(அலை) அவர்கள் இங்கு கடற்படைத் தளம் அமைத்திருந்தார்கள். இஸ்ராயீல் வரலாற்றில் ஹூக்பா பிரதேசம் முக்கியம் வாய்ந்ததாகும். குர் ஆன் கூறும் இந்த நகரம், முன்னேறிய நகரமாக – அறிவாற்றல் நிறைந்தோர் வாழும் நகரமாக விளங்கியது. ஆனால் அதே சமயம் இந்த நகரில் வாழ்ந்த பெரும்பாலோர் இறைக்கட்டளையை வெளிப்படையாக மீறிக்கொண்டிருந்தனர். ஒரு சிலர் தாம் சத்திய அழைப்பாலர் எனும் அந்தஸ்த்தில் தம் கடமையை உணர்ந்திருந்தனர். இன்னும் சிலர் தனிப்பட்ட மார்க்க பற்றுதல், நடைமுறைகளே போதும் என்ற மனநிறைவு கொண்டிருந்தனர். அநியாயக்காரர்கள் மத்தியில் அழைப்புப் பணி செய்வது வீண் வேலை என்று இவர்கள் கருதினர்.

இந்த மூன்று வகையினர் குறித்தும் நம்முன் தெளிவாக எடுத்துரைத்து, தீமைகள் புயலாக வீசும்போது மூமினின் — இறைநம்பிக்கையாளனின் மனப்பாங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதை குர் ஆன் அறிவுறுத்துகிறது.

அந்த ஊர் மக்கள் “ஸப்து” (சனிக்கிழமை) சட்ட திட்டங்களை வெளிப்படையாக முறித்தனர். அவற்றுக்கு மாறு செய்தனர் .யூதர்கள் சனிக்கிழமையை இறைவழிபாடு மற்றும் இறை தியானத்துக்குரிய சிறப்பு நாளாக கருதி வந்தனர். பல தலைமுறைகளாக இந்த நாள் தூய நாளாக கருதப்பட்டு வந்தது. அன்று இறைவணக்கம் மற்றும் மதச்சடங்குகளை மட்டுமே செய்ய வேண்டும். வேறு எந்த உலகியல் காரியங்களிலும் ஈடுபடக்கூடாது என்ற கட்டளை இருந்தது. வியாபாரம் செய்வது, வேளாண்மையில் ஈடுபடுவது, வேட்டையாடுவது போன்ற அனைத்துமே தடுக்கப்பட்டிருந்தன. வேலைக்காரர் களிடம் கூட வேலை வாங்க கூடாது. அடுப்பும் எரிக்கக் கூடாது, இப்படியெல்லாம் பல வரம்புகள் இருந்தன. இந்த வரம்புகளை மீறி உலகியல் காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை தரப்படும் என்ற விதியும் இருந்தது.

ஆனால் நன்றி மறப்பதிலும், இறைக் கட்டளைக்கு மாறு செய்வதிலுமே மூழ்கிக் கிடந்த அந்தச் சமுதாயம் “ஸப்த்” எனும் தூய நாளினைத் தன் தவறான நடத்தையால் பாழ்படுத்தியது. பல்வேறு சாக்குப் போக்குகளைச் சொல்லி தடை செய்யப்பட்டிருந்த விஷயங்களையெல்லாம் ஆகுமானதாக்கிக் கொண்டது. வெளிப்படையாக இறைவனுக்கு மாறு செய்யத் தொடங்கியது. இறை வரம்புகளை முறித்தது. இறைவனுக்கு எதிராக கிளர்ச்சி செய்தது. இறைவனும் அந்தச் சமுதாயத்தைக் கடுமையான சோதனையில் ஆழ்த்தினான்.

ஒரு சமூகம் இறைவனுக்கு பணியாமல் பகிரங்கமாகவே மாறு செய்து வாழ்கிறது எனில், இறைவனும் அந்தச் சமுதாயத்தை அதன் போக்கிலேயே விட்டு விடுகின்றான். அந்தச் சமுதாயத்தில் பாவச் செயல்களும், மாசுகளும், இழிதன்மைகளும் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இனி எந்தத் தீமையும் பாக்கி இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லாத் தீமைகளையும் அந்தச் சமுதாயம் செய்து வருகிறது. இவ்வாறு முதலில் அவகாசம் அளித்து, பிறகு இறைவன் அந்தச் சமுதாயத்தைக் கடுமையாகத் தண்டித்து விடுகின்றான்.

யூதர்களுக்கு அன்று ஏற்பட்டிருந்த சோதனை இதுதான். ஸப்த் — சனிக் கிழமை விதிமுறைப்படி தரையிலும் கடலிலும் வேட்டையாடுவது அவர்களுக்குத் தடுக்கப்பட்டிருந்தது. அதாவது சனிக் கிழமைகளில் மிருகங்களை வேட்டையாடக் கூடாது. மீன் பிடிக்கக் கூடாது! ஆனால் சனிக் கிழமையன்றுதான் மீன்கள் அலை அலையாக நீர் மட்டத்திற்கு மேலே வரும். மற்ற நாட்களில் காணாமல் போய்விடும். இவ்வாறு வேட்டையாடுவது தடை செய்யப் பட்டிருந்த நாளில் ஏதோ திருவிழா கூட்டம் போல ஏராளமான மீன்கள் நீர் மட்டத்திற்கு மேலே வருவதும், மற்ற நாட்களில் மருந்துக்குக்கூட ஒரு மீனை பார்க்க முடியாமல் போவதும் பேராசைப் பிடித்த ஒரு சமூகத்திற்குப் பெரும் சோதனையாகவே இருந்தது.

ஆனால் இறைவனுக்கு மாறு செய்வதையே தங்களின் தொழிலாகக் கொண்ட இந்த அக்கிரமக்காரர்கள், சிறு சிறு கால்வாய்கள் வெட்டினார்கள். சனிக்கிழமையன்று வரும் மீன்கள் இந்தக் கால்வாய்கள் வழியே அவர்கள் வெட்டி வைத்த பள்ளத்தில் வந்து விழும். இதர நாட்களில் அவற்றைப் பிடித்து சாப்பிடுவார்கள். இந்தத் தந்திரமான செயலின் மூலம் தடை செய்யப்பட்டிருந்த காரியத்தை அவர்கள் ஆகுமாக்கிக் கொண்டார்கள். இத்தகைய சூழ்ச்சியும் அக்கிரமும் நிறைந்த இந்தச் சமுதாயத்தார்களை குர் ஆன் மூண்று பிரிவுகளாக பிரிக்கிறது.

1. இறைவனுக்கு வெளிப்படையாக மாறு செய்தவர்கள்: இறை வரம்புகளை மீறியவர்கள். இந்தப் பிரிவினரைக் குறித்து குர் ஆன். “இவ்வாறு மாறு செய்பவர்களை சோதனையில் ஆழ்த்துகிறோம்” எனக் கூறுகிறது.

2. தம் பொறுப்பை உணர்ந்த இலட்சியக் குழுவினர் இறை வரம்புகள் மீறப்படுவதைக் கண்டு இவர்கள் கவலையும் துயரமும் அடைந்தனர். நன்மையை ஏவி, தீமையை விலக்கும் பொறுப்பை நன்கு உணர்ந்து அதற்கேற்ப செயல்பட்டனர். தவறு செய்யும் மக்களைத் துணிச்சலுடன் தடுத்தனர். இவர்களைக் குறித்துக் குர் ஆன் கூறுகிறது. “தீமைகளிலிருந்து தடுத்த மக்களைக் காப்பாற்றினோம்!” குர் ஆனின் இந்த வசனம் மிகவும் கவனத்திற்குரியது.

3. தம் கடமைகளில் அலட்சியமாகவும் மார்க்க ரோஷம் இல்லாமலும் வாழ்ந்த பிரிவினர் தீமையின் விளைவுகள் குறித்து இவர்கள் நன்கு அறிந்தே இருந்தனர். ஆனால் பாவம் செய்யும் மக்களிடம் சென்று நன்மையை ஏவவோ, தீமையைத் தடுத்து நிறுத்தவோ துணிச்சலின்றி வாழ்ந்தார்கள். மக்களை நன்மையின் பக்கம் அழைப்பது தம் பொருப்பு என நன்கு உணர்ந்திருந்தும் அதனைச் செயல்படுத்தாமல், தங்களைப் பொறுத்த வரையில் பாவங்களில் ஈடுபடாமல் நற்செயல் செய்து வந்தால் போதும் என்று திருப்தி கொண்டனர். தீமைகளின் பெருக்கம் குறித்து இவர்கள் கவலைப்படுவதில்லை. அவற்றுக்கு சவால் விடும் துணிச்சலும் இல்லை. அப்படியெல்லாம் செய்தால் பிறர் தம்மைத் துன்புறுத்துவார்கள். தொல்லைகள் தருவார்கள்: அவற்றையெல்லாம் யார் தாங்கிக் கொள்வது….? ஆக இந்தப் பிரிவினர் மார்க்க ரோஷம் இழந்திருந்தனர்: மார்க்கத்தின் சரியான நோக்கத்தை அறியாதிருந்தனர். நிராசையடைந்து ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தனர். அவர்களுடைய அறியாமையும், உணர்வின்மையும் எந்த அளவுக்கு வளர்ந்துவிட்டிருந்தன எனில், இறைவனுடைய வாய்மையான தொண்டர்கள் தீமைகள் எதிர்த்துக் குரல் கொடுத்தபோது, தீரமாக எதிர்த்து போராடிய போது, “அப்படிச் செய்யாதீர்கள்” இந்தப் பிரிவினர் “அறிவுரை” வழங்கினர். “பாவம் செய்பவர்களுக்குப் பின்னால் ஏன் போகிறீர்கள்? அவர்களுக்கு நல்லுரை வழங்குவதினால் என்ன பயன் விளையப் போகிறது…? இறைவன் அவர்களை வேதனைக்குள்ளாக்குவான்: நாம் ஏன் சிரமப்படவேண்டும்?” என்று “அறிவுறுத்தினர்!”

மார்க்க ரோஷம் இழந்த, தம் கடமையில் அலட்சியமாக இருந்த இந்த மூன்றாவது பிரிவினர் கூறியதை திருமறை இவ்வாறு எடுத்துரைக்கிறது.

“நீங்கள் ஏன் நல்லுரை கூறுகிறீர்கள்? அவர்களை இறைவன் கடுமையாகத் தண்டிப்பவனாக இருக்கிறான்!”

இப்படி மார்க்க ரோஷம் இழந்து, அழைப்புப் பணியில் அலட்சியமாக வாழ்ந்தவர்கள் அன்றுமட்டும் அல்ல, ஒவ்வொரு காலக் கட்டத்திலும் இருந்தார்கள். இன்றும் இருக்கின்றார்கள். “தனிப்பட்ட மார்க்கப்பற்று” என்ற ஓட்டுக்குள் இவர்கள் ஒடுங்கிக் கிடக்கிறார்கள்.

இந்தப் பிரிவினர் குறித்து திருக்குர்ஆன் என்ன கூறுகிறது…? இவர்களின் சிந்தனைப் பாங்கு மற்றும் செயல்முறை குறித்து குர் ஆன் வழங்கும் தீர்ப்பு என்ன?

இறைவேதனைக்கு ஆளான அந்த ஊர் மக்களை மூன்று பிரிவினராக குர்ஆன் எடுத்துரைக்கிறது. ஆனால் முடிவு சொல்லும்போது இரு பிரிவினரைப் பற்றி மட்டுமே பேசுகிறது. “தீமைகளிலிருந்து தடுத்துக் கொண்டிருந்த்வர்களை நாம் காப்பாற்றினோம். அக்கிரமம் புரிந்த அனைவரரையும் கடுமையான வேதனையால் பிடித்தோம்!”

திருக்குர் ஆனின் இந்த விளக்கத்தின்படி தீமைகளிலிருந்து மக்களைத் தடுத்துக் கொண்டிருந்தவர்கள் பாதுகாக்கப்பட்டனர் என்றும், தீமையில் உழன்றவர்கள் வேதனைக்குள்ளாயினர் என்றும் தெரியவருகிறது.

மூன்றாவது பிரிவினரின் முடிவு

மூன்றாவது பிரிவினர் பாவங்களிலிருந்து ஒதுங்கி நின்றனர். ஆனால் தீமை புரியும் மற்றவர்களை அவர்கள் தடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, தீமையிலிருந்து மக்களைத் தடுத்துக் கொண்டிருந்தவர்களை இவர்கள் தடுத்தனர். அந்தப் பணியில் ஈடுபடாதீர்கள் என்று “அறிவுரை” கூறினர். இத்தகைய மூன்றாவது பிரிவினரின் முடிவு குறித்து குர் ஆனில் எதுவும் கூறப்படவில்லை. எனவே நாம் இரண்டு கருத்துக்களைச் சொல்ல முடியும்.

1. மூன்றாவது பிரிவினரின் முடிவு குறித்து ஒன்றும் சொல்லப்படவில்லை. ஆதலால் இவர்களைப்பற்றி குர்ஆன் மெளனம் சாதிக்கிறது.

இந்தக் கருத்து அத்தனைப் பொருத்தமாகத் தெரியவில்லை. ஏனெனில் ஒரு விஷயத்தைக் குர்ஆன் மறந்து விட்டிருக்கும் என்று சொல்ல முடியாது. காரணம் இறைவாக்கு. மறதி போன்ற பலவீனங்களிலிருந்து அது அப்பாற்பட்டது. நற்செயலின் நல்விளைவையும் தீய செயலின் கோர விளைவையும் குர் ஆன் தெளிவாகச் சொல்கிறது. அப்படியிருக்க, முக்கியமான ஒரு பிரிவினரின் செயல் குறித்து அது விரும்பத் தக்கதா, இல்லையா. அந்தச் செயல் வெகுமதிக்குரியதா, தண்டனைக்குரியதா என்று சொல்லவில்லை என்று கற்பனை செய்ய முடியுமா?

2. மக்களைத் தீமையிலிருந்து தடுத்தவர்கள் நல்ல விளைவால் பாதுகாக்கப்பட்டனர். மீதியுள்ள அக்கிரமக்காரர்கள் வேதனைக் குள்ளாக்கப்பட்டனர். இதுதான் குர் ஆன் கூறும் தீர்ப்பு! முழு இறையச்ச உணர்வின் அடிப்படையில் – குர் ஆன் – ஹதீஸ் விளக்கத்தின் அடிப்படையில் பின்வரும் தீர்மானத்திற்குத்தான் வர வேண்டியுள்ளது.

குர் ஆன் விளக்கத்தின்படி தீமையிலிருந்து மக்களைத் தடுத்தவர்கள் மட்டுமே பாதுகாக்கப்பட்டனர். அந்த ஊரில் தீமைகளைத் தடுக்காதவர்களும் இருந்தனர். அவர்கள் பாதுகாக்கப்படவில்லை என்று இதிலிருந்து தெளிவாகிறது. இறைவனுக்கு எதிராக மக்கள் வெளிப்படையாக மாறு செய்தபோது தாங்கள் தடுக்காமல் இருந்ததை அவர்கள் குற்றமாகக் கருதவில்லை. ஓர் ஊரில் தீமைகள் மலிந்திருக்கும்போது அதனை களைய முடியாமல் இருப்பது இறைநெறிக்குச் செய்யப்படும் துரோகமாகும்.

ஓர் ஊரின் மீது அல்லாஹ்வின் வேதனை இறங்கும்போது அந்த ஊரில் வசிப்பவர்கள் செயல்களின் அடிப்படையில் இரு பிரிவினராக மட்டுமே பிரிக்கப்படுகிறார்கள். நற்செயல்களின் காரணமாக பாதுகாக்கப்படுபவர்கள் ஒரு பிரிவினர்: இரண்டாவது பிரிவினர், தீமைகள் காரணமாக வேதனைக்குள்ளாக்கப்படுபவர்கள். “மூன்றாவது பிரிவினர்” என்ற பேச்சுக்கே இடமில்லை. அதாவது தீமைகளிலிருந்து மக்களைத் தடுத்த நல்லவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் வேதனையால் பிடிக்கப்படுவார்கள். அவர்கள் தங்களைப் பொறுத்தவரை பாவம் புரியாமல் இருந்தாலும் சரியே; அல்லது தீமைகள் மலிந்த சூழ்நிலையில் அவற்றுக்கு எதிராக குரல் எழுப்பாதவர்களாக இருந்தாலும் சரியே; அல்லது நிராசை அடைந்து மூலையில் முடங்கி உட்கார்ந்திருந்தவர்களாக இருந்தாலும் சரியே!

பிறகு குர் ஆனின் இந்த வாக்கியமும் கவனத்திற்குரியது;  தம் பொறுப்பை உணர்ந்து தீமைகளைத் தடுத்துக் கொண்டிருந்தவர்களை மூன்றாவது பிரிவினர் தடுத்தபோது அவர்கள் கூறினார்கள் “உங்கள் இறைவனிடம் எங்கள் நிலையை சரியாக எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக!” அதாவது மறுமை நாளில் அல்லாஹ்வின் பிடியிலிருந்து இந்த வாதம்தான் அவர் களைக் காப்பாற்றும்: “எங்கள் இறைவனே! மக்களுக்குத் தீமைகளை தீமை என்று உணர்த்துவதில் எங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் செலவழித்தோம். எந்த வகையிலும் அப்பணியில் நாங்கள் குறை வைக்கவில்லை. இறுதி மூச்சு வரையில் தடுத்தோம்!”

மற்றோர் இடத்தில் குர் ஆன் கூறுகிறது:

“அந்தப் பாவத்தின் விளைவு குறித்து அஞ்சுங்கள். அது உங்களில் தீமை புரிந்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதல்ல!”

இந்த வசனத்திற்கு மொளலானா மொளதூதி (ரஹ்) அவர்கள் எழுதிய விரிவுரை மிகத் தெளிவானதும், மனத்தில் பதியக்கூடியதுமாகும்.

அந்த ஃபித்னா – அந்த குழப்பம் என்பது கூட்டு வாழ்வில் தலையெடுக்கும் – பரவலாகும் ஃபித்னாவாகும். பாவம் செய்பவர்கள் மட்டுமல்ல, அந்தப் பாவம் செய்யும் சமுதாயத்தில் மனமார வாழக்கூடியவர்களும் பலியாகி விடுகின்றனர். எடுத்துக்காட்டாக, ஒரு நகரத்தின் சிறு பகுதியில் அசுத்தங்கள் காணப்படுகின்றன. ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான மக்கள் தூய்மையாகத் திகழ்கிறார்கள். ஆனால் அந்த நகர்த்தில் அசுத்தங்கள் பெருகத் தொடங்கினால், அவற்றைத் துப்புரவு செய்ய போதிய ஏற்பாடுகள் செய்யாது போனால் பிறகு காற்று, நீர், பூமி அனைத்திலும் அசுத்தங்கள் ஊடுருவி விடுகின்றன. பிறகு அசுத்தங்களைப் பரப்புவோர், அவற்றைச் சகித்துக் கொள்வோர். அதை துப்புரவு செய்ய முயற்சி மேற்கொள்ளாதோர் அனைவருமே அதற்குப் பலியாகி விடுகின்றனர். ஒழுக்கக் கேடும் இது போன்றதுதான். சமுதாயத்தில் தனிப்பட்ட சிலரிடம் மட்டும் ஒழுக்கக்கேடுகள் காணப்படுமாயின் இழப்புகளும் வரையறைக்குட்பட்டதாகவே இருக்கும். ஆனால் ஒரு சமூகத்தின் கூட்டு மனசாட்சி பலவீனம் அடைந்தால் — தீய ஒழுக்கங்களை அடக்கி வைக்கின்ற வலிமையை இழந்துவிட்டால் — பிறகு நாணமற்ற — ஒழுக்கமற்ற செயல்கள் தலைவிரித்தாடத் தொடங்கும். அச்சமுதாயத்தில் வசிக்கும் சான்றோர்கள், தீமையின் பெருக்கத்தால் பாதிக்கப்பட்டு செயலிழந்து (Passive Attitude) மெளனமாகி விடுகின்றனர். அந்த நிலையில் முழுச் சமுதாயமும் வேதனைக்கு பலியாகும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. அச்சமயத்தில் ஒருசில நல்லவர்களும் தண்டனைக்குள்ளாகி விடுகின்றனர்.

ஆக, அல்லாஹ்வின் அருளுரையின் நோக்கம் இதுவே: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்தப் பணிக்கு எழுந்துள்ளாரோ – எந்த அழைப்பை விடுகின்றாரோ அந்தப் பணிக்கு ஒத்துழைப்பு தருவதிலும், அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதிலும்தான் தனி நபர் மற்றும் சமூகத்தின் வாழ்வு அடங்கியுள்ளது. அவவாறு ஏற்றுக் கொள்ளாமல் தீமைகளைச் சகித்தால் பெரும் ஆபத்து ஏற்பட்டு, சமூகத்திலுள்ள அனைத்து மக்களையும் தாக்கும். அப்பொழுது தீமையில் ஈடுபடாதவரும், தீமைகளைப் பரப்பாதவரும் கூட அதற்கு பலியாகி விடுவார்கள். (தஃப்ஹீமுல் குர் ஆன் பாகம் 2 பக்கம் : 138-139)

இந்தக் குர் ஆன் விளக்கங்களுடன் நபி (ஸல்) அவர்களின் அருள்மொழிகளையும் வைத்துப் பார்த்தால் விஷயம் இன்னும் தெளிவாகிவிடும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மேன்மை வாய்ந்த அல்லாஹ், குறிப்பிட்ட சிலரின் குற்றங்களுக்காக எல்லா மக்களுக்கும் வேதனை அளிப்பதில்லை. ஆனால் தீமைகள் நடப்பதைக் கண்டும். அவற்றைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் இருந்தும் மக்கள் மொளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தால் எல்லா மக்களையும் அல்லாஹ் வேதனைக்குள்ளாக்கிவிடுவான்”. (அஹ்மத், திப்ரானி)

இந்த அடிப்படைக் கொள்கையை இன்னும் நன்கு மனதில் பதியவைக்க, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இஸ்ராயீல்களின் படிப்பினையூட்டும் தன்மையை எடுத்துரைத்தார்கள். அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அருளினார்கள்:

 

“அனைத்துக்கும் முதலாக இஸ்ராயீல்களிடம் தலை தூக்கிய குறைபாடு இதுவே: அவர்களில் தவறு செய்யும் ஒருவரை இன்னொருவர் சந்தித்தால், “ஓ…! மனிதனே, இறைவனை அஞ்சு! இந்தத் தவறில் இருந்து விலகிக் கொள்” என்று கூறுவார். பிறகு மறுநாள் அவரை அதே நிலையில் பார்க்கும்போது, அவருடன் பழகும் வாய்ப்பு போய்விடுமே என்று வாய் திறவாமல் இருந்து விடுவார். இஸ்ராயீல்களின் சிந்தனையும் செயலும் இப்படி ஆன பிறகு அவர்கள் எல்லோரையும் ஒரே வகையினராய் – அல்லாஹ் ஆக்கி விட்டான்.” இதைக் கூறிய அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பின்வரும் வசனத்தை ஓதினார்கள்:

“இஸ்ராயீலின் வழித்தோன்றலில் எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்கள் தாவூது மற்றும் மர்யத்தின் குமாரர் ஈஸா ஆகியோரின் நாவினால் சபிக்கப் பட்டவர்கள். ஏனெனில் அவர்கள் (இறைக்கட்டளைக்கு) மாறு செய்தார்கள். தாம் செய்து கொண்டிருந்த தீய செயலிலிருந்து அவர்கள் ஒருவரையொருவர் தடுக்காமல் இருந்தார்கள். இவ்வாறு அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்கள் யாவும் மிகவும் தரங்கெட்டவையாய் இருந்தன. இன்று அவர்களில் பெரும்பாலோர் (இறை நம்பிக்கையாளருக்கு எதிராக) நிரகரிப்பாளர்களுக்கு ஆதரவாளர்களாயும் உற்ற நண்பர்களாயுமிருப்பதை நீர் காண்கிறீர். சந்தேகமின்றி அவர்களைத் தமக்காக சம்பாதித்தவை எத்துணைத் தரங்கெட்டவை! இதனாலேயே அல்லாஹ் அவர்கள் மீது கோபங்கொண்டான். மேலும் நிரந்தரமாக வேதனைக்கு அவர்கள் பலியாவார்கள். உண்மையிலேயே அவர்கள் அல்லஹ்வின் மீதும், இறைத்தூதர் மீதும், அவருக்கு இறக்கியருளப்பட்ட வேதத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருப்பார்களாயின் (நம்பிக்கையாளருக்கு எதிராக) நிரகரிப்போரை தம் உற்ற நண்பர்களாய் ஒருபோதும் ஆக்கிக் கொண்டிருக்கமாட்டடார்கள். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வுக்கு கீழ்படிவதிலிருந்து விலகிச் சென்று விட்டனர். (5: 78-81)

இந்த வசனங்ளை ஓதிய பிறகு அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அழுத்தமாகக் கூறினார்கள்: “எச்சரிக்கை! இறைவன் மீது ஆணையாக! நீங்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அநீதி மற்றும் கொடுமைகள் இழைப்போர் கரங்களைப் பிடித்து அவர்களை சத்தியத்தின் பக்கம் திருப்பவேண்டும். நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் உங்கள் இதயங்கள் ஒன்றுப்போல் ஆகிவிடும். யூதர்கள் சபிக்கப்பட்டது போல் நீங்களும் இறைச் சாபத்திற்கு ஆளாகி விடுவீர்கள்!”

(அதாவது இறையருளில் இருந்தும், வழிகாட்டுதலில் இருந்தும் எவ்வாறு யூதர்கள் தூக்கி எறியப்பட்டார்களோ அவ்வாறே உங்களையும் இறைவன் தூக்கி எறிந்து விடுவான்.)

இதே கருத்தினை மற்றொரு நபி மொழியிலும் காண்கிறோம். அப்துல்லாஹ் பின் மஸ் ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள். அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“இஸ்ராயீல்கள் இறைவனுக்கு மாறு செய்வதில் ஈடுபட்டபோது அவர்களைச் சேர்ந்த அறிஞர்கள் மாறு செய்யும் போக்கிலிருந்து விலகி இருக்கும்படி அறிவுறுத்தினார்கள். ஆனால் இஸ்ராயீல்கள் விலகவில்லை. அறிஞர்கள் அந்த மக்களை புறக்கணிப்பதற்குப் பதிலாக சேர்ந்து உட்கார்ந்து விருந்துண்டார்கள். நிலைமை இவ்வாறு ஆனபோது, அவர்கள் எல்லோரையும் இறைவன் ஒன்றுபோல் ஆக்கிவிட்டான்.”

மஸ் ஊத் (ரலி) அவர்கள் மேலும் அறிவிக்கின்றார்கள் “அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நன்கு நிமிர்த்து உட்கார்ந்த பிறகு கூறினார்கள்: “இல்லை! எவன் கையில் என் உயிர் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக! நண்மையை ஏவி, தீமையைத் தடுக்காவிட்டால் யூதர்கள் போல் நீங்களும் ஆகிவிடுவீர்கள்.!” (திர்மிதி)

இதேபோன்று மற்றொரு அறிவிப்பு “திப்ரானி” எனும் நபி மொழித் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது :

“மக்களே! உங்களுடைய பிரார்த்தனையும், பாவமன்னிப்புக் கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படாத நிலை வரும் முன்பே நீங்கள் நன்மையை ஏவுங்கள்: தீமையைத் தடுத்து நிறுத்துங்கள்!”

தனி நபரோ, குழுவினரோ தீமைகளைச் சகித்துக் கொள்கிறார்கள் எனில் அவர்களின் உள்ளங்களிலிருந்து “மார்க்க ரோஷம்” எடுபட்டு போய்விடும். பிறகு மாறு செய்வோருக்கும் இவர்களுக்கும் வித்தியாசமே தெரியாமல் — இருவரும் ஒன்று போலாகி விடுவார்கள்.

சத்தியம் – அசத்தியத்தின் போர்க்களம்தான் இந்த உலகம்! சத்தியத்திற்கு துணை போக வேண்டும் என்ற துடிப்பில்லாதவர்கள் சத்தியத்தை மேலோங்கச் செய்ய எப்படித் துணை போவார்கள்? பிறகு அத்தகைய மக்கள் வாழும் நகரத்தின் மீது இறைவனின் வேதனை இறங்கும் போது பாவிகள் மட்டும்தாம் தண்டனைக்குள்ளாவார்கள் எப்படிக் கூற முடியும்?

வான்மறை கூறுகிறது:

 

எந்த ஃபித்னாவின் – குழப்பத்தின் தீய விளைவு உங்களில் பாவம் புரிந்தவர்களைத் தாக்குவதுடன் மட்டும் நின்று விடாதோ, அந்தக் குழப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். மேலும், திண்ணமாக அல்லாஹ் கடுமையாகத் தண்டனையளிப்பவன் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். (8:25)

கடமையில் அலட்சியமாய் இருப்பதனால் ஏற்படும் விளைவு – நபி மொழி கூறுவதென்ன?

தீமைகளைக் கண்டும் அவற்றைச் சகித்துக் கொண்டு மனநிறைவுடன் வாழ்பவர்கள், தீமைகளுக்கு எதிராக தம் அருவருப்பைத் தெரிவிக்காமல் மனஅமைதியுடன் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள் அந்தத் தீமைகளினால் ஏற்படும் தீய விளைவுகளுக்கு நிச்சயம் பலியாகியே தீர்வார்கள். இந்தப் பேருண்மையை நபி (ஸல்) அவர்கள் தெளிவான ஓர் உவமையின் மூலம் மனதில் பதியும் வண்ணம் விளக்கியுள்ளார்கள்.

பின்வரும் நபிமொழியை நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிகின்றார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“இறைவரம்புகளைப் பேணி வாழ்பவர்க்கும் அதற்குக் குறைபாடு செய்பவர்க்கும் உள்ள உதாரணமாவது: மக்கள் ஒரு படகில் ஏறுகிறார்கள். சிலர் மேல் தளத்திலும் சிலர் கீழ் தளத்திலும் தங்குகிறார்கள். தண்ணீர் எடுப்பதற்காக கீழ் தளத்தில் உள்ளவர்கள் மேலே சென்றால், மேல் தளத்துக்காரர்கள் அவர்கள் வருவதை விரும்பவில்லை. இதனைக் கண்ட கீழ் பகுதியினர் “படகில் துளைப்போட்டு தண்ணீர் எடுத்துக் கொண்டால் பிரச்னை தீரும்” என்ற முடிவுக்கு வருகின்றனர். இந்நிலையில் மேலே இருப்பவர்கள் அவர்களைத் தடுக்காமல் விட்டுவிட்டால் அனைவரும் மூழ்கி விடுவார்கள். இதற்கு மாறாக கீழ்பகுதியினரின் கரத்தைப் பிடித்து தடுத்து நிறுத்தினால் அனைவரும் தப்பித்துக் கொள்வார்கள்!” (புகாரி)

உண்மையில் இஸ்லாமியச் சமூகம் உலக மக்கள் முன் சத்தியத்திற்கான சான்று வழங்கும் உன்னத பணியில் அமர்த்தப்பட்டுள்ளது, உலகத்திற்கு நேர்வழிக்காட்டும் உயர்ந்த அந்தஸ்து அச்சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மக்களின் குறைபாடுகள் பற்றி கவலைப்படவேண்டும். அவர்களை நீதியில் நிலைத்திருக்கச் செய்ய உழைக்க வேண்டும். தவறான போக்குகளின் அபாயங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும். இறைவரம்புக்குட்பட்டு வாழ்ந்து இவ்வுலகமெனும் கடலில், தம் வாழ்க்கைப் படகைச் சீராக நடத்திச் செல்லும் பொறுப்பு அந்த இஸ்லாமியச் சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வான்மறை கூறுகிறது:

மேலும் இவ்வாறே (முஸ்லிம்களான) உங்களை நாம் “உம்மத்தன் வஸத்தன்” — சமநிலையுடைய சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சாண்று வழங்குபவர்களையும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக!”

திருமறையின் இந்த வசனத்திற்கு மெளலானா மெளதூதி (ரஹ்) அவர்கள் வரைந்துள்ள விளக்கம் படிப்பினையூட்டக்கூடியதாகவும், பயன் மிக்கதாகவும் உள்ளது.

“இறுதித் தீர்ப்பு நாளில் மனித குலம் முழுவதையும் ஒன்று திரட்டி கணக்கு வழங்கப்படும். அப்பொழுது சீரிய சிந்தனை, நேரிய செயல், நீதிமிக்க அமைப்பு ஆகியவற்றைப் பற்றி அவர்களுக்கு நாம் (இறைவன்) அருளிச் செய்த ஞானத்தை எல்லாம் கூடுதல் குறைவில்லாமல் உங்களிடம் ஒப்படைத்த தோடல்லாமல், அவற்றின்படித் தாமே நடந்து காட்டினார் என்பதற்கு நம்முடைய அதிகாரப்பூர்வமான பிரதிநிதி எனும் தகுதியில் இறைத்தூதர் சாட்சியங் கூறுவார்.

அதன் பின்னர் “இறைத்தூதர் எங்களுக்கு போதித்தவற்றையெல்லாம் உலக மக்கள் அனைவர்க்கும் அறிவிப்பதிலும், இறைத்தூதர் எங்கள் முன் செயல்ரீதியாக எடுத்துரைத்த எல்லாவற்றையும் பின்பற்றி – செயல் ரீதியாக மக்கள் அனைவருக்கும் எடுத்துரைப்பதிலும் நாங்கள் எங்களுடைய சக்திகள், சாதனைகள், திறமைகள் முழுவதையும் ஈடுபடுத்திவிட்டோம். அதில் யாதொரு குறையும் வைக்கவில்லை என்று இறைத்தூதரின் பொறுப்புகளைப் பெற்றவர் என்ற தகுதியில் மக்கள் மீது நீங்கள் சாட்சியங் கூற வேண்டியதாயிருக்கும்.

தனி மனிதனோ, ஒரு குழுவோ அல்லாஹ்வின் சார்பாக இவ்வாறு உலக மக்களின் முன் சான்றாய்த் திகழும் தகுதியில் இருப்பதற்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளார் என்பதன் பொருள்: தலைமைப்பதவி, உலகிற்கு வழிகாட்டும் தகுதி ஆகிய சிறப்புகளால் அவர்கள் கெளரவிக்கப்பட்டுள்ளனர் என்பதேயாகும். நிச்சயமாக இது மேன்மையான நிலை, அருட்சிறப்புடைய நிலை. ஆனால் அதே சமயத்தில் இந்நிலையை அடையப்பெற்ற்வன் மீது ஒரு கடினமான பாரத்தை இது சுமத்தி விடுகிறது.

இதன் உட்கருத்து என்னவென்றால், ரஸூல்(ஸல்) அவர்கள், இந்த லட்சியக்குழு – உம்மத்தின் மீது இறையச்சத்திற்கும், நீதி நெறிக்கும், சீரிய நடத்தைக்கும், சத்திய வேட்கைக்கும் எவ்வாறு உயிருள்ள சான்றாகத் திகழ்ந்தார்களோ அதுபோலவே அனைத்துலகிற்கும் இந்த லட்சியக்குழுவும் உயிருள்ள சான்றாகத் திகழ வேண்டும். மேலும் அதன் சொல், செயல், நடைமுறை இன்னும் அதன் ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கும் உலகம் இறை வழிபாடு, இறைவனுக்கு கீழ்படிதல் ஆகியவற்றின் மறுபெயர் இதுதான்: சீரிய நடத்தை என்பது இன்னதுதான்: நீதி நெறி என்பது இதுவே: சத்தியம் போற்றுதல் இதுவேதான் என்று தெரிந்து கொள்ளும் வரையில் தொடர்ந்து சான்றாய் திகழ வேண்டியது இந்த உம்மத்தின் கடமையாகும்.

இறைவன் காட்டிய நேர்வழியையும், நல்லுரைகயையும் நம் வரை கொண்டு வந்து சேர்ப்பிப்பதற்காக அண்ணல் ரஸூல் (ஸல்) அவர்கள் மீது சுமத்தப்பட்ட கடமையும், பொறுப்பும் மிகக் கடுமையாக இருந்தன. அவ்வாறே ” உலகப் பொதுமக்கள் வரை இவற்றைக் கொண்டு வந்து சேர்க்கும் இந்தப் பொறுப்பு நம் மீது கடுமையாக சுமத்தப்பட்டு இருக்கிறது. எங்கள் இறைவா! ரஸூல் (ஸல்) அவர்கள் மூலம் நீங்கள் எங்களுக்கு அருளிய அறிவுரைகளை உன்னுடைய அடியார்கள் வரை கொண்டுவந்து சேர்க்கும் பணியில் நாங்கள் எந்தக் குறையும் வைக்கவில்லை” என்று இறைவனின் நீதிமன்றத்தில் நம்மால் சாட்சியங்கூற முடியாவிட்டால், நாம் இறைவனின் கடுமையான பிடிக்குள்ளாவோம். இந்நிலையில் தலைமைப்பதவி வகிப்பது நமக்கு பெருமையோ, சிறப்போ அளிக்காமல் நம்மைக் கவிழ்ப்பதற்கே காரணமாய் அமைந்துவிடும். நாம் தலைமைத்துவப் பொறுப்பு வகித்த காலத்தில் நாம் செய்த தவறுகள், நமது செயல்களில் ஏற்பட்ட அசட்டை ஆகியவற்றின் காரணமாகச் சிந்தனையிலும், செயலிலும் எத்தனை சீர்கேடுகள் உலகில் தலைத் தூக்கினவோ, எத்த்னைக் குழப்பமும் அமளியும் அல்லாஹ்வின் பூமியில் எழுந்தனவோ அவை அனைத்திற்காகவும், விஷமத்தை பரப்பிய தலைவர்கள், மனித இனத்திலும் ஜின இனத்திலும் உள்ள ஷைத்தான்கள் ஆகியோருடன் சேர்ந்து நாமும் இறைவனின் பிடியில் அகப்பட்டுக் கொள்வோம். உலகில் பாவச் செயல், அக்கிரமம், சீர்கேடு ஆகியவற்றின் புயல் வீறிட்டெழுந்து சுழன்றடித்துக் கொண்டிருந்த போது நீங்கள் எங்கு சென்று செத்து மடிந்த்தீர்கள் என்று நம்மிடம் விசாரிக்கப்படும். (தஃப்ஹீமுல் குர் ஆன் முதல் பாகம்)

நன்மையை ஏவுதல் – தீமையை தடுத்தலின் மார்க்கத் தகுதி

நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் வெறுமனே ஒரு விரும்பத்தக்க செயல்; அதனை நிறைவேற்றும்படி இஸ்லாமியச் சமுதாயத்திற்கு ஆர்வம் ஊட்டப்பட்டுள்ளது என்ற நிலை மட்டுமல்ல. மாறாக, இது இஸ்லாமியச் சமுதாயத்தின் தலையாய கடமையும். அது தோற்றுவிக்கப்பட்டதன் குறிக்கோளும், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறுதி நபியாக அனுப்பப்பட்டதன் நோக்கமும் ஆகும். இஸ்லாமியச் சமூகம் என்பது மற்ற சமூகங்கள் போல தன் கருத்தப்படி, தன் விருப்பப்படி இயங்கும் சமூகமல்ல. மாறாக, குறிப்பிட்ட குறிக்கோளின் அடிப்படையில் அது உருவாக்கப்பட்டுள்ளது. திருமறையில் அல்லாஹ் இச்சமுதாயத்தின் எதார்த்தத் தன்மையைத் தெளிவான வார்த்தைகளில் எடுத்துரைக்கின்றான்.

“இனி மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் (கைரே உம்மத்) நீங்கள் இருக்கின்றீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்; தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் நம்பிக்கை கொள்கின்றீர்கள்”(3:110)

இந்த இலட்சியக் குழு “கைரே உம்மத்” என்று கூறப்பட்டதன் காரணமே, அது நன்மையை ஏவி, தீமையிலிருந்து தடுக்கும் அழகிய பணியை செய்கிறது என்பதாலேயே ஆகும். இக்கடமையை நிறைவேற்றும்போதுதான் அதற்குரிய சிறப்புத் தகுதி கிடைக்கிறது.

இச்சமூகம் தான் அமைக்கப்பட்டதன் இந்தத் தூய நோக்கத்தை – தன்னுடைய மாபெரும் கடமையைப் புறக்கணித்து விட்டால் பிறகு அது சிறப்புக்குரியதாக இருக்க முடியுமா? இந்தச் சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஏதேனும் ஒரு கட்டத்தில் தன் பிரச்னையை மட்டும் கவனிக்கும் குறுகிய வட்டத்தில் முடங்கிக் கிடக்க முடியுமா? அவ்வாறு தன்னை மட்டும் கவனித்துக் கொண்டு சமூகம் பற்றிய உணர்வின்றி இருக்க முடியுமா?

இத்தொடரில் வான்மறையின் ஒரு வசனத்திற்கு சிலர் தவறான விளக்கம் கூறுகிறார்கள். இந்த வசனத்தின் நோக்கத்திற்கே எதிரானது. பலவீனமான நம்பிக்கை கொண்டவர்கள் அந்த வசனத்தின் எதிரான திசையில் சென்று விடுகிறார்கள்.

அந்த வசனம் இதுவே:

“இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களைப் பற்றி நீங்கள் கவலைப் படுங்கள், நீங்கள் நேர்வழியில் இருந்தால் மற்றவர்களின் வழிகேடு உங்களுக்கு எந்தத் தீங்கையும் செய்திடாது.” (5 : 105)

அழைப்புப்பணி, ஜிஹாத், அதற்காக போரடுதல் ஆகிய கடினங்களில் இருந்து முகம் திருப்புபவர்கள் இந்த வசனத்திற்குத் தவறான கருத்து கொண்டுள்ளனர். தங்களித் தவிர பிறரைப் பற்றிய சிந்தனை தங்களுக்கு இல்லை: மற்றவர்கள் ஒழுக்கக் கேடுகள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை: சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதில்லை: தங்களைப் பற்றி கவலைப்பட்டால் போதுமானது என்று வாதிடுகின்றார்கள்.

இந்தத் தவறானக் கருத்து ஏதோ இன்று நேற்று தோன்றியதல்ல: மாறாக துவக்க காலத்திலேயே இத்தகையக் கருத்துகளுக்கு சிலர் பலியானார்கள். அப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் செயல்முறையை நன்கு கற்றிருந்த, தீனின் தேட்டத்தை முழுமையாக அறிந்திருந்த அபூபக்கர் (ரலி) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் இத்த்கைய கருத்துக்கள் தவறானவை என்று எடுத்துரைத்தார்கள். நபி மொழியின் ஒளியில் அத்திருவசனத்தின் பொருளைப் புரிந்துக் கொள்ளும்படி மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

அபூபக்கர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

மக்களே நீங்கள் இந்த குர் ஆன் வசனத்தை படிக்கின்றீர்கள். நான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். ஒரு கொடுமையாளன் கொடுமை புரியும்போது மக்கள் அவன் கரத்தை பிடித்து தடுக்கவில்லையானால், விரைவில் அல்லாஹ் தண்டனையை மக்கள் மீது அனுப்புவான்.

மேலும் அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆற்றிய உரையையும் கவனியுங்கள்: “மக்களே! குர் ஆனின் இந்த வசனத்தைப் படிக்கின்றீர்கள். ஆனால் அதற்குரிய சரியான பொருளை நீங்கள் எடுத்துக் கொள்வதில்லை. குர்ஆனின் நோக்கத்திற்கு மாறாகப் பொருள் கொள்கின்றீர்கள். நான் இறைதூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளதைக் கேட்டுள்ளேன். “நீங்கள் ஒரு தீமையைப் பார்த்து அதனைத் தடுக்க முயலாவிட்டால் விரைவில் அல்லாஹ் வேதனையை அனுப்பி வைப்பான்!” எனவே நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் இப்பணியைத் தொடர்ந்து செய்த வண்ணம் இருங்கள்; இந்த வசனத்திற்கு தவறான கருத்து கொள்ளாதீர்கள். “என்னுடைய பொறுப்பெல்லாம் என் செயலைப் பற்றி மட்டும்தான் என்று திருப்தி அடையாதீர்கள்.”

மேலும் கூறினார்கள்:

“இறைவன் மீது ஆணையாக! நீங்கள் கண்டிப்பாக நன்மையை ஏவிய வண்ணமும், தீமையைத் தடுத்த வண்ணமும் இருங்கள். இல்லாவிட்டால் உங்கள் மீது இழிவானவர்களை ஆட்சியாளர்களாய் இறைவன் திணித்து விடுவான். பிறகு அம்மக்களின் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா!”

ஆக, தீமைகள் புயலாய் வீசும்போது ஓர் இறைநம்பிக்கையாளனின் பொறுப்பு என்ன? இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இஸ்லாமிய அறிஞர் மொளலானா மொளதூதி (ரஹ்) அவர்களின் கருத்துக்கள் இங்கே கவனிக்கத் தக்கது:

“சீர்கேடுகள் தலை விரித்தாடுகின்றன; அவற்றையெல்லாம் களைந்தெறிவது முடியாத செயல்” என்று மக்கள் கருதுகிறார்கள். நான் உங்களிடம் ஓர் உண்மையைத் தெளிவாக எடுத்துக் கூற விரும்புகின்றேன். இந்தப் பாதையில் இருக்கும் தடைகள், கடினங்கள் ஆகியவற்றை நீங்கள் இன்னும், பன்மடங்கு அதிகப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அத்தகைய நிலையிலும் ஓர் இறைநம்பிக்கையாளன் இவ்வாறுதான் சிந்திக்க வேண்டும்; “இத்தகைய நிலைக்கு எதிரில் போராடாமல் நான் சரணடைந்துவிட வேண்டுமா? இந்தப் பொங்கி வரும் பெருவெள்ளம் அடித்து செல்லும் திசையில் என்னையும், அடுத்தத் தலைமுறையையும் துரும்புகள் போல் விட்டு விடுவதா? அல்லது என்னிடம் இருக்கும் ஆற்றல்கள், சக்திகள் ஆகியவற்றை திரட்டிக்கொண்டு என்னால் இயன்ற வரை அதனை எதிர்த்து கடும் போராட்டத்தில் ஈடுபடுவதா? இதன் விளைவாக என் கை கால்கள் வெட்டப்பட இருந்தாலும் நான் போராடுவதா?”

“ஒவ்வொரு மனிதனும் ஆற அமர சிந்திக்க வேண்டும்: “இந்த நிலையைக் கண்டு நிராசையில் மூழ்கி, இந்தத் தீமைகளின் எதிரில் சரணடைந்து அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அவை எந்தத் தீமையின்பால், அழிவின்பால் விரட்டிச் செல்கின்றனவோ, அத்திசையில் ஓட நான் தயாராகி விட வேண்டுமா?”

இறைநம்பிக்கையின் ஒரு சிறு பொறியேயேனும் தன்னுள் கொண்ட மனிதன் இதற்குத் தயாராக மாட்டான். பிறகு, வல்ல இறைவன் தனக்குக் கொடுத்துள்ள வலிமைகள், ஆற்றல்கள் ஆகியவற்றைத் திரட்டிக் கொண்டு நிலைமையை ஒழுங்குபடுத்த மும்முரமாக இறங்குவதைத் தவிர அவனுக்கு வேறு வழியே இல்லை! இதன் விளைவாக அவனுக்கு வெற்றி கிட்டினாலும்  சரியே; கிட்டாமல் போனாலும் சரியே!

ஓர் உண்மையை நன்கு புரிந்துக் கொள்ளுங்கள்; தீமைகளைத் தடுப்பது, நன்மைகளின் பால் மக்களை அழைப்பது, நன்மைகளை நிலைநாட்ட, நன்மைகளை நிலைநாட்ட முயற்சி செய்வது – இவைதாம் இறைநம்பிக்கையாளனின் கடமைகளாகும்.

ஆனால், தீமைகளைத் திட்டவட்டமாக பூண்டோடு அழித்து விடுவது, நன்மைகளை வேரூன்றி நிலைக்கச் செய்துவிடுவது இறைநம்பிக்கையாளனின் பொறுப்பல்ல. மாறாக, இது வல்ல இறைவனின் நாட்டத்தைப் பொறுத்தே இருக்கிறது.

வல்ல இறைவன் இந்தச் சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்ற நாடினால், நம்முடைய முயற்சிகளில் அவன் பாக்கியங்களை அருள்வான். அவை தம் இலக்கை அடையும்!

இதற்கு மாறாக, வல்ல இறைவனின் நாட்டம் அவ்வாறு இல்லை என்றால், நம் முயற்சிகள் அந்த இலக்கை இங்கு அடைந்திட முடியாது. உலகமக்களின் பார்வையில், நாம் பெரும் தோல்வி அடைந்தவர்களாய் காட்சியளிப்போம். ஆனால், நாம் வாய்மையாக இந்த முயற்சியை செய்துவிட்டிருந்தால், வல்ல இறைவனிடம் நாம் தோல்வி அடைந்தவர்களல்லர்! மாறாக, கடைசி மூச்சு வரை நம் பணியை முழுமனதுடன் செய்து முடித்த பணியாளராக – வெகுமதிக்குரியவராகத் திகழ்வோம்.

_.oOo._


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.