தொழுகையைப் பாழ்படுத்தும் குறைகளும் தவறுகளும்

Share this:

“வணங்கத் தகுதியானவன் இறைவன் ஒருவனே! முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதராவார்கள்” எனும் பொருள் படும் லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற உறுதிமொழியை ஒருவர் முன்மொழிந்து இஸ்லாத்தைத் தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு விட்ட ஒருவர் மீது நாள்தோறும் ஐவேளைத் தொழுகையானது கட்டாயக் கடமையாகி விடுகின்றது. தொழுகை என்பது இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள நேரடித்தொடர்பாகும். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள இந்த அற்புதப் பிணைப்பில் இடைத்தரகர்களோ அல்லது புரோகிதர்களோ கிடையாது என்பதே இஸ்லாத்தின் தனித்துவமாகும்.

மேலும், தொழுகையின்போது ஒருவன் உள்மன அமைதியையும், மகிழ்ச்சியையும், ஆறுதலையும் இறைவன் மூலம் பெற்றுக் கொள்கின்றான்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஓ! பிலாலே! தொழுகைக்காக மக்களை அழையும், அதன் மூலம் இறைவன் நமக்கு ஆறுதலையும் மனச்சந்தோஷத்தையும் அளிக்கட்டும், என்றார்கள். (நூல்கள்: முஸ்னத் அஹ்மத், ஹதீஸ் எண்:22578 மற்றும் அபூதாவூத், ஹதீஸ் எண்:4985)

தொழுகையில் பேணுதலாய் இருப்பவர் ஏனைய கடமைகளிலும் பேணுதலாய் இருப்பார் மேலும் பேணுதலான தொழுகை முனாஃபிக் எனும் வெறுக்கத்தக்க பண்பை மாற்றுகிறது எனும் நபிமொழிகளுக்கேற்ப நமது அன்றாட தொழுகைகளை பேணுதலாக நிறைவேற்ற மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இறைவனிடமிருந்து மனித குலத்திற்குக் கிடைத்த மகத்துவமிக்க தொழுகை எனும் இவ்வருளை முறையாகப் பேணித் தொழுவதன் மூலம் இம்மையிலும்  மறுமையிலும் கிடைக்கும் பயன்கள் அளப்பரியன.

பேணுதலான ஒருவரின் தொழுகையைப் பாழ்படுத்தும் சில செயல்களையும் அவற்றிற்கான தீர்வுகளையும் நபிமொழிகள் கொண்டு இங்கே பட்டியலிட்டுள்ளோம்:

1. சூரா ஃபாத்திஹாவை நிறுத்தி நிதானமாக ஓதாமல் வேகமாக ஓதுவது:

நபி(ஸல்) அவர்கள், சூரா ஃபாத்திஹாவின் ஒவ்வொரு வசனத்தையும் நிதானமாக நிறுத்தி ஓதுவார்கள் (அபூதாவூத்)

2. ஸஜ்தாவில் இரு கைகளையும் உடம்போடு ஒட்டி வைப்பதும், முழங்கை வரைக் கையைத் தரையில் ஒட்ட வைப்பதும், தொடைகளை வயிற்றுப்பகுதியுடன் ஒட்டுவதும்:

“ஸஜ்தாவை முறையாகச் செய்யுங்கள்! உங்கள் முழங்கைகளை நாய் விரிப்பது போல் தரையில் விரித்துக் கொள்ள வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ்(ரலி), அபூதாவூத்)

3. தொழுகையின்போது பார்வையை மேல்நோக்கி உயர்த்துதல் அல்லது பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தல்:

“தொழும்போது பார்வையை மேல்நோக்கி உயர்த்துவோர், அதிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்வார்களாக! இல்லையேல் அவர்களின் பார்வைகள் பறிக்கப்பட்டுப் போய்விடும்” என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (அபூஹூரைரா(ரலி), முஸ்லிம், நஸயீ, அஹ்மத்)

நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழும்போது தலையைத் திருப்பிக் கொண்டு பார்ப்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் இது ஷைத்தான் மனிதனிடமிருந்து (அவனது கவனத்தை) அபகரிக்கும்படியானதோர் தந்திரமாகும் என்றார்கள். (ஆயிஷா(ரலி), புகாரி, அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)

தலையைத் திருப்பிக் கொண்டு பார்ப்பதானது, முறையாக இறை உணர்வோடு தொழும் ஒருவரின் கவனத்தைச் சிதறடிப்பதற்காக ஷைத்தான் செய்யும் சூழ்ச்சியாகும். தொழுவோர் இது குறித்து மிக எச்சரிக்கையோடு நடந்து கொள்வார்களாக!

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் என்னை நோக்கி, ”உமக்கு நான் தொழுகையில் திரும்பிப் பார்ப்பதை எச்சரிக்கிறேன்” என்று கூறிவிட்டு தொழும்போது திரும்பிப் பார்ப்பதானது ஒருவகையான நாசக்கேடாகும். (அனஸ்(ரலி), திர்மிதீ)

4. ஸஜ்தா செய்கையில் தலையில் (நெற்றிப்பகுதியில்) முழு பாரத்தையும் கொடுப்பது:

ஏழு எலும்புகள் தரையில் படுமாறு ஒருவர் இறைவனுக்கு ஸஜ்தா செய்ய ஏவுமாறு நான் பணிக்கப்பட்டுள்ளேன். அவை முன்நெற்றி மற்றும் மூக்கு, இரு உள்ளங்கைகள், இரு கால் மூட்டுகள், இரு கால் பாதங்கள் ஆகியனவாம். (ஸஹீஹ் முஸ்லிம்) தலையை மட்டும் முட்டுக்கொடுத்து ஸஜ்தா செய்வதை இந்த நபிமொழி தடை செய்வதை இதன் மூலம் அறியலாம்.

5. ருகூ மற்றும் ஸஜ்தாவை அவசரமாகவும், பொறுமையின்றியும் செய்வது:

நபி(ஸல்) அவர்கள் ஒருவர் தொழுகையை முறைப்படி நிதானமாகத் தொழாது, நிலை, ருகூ, ஸஜ்தா முதலிய தொழுகையில் பர்ளாயுள்ளவற்றை அரைகுறையான வகையில் செய்து தொழுத போது அவரை நோக்கி மீண்டும் நீர் தொழுவீராக! ஏனெனில் நீர் தொழவில்லை என்று கூறியுள்ளார்கள். (அபூஹூரைரா(ரலி), புகாரீ, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை “திருடர்களிலேயே மிக மோசமான திருடன் தன் தொழுகையில் திருடுபவன் தான்” எனக் கூறியதற்கு கூடியிருந்தவர்கள், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே, தொழுகையில் எப்படித் திருடமுடியும்?” என வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “முறையாக ருகூவையும் ஸஜ்தாவையும் நிறைவேற்றாது இருப்பது தான் அது” என பதிலுரைத்தார்கள் (அத்தபரானீ, அல்ஹாக்கிம்)

6. இடது கை விரல்களால் தஸ்பீஹ் எண்ணுவது:

நபி(ஸல்) அவர்கள், தொழுகைக்கு பிறகு தம் வலது கையினால் தஸ்பீஹ் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். – இப்னு குதமாஹ்(ரலி)- (அபூதாவூத்)

நபி(ஸல்) அவர்கள், விரல்களைக் கொண்டு தஸ்பீஹ் செய்து கொள்ளுமாறு பெண்களுக்கு அறிவுறுத்தினார்கள் – யாஸிரா(ரலி)

மேலும் நபி(ஸல்) அவர்கள் தம் இரு கைகளையோ அல்லது இடக்கை கொண்டோ தஸ்பீஹ் செய்யப் பயன்படுத்தினார்கள் என்று எந்த ஒரு அறிவிப்பிலும் காண முடியாததால் வலது கை கொண்டு தஸ்பீஹ் செய்வது மட்டுமே நபிவழி என்று அறிய முடிகிறது.

7. தொழுபவர் எதிரில் கடந்து செல்வது:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுபவர் எதிரில் கடந்து செல்லும் ஒருவர், அதன் மூலம் அவருக்கு மறுமையில் ஏற்படும் நஷ்டத்தை அறிபவராக இருப்பின் அவர் 40 காலஅளவுகள் கழிந்தாலும் பொறுமையாகக் காத்திருப்பார். (ஸஹீஹூல் புகாரி, முஸ்லிம்)

(நாற்பது என்று இங்கே குறிப்பிடப்பட்ட எண்கள் நாட்களாகவும், மாதங்களாகவும் அல்லது வருடங்களாகவும் இருக்கலாம். (அல்லாஹ் மிக அறிந்தவன்)

8. தொழும்போது கொட்டாவி விடுவது:

”உங்களில் ஒருவருக்குத் தொழுகையில் கொட்டாவி விட நேர்ந்தால் தம்மால் இயன்றளவு (அதை) அடக்கிக் கொள்வாராக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு ஸஃது(ரலி), அபூதாவூத்)

9. சித்திரங்களையும், சிந்தனையை ஈர்ப்பவை அனைத்தையும் எதிரிலோ அருகிலோ வைத்துத் தொழுவது:

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் சித்திர வேலைப்பாட்டையுடைய ஆடை ஒன்றை அணிந்து தொழுதார்கள். அப்போது அவர்கள் அதன் சித்திர வேலைப்பாட்டை ஒருமுறை பார்த்து விட்டார்கள். தாம் தொழுது முடித்தவுடன் இந்த ஆடையை அபூஜஹ்மு என்பவரிடம் கொண்டு போய் கொடுத்து விட்டு அவரிடம் சித்திர வேலைப்பாடில்லாத ஆடை ஒன்றை எனக்கு வாங்கி வாருங்கள். ஏனெனில் இது என்னை எனது தொழுகையை விட்டு சற்று கவனத்தைத் திருப்பிவிட்டது என்றார்கள். (ஆயிஷா(ரலி), புகாரீ)

மேற்காணும் ஹதீஸின் அடிப்படையில் தொழுபவரின் கவனத்தை அல்லாஹ்வின் சிந்தனையை விட்டுத திருப்பக் கூடியவையான எந்தப் பொருளுக்கும் எதிரில் நின்று தொழுவது முறையல்ல.

10. தொழும்போது கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் கொள்வது:

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் ஒருவர் தொழும்போது தமது கைவிரல்களைக் கோர்த்து வைத்திருப்பதைப் பார்த்து, உடனே அவர் விரல்களை அதிலிருந்து பிரித்து விட்டார்கள். (கஃபுபின் உஜ்ரா(ரலி), திர்மிதீ, இப்னுமாஜா)

உங்களில் ஒருவர் தாம் பள்ளியில் இருக்கும்போது, தமது விரல்களைக் கோர்த்து வைத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் இவ்வாறு செய்து கொள்வது ஷைத்தானின் செயலில் உள்ளதாகும். (அபூஸயீதில் குத்ரீ(ரலி), அஹ்மத்)

11. பசியெடுத்த நிலையிலும், இயற்கை உபாதைகளுக்கு அவசியம் செல்ல வேண்டிய கட்டத்திலும் தொழுவது.

”உணவு தயாராக இருக்கும்போது தொழுகை இல்லை. இவ்வாறே இயற்கை உபாதை தேவைகளுக்குச் செல்ல அவசியமான நேரத்திலும் தொழுகை இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆயிஷா(ரலி), முஸ்லிம்)

இப்னு உமர்(ரலி) அவர்களுக்குச் சாப்பாடு வைக்கப்பட்டு விடும், (அதே நேரத்தில்) தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்பட்டு விடும். (இந்நிலையில்) அவர்கள் இமாமுடைய கிராஅத்து ஓதலைக் கேட்டுக் கொண்டும் இருப்பார்கள். ஆனால் அவர்கள் சாப்பிட்டு முடிக்காமல் தொழுகைக்கு வரமாட்டார்கள். (நாஃபிஉ(ரலி), புகாரீ)

12. பள்ளியில் தொழும்போது குறிப்பிட்டதோர் இடத்தில் தொழுவதையே பழக்கமாக்கிக் கொள்வது:

ஒருவர் தொழுகையில் (ஸஜ்தா செய்கையில்) காக்கை கொத்துவது போல் செய்வதையும், மிருகங்கள் விரிப்பதுபோல் கைகளைத் தரையில் படுக்க வைத்துக் கொள்வதையும், ஒட்டகம் வழக்கப்படுத்திக் கொள்வது போல் பள்ளியில் (தொழுவதற்கென்று) ஓர் இடத்தைக் குறிப்பாக்கிக் கொள்வதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். (அப்துர் ரஹ்மான்பின்ஹப்லு(ரலி), அஹ்மத்)

13. வெங்காயம், பூண்டு போன்ற விரும்பத்தகாத மணம் வீசும் பொருள்களைச் சாப்பிட்டுவிட்டு பள்ளியில் பிரவேசிப்பது:

”வெங்காயம், பூண்டு ஆகிய துர்வாடையுடைய பொருள்களைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலின் பக்கம் நெருங்கக் கூடாது. ஏனெனில் நிச்சயமாக எவற்றால் மக்கள் இம்சை அடைகிறார்களோ, அவற்றால் மலக்குகளும் இம்சை அடைகின்றனர்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஜாபிர்(ரலி), முஸ்லிம்)

உண்ணுவதற்கு ஆகுமான வெங்காயம் பூண்டு போன்ற பொருள்களையே உண்டுமுடித்த கையோடு தொழத் தடை இருக்கும் போது சில சகோதரர்கள் புகைபிடித்த கையோடு துர்நாற்றத்துடன் தொழ வருவது எந்த அளவுக்கு வெறுக்கத் தக்கது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

தொழுகையை உரிய வகையில் முறையாக நிறைவேற்றி வெற்றியாளர்கள் ஆக வல்ல இறைவனை நாம் அனைவரும் இறைஞ்சுவோம்

இறைவன் மிக அறிந்தவன்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.