பிறையும் பிறைசார்ந்த குழப்பங்களும்!

Share this:

ழக்கம்போல் இந்த 2008 ஆம் ஆண்டும் தமிழக முஸ்லிம்களுக்கு மூன்று வெவ்வேறு நாட்களில் நோன்புப் பிறை பிறந்தது. எனவே, வெவ்வேறு நாட்களில் (29, 30 செப்டம்பர் 2008 மாலையில்) பெருநாள் பிறையும் பிறக்க விருக்கிறது.

ஒரு நாட்டுக்குள் இருந்து வந்த பிறை வேறுபாட்டை, ஒரு மாநிலத்துக்குள் என்று சுருக்கி, ஒரு மாவட்டத்துக்குள் – ஒரே ஊருக்குள், ஒரே வீட்டினுள் பல நாட்களில் ஒரே பிறையைப் பிறக்க வைத்து, முஸ்லிம்கள் அதிசயத்தை நிகழ்த்தி வருகின்றனர்!.

இந்த ஆண்டு, குமரி மாவட்டத்தில் ஓரிரு ஊர்களில் மூன்று வெவ்வேறு நாட்களில் பிறை அறிவிக்கப் பட்டுள்ளது:

1. முன்னரே கணிக்கப் பட்ட வானியல் கணிப்பின் அடிப்படையில் (வெள்ளிக்கிழமை 30 ஆகஸ்டு 2008 மாலை)

2. வெளியிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் (சனிக்கிழமை 31 ஆகஸ்டு 2008 மாலை)

3. கண்களால் பிறையைக் கண்ட பின்னர் (ஞாயிற்றுக்கிழமை 1 அக்டோபர் 2008 மாலை)

சூரியனும் சந்திரனும் காலக்கணக்கை அறிவதற்காகப் படைக்கப்பட்டன என இறைவன் அறிவித்ததிலிருந்து, முதல் பிறை ஒன்றுதான் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. இம்மூன்று மாலைப் பொழுதுகளில் எதில்தான் உண்மையான பிறை ஒளிந்திருக்கிறது? அல்லது, சிலர் கூறுவது போன்று பார்ப்பவர்களுக்குப் பார்வையில் தெரியும் பொழுதுதான் அது முதல் பிறையா?.

சில வருடங்களுக்கு முன்பு இலங்கையின் தேசிய நேரம் இந்திய நேரத்தைவிட ஒரு மணி நேரம் முற்படுத்தப் பட்டது. அதேபோல், பாகிஸ்தான் தேசிய நேரத்தில் அரைமணி நேரம் துரிதப்படுத்தப் பட்டது. நிர்வாக மற்றும் மின்சார சிக்கன நடவடிக்கை காரணங்களுக்காக இப்படி நேரத்தை மாற்றிக் கொள்வது சகஜமான ஒன்று. அரை/ஒரு மணி நேரத்தை முன்/பின் மாற்றி அமைப்பதால் 48 அல்லது 24 நாட்களுக்கு ஒருநாள் வீதம் சேமிக்கப்படுகின்ற அதேவேளை ஒரு நாளுக்குள் பெரிய மாற்றம் ஏதும் ஏற்பட்டு விடாது.

அல்லாஹ் தன் திருமறையில்,

فَالِقُ الإصْبَاحِ وَجَعَلَ اللَّيْلَ سَكَنًا وَالشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَانًا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ

அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள்) அமைதி பெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான். இவை யாவும் வல்லமை மிகைத்தோனும் எல்லாம் அறிந்தோனுமாகிய (அல்லாஹ்வின்) ஏற்பாடாகும். (குர்ஆன் 006:096) என்று விளக்குகிறான். மேலும்,

هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ مَا خَلَقَ اللَّهُ ذَلِكَ إِلا بِالْحَقِّ يُفَصِّلُ الآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ

அவன்தான் சூரியனைச் சுடர்விடும் பிரகாசமாகவும் சந்திரனை ஒளிரச் செய்வதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறிமாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாகத் தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்க வில்லை. அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான். (குர்ஆன் 010.005)

இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தில் வானில் இருவேறு இயற்கை நிகழ்வுகள் நடந்தேறின. மாதத்தின் தொடக்கத்தில் சூரிய கிரகணமும் மத்தியில் (16 ஆம் தேதி) சந்திரக் கிரகணமும் நிகழ்ந்தன. சூரிய நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டு, பல வருடங்களுக்கு முன்பே கணிக்கப்பட்ட இவை துல்லியமாக நிகழ்ந்தேறின. கிரகணம் நிகழ்வதை முன்னரே அறிவிக்க வேண்டும் எனில், சந்திரனின் ஓட்டத்தைத் துல்லியமாக அறிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். இதிலிருந்து சிலர் கூறுவது போன்று, சந்திரனின் ஓட்டத்தைக் கணிப்பது இயலாத காரியம் என்ற வாதம் அடிபட்டுப் போகிறது.

காலக்கணக்கீடு செய்வதற்கு சூரியனையும் சந்திரனையும் அடிப்படையாகக் கொள்ள அல்லாஹ் அனுமதித்திருக்கும்போது, ஒவ்வொரு வருடமும் நோன்பு/பெருநாள் பிறை பார்க்கும் விசயத்தில் முஸ்லிம்களிடையே குழப்பங்கள் ஏற்படுகின்றன. “பிறை கண்டு நோன்பு வையுங்கள்; பிறை கண்டு நோன்பு துறங்கள்” என்ற ஹதீஸிற்குப் வெவ்வேறுவித விளக்கங்கள் கொடுக்கப்பட்டு, தாங்கள் சொல்வதே சரியென்று மாறுபட்ட கருத்துகளில் மவ்லவிகள் மோதிக் கொள்கின்றனர்.

மார்க்கத்தை நன்கு விளங்கியவர்கள் என்று கருதப் படுபவர்களுக்கே இந்நிலையென்றால், படிப்பறிவில்லாத மதில்மேல் பூனையாக இருக்கும் சாமான்யர்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

நவீன தொழில் நுட்பங்கள் மூலம் பிறையைக் கணிக்கலாம் என்பவர்களோ, “அறிவியல் அறியப்படாத காலத்தில் பொதுவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தற்போதைய அறிவியல் நுட்பங்களைக் கொண்டு பிறை பார்ப்பதும் அதன் அடிப்படையில் நோன்பு நோற்பதும்/துறப்பதும் மார்க்கத்திற்கு முரணல்ல” என்கிகிறார்கள். பூமியில் பிறை தென்படும் கால, நேரத்தைத் துல்லியமாகக் கணிக்கலாம் என்று இப்பிரச்சினைக்கு நிரந்தர முடிவுதர முயன்றாலும், மற்றொரு சாரார் இதை எதிர்க்கிறார்கள். பிறை கண்டு நோன்பு பிடித்தல்/துறத்தல் என்பதற்கு ‘வெறும் கண்களால் மட்டுமே பார்த்தல்’ என்று விளக்கம் கொடுக்கிறார்கள்!

இவர்களில் யார் சொல்வது சரி? இவ்விவாதம் எப்போது முடிவுக்கு வரும்? அகிலம் முழுமைக்குமான இஸ்லாத்தில் குறிப்பிட்ட பகுதிகளுக்குள்கூட ஒரு பிரச்சினைக்குத் தீர்வே இல்லையா? கால/நேரங்களைக் கணிக்க சூரியனையும் சந்திரனையும் அடிப்படையாகக் கொள்ளலாம் என்று படைத்தவனே தெளிவுபடுத்திய பின்னரும், பிறையைக் கண்களால் பார்ப்பதை மட்டுமே மாதத்தின் துவக்கத்திற்கான அளவீடாகக் கொள்ள வேண்டும் என்று ஒரு சாரார் முரண்டு பிடிக்கிறார்கள்.

அபூ உமைர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “மேகமூட்டமாக இருந்ததால் ஷவ்வால் (பெருநாள்) பிறை தென்படவில்லை. எனவே அன்றைய தினத்தை நோன்பாகக் கருதி நோற்றோம். மாலை நேரம் முடியும் தருணத்தில் வணிகர் கூட்டம் ஒன்று வந்து, முஹம்மது (ஸல்) அவர்களிடம், நேற்று மாலை அவர்கள் பிறை பார்த்ததாகச் சொன்னார்கள். அதைக் கேட்டதும் உடனடியாக நோன்பைத் துறந்து மக்களைப் பெருநாள் கொண்டாட ஆணையிட்டார்கள்” அஹ்மது, அபுதாவுத், இப்னுமாஜா, நஸயீ, பைஹக்கீ, தாரக்குத்னீ, அல்முன்தகா, இப்னு ஹிப்பான் ஆகியற்றில் இந்த ஹதீஸ் பதிவாகி உள்ளது.

மேற்கண்ட ஹதீஸில் முன்தினம் பிறையைப் பார்த்ததாகச் சொன்னதை ஏற்று, நோன்பு துறந்து, உடனடியாகப் பெருநாள் கொண்டாடச் சொன்னார்கள். இக்காலம்போல், அன்றும் தகவல் தொடர்பு, துரிதப் போக்குவரத்து வசதிகள் இருந்திருந்தால் வணிகர்களைப்போல், தன்பகுதி மக்களையும் அதேதினம் பெருநாள் கொண்டாடச் சொல்லி இருப்பார்கள். வேறொரு பகுதியில் பார்க்கப்பட்ட பிறை, மறுநாள் முடியும் தருவாயில் சொல்லப்பட்ட போதும் ஏற்றுக் கொண்டார்கள். பிறை பார்த்தப் பிரதேசம், நேரம் தூரம், குறித்தெல்லாம் சர்ச்சிக்கவில்லை. இதே அளவீடு இக்காலத்திற்கும் பொருந்தும்தானே?

நோன்பும், பெருநாளும் வருடந்தோரும் வருகின்றன. இன்ஷா அல்லாஹ் உலகப்பேரழிவுநாள் வரையும் வந்து கொண்டுதான் இருக்கும். இறுதிநபி முஹம்மது (ஸல்) அவர்களால் முழுமைப் படுத்தப்பட்ட இஸ்லாத்தில், குழப்பமும் பிரிவினையும் இன்னும் ஏன் தொடர்கின்றன? ஒற்றுமையாக, சந்தோசமாகக் கொண்டாடப் படவேண்டிய பெருநாளை முஸ்லிம்கள் பரஸ்பரம் சாடிக்கொள்ளவும் சண்டையிட்டுக் கொள்ளவும் காரணமான பிறைக் குழப்பத்திற்கு இஸ்லாத்தில் நிரந்தரத் தீர்வே இல்லையா?

எமன் தேசத்திற்கு ஆளுநராக அனுப்பப்பட்ட முஆத் (ரலி) அவர்களிடம், “நியாயத் தீர்ப்பு வழங்குவதற்கு எதனை அடிப்படையாகக் கொள்வீர்? என்று கேட்கப்பட்டபோது குர்ஆனையும் ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பு வழங்குவேன் என்றார்கள். அவ்விரண்டிலும் எனது அறிவுக்கு எட்டியவற்றுள் தெளிவு கிடைக்கா விட்டால் எனது சிந்தனையைப் பயன்படுத்தி குர்ஆன்,ஹதீசுக்கு எதிராகச் செல்லாமல் தீர்ப்பு வழங்குவேன்” என்றதைப் பெருமானார் அங்கீகரித்தார்கள்.

முஸ்லிம் ஆட்சியாளர்களைப் பெற்றிருக்கும் வளைகுடா நாடுகளில் ‘பிறை அறிவிக்கும் குழு’வுக்கு நோன்புக்கும் பெருநாளுக்கும் பிறைகளை அறிவிக்கும் பொறுப்பளிக்கப் பட்டிருப்பதால், கணிப்பு/காலண்டர்/கண்களால் பார்த்தல் போன்றவற்றுள் பொதுமக்கள் ஈடுபடாமல் இமாரத் (தலைமை) சொன்னால் சரிதான் என்று செயல் படுகின்றனர். அதிலும் அவ்வப்போது சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. பல்லாண்டுகளுக்கு முன்னர் சவூதியில் 28 நோன்பு வந்தது. “கணிப்பில் தவறு நேர்ந்து விட்டது. பெருநாளுக்குப் பின்னர் ஒருநாள் நோன்பிருந்து கொள்ளுங்கள்” என்று அரசு அறிக்கை விட்டது.

வளைகுடா நாடுகளுள் ஒற்றைநாள் நோன்பு/பெருநாள் என்பது (ஒமன்,லிபியா போன்ற நாடுகள் தவிர்த்து) பெரும்பாலும் தனி வகைதானேயன்றி மொத்த வளைகுடா வகையல்ல.

உலகளாவிய முஸ்லிம்களுக்கான ஓர் இமாரத் (தலைமை) ஏற்பட்டால் மட்டுமே பிறை/பெருநாள் குழப்பங்கள் எதிர்காலத்தில் இல்லாமலாகும். அதுவரை வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து பிறை அறிவிப்பிற்காக ஒரு தலைமையை ஏற்றுக் கொண்டிருப்பது போல், தமிழக முஸ்லிம்களும் குறைந்தபட்சம் ஒட்டுமொத்த தமிழகத்திற்காவது பிறை அறிவிற்பிற்காக ஒரு தலைமையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

காலத்தின் கட்டாயமாகிவிட்ட முஸ்லிம்களின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, பிறை விசயத்தில் முரண்பாடுகளைப் புறந்தள்ளி, உலகம் முழுதும் ஒரேநாளில் நோன்பு/பெருநாள் பிறைபார்த்துக் கொண்டாட இஸ்லாமிய அறிஞர்கள் முன்வர வேண்டும். இதுவே உலக முஸ்லிம்களின், ஒற்றுமை விரும்பிகளின் தற்போதைய அவாவும் துஆவும்!

அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துகள்!

ஆக்கம்:  N. ஜமாலுத்தீன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.