ஒழியட்டும் வரதட்சணை!

Share this:

“மனிதர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார்களே அன்றி, மனிதர்களுக்கு ஒருபோதும் அல்லாஹ் அநீதி இழைப்பதில்லை” – (அல்குர்ஆன் 010:044).

இஸ்லாம் மேன்மையாக மதிக்கும் திருமண நிகழ்வின் ஆரம்பத்திலேயே இஸ்லாமிய வழிகாட்டுதல்களைக் கைவிட்டு, பிறமதக் கலாச்சாரத்திலிருந்து கடன் வாங்கிய பழக்க வழக்கங்களை நுழைத்து, நபி(ஸல்) அவர்களின் சுன்னாவின்படி அமைய வேண்டிய தங்களின் திருமண வாழ்வின் துவக்கத்தைப் பெரும்பாலான முஸ்லிம்கள் கண்ணை மூடிக் கொண்டு ஜாஹிலிய்யத்திற்குத் தாரை வார்த்துவிட்டு ஆரம்பிக்கின்றனர்.

அவ்வாறெனில் அவர்களின் திருமணத்திற்குப் பிந்தைய வாழ்வு எவ்வகையில் இறைவனுக்கு உவப்பான, மறுமை வெற்றிக்கான வழியில் அமையும்? எனச் சிந்திக்க வேண்டியது இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டிய முஸ்லிம்களுக்குக் கடமையாகும்.

அஞ்ஞானத்தின் அடித்தட்டில் முகம் சுழிக்க வைக்கும் பழக்க வழக்கங்களைக் கொண்டு வாழ்ந்த அரபிகளைக்கூட பெண்களின் உரிமையான மஹரைக் கொடுக்க வேண்டிய முறைப்படி கொடுக்க வைத்து மனைவியரின், மணவாழ்வின் மகத்துவத்தினை இஸ்லாம் அவர்களுக்கு உணர்த்தியது. எத்தகைய மோசமான பழக்கவழக்கங்களையும் பாரிம்பரிய மூடநம்பிக்கைகளையும்கூட படைத்த இறைவனை ஏற்றுக் கொண்ட நிமிடத்திலேயே அடியோடு துடைத்தெறியும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட தமிழக முஸ்லிம்களின் தனித்தன்மை, இடையில் வந்து சேர்ந்த வரதட்சணை எனும் வன்கொடுமை பித்அத்தால் சீரழிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.அதைச் சமூகத்திலிருந்து முற்றாக ஒழித்துக் கட்ட வேண்டியது முஸ்லிம் சமுதாயத்தின் கடமையாகும்.

 

அல்லாஹ்வின் தனிப்பெரும் உதவியோடு, உலகத்தில் உள்ள அனைத்துச் சீர்கேடுகளையும் வேரறுத்து உன்னதச் சமுதாயம் படைத்துத் தந்த உத்தமநபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களைத் தம் வாழ்வில் அமைத்துக் கொள்வதுதான் அவர்களை உயிரினும் மேலாக நேசிப்பதன் அடையாளம் ஆகும். “பிறரது மதக்கலாச்சாரங்களைப் பின்பற்றுபவர் நம்மைச் சார்ந்தவரல்லர்” என்று நபி (ஸல்) அவர்கள் பிரகடனப் படுத்தினார்கள். ஆனால், காலப்போக்கில் மாற்றாரின் கலாச்சாரங்கள் ஒவ்வொன்றாய் முஸ்லிம்களின் அன்றாட வாழ்விலும் வழிபாடுகளிலும் அவர்களை அறியாமல் புகுந்து கொண்டு ஆட்டிப்படைத்து வருகிறது. இவற்றை ஒழித்துக் கட்டுவதற்கான வழிதான் என்ன?

மது அருந்துதல், வட்டி உண்ணுதல், பன்றி மாமிசம் உண்ணுதல் போன்றவற்றை இறை கட்டளைகளுக்கு மாறு செய்யும் மிகப்பெரிய பாவமாக முஸ்லிம் சமுதாயம் உணர்ந்திருக்கிறது. ஆனால், வாழ்க்கைத் துணையாக அடையப் போகும் பெண்ணிடமிருந்துக் கணக்கிட்டு தட்சணை பெறுவது என்பதை, “மணமுடிக்கும் பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹரை மனமுவந்துக் கொடுத்து விடுங்கள்” என்ற இறைவனின் கட்டளைக்கு மாறு செய்யும் மற்றொரு மிகப்பெரிய பாவம் என்று உணர்ந்துகொள்ள முடியாமல் அவர்களது சிந்தனைக்குப் பொருளாசை, புகழாசை, போலி அங்கீகாரங்கள் திரையிட்டு மறைத்து விட்டன. சமுதாயத்தின் மன அடித்தட்டுகளில் இறைவனின் மீது எவ்வித அச்சமும் இல்லாத அளவிற்கு ஊடுருவிப் போய் விட்ட இக்கொடும் பாவத்தைச் சமுதாயத்திலிருந்து அடியோடு அகற்றுவது அத்துணை எளிதான காரியம் அல்ல.

மாற்றம் என்பது ஒவ்வொருவரின் மனதிலிருந்து உருவாக வேண்டும். பன்றி மாமிசம் உண்பது முஸ்லிம்களுக்கு ஒவ்வாத – இறை கட்டளையை மீறுகின்ற செயல் என்பதை எவ்விதம் ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்துள்ளனரோ அத்தகைய உணர்வு வரதட்சணை எனும் இக்கொடியப் பாவச்செயலைச் செய்ய முற்படும் போதும் ஏற்பட வேண்டும்.

முஸ்லிம் தாய்மார்களே!

மணமுடிக்க வேண்டிய மகன்கள் உங்களுக்கிருந்தால் அவர்களுக்காக வரதட்சணை வாங்காமல் மணமுடித்துக் கொடுப்பதுதான் உங்களுக்கு நன்மையானது. பெருமைக்கோ பொருளுக்கோ ஆசைப்பட்டு வரதட்சணை வாங்குவது உங்களுக்கு நன்மை பயக்கும் என்று நினைக்காதீர்கள்.

“… நீங்கள் விரும்புகின்ற ஒன்று உங்களுக்கே தீமை பயப்பதாக அமையக் கூடும்; நீங்கள் வெறுக்கின்ற ஒன்று உங்களுக்கு நன்மை பயப்பதாக அமைந்து விடும். (உங்களுக்கு எது நன்மை? எது தீமை? என்று) அல்லாஹ்தான் நன்கறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்” (அல்குர்ஆன் 002:216).

அல்லாஹ்வின் மேற்கண்ட அறிவுரையை மட்டுமின்றி, நடைமுறையையும் முஸ்லிம் தாய்மார்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் தங்களின் மகனுக்காக வரதட்சணை வாங்கும் பழக்கம் தொடர்ந்தால், பின்னர் அவர்கள் தங்களின் மகள்களுக்கு அதைவிட அதிக அளவில் கொடுக்க வேண்டியது வரும். அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு எதிரான வரதட்சணை எனும் கொடும் பாவத்தின் பின்விளைவு, ஒருதலைமுறையோடு முடிந்து விடாது. அவர்கள் தங்கள் மகன்களுக்கு வாங்கியதுபோல், தங்கள் மகள்களுக்குக் கொடுத்ததுபோல், பதின்மடங்கு அவர்களின் பேத்திகளுக்குக் கொடுக்க வேண்டியதிருக்கும்.

பெருமைக்கோ பொருளுக்கோ ஆசைப்பட்டு முஸ்லிம் தாய்மார்கள் வாங்கும் வரதட்சணையினால் பெருமளவு பாதிக்கப்படப் போவது அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள்தாம். தங்களின் பிள்ளைகளைப் பிற்காலத்தில் துன்பத்திற்கு உள்ளாக்குவதுதான் முஸ்லிம் தாய்மார்களின் விருப்பமா? அது எவ்வகையில் அவர்களுக்கு நன்மை தரும்? மாற்றாரின் கலாச்சாரமான வரதட்சணை எனும் இக்கொடும்பாவம் இறைமார்க்கத்தினரிடமும் ஒட்டிக் கொண்டு தொடர வேண்டுமா? அல்லது ஒழிக்கப்பட வேண்டுமா? முஸ்லிம் தாய்மார்கள் ஒவ்வொரும் சிந்தித்துப் பார்த்து நல்ல முடிவுக்கு வரவேண்டும்!.

பிள்ளைகளைப் பெற்றெடுத்தத் தந்தையரே!

இல்லறத்தில் அமைதி நிலவ வேண்டுமெனில், மனைவியிடம் ஆலோசனை பெறுவது நல்லதுதான். ஆனால், அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு எதிரான ஆலோசனைகளுக்கும் சேர்த்துத் தலையாட்டிவிட வேண்டாம். “எனக்குக் கொஞ்சங்கூட விருப்பமில்லை; வரதட்சணை வாங்கித்தான் ஆக வேண்டும் என்று வீட்டில்(மனைவி) கட்டாயப் படுத்துகிறார்கள்” என்று சப்பைக்கட்டுக் காரணம் கூறவும் வேண்டாம். அந்தக் காரணத்தைக் கூறி உலகத்தாரைச் சமாளித்து விடலாம்; உலகங்களைப் படைத்தாளும் அல்லாஹ்விடம் மனைவியை மாட்ட வைத்துத் தப்பித்துக் கொள்ள முடியுமா?

“செவிப்பறையைக் கிழித்தெறியும் அப்பேரோசை முழங்கும்(மறுமையின்)போது, தன் உடன்பிறந்தானையும் தன்னை ஈன்றெடுத்தத் தாயையும் தந்தையையும் தன் மனைவியையும் மக்களையும் விட்டு மனிதன் வெருண்டோடுவான்” (அல்குர்ஆன் 080:033-036) என்ற இறைமறை விடுக்கும் எச்சரிக்கை ‘நமக்கல்ல’ என்று நினைத்து, மறுமையில் ஏமாறிவிட வேண்டாம்.

“வாங்கு வரதட்சணை” என்று உறவுகள் ஒன்றுகூடி ஆசைகாட்டலாம். “மாட்டேன்” என்று மறுதலிப்பதுதான் நல்ல தந்தைக்கு அழகு. உறவுகளில் எதுவும் மறுமையில் உங்கள் உதவிக்கு வராது. மகனுடைய கத்னாவிலிருந்து பட்டதாரியாக்கிய படிப்புச் செலவு வரை கணக்கிட்டு, வரதட்சணையாகக் கேட்கும் வியாபாரி ஆகிவிடாமல் பிள்ளைகளுக்கானப் பொறுப்புகள் அனைத்தையும் சுமந்து வளர்த்த உண்மையான தந்தையாக ஒவ்வொரு முஸ்லிம் தந்தையும் திகழ வேண்டும். நன்மைமிகு முடிவுகளில் உறுதியுடன் விளங்குபவர்களின் நற்கூலியைக் கொஞ்சமும் குறைவின்றிக் கொடுப்பது, படைத்த இறைவனின் தனித்தன்மையாகும். மகனைப் பெற்று வளர்த்து ஆளாக்கியதற்கான நற்கூலியைத் தர அல்லாஹ்வே போதுமானவன்; மனிதர்களிடமிருந்து ‘கைக்கூலியை’ எதிர்பார்த்து இறைவனின் கட்டளையைக் காற்றில் பறக்க விடும் தந்தையர் ஒவ்வொருவரும் தங்களின் மறுமை வாழ்வை ஒருமுறை நினைத்துப் பார்த்துக் கொள்ளட்டும்.

எதிர்கால மணமகன்களே!

மனைவியாலும் மனைவியின் குடும்பத்தாராலும் உளமார மதிக்கவும் நேசிக்கவும்பட வேண்டுமாயின், இஸ்லாம் வெறுக்கும் வரதட்சணையை ஒவ்வொரு மணமகனும் வெறுத்து, மறுத்து விடுவதுதான் ஒரே வழியாகும். இறைமறை (004:034) புகழுந்துரைக்கும் ‘ஆளுமையுடைய ஆண்மகனாக’த் திகழ வேண்டுமெனில் இஸ்லாம் வலியுறுத்தும் மணக்கொடையான மஹரை ஏட்டளவில் 101 ரூபாய், 1001 ரூபாய் எனச் சுருக்கி விடாமல், தாராளமாக வழங்கித் திருமணம் செய்வதைக் கொள்கையாகக் கொள்வதுதான் சாலச் சிறந்ததாகும்.

“மேலும், (மணப்)பெண்களுக்கு (அவர்களின் உரிமையான) மணக்கொடையை மனமுவந்து அளித்து விடுங்கள் …” (அல்குர்ஆன் 004:004) என்று இறைமறை அறிவுறுத்தும் வார்த்தைகளின்படி தங்கள் வாழ்வின் அடித்தளத்தை ஆண்மகன்கள் அமைத்துக் கொள்ளட்டும். தங்கள் இல்லற வாழ்வின் தொடக்கம் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிய மனநிறைவோடு அமைந்து விட்டால், அவனுடைய அருள், வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கிடைத்து வரும். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக யாரோடு போராட வேண்டியிருந்தாலும் தயங்காமல் போராடுவதுதான் உண்மையான முஸ்லிம் ஆண்மகனுக்கான அடையாளம் என்பதை உணர்ந்து மணமகன்கள் இறைகட்டளைக்கு எதிரான வரதட்சணை எனும் கொடுமைக்கு எதிராகப் போராட வேண்டும்! அல்லாஹ் வெற்றியைப் போராட்ட வாழ்வின் முனையில் வைத்துள்ளான். தங்களின் வருங்கால வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது அறிவுரையை ஒவ்வொரு மணமகனும் கருத்தில் கொள்ள மறந்து விட வேண்டாம்:

“பிறந்த குலம், திரண்ட செல்வம், புறஅழகு, மார்க்கப்பற்று(எனும் அகஅழகு) என நான்கு தகுதிகளை அளவுகோலாகக் கொண்டு, ஒரு பெண் (உலக வழக்கில்) மணமுடிக்கப் படுகிறாள். நீ மார்க்கப் பற்றுள்ள பெண்ணைத் தேர்ந்தெடுத்து ஈடேற்றம் அடைந்து கொள்” புகாரீ.

திருமணத்திற்காகக் காத்திருக்கும் அருமைச் சகோதரிகளே!

இஸ்லாம் தங்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளைப் பெண்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்! ‘மஹர்’ என்பது, ஏட்டளவில் எழுதிவைத்து மணவிலக்குப் பெறும்போது பெண்களுக்குக் கொடுக்கப்படும் சிறு தொகையல்ல என்பதையும் திருமணத்தின்போது மணப்பெண் நிர்ணயித்துக் கேட்கும் மணஉரிமை என்பதையும் பெண்கள் உணர வேண்டும். மேலும், இஸ்லாத்தில் பெண்களின் ஒப்புதலின்றி அவர்களை யாரும் மணமுடித்துத் தரமுடியாது. பெருமானாரின் பொன்மொழி்: “கன்னியின் (மௌன) ஒப்புதலும் கன்னி(வயது)கழிந்த பெண்ணின் வாய்மொழி ஒப்புதலும் இன்றி அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கக் கூடாது”. பெருமானாரின் இந்தப் பொன்மொழியினை மனதில் ஏந்தி, வரதட்சணை கேட்கும் மணமகனைப் புறந்தள்ளி, இறை கட்டளையை நடைமுறைபடுத்த மணமகள்கள் தயாரானால் இக்கொடிய பாவம் சமுதாயத்திலிருந்து அடியோடு அழிக்கப்படுவது உறுதி.

தனது வருங்காலக் கணவன், சில இலட்சங்களுக்கும் பல பவுன்களுக்கும் விற்கப்பட்ட கடைச்சரக்காக இருப்பதை எந்தப் பெண்தான் விரும்புவாள்? தனது வருங்காலக் கணவனைத் தேர்ந்தெடுக்கும்போது மணமகள்கள் ஆழ்ந்து சிந்தித்துக் கொள்ளட்டும். மணமகன் பணக்காரனாக இருக்க வேண்டியதில்லை; நல்ல பண்புகளுக்குச் சொந்தக்காரனாக இருந்தால் போதும். அல்லாஹ்வின் கட்டளைக்கு ஒப்ப மணமக்கள் வாழ்க்கையைத் தொடங்கித் தொடர்வார்களாயின், கணவன் ஏழையாக இருந்தாலும் “வளங்களை வாரி வழங்கி, அவர்களைச் செழிப்புடன் வாழச் செய்வேன்” என்று அல்லாஹ் (024:032) வாக்களிக்கிறான்.

மரியாதைக்குரிய மார்க்க அறிஞர்களே!, திருமணங்களை முன்னின்று நடத்தும் மண உரையாளர்களே!

வரதட்சணை வாங்கப்படும் திருமணங்களில் பங்கெடுப்பதில்லை என்று நீங்கள் அனைவரும் சேர்ந்து ஒட்டு மொத்தமாக உறுதி எடுக்க வேண்டும். வரதட்சணை என்பது இறைகட்டளைக்கு எதிரான கடும் பாவச்செயல் என்பது, மார்க்க அறிஞர்கள் அறியாத ஒன்றல்ல; எனினும் நினைவூட்டல் என்பது இன்றையச் சமுதாயக் கட்டாயத் தேவைகளில் ஒன்றாகி விட்டது:

“… நல்லறங்களிலும் இறையச்சம் நிறைந்த செயற்பாடுகளிலும் நீங்கள் ஒத்துழையுங்கள். மாறாக, பாவங்களிலும் வரம்பு மீறுவதிலும் ஒத்துழைக்காதீர்கள். அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள். திண்ணமாக, (குற்றவாளிகளைத்) தண்டிப்பதில் அல்லாஹ் கடுமையானவன்” (அல்குர்ஆன் 005:002).

ஜமாஅத் தலைவர்களே, பொறுப்பாளர்களே!

“முடிந்தவரை வாங்கிக் கொண்டு, பள்ளிவாசலுக்குப் பத்து சதவிகிதம் கொடுத்து விடு” என்று பாவமான வரதட்சணையில் பங்கு கேட்பவர்களாக ஜமாஅத் பொறுப்பாளர் இருந்தால் அந்த ஜமாஅத்தின்கீழ் வாழும் மக்கள் எவ்வகையில் செயல்படுவர் என்பது கூறித் தெரிய வேண்டியதில்லை. களங்கமான பணத்தைக் கொண்டு, தன் இல்லத்தைப் பராமரிப்பதைக் களங்கங்களுக்கு அப்பாற்பட்ட தூயவனான அல்லாஹ் ஒருபோதும் விரும்ப மாட்டான். ஜமாஅத் பொறுப்பாளர்கள், அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் பொறுப்பு நிறைந்த பதவியில் இருப்பவர்கள் ஆவர். கூடுதல் பொறுப்பில் உள்ளவர்களுக்குக் கூடுதலான கேள்விகளும் மறுமையில் உள்ளன.

பெருமானார் (ஸல்) முஸ்லிம்கள் அனைவரையும் எச்சரித்தார்கள்: “நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். உங்களுடைய பொறுப்புகள் குறித்து நீங்கள் விசாரிக்கப் படுவீர்கள். (மக்கள்)தலைவர் ஒருவர், அவருடைய பொறுப்பின் கீழிருந்த அனைவரையும் குறித்து விசாரிக்கப் படுவார். ஒரு குடும்பத் தலைவன், அவனுடைய குடும்பத்தார் குறித்து விசாரிக்கப் படுவான். ஒரு மனைவி, அவளுடைய கணவனின் உடைமைகளையும் பிள்ளைகளையும் குறித்து விசாரிக்கப் படுவாள். ஒரு (வேலைக்கார)அடிமை, அவனுடைய முதலாளியால் அவனிடம் ஒப்படைக்கப்பட்ட சொத்துகள் குறித்து விசாரிக்கப் படுவான். இவ்வாறாக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள்; உங்களுடைய பொறுப்புகள் குறித்து விசாரிக்கப் படுவீர்கள்” புகாரீ.

“தங்களைத் தாங்களே திருத்திக்கொள்ள முன்வராத எந்தச் சமுதாயத்தையும் அல்லாஹ் திருத்தி அமைப்பதில்லை” (அல்குர்ஆன் 013:011)

எல்லாம் வல்ல அல்லாஹ்வால் தங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளை, அவனுடைய கட்டளைகளுக்கும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடைய வழிகாட்டுதல்களுக்கும் உட்பட்டு நிறைவேற்றுவதற்கும் அவரவர் தங்களின் தவறுகளை உணர்ந்து, திருத்திக் கொள்வதற்கும் முன்வந்தால் மட்டுமே சமுதாயத்தில் புரையோடியுள்ள வரதட்சணை என்ற இக்கொடிய அரக்கனை வீழ்த்த இயலும்.

அத்தோடு, தொடர்ந்து வரதட்சணை வாங்கி/கொடுத்து இறை கட்டளையைக் காற்றில் பறக்கவிட்டுக்கொண்டு, வெட்கமோ குற்ற உணர்ச்சியோ கொஞ்சமுமின்றி நடமாடுபவர்களை, அவர்கள் இறைமார்க்கத்திற்கு எதிராக அறைகூவல் விடுபவர்கள் என்ற வகையில் சமுதாயத்திலிருந்து அவர்களைப் புறக்கணிப்பதற்கும் ஜமாஅத், சங்க, இயக்க, அமைப்புகளில் அவர்களை இணைக்காமல், “வரதட்சணை வாங்கி/கொடுப்பவர்களுக்கு இங்கு இடமில்லை” என்ற அறிவிப்பைச் சமூகத்தில் பரவ விட்டு, “பன்றி இறைச்சி உண்பது தீய, பாவச் செயல்” என்ற உணர்வு சமூகத்தில் ஊறிப் போயுள்ள அளவிற்கு, “வரதட்சணை வாங்குதலும் பாவச்செயல்” என்ற எண்ணம் உள்ளத்தில் ஊன்றப் படும் வகையில் ஒவ்வொருவரும் செயல்பட ஆரம்பித்தால் இச்சமுதாயம் இறை உவப்புக்குரிய உன்னத சமுதாயமாக மாற்றம்பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

அல்லாஹ் அருள்வானாக!

– அதிரை ஜமீல்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.