திசை மாறும் இயக்கங்கள்

இஸ்லாமிய இயக்கங்களின் தோற்றம் இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் விட்டுச்சென்ற நற்பணியை தொடர்வதற்கே ஆகும். நபியவர்கள் இறைக்கட்டளைகளை பல சிரமங்களுக்கு முகம் கொடுத்தும், சில சறுக்கல்களின் போது இறைவனின் கண்டனத்திற்கும் ஆளாகி நன்னடத்தைகளின் சிகரமாய் விளங்கி இப்பெரும் பணியை இனிதே நிறைவு செய்தார்கள். அவர்கள் வழி வந்த சத்திய ஸஹாபாக்களின் காலங்களுக்குப் பின் வந்தவர்களிடம் ஏற்பட்ட ஒழுக்க வீழ்ச்சி மற்றும் கொள்கை புரட்டல்களின் காரணமாகவும்,ஆடம்பர உலக ஆசை காரணமாகவும் இஸ்லாத்தின் அடிப்படைகளை விளங்க மறுத்து, மனம் போன போக்கில் ஆட்சி புரிந்ததின் விளைவாக இப்பணி நலிவடைந்து திசைமாறி சென்றது.

உலகெங்கும் பரவி வாழ்ந்த முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாம் பற்றிய விளக்கம் திரிபடைந்து, உண்மையான இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளுக்கு மாறாக அவர்களின் நடைமுறைகள் அமைந்தன. இது போன்ற ஒரு வாய்ப்பிற்காகக் காத்திருந்த இஸ்லாத்தின் எதிரிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிரான அவதூறுகளை முனைப்புடன் பரப்பத் தொடங்கினர்.

இதனால் பலதரப்பட்ட மக்களுக்கு மத்தியில் வாழ்ந்த இஸ்லாமியப் பெயர்தாங்கிகளின் நடைமுறைகளே இஸ்லாம் என மற்ற மதத்தினரால் கருதப்பட்டது. இதனைச் சீர் செய்வதற்குக் காலத்திற்கு காலம் பல அறிஞர்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் தோன்றினார்கள். அவர்கள் பிறந்த மண்ணின் சூழலுக்கேற்ப முஸ்லிம்களின் மீள் எழுச்சிக்காகப் பல திட்டங்களை முன்மொழிந்து சென்றார்கள்.அவற்றின் அடிப்படையில் அமையப்பெற்றவைதான் இன்று நாம் காணும் இயக்கங்கள். இறை திருப்திக்காக தொண்டாற்றும் இயக்கங்கள் பல சோதனைகளுக்கிடையே வாய்மையுடனும், தூய்மையுடனும் பணி செய்யும் நிலையில் உள்ளன.

இப்பணி இருவகையாக அமைகின்றது.

முதலாவதாக இஸ்லாத்தை பற்றி அறியாத அல்லது தவறாக விளங்கி வைத்திருக்கிற பிற சமய மக்களிடம் தூய இஸ்லாத்தை அறிமுகப்படுத்தி உண்மையான வெற்றியின் பக்கம் அழைப்பது.

அடுத்ததாக முஸ்லிம் பெற்றோர்க்குப் பிறந்ததாலும், பெயரில் மட்டும் இஸ்லாமிய அடையாளத்தை கொண்டிருப்பவர்களிடமும், மேலும் தவறான வழிகாட்டுதல்களினால் பிற கலாச்சாரத்தோடு கலந்துக்கொண்டிருக்கும் முஸ்லிம்களை, நபிகளாரின் வழிமுறைகளை பின்பற்றுவதன் அவசியத்தை எடுத்துச்சொல்வதாக இப்பணி அமைய வேண்டும்.
 
இத்தூய இறைப்பணியை அல்லாஹ்வால் இடப்பட்ட கட்டளை என்பதை மறந்து சில இயக்கங்கள் தம் சொந்தப் பணி போல் தனிச்சையாக நினைத்து செயல்படுவதுடன், சகோதர இயக்கங்களை கலிமா முன்மொழிந்தவர்களாக, இஸ்லாமிய அடிப்படையைக் கொண்டு செயல்படுவர்களாகக் கூட கருதுவதில்லை. இன்னும் சில இயக்கங்களோ தாங்கள் செய்யும் பணிகளை விட சகோதர இயக்கங்களின் குறைகளை விளம்பரப்படுத்துவதையே தங்கள் முழு நேர பணியாகச் செய்யும் கேவலமான நிலையை இன்று கண்டு வருகிறோம். தங்களுக்கு இறைவனால் அருட்கொடையாகக் கொடுக்கப்பட்ட சிந்தனாசக்தியையும் செல்வதையும் அரிய நேரத்தையும், பிறரின் தவறுகளை உலகிற்கு ஆனந்தமாக அறிவிப்பதில் செலவிட்டு வரும் இழிநிலையைக் கண்கூடாகக் காண்கிறோம்.

இதை வாசித்தீர்களா? :   வாழ்த்துக்களில் சிறந்தது - அஸ்ஸலாமு அலைக்கும்!

இப்படித் திசை மாறிக் கொண்டிருக்கும் இயக்கங்கள் தங்களைச் சீர்திருத்திக்கொள்ள வேண்டும். உலகளாவிய அளவில் முஸ்லிம்களுக்கு எதிராக தீட்டப்படும் சதிகளை உணர்ந்து தங்களுக்கிடையேயான சில்லறைப்பிரச்சனைகளை பின்னுக்கு வைத்துவிட்டு ஒன்றுபட முன்வர வேண்டும். இப்பணி “இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெறுவதற்கே” என்பதை இயக்கங்கள் உணர்ந்து தூய இஸ்லாத்தின் மாபெரும் எழுச்சிக்கு வித்திட இறைவனை இறைஞ்சிடுவோம்.

கட்டுரையாக்கம்: இப்னுஇலியாஸ் (மூலம்: அல்ஹஸனாத், மார்ச்-2006)