வாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்!

Share this:

ங்கில மொழியின் மீதான பற்று ஆங்கிலேயருக்கு இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக தமிழ் சமுதாயத்தினருக்கு இருக்கிறது. அதிலும் குறிப்பாக வெகு நீண்ட காலம் இந்திய வரலாற்றில் கல்வியில் பின் தங்கி அடிமட்ட வேலைகளில் மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டு வந்த தமிழ் முஸ்லிம் சமுதாயம், மிக சமீபத்தில் தான் சிந்தனை ரீதியில் சற்றே துயில் கலைந்து எழுந்திருந்து எதிர்கால இளைய சமுதாயத்திற்கு சிறிதேனும் கல்வி கற்க அளிக்கும் மோகம் ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமிய அடிப்படை அறிவைப் புறந்தள்ளி ஆங்கில மோகம் மேலிட, தம் சந்ததியரைப் பார்த்து பிறர் பாராட்ட வேண்டும், வியக்க வேண்டும், பெருமை பேச வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி தமது சந்ததிகள் ஆங்கிலத்தில் புலமை பெற்றிட இரவு பகலாக பெற்றோர்கள் சிந்தித்து வருகின்றனர். இந்த ஆங்கில மோகத்தின் வெளிப்பாடுகள் நம் சமூகப்பிணைப்பிற்குள் இங்கும் அங்குமாக ஏன் நம் குடும்பத்திற்குள்ளாகவே வெளிப்படுவதைக் கூர்ந்து கவனித்தால் நன்கு புலப்படும்.

குறிப்பாக குடும்ப உறுப்பினர்களுக்குள்ளோ, அல்லது நெருங்கிய சொந்தபந்தங்களுக்குள்ளோ கூட ஒருவரை ஒருவர் சந்திக்கையில், உரையாடல் தொடங்குகையில் பரவலாகக் கூறப்படும் குட்மார்னிங், ஹாய், என்று துவங்கி பிரிவில் பை-பை, ஸீ-யூ, என்று மேற்கத்தியக் கலாச்சாரத்தில் எப்போதோ கண்டவற்றை அச்சுப்பிசகாமல் பயன்படுத்தும் அவல நிலையையே எங்கும் காண முடிகிறது.

மனிதர்களின் உரையாடலுக்கும், ஒருவரை ஒருவர் விளங்கிக்கொள்ளும் புரிந்துணர்விற்கும் மொழி ஒரு பாலமாக இருக்கிறது. ஒரு விஷயத்தைப் பேசுகையில் வார்த்தைகளும் அதனை அமைக்கும் சொற்றொடர்களும் மிக முக்கியமானவை.

சமீபத்தில் நிரூபிக்கப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வின்படி, மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே தான் யார், தனது பெற்றோர் யார் என்ற நினைவு பிற்காலத்தில் நினைவில் நிற்கும் என்றும் அதற்கு முன் நடைபெற்ற சம்பவங்களும் உரையாடல் முயற்சிகளும் மூளையில் இருந்து அழிந்து போகும் என்றும் அதற்குக் காரணம் எண்ணங்களின் பரிமாற்றம் தெளிவாக அர்த்த்தைத் தரும் மொழியின் மூலம் நடைபெறும் சிந்தனைப் பரிமாற்றம் தான் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மனிதனின் வாழ்வில் தேடல்கள் நிறைந்தவனாக இருக்க்கிறான். சிறந்த சில விஷயங்கள் என்று அவனுக்கு தோன்றும்போது கையில் உள்ள பழையவற்றை வீசி எறிந்துவிட்டு சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுபாவம் மிக்கவனாக இருக்கிறான்.

இனி ஒருவரை ஒருவர் சந்திக்கையில் முகமன் கூறுவது பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம். இஸ்லாம் ஒரு சக சகோதரரை சந்திக்க/உரையாட நேர்ந்தால் “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ” என்று கூறுங்கள் என்று அறிவுறுத்துகிறது. இதற்கு “தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!” என்கிற அழகான பொருள் பொதிந்திருக்கும் வாழ்த்தைக் காணலாம்.

இதுவே அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுடைய போதனையாகவும், மனிதகுலத்திற்குரிய மிகச் சிறந்த முன்மாதிரியாகவும் இருந்தது. மேலும் அளவற்ற அருளாளன் அல்லாஹ்வே முஸ்லிம்களுக்கு ஏவியுள்ள நல்வழியாகிய வாழ்த்து முறையும் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்பது தான்.

அல்லாஹ் குர்ஆனில், கீழ்க்கண்டவாறு கூறுகிறான்:

“மேலும் உங்களிடம் என்னுடைய வசனங்களை(அத்தாட்சிகளை, தெளிவான ஆதாரங்களை) நம்பக்கூடியவர்கள் வரும்போது (அவர்களுக்கு) நீங்கள் கூறுங்கள், “ஸலாமுன் அலைக்கும்”(உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்)”. (அல் அன் ஆம் 6 : 54 )

இப்னு அல் கைய்யிம்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

 

“அர்ரஹ்மான் எனும் சர்வ வல்லமையுடையவன் மிகவும் தூய்மையான, சாந்தியானவன். அவன் முஸ்லிம்க(ளாகிய இஸ்லாமியர்க)ளுக்கு “அஸ்ஸலாமு அலைக்கும்” என்பது வாழ்த்தாக இருக்க வேண்டும் என்று விதித்துள்ளான்.

இது இவ்வுலகில் உள்ள அனைத்து நாட்டினர் தற்போது கடைபிடித்து வரும் வாழ்த்து முறைகள், வழிமுறை செயல்களாகிய உண்மைக்கு புறம்பான வாழ்த்துக்களையும் விட சிறந்த ஒன்றாகும். “ஆயிரம் ஆண்டுகள் வாழ (வேண்டும் என்று) வாழ்த்துகிறேன்” என்பதோ “குட்மார்னிங் – காலை வணக்கம்” என்பதோ அல்லது ஒருவர் மற்றவருக்கு சிரம் பணிவதோ, அப்பொருளுடைய வார்த்தைகள் கூறிக் கொள்வதோ சரியான ஒன்றாகாது.

இவ்வாறே இந்த ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ எனும் வாழ்த்து எல்லாவற்றையும் விட சிறந்த ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இதன் பொருள் பாதுகாப்பு , அமைதி (சாந்தி – நிம்மதி) போன்றவை ஆகும். இவைகளே வாழ்க்கை சுபிட்சத்திற்கு அவசியமானவை. மேலும் இவையின்றி வேறு எதையும் அடைவது இயலாதது.

”அஸ்ஸலாமு அலைக்கும்” என்பது வாழ்த்தோடு மட்டுமின்றி மிகச் சிறந்த பிரார்த்தனை ஆகும். எப்படி?

ஸலாம்’ எனும் வார்த்தை ‘ஸலெம’ எனும் மூல வார்த்தையிலிருந்து வருகிறது. இதற்கு, தீய மற்றும் கேடானவற்றை விட்டு ஒருவர் தன்னை வேறுபடுத்திக் கொள்வது என்று பொருள் வரும். ஆக, நாம் ஒருவரை மற்றொருவர் வாழ்த்தும் போது, “உனக்கு எவ்வித தீங்குகளும் என்புறத்திலிருந்து வராது; உனக்கு எந்த கேடானதும் வரக்கூடாது; உனக்கு எந்த தீங்கும் ஏற்படக்கூடாது;” என்ற பிரார்த்தனையாக இது மாறுகிறது.

மேலும் ‘அஸ்-ஸலாம்’ என்பது அளவற்ற அருளாளனாகிய எல்லாம் வல்ல ‘அல்லாஹ்’ வின் அழகிய பெயர்களில் ஒன்றாக இருப்பதால், இந்த ஸலாம் எனும் வாழ்த்து “அவனுடைய பெயரில் உங்கள் மீது அருள் இறங்கட்டும்; உங்களோடு அல்லாஹ் இருக்கட்டும்; உங்களை அல்லாஹ் நல்வழி நடத்தி பாதுகாக்கட்டும்” என்றும் பொருள் வரும்.

ஆனால் இதில் மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் நாம் இவ்வளவு அழகான அர்த்தம் பொதிந்துள்ள ஒன்றை விட்டு விட்டு அதற்கு பகரமாக ”குட் மார்னிங்” அல்லது “ஹாய்” போன்ற அலங்காரமான கருத்தற்ற வாழ்த்துக்களை கூறிக் கொள்வதை தற்பொழுது பழக்கமாக்கிக் கொண்டோம்.

இதைவிட வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் முஸ்லிம்களில் சிலர் ஸலாத்தினை முறையாக சொல்ல, உச்சரிக்கவும் அறியாதவர்களாக உள்ளதுதான்.

சிலர் இதற்கான பதிலை ‘ஸ்லாமலைகும்’ /’ஸ்லாமகும்’ / ஸ்லாம் என்று அவசரமாக ஏதெனும், ஒரே மூச்சில் முனகி முடித்துவிடுகின்றனர் .இன்னும் சிலர் சந்திக்கும் போது பதில் கூறுவதைப் பற்றி பெரிதாக் கருதாமல் இருந்து விடுகின்றனர். இன்னும் சிலர் அதற்கு கையால் சைகை காட்டி முடித்து விடுகின்றனர்.

மேலும் ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லிக் கொள்பவர்களிலும் கூட தயக்கத்தையும், கஞ்சத்தனத்தை கடைபிடிப்பதையும் காணமுடிகிறது.

நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில், நபித்தோழர்களாகிய ஸஹாபா(பெரும)க்களோ யார் ஸலாம் சொல்வதில் முந்திக்கொள்வது என்று போட்டி போட்டுக் கொண்டு ஒருவர் மற்றவருக்கு ஸலாம் கூறி வந்தனர். இன்னும் சிலர் அறிந்தவருக்கும், அறியாதவருக்கும் ஸலாம் கூறி(வாழ்த்தி)க் கொள்வதற்காகவே பொது இடங்களுக்குச் சென்றனர்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ” இருவர் சந்தித்துக் கொள்ளும் போது யார் முதலில் ஸலாம் சொல்லி (பேச) ஆரம்பிக்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவராவார்”. அறிவிப்பாளர்: இமாம் அந் நவவி அவர்கள்.

இவ்வாழ்த்தின் நற்பலன்கள்:

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் சில நபித்தோழர்களுடன் அமர்ந்திருந்த இடத்தை கடந்த ஒரு மனிதர் அவர்களுடன் அமரும் போது, “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறினார்.(அப்பொழுது) நபி(ஸல்) அவர்கள், (அவர் பெற்று கொள்வது உறுதி) ”பத்து ஹஸனாத் ”(பத்து நன்மைகள்) என்று கூறினார்கள். அடுத்தொருவர் வந்தார். அவர், “அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்” (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்) என்று கூறி அமர்ந்தார். நபி(ஸல்), அவர்கள் கூறினார்கள்:(அவர் பெற்று கொள்வது உறுதி) ‘ இருபது ஹஸனாத்'(இருபது நன்மைகள்). மூன்றாவதாக ஒருவர் வந்தார். அவர், “அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு”(உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் அருளும் உண்டாகட்டும்) என்று கூறிவிட்டு அமர்ந்தார். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அவர் பெற்று கொள்வது உறுதி) ‘ முப்பது ஹஸனாத்'(முப்பது நன்மைகள்).

அஸ்ஸலாமு அலைக்கும் என்பது ஈமானி(இறை நம்பிக்கையி)ன் அம்சம் ஆகும்.

ஒரு நாள் ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம், “இஸ்லாத்தில் எந்த அம்சம் மிகச் சிறந்தது” என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பசித்தவருக்கு உணவளித்தலும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதும்” (ஹதீஸ் நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

சுவனத்தில் நுழைய எளிய வழி:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நீங்கள் (இறை)நம்பிக்கை கொள்ளாதவரை சுவனத்தில் செல்ல முடியாது. மேலும் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (இறை)நம்பிக்கை கொள்ளமுடியாது. நான் உங்கள் மத்தியில் நேசம் ஏற்படுத்தும் ஒன்றை உங்களுக்கு அறிவிக்கட்டுமா?. உங்களுக்கு மத்தியில் ஸலாம் (சாந்தியான வாழ்த்தை கூறிக்கொள்ளும் வழக்கத்தை) பரப்புங்கள்”.

பாவங்களை அகற்றுகிறது:

ல்லாஹ்வின் தூதர்(ஸல் ) அவர்கள் கூறினார்கள்: “இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து (ஸலாம் கூறி) கை குலுக்கினால் அவர்கள் பிரியும் முன் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப் படுகிறது.” (ஹதீஸ்நூல்: அபுதாவூத்)

சுவர்க்கவாசிகளின் வாழ்த்து:

“பின்னர், எவர் தமது இறைவனுக்கு அஞ்சி(வாழ்ந்த)னரோ அவர்கள் கூட்டமாக சுவர்க்கத்தில் செலுத்தப்படுவர். அவர்கள் அதை நெருங்கும் போது அதன் வாசல்கள் திறக்கப்படும். மேலும் அதன் காவலர்கள் அவர்களை நோக்கி “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறுவார்கள். நீங்கள் நல்லதை செய்ததன் காரணமாக இதில் நுழைந்து அதில் என்றென்றும் நிலையாக தங்கி விடுங்கள்”(ஸூரத்துல் ஜுமர் : 73 )

 

மேலும் அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வே “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று தன் அடியார்களைப் பார்த்து முகமன் கூறுகிறான்.

அல்லாஹ் நம்பிக்கையாளர்கள் மீது ஸலாம் (சாந்தியும் அருளும்) பொழிகின்றான். மேலும் குறிப்பாக ஸூரத்து ஸாப்ஃபாத்தில் அவன் “நபிமார்களாகிய நூஹ், இப்ராஹிம், இஸ்மாயில், மூஸா போன்றவர்கள் மீதும், இறையச்சமுடைய நல்லடியார்கள் மீதும் ஸலாம் உண்டாகட்டும்” என்று குறிப்பிடுவதை காண முடிகிறது.

ஒரு முறை வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் வீட்டிற்கு வருகை தந்த போது, நபி(ஸல்) அவர்களுடைய அன்பு மனைவி கதீஜா(ரலி) அவர்கள் அங்கு இருந்தார்கள்.

ஜிப்ரீல்(அலை) அவர்கள், “அல்லாஹ் கதீஜா(ரலி) அவர்களுக்கு ஸலாம் அனுப்பியுள்ளான்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஓ! கதீஜாவே, அல்லாஹ் உமக்கு ஸலாம்(கூறி)அனுப்பியுள்ளான்”. அதற்கு அன்னை கதீஜா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வே ‘அஸ் ஸலாம்’ ஆவான். மேலும் உங்கள் மீதும் (ஜிப்ரீல்(அலை)) ஸலாம்(சாந்தி) உண்டாகட்டும்); மேலும் அல்லாஹ்வின் தூதரே, தங்கள் மீதும் ஸலாம் (சாந்தி) உண்டாகட்டும்”. (ஹதீஸ்: புகாரி)

வாழ்த்துக்கு பதில் கூறுதல் அவசியம்:

ஒரு முஸ்லிமுக்கு (பிற) முஸ்லிம்(கள்) மீது ஐந்து வித உரிமைகள் உள்ளன.

1) அவனுக்கு ஸலாம் கூறப்பட்டால் பதில் கூறவேண்டும்.

3) நோயுற்று இருந்தால் நோய்விசாரிக்க செல்ல வேண்டும்.

3) மரணித்தால் ஜனாஸாவில் கலந்து கொள்ள வேண்டும்.

4) விருந்துக்கு அழைக்கப் பட்டால் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

5) தும்மினால் (அல்ஹம்துலில்லாஹ் என்று அவன் கூறுவதற்கு பதிலாக ‘யர்ஹமு கல்லாஹ் ‘ என்று கூறி) அவன் மீது இறைவன் கருணை புரிய பிராத்திக்க வேண்டும்.

(ஹதீஸ்நூல்: புகாரி, முஸ்லிம்).

வீட்டில் நுழையும் போதும் வாழ்த்துரை:

“நீங்கள் உங்கள் இல்லங்களில் நுழையும் போது, அல்லாஹ்விடமிருந்து வழங்கப்பட்ட அருள் மிகு நல்வாழ்த்தை(அமைதியை) கொண்டு ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்ளுங்கள். அல்லாஹ் தமது வசனங்களை நீங்கள் விளங்கி கொள்வதற்காக உங்களுக்கு தெளிவாக்கியுள்ளான். (ஸூரத்துன் நூர் 34 : 61)

நீங்கள் ஒருவரை ஒருவர் விடை பெற்று பிரியும் போதும் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று கூற வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நீங்கள் ஒரு சபையில் கலந்து கொள்ளும் போது அங்குள்ளவர்களுக்கு (ஸலாம் கூறி) வாழ்த்த வேண்டும். அதே போல் அங்கிருந்து புறப்படும் போதும் அவர் வாழ்த்து கூறிய பின்னர் புறப்பட வேண்டும்…… “. (ஹதீஸ்நூல்: அபுதாவூது, திர்மிதி).

இவ்வுலக காரியங்களை பொருத்தவரையில் நாம் நம் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மிகச்சிறந்ததைத் தர பெரும் சிரமம் மேற்கொள்கிறோம். ஆனால் அவர்களுக்கு அழகான வாழ்த்தை தரும் போது மிகவும் அழகான மற்றும் சுருக்கமான “அஸ்ஸலாமு அலைக்கும்” எனும் இவ்வாழ்த்தை கூறி வாழ்த்த மறந்து விடுகின்றோம்.

இது ஒரு துவாவாக, பிராத்தினையாக, அமைதிக்குரிய மற்றும் அருளுக்குரிய, பாதுகாவல் மற்றும் எல்லாவித தீங்குகளிலும், கேடுகளிலும் இருந்து அபயமும் பெறவல்ல, அருளாளன் தனது அடியார்கள் மீது அருளும் அருட்கொடையாகும். மேலும் சுவர்க்கவாசிகளின் வாழ்த்தாகும்.

இதனை ஒவ்வொருவரும் தமது வாழ்வில் அனைத்து பகுதிகளிலும் கடைபிடிக்கும் வகையில் தம்மிடையே பரப்ப முன் வரவேண்டும்.

ஆக்கம்: இப்னு ஹனீஃப்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.