முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

முஸ்லிம்களுக்காக

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்.

லுஹருக்குச் செய்த ஒளுவோடு அசர் தொழுவது வழக்கம். ஆனால் இன்று என்னைத் தொழ வைக்கச் சொன்னார்கள். தொழுகை முடியும் வரை ஒளு பற்றி சந்தேகமாக இருந்தது. முடிந்த பிறகு ஒளு முறிந்த விஷயம் உறுதியானது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

...மின்னஞ்சல் வழியாக சகோதரர் ஜாகிர் ஹுஸைன்.

தெளிவு: வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

மார்க்கத்தைத் தெளிவாக அறிந்துப் பின்பற்ற வேண்டும் என்ற அவாவில் இக்கேள்வியை எழுப்பியச் சகோதரர் ஜாகிர் ஹுஸைன் அவர்களுக்கு மார்க்கத்தில் மேலும் அதிகப்பற்றை இறைவன் ஏற்படுத்துவானாக.

முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள். உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள். உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள். (005:006)

''தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடி பொருட்களிலிருந்து (செய்யப்படும்) எந்தத் தர்மமும் (இறைவனால்) ஏற்கப்படாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா)

''உங்களில் ஒருவருக்கு சிறு தொடக்கு (ஹதஸ்) ஏற்பட்டுவிட்டால் அவர் அங்கத் தூய்மை - ஒளுச்  செய்துகொள்ளாதவரை அவரது தொழுகை ஏற்கப்படாது'' என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

''எவனுக்கு ஒளு இல்லையோ அவனுக்கு தொழுகை இல்லை'' (அஹ்மத், இப்னுமாஜா)

மேற்கண்ட இறைவசனமும், நபிமொழிகளும் தொழுகைக்கு ஒளு - அங்கத் தூய்மை மிக அவசியம் என உறுதிப்படுத்துகின்றது. சிறுநீர், மலம் கழிப்பது, காற்று வெளியேறுவது ஆகியவை ஹதஸ் - சிறு தொடக்கு எனப்படும். ஒளுவோடு இருக்கும் போது இச்செயல்களைச் செய்தால் ஒளு நீங்கிவிடும். பின்னர் மீண்டும் ஒளுச் செய்தே தொழுகைக்குத் தயாராக வேண்டும்.

(ஒளுச் செய்ய தண்ணீர் கிடைக்கவில்லை எனில் தூய்மையான மண்ணில் தயம்மும் செய்துகொள்ள அனுமதிக்கும் இறைவசனம், 004:043)

தொழுகையில் காற்றுப் பிரிதல்

''தொழும் போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஏற்படுவதாக நான் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு, 'நாற்றத்தை உணராத வரை அல்லது சப்தத்தைக் கேட்காத வரை தொழுகையிலிருந்து திரும்ப வேண்டாம்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

தொழுகையில் காற்று வெளியேறுவது போன்ற வெறும் உணர்வுக்காகத் தொழுகையை இடையில் முறிக்க வேண்டிய அவசியமில்லை! இனி சகோதரரின் கேள்விக்கு வருவோம்.

தொழுகைக்கு வெளியே ஒளு நீங்கியதை மறந்த நிலையில் தொழுகைக்குத் தயாராகி, தொழுகையில் ஒளு பற்றிய சந்தேகம் ஏற்பட்டு, தொழுது முடித்தப் பின் ஒளு நீங்கியது உறுதியானது என்பதால் "ஒளுவின்றி தொழுகை இல்லை" என்ற மார்க்க நியதிப்படி மீண்டும் ஒளுச் செய்து அத்தொழுகையைத் தொழ வேண்டும். இதனால் பின்பற்றியவர்களின் தொழுகைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

தொழுகையில் இமாமத் செய்பவரின் தவறுகள் பின்பற்றித் தொழுவோரைப் பாதிக்காது என்றக் கருத்திலமைந்த நபிமொழி புகாரியில் இடம்பெற்றுள்ளது. மேலும், மறதியாக ஒளு நீங்கிய நிலையில் தொழுகை நடத்திய இமாம் என்ன செய்ய வேண்டும்? இதற்கு அஃதர் - நபித்தோழர்களின் செயல்கள் நல்ல முன்னுதாரணமாக இருக்கின்றன.

'ஒருமுறை உமர்(ரலி) அவர்கள் தாம் குளிப்புக் கடமை உள்ளவராக இருக்கும் நிலையில் (விஷயம் தெரியாமல்) மக்களுக்குத் தொழ வைத்து விட்டார்கள். பின்னர் (விஷயம் தெரிய வருவே அவர்கள் மட்டும்) தொழுகையை மீட்டித் தொழுதார்கள். ஆனால் தொழுகையை மீட்டும்படி மற்றவர்களுக்குக் கூறவில்லை'' (தாரகுத்னீ)
 
''ஒருமுறை அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களிடம், ஒளு இல்லாமல் ஒருவர் மக்களுக்கு தொழ வைத்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அவர் மட்டும் தொழுகையை மீட்ட வேண்டும், அவரைப் பின்பற்றி தொழுதவர்கள் மீட்ட வேண்டியதில்லை'' என்று பதிலளித்தார்கள்.(தாரகுத்னீ)

எனவே ஒளு முறிந்தது என தெளிவாகத் தெரிந்த அந்தத் தொழுகையைச் சகோதரர் மீண்டும் தொழ வேண்டும்.

(இறைவன் மிக்க அறிந்தவன்)

Comments   

Banu
0 #1 Banu 2017-10-13 13:37
Assalamu alaikum... எனக்கு மலம் கழித்தலில் அதிக சந்தேகம் எழுகிறது... காற்று வெளியேறினால் கூட மலம் வந்துவிட்டதோ என்ற சந்தேகம்.. ஒவ்வொரு விடயத்திலும் அப்படித்தான்.. நான் என்னை எவ்வாறு மாற்றிககொள்வது?
Quote | Report to administrator
Abu Muhai
0 #2 Abu Muhai 2017-10-16 09:05
Quoting Banu:
Assalamu alaikum... எனக்கு மலம் கழித்தலில் அதிக சந்தேகம் எழுகிறது... காற்று வெளியேறினால் கூட மலம் வந்துவிட்டதோ என்ற சந்தேகம்.. ஒவ்வொரு விடயத்திலும் அப்படித்தான்.. நான் என்னை எவ்வாறு மாற்றிககொள்வது?


வ அலைக்குமுஸ்ஸலாம ் வரஹ்,

எப்பவும் எல்லா விஷயங்களிலும் குழப்பம்/தடுமாற ்றம் என்றால் அதை நீங்கள்தான் சிரத்தை எடுத்து ஒரு விஷயத்தை உறுதிப்படுத்தி முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.

உங்கள் சிந்தனையை சிதற விடாமல் திடமாக ஒரு நிலையில் வைத்துக்கொள்ள முயலுங்கள் தடுமாற்றம் தவிர்க்கப்படலாம ்! ஏதாவது ஒரு காரியத்தில் சந்தேகம் ஏற்பட்டால் சற்று சிந்தித்து எதில் சந்தேகம் வலுக்கின்றதோ அதை விடுத்து சந்தேகம் இல்லாதவற்றில் செயல்படுங்கள்.

ஒளு இல்லாமல் தொழுகை இல்லை என குர்ஆனும் சுன்னாவும் கூறுவதால் ஒளு இருக்கிறதா பிரிந்து விட்டதா என்ற சந்தேகம் எழுந்தால் மீண்டும் ஒளு எடுத்துக் கொண்டு தொழுவதில் எந்த சிரமும் இல்லையே!

உங்கள் சிந்தனைக் குழப்பம் நீங்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்!
Quote | Report to administrator
Sheku Mohamed
-1 #3 Sheku Mohamed 2018-05-12 06:22
காற்று பிரிந்தால் கால் கழுவி (சுத்தம் செய்து ) விட்டு ஒளு செய்ய வேண்டுமா? ஒளூ மட்டும் தான் செய்ய வேண்டுமா?
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்