முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

முஸ்லிம்களுக்காக

ன்பான சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

அண்மையில் நமது தளத்தில் கேள்வி-பதில் பகுதியில் வெளியான, ‘மனைவியின் அனுமதி தேவையா? எனும் ஆக்கத்துக்கு விமர்சனமாக இரண்டு பின்னூட்டங்கள் வந்தன. அவ்விரண்டும் பின்னூட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளன.

அவற்றில் இடம்பெற்ற விமர்சனக் கருத்துகளும் அவற்றுக்கான கூடுதல் விளக்கங்களும் கீழே:

“சத்தியமார்க்க கட்டுரை ஆசிரியருக்கு நம்ம டீக்கடை மக்களே எம்புட்டோ தேவலாம்”

அல்லாஹ் எங்களுக்கு வழக்கியுள்ள அளவிடப்பட்ட அறிவைக்கொண்டு, அவனுடைய மார்க்க மூலாதாரங்களிலிருந்து இயன்றளவு விளங்கிச் செயல்பட்டு மற்றவர்க்கும் எடுத்துச் சொல்லிவருகின்றோம், அல்ஹம்து லில்லாஹ்!

மற்றபடி, "எங்களைவிடச் சிறந்தவர் – அல்லது – தேவலாம் ஆக எவருமிலர்" என்னும் சாத்தானியச் சிந்தனை எங்களுக்கு இல்லை. அந்தச் சிந்தனை எங்களுக்கு ஏற்பட்டுவிடாமல் அல்லாஹ் எங்களைக் காப்பானாக!

எங்களைவிட எம்புட்டோ தேவலாமாக டீக்கடை மக்கள் இருப்பதும் டீக்கடை மக்களைவிட ஒரு காஃப்பிக்கடை மக்கள் எம்புட்டோ தேவலாமாக இருப்பதும் காஃபிக்கடை மக்களைவிட ஒரு ஆப்பக்கடை மக்கள் எம்புட்டோ தேவலாமாக இருப்பதும் வெகு இயல்பானது.

“நாங்கள் கற்றுத் தேர்ந்தவர்கள்” என்றோ “நாங்கள்தான் கற்றுத் தேர்ந்தவர்கள்” என்றோ “நாங்கள் மட்டும்தான் கற்றுத் தேர்ந்தவர்கள்” என்றோ என்றைக்கும் நாங்கள் மார் தட்டிக்கொள்வதில்லை.

டீக்கடையில் உள்ளவர்கள் முதல் சத்தியமார்க்கம் உட்பட எவருக்குமே பதில் சொல்ல விருப்பம் இல்லாத எனது வினா இதுதான்: கணவனின் மறு கல்யாணத்துக்கு அனுமதிக்கவே மாட்டேன்... மீண்டும் அனுமதிக்கவே மாட்டேன்... என எதிர்ப்பு தெரிவிக்கும் முதல் மனைவியை என்ன செய்வது..???
---------இந்த கேள்வியை கேட்டால்....
சுத்தி வளைச்சு எலலாரும் சொல்றது... எப்படியாச்சும் மார்க்கத்தை சொல்லி நைச்சியமா பேசி கன்வின்ஸ் பண்ணி அனுமதிக்க வச்சிடணும். வேறன்ன செய்ய..?
அந்த எழவைத்தான் "அனுமதி" வாங்கிக்கிங்கப்பா ன்னு சொல்லிட்டு இருக்க்கேன்....

அல்லாஹ்வும் ரஸூலும் வாங்கச் சொல்லாத அனுமதியை முதல் மனைவியிடமிருந்து வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்த எவருக்கும் யோக்கிதை இல்லை. இஸ்லாம் “உண்டு” என்று சொல்வதை “இல்லை” என்று மறுப்பதற்கோ “இல்லை” என்று இஸ்லாம் சொல்வதை “உண்டு” என்று சொல்வதற்கோ தனி மனிதராயினும் அரசாங்கமே ஆயினும் எவருக்கும் உரிமை கிடையாது. மீறிச் சொன்னாலும் அது செல்லாது.

“மாட்டுக்கறி ஹலால் உணவு” என இஸ்லாம் சட்டம் விதித்திருக்க, “மாட்டுக்கறி ஹராம் – சாப்பிடாதே! சாப்பிட்டால் சிறையிலடைப்பேன்; அபராதம் விதிப்பேன்; நாடு கடத்துவேன்” என அரசே சட்டம் விதித்தாலும், சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தாலும் மாட்டுக்கறி ஹராமாகி விடாது.

“ஹலாலும் தெளிவானது, ஹராமும் தெளிவானது” எனத் தெள்ளத் தெளிவாக்கி இஸ்லாம் முழுமைப்படுத்திவிட்டது. பலதார மணம் சந்தேகத்திற்கு இடமில்லா ஹலால் எனவும் இஸ்லாம் உறுதிப்படுத்தியுள்ளது. அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் ஹலாலாக்கி அனுமதித்துள்ள “இரண்டாம் திருமணத்திற்கு முதல் மனைவி ஒப்புதலளிக்க வேண்டும். முதல் மனைவியின் அனுமதியின்றி கணவன் இரண்டாம் தாரம் மணமுடிக்கக்கூடாது” என்றால் அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கும் அதிகாரத்தை முதல் மனைவிக்கு வழங்கியவர் யார்?

கணவன் இரண்டாம் தாரமாக மணக்கவிருக்கும் மணப் பெண்ணின் மன ஒப்புதல் கட்டாயம் வேண்டும் என்பதில் நியாயமுள்ளது. ஏனெனில், “மணப் பெண்ணின் சம்மதமின்றி மணமுடித்தால் அத்திருமணம் செல்லாது” என இஸ்லாம் கூறுகின்றது (புகாரீ 5136) . மணக்கவிருக்கும் மணப்பெண் சம்மதித்தால் திருமணம் நிறைவேறிவிடும். ஏற்கனவே தன் திருமணத்தை ஏற்றுக்கொண்டு, “கபில்த்து” சொன்ன முதல் மனைவி, கணவனின் இரண்டாம் தாரம் திருமணத்திற்கும் "கபில்த்து"ச் சொல்ல வேண்டும் என்பது புத்திக்குப் பொருந்துவதாகவும் இல்லை.

“கணவனின் மறு கல்யாணத்துக்கு அனுமதிக்கவே மாட்டேன்” என்று கூறுவதற்கு மனைவிக்கு அதிகாரமே இல்லை எனும்போது நைச்சியம் பேசி மசிய வைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. “நீங்கள் வேறொரு கல்யாணம் செய்துகொள்வது எனக்கு விருப்பமில்லை” என்று கணவனிடம் மனைவி கூறலாம். மிஞ்சிப் போனால், “நீங்கள் வேறு பெண்ணை மணப்பதாயின், என்னை மண உறவிலிருந்து விடுவித்துவிடுங்கள்” என்று விருப்பத் தேர்வைக் கணவருக்குக் கொடுக்கலாம். ஹதீஸ் அதைத்தான் கூறுகிறது:

"… அலீ பின் அபீதாலிப், என் மகளை (ஃபாத்திமாவை) மணவிலக்குச் செய்துவிட்டு, அவர்களுடைய பெண்ணை மணமுடித்துக்கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்கமாட்டேன்) - புகாரீ 5230.

இன்னும் ஒருபடி மேலேறி, தன் பேச்சைக் கேட்காத கணவனிடமிருந்து குல்உ மூலம் தன்னையே விடுவித்துக் கொள்ளலாம்.

இஸ்லாமிய சிலதாரமணம்.... ரோட்டில் நிற்கும் அநாதைகளை வீட்டுக்குள் கூட்டி வர அல்லாஹ்வால் உருவாக்கப்பட்டு ஆண்கள் மீது சுமத்தப்பட்ட ஒரு கூடுதல் சுமை. அச்சுமையை மறுக்கத்தான் ஆண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாறாக.... இஸ்லாமிய சிலதாரமணம்.... தலாக் விடப்பட்ட புதுப்புது அநாதைகளை உருவாக்க அல்லாஹ்வால் ஆண்களுக்கு தரப்பட்ட பாக்கியம் அல்ல...!

ஒரு கட்டுரை எழுதுவதற்கு, அதன் கருவைப் பற்றிய தகவல்கள் ஓரளவு தெரிந்திருந்தால் போதும். ஆனால் ஓர் ஆக்கத்தை விமர்சிப்பதாக இருந்தால் அதன் கருவைப் பற்றிய ஆழமான அறிவு வேண்டும்.

அல்குர் ஆன் 4:3இல் இடம்பெறும் அநாதைகளை மணந்துகொள்வது பற்றிய இறைவசனம் அருளப்பட்ட பின்னணி:
ஒரு மனிதரின் பராமரிப்பில் அநாதைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளை அவர் மணந்தார். அவளுக்குப் பேரீச்சமரம் ஒன்று (சொந்தமாக) இருந்தது. அந்தப் பேரீச்ச மரத்திற்காகவே அந்தப் பெண்ணை அவர் தம்மிடம் வைத்திருந்தார். மற்றபடி அவளுக்கு அவரின் உள்ளத்தில் (இடம்) ஏதுமிருக்கவில்லை. எனவே, அவர் விஷயத்தில் தான் 'அநாதை(ப் பெண்களை மணந்து அவர்)களின் விஷயத்தில் நீங்கள் நீதி செலுத்த இயலாது என அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டாவதாக, மூன்றாவதாக, நான்காவதாக நீங்கள் மணந்து கொள்ளலாம்' எனும் (அல்குர்ஆன் 4:3 வது) வசனம் அருளப்பட்டது - புகாரீ 4573.

சத்தியமார்க்கம் உட்பட கட்டுரையை பாதியோடு நிறுத்தி விட்டு தப்பி விடுகிறார்கள். அடுத்த பகுதிக்குல்வ் வர மாட்டிங்கிறாங்க.
அந்த அலி ரலி -- பாத்திமா ரலி மேட்டரில் கூட சுயவிளக்கம் கொடுத்து புகுந்து விளையாண்டு இருக்காங்க.

சத்தியமார்க்கம் தப்பிக்கும் அடுத்த பகுதி எது? என்பதைப் பற்றியும் புகுந்து விளையாடிய சுயவிளக்கப் பகுதிகள் எவை என்பதையும் போல்ட்டில் அல்லது எழுத்து நிற வேறுபாட்டின் மூலமும் விளக்கமாகக் குறிப்பிட்டால் தெரிந்துகொண்டு பதிலளிக்க ஏதுவாகும்.

யாரை கல்யாணம் பண்ணிக்க போறார்ங்கிறது பாத்திமா ரலி அவர்கள் எழுப்பிய பஞ்சாயத்து அல்ல. அவர் கல்யாணம் பண்ணிக்க போறார் என்பதுதான் பஞ்சாயத்து. பின்னாடி அது நபியின் மூலம் யார்ங்கிறதுதான் முக்கிய பஞ்சாயத்தா மாறிடுது.

அதாவது, ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு அலீ (ரலி) இரண்டாவது திருமணம் முடிக்கப் போவது மட்டும் தெரியுமே அல்லாமல் அப்பெண் அபூஜஹ்லின் மகள் என்பது தெரியாது என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தம் எதிரியின் மகள் என்பதால் முன்விரோதம் காரணமாக அலீ (ரலி) அவர்களுக்கு அனுமதி மறுத்து, பாலிடிக்ஸ் செய்துவிட்டார்கள் என்பதும் கொடுமையான விமர்சனப் பஞ்சாயத்து.

வலிமையான ஊடகமான இணையம், குரங்கு கையில் கிடைத்த பூமாலையாய் பலருக்கும் ஆகிப்போய் ஆண்டுகள் கடந்துவிட்டன. யாரைப் பற்றி, என்ன எழுதுகிறோம் என்று தெரியாமலேயே எழுதித் தள்ளும் இணைய நோயாளிகள் மலிந்துவிட்டனர் என்பதற்கு அல்லாஹ்வின் தூதருடைய தீர்ப்புகளையே விமர்சனம் செய்யும் அபாயகரமான நோய் இணையத்தில் பரவி வருவது சான்றாகத் திகழ்கிறது.

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُسَيْنٍ، أَنَّ المِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، قَالَ: إِنَّ عَلِيًّا خَطَبَ بِنْتَ أَبِي جَهْلٍ فَسَمِعَتْ بِذَلِكَ، فَاطِمَةُ فَأَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَزْعُمُ قَوْمُكَ أَنَّكَ لاَ تَغْضَبُ لِبَنَاتِكَ، وَهَذَا عَلِيٌّ نَاكِحٌ بِنْتَ أَبِي جَهْلٍ، ...

புகாரீயின் 3729ஆவது பதிவின்படி,
அலீ (ரலி), அபூஜஹ்லின் மகளை மணந்துகொள்வதற்குப் பெண் பேசி முடித்ததைக் கேள்விப்பட்ட ஃபாத்திமா (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “உங்கள் பெண்மக்களை(எத்தகைய சோதனை வந்து அடைந்தாலும் அதை)ப் பற்றி நீங்கள் கண்டுகொள்ளமாட்டீர்கள் என்று உங்கள் சமூகத்தவர் பேசத் தலைப்பட்டுவிட்டனர். ... இந்த அலீ, அபூஜஹ்லின் மகளுக்கு மணாளர் (ஆகப் போகிறார்) ...” என்பது ஃபாத்திமா (ரலி) அவர்களின் நேரடி வாக்குமூலக் குற்றச்சாட்டு.

மீண்டும் அறிவுறுத்துகின்றோம் - ஒரு கட்டுரை எழுதுவதற்கு, அதன் கருவைப் பற்றிய தகவல்கள் ஓரளவு தெரிந்திருந்தால் போதும். ஆனால் ஓர் ஆக்கத்தை விமர்சிப்பதாக இருந்தால் அதன் கருவைப் பற்றிய ஆழமான அறிவு வேண்டும். விமர்சனத்தைப் பொருத்த மட்டில் அரைகுறை அறிவு என்பது அரைக் கிணறு தாண்டுவதைவிடவும் ஆபத்தானது.

யாரை கல்யாணம் பண்ணிக்க போறார்ங்கிறது பாத்திமா ரலி அவர்கள் எழுப்பிய பஞ்சாயத்து அல்ல என்பது பிழை என்பதும் பின்னாடி அது நபியின் மூலம் யார்ங்கிறதுதான் முக்கிய பஞ்சாயத்தா மாறிடுது என்பது நபி (ஸல்) அவர்களைத் தரம் தாழ்த்தி எழுதிய கொடுமை(1) என்பதும் புகாரீ 3729ஆவது பதிவின்படி தெளிவாகிறது.

ஃபாத்திமா(ரலி)யை வெறுப்படைய செய்தது எது? தம் கணவர் மற்றொரு திருமணம் முடிப்பதா அல்லது அல்லாஹ்வின் எதிரி மகளை(அவர் முஸ்லிமாகவே இருந்தாலும்) திருமணம் முடிப்பதா?
முஸ்லிமாகிவிட்டாலும்கூட தந்தை மோடி முஸ்லிம்களின் எதிரி என்பதால் மோடியின் மகளை ஒரு முஸ்லிம் திருமணம் செய்து கொள்ளக்கூடாதா?

இதற்கான விளக்கம்: "அல்லாஹ் மீதாணையாக அல்லாஹ்வின் தூதரின் மகளும், அல்லாஹ்வின் விரோதியின் மகளும் ஒரே இடத்தில் ஒன்று சேர முடியாது!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதுதான்.

"அபூதாலிபின் மகன் அலீ, அபூஜஹ்லின் மகளை மணமுடிக்கவிருக்கிறார்" என்று பெயர் குறிப்பிட்டு ஃபாத்திமா அதிர்ச்சியடைகிறார். அபூஜஹ்லின் மகளைத் தவிர, நபித்தோழர்களின் புதல்வியரில் எவரையாவது அலீ (ரலி) தமது மறுமணத்திற்காகப் பெண் பேசியிருந்தால் ஃபாத்திமா வெறுப்படைந்தருக்க மாட்டார். இதை யூகமாக நாம் சொல்லவில்லை. இறைவசனங்களின் - ஹதீஸ்களின் சொல்லாட்சியிலிருந்து அவ்வாறுதான் விளங்குகிறோம்(2).

முதல் மனைவி இருக்கும்போது கணவன் இரண்டாவது திருமணம் முடிக்க மார்க்கத்தில் தடை இல்லை, அதற்கு முதல் மனைவியிடம் அனுமதிபெற வேண்டியதுமில்லை எனும் இஸ்லாத்தின் விதிமுறையின்படியே அலீ (ரலி) இரண்டாவது கல்யாணத்திற்குப் பெண் பேசுகிறார். ஆனால், அவர் பெண் பேசியது அபூஜஹ்லின் மகளை.

அபூஜஹ்லின் முஸ்லிம் மகள், முஸ்லிம் ஆண்மகன் எவரும் மணமுடிக்க ஆகுமானவர்தான்(3). இதைத் தெரிந்துதான் அலீ (ரலி) பெண் பேசினார். ஆனால், தம் முதல் மனைவியான அல்லாஹ்வின் நபிமகளும், அல்லாஹ்வின் விரோதியின் மகளும்  ஒரே நேரத்தில் ஒருவரின் இரு மனைவிகளாக இருக்க முடியாது என்பது அலீ(ரலி)க்குத் தெரிந்திருக்கவில்லை. அதை நபி (ஸல்) எடுத்துக் கூறிய பின்னரே, சேரக்கூடாத இடத்தில் பெண் பார்த்திருக்கிறோம் என்பதை அலீ (ரலி) உணர்ந்து, தமது மறுமண ஏற்பாட்டைக் கைவிட்டார்.

அடுத்தடுத்த மணம் புரிய முந்தைய மனைவியின் ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயமில்லை என்பதாலேயே அலீ(ரலி), அபூஜஹ்லின் மகளைத் திருமணம் புரிய ஆலோசனைகள் முன்னெடுத்தார்.

இல்லை என்றால், 'இன்னொரு திருமணம் செய்வதற்கு முதல் மனைவியின் ஒப்புதல் பெற வேண்டுமென்ற மார்க்கச் சட்டம் அலீ(ரலி)க்குத் தெரியாது' என்று கூற வேண்டியிருக்கும். ஃபேஸ்புக் போராளிகளுக்குத் தெரிந்த விசயம்கூட தெரியாத அளவுக்கே ஸஹாபாக்கள் இருந்துள்ளனர் என்ற மோசமான முடிவை நோக்கி வாசகர்களை இழுத்துச் செல்லும் அபாயம் இதில் பொதிந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

அலீ (ரலி) யாரை மறுமணம் செய்யப்போகிறார் என்று கேள்விப்பட்டவுடன், நபி (ஸல்) அவர்களின் எதிர்வினை இவ்வாறு இருந்தது:

"நான் ஹலாலை ஹராம் என்று தடைசெய்பவன் அல்லன்" என்று ஏற்கெனவே பலதார மணம் ஹலாலாக்கப்பட்டதுதான் அதில் மாற்றம் இல்லை. அலீ என் மகளின் கணவர் என்பதற்காகப் பலதார மணம் அவருக்கு ஹராம் என்று தடைவிதிக்க மாட்டேன்; அல்லாஹ்வின் விரோதியின் மகளை மணப்பது மட்டுமே தடை - அந்தத் தடையும் என் மகளைத் தலாக் சொல்லிவிட்டால் நீங்கிவிடும்" என்கிற நபி (ஸல்) அவர்களின் சொல்லாட்சியிலிருந்து அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் ஹலாலாக்கியதை வேறு எவரும், எதுவும் ஹராமாக்கிட முடியாது; இதில் முதல் மனைவியின் அனுமதி தேவையில்லை என்பதும் அடங்கும். அதாவது முதல் மனைவி அனுமதித்தாலும் அனுமதிக்கவில்லை என்றாலும் கணவன் இரண்டாம் தாரம் மணமுடிப்பது ஹராமில்லை என்கிற நமது பேசுபொருள் அதில் அடங்கியுள்ளது.

oOo

முக்கியக் குறிப்புகள்:

(1) தமக்கு இன்னல்கள் இழைத்தவர்களை, தம் பிரச்சாரத்திற்கு எதிராக இடையூறு செய்தவர்களை தண்டிப்பதற்காக அவர்களின் குடும்பத்தாரை நபிகள் நாயகம் (ஸல்) பழிதீர்த்ததாக வரலாறு இல்லை என்பதற்கான பல சான்றுகளுள் ஒரு சான்றாகத் திகழ்ந்தவர் ரம்லா. இஸ்லாத்தின் எதிரிகளாகத் திகழ்ந்த தலையானவர்களுள் ஒருவரும் மக்காவின் நகரப் பெருந்தலைவருமான அபூஸுஃப்யானின் மகள்தான் ரம்லா. நபி (ஸல்) திருமணம் செய்துகொண்டதால் ரம்லாவை இஸ்லாமிய வரலாறு "அன்னை உம்மு ஹபீபா" என்று அடையாளப்படுத்துகின்றது.

(2) அபூஜஹ்லை, 96ஆவது அத்தியாயத்தின் 9-15 வசனங்களில் "என்னுடைய விரோதி" என்று அல்லாஹ் பிரகடனப்படுத்தியதால், அந்நிகழ்வில் ஃபாத்திமா (ரலி) நேரடியாக சம்பந்தப்பட்டிருந்ததால் இறைநபியின் மகளும் இறைவிரோதியின் மகளும் ஒருவருக்கு வாழ்க்கைப்படுவது சாத்தியமில்லாது போனது.

(3) அபூஜஹ்லின் மகள் ஜுவைரிய்யாவை, அபூஸுஃப்யானின் உறவினரும் மக்காவின் ஆளுநருமான அத்தாப் பின் உஸைத் எனும் நபித் தோழர் திருமணம் செய்து கொண்டார் (அல் இஸாபா 4/430-431).

Comments   

ஹுஸைனம்மா
+1 #1 ஹுஸைனம்மா 2015-11-29 12:22
அஸ்ஸலாமு அலைக்கும். எனக்கு இவ்விஷயத்தில் இரு சந்தேகங்கள் உள்ளன, விளக்கம் தர வேண்டுகிறேன்.

1. இரண்டாவது திருமணம் செய்ய முந்தைய மனைவியின் அனுமதி தேவையில்லை என விளங்கியிருக்கி றேன். எனினும், தகவல் தெரிவிப்பது அவசியமா அல்லையா? சிலர், முந்தைய மனைவிக்குத் தெரியாமல் அடுத்த திருமணம் செய்கின்றனர். இது ”அவர்களைச் சமமாக நடத்துவது” என்ற விதியில் பாதிப்பு ஏற்படுத்தும் அல்லவா?

ஒருவேளை தெரிவிக்காமலேயே அக்கணவர் மரணித்துவிட்டால ், அது இரண்டாவது திருமணம் செய்த பெண்ணின் மானத்துக்குப் பங்கம் விளைவிக்கப்படும ் வாய்ப்பும் இருக்கிறதே?

ஆகவே, தமக்கு ஏற்கனவே மனைவி இருப்பதை புதிதாகத் திருமணம் செய்யப்போகும் பெண்ணிடமும், அடுத்து திருமணம் செய்ய இருப்பதை முந்தைய மனைவிக்கும் நிச்சயம் தெரிவிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இஸ்லாத்தில் உண்டா? அதுகுறித்து விளக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

2. நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களுக்கு அபூஜஹ்லின் மகளைத் திருமணம் செய்ய அனுமதி மறுத்த காரணம் சரி. ஆனால், ஏன் அவர்கள் வேறு பெண்ணை மணந்துகொள்ளும்ப டி கூறவில்லை?

தர்க்கிப்பதற்கா கக் கேட்கவில்லை. விளக்கங்கள் நானும் தெரிந்துகொண்டால ், இது பற்றிய விளக்கம் தேவைப்படுவோருக் கும் தரலாமே என்பதற்காகவே.

வஸ்ஸலாம்.
Quote | Report to administrator
Abu Muhai
0 #2 Abu Muhai 2015-11-30 00:06
அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ்வின் தூதரின் மகளும், அல்லாஹ்வின் விரோதியின் மகளும் ஓர் இடத்தில் ஒருபோதும் ஒன்று சேர முடியாது என்கிற சட்டம் அந்த இருவரைத் தவிர வேறு எவருக்கும் பொருந்தாது. அல்லாஹ்வின் தூதரின் மகள் ஃபாத்திமா (ரலி) யை மணமுடித்து மணப்பந்தத்தில் தொடர்வதால், அலீ (ரலி)யும் மேற்கண்ட இரு பெண்மணிகளுடன் மூன்றாவது நபராக இணைகின்றார்.

இதுபோல் அலீ (ரலி) அபூ ஜஹ்ல் மகளின் கணவராக இருந்து, அல்லாஹ்வின் தூதரின் மகள் ஃபாத்திமா (ரலி) வை மறுதாரமாக மணக்கப் பெண்பேசினால் அப்பவும் தூதரின் மகள், எதிரியின் மகள் என ஓரிடத்தில் ஒருபோதும் ஒன்று சேர முடியாது என்கிற தீர்ப்பு நிலைத்து நிற்கும்.

தூதரின்மகளும், எதிரியின் மகளும் ஒருவரின் இருமனைவிகளாக ஒன்று சேர முடியாது என்கிற இந்தச் சட்டம் இவர்களுக்கு மட்டுமே உள்ள தனி விதியாகும். இவர்களின் மறைவுக்குப்பின் இந்த சட்டத்தை எவர் மீதும் பாய்ச்சி, நடைமுறைப்படுத்த முடியாது. ஏனெனில், தற்போது தூதரின் மகளும் இல்லை, எதிரியின் மகளும் இல்லை. இந்த சட்டம் பொருத்தமானவர்கள ுக்குப் பொருந்தி காலாவதி ஆகிவிட்டது என்பதே பொருத்தமாகும்.

ஒருவரின் செயல்பாடுகளை வைத்து அவர் எவ்வளவுதான் இஸ்லாத்திற்கு விரோதமாக நடந்து கொண்டாலும் அவரை அல்லாஹ்வின் விரோதி என்று எவரும் நிர்ணயித்திட முடியாது, கூடாது. அல்லாஹ் நாடினால் அவர் எந்நேரத்திலும் நேர்வழிப் பெற்றுவிடுவார். எனவே, அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் யாரையெல்லாம் அல்லாஹ்வின் விரோதி என்று அடையாளப்படுத்தி னரோ அவர்களே அல்லாஹ்வின் விரோதியாவர்.

நபியவர்களின் மறைவுக்குப்பின் அல்லாஹ்வின் விரோதி என்று எவருமில்லை இருப்பது, முஸ்லிம் - இஸ்லாத்தை ஏற்றவர். காஃபிர் - இஸ்லாத்தை நிராகரித்தவர். இந்த இரு சமூகத்தினரிடையே திருமண சம்பந்தம் இல்லை. இருந்தாலும் அது செல்லாது.

இறை நிராகரிப்பாளர் ஒருவர் திடமாக இஸ்லாத்தை எதிர்த்தாலும் அவர் அல்லாஹ்வின் எதிரியாகி விடமாட்டார். அவருடைய ஆண், பெண் மக்கள் இஸ்லாத்தைத் தழுவினால் அவர்கள் முஸ்லிம் என்கிற வட்டத்துக்குள் வந்துவிடுகின்றன ர். பிறகு, அங்கும் இங்குமாக மணமகன் மணமகள் சம்மதமிருந்தால் போதும் முதல் தாரம், இரண்டாந்தாரமென மணமுடித்துக் கொள்ளலாம்.

"நான் அனுமதியளிக்கமாட ்டேன்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியது இவர்களுக்குப் பொருந்தாது. ஓரிடத்தில் ஒன்று சேராமல் போக, இவர்களில் அல்லாஹ்வின் தூதரின் மகளும் இல்லை, அல்லாஹ்வின் எதிரியின் மகளும் இல்லை.
Quote | Report to administrator
Abu Muhai
0 #3 Abu Muhai 2015-12-02 03:43
//2. நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களுக்கு அபூஜஹ்லின் மகளைத் திருமணம் செய்ய அனுமதி மறுத்த காரணம் சரி. ஆனால், ஏன் அவர்கள் வேறு பெண்ணை மணந்துகொள்ளும்ப டி கூறவில்லை?//

நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களுக்கு அபூஜஹ்லின் மகளைத் திருமணம் செய்ய அனுமதி மறுத்த காரணம் சரி என்றால் அந்தக் காரணத்துக்கு உள்படாதா மற்ற முஸ்லிம் பெண்களில் தாம் விரும்பிய ஒருவரை மணந்து கொள்ள அலீ (ரலி) க்கு அனுமதியுள்ளது என்றே பொருள்படும்.

நபி (ஸல்) அவர்கள் வேறு பெண்ணை மணந்து கொள்ளும்படி கூறாவிட்டாலும், அபூ ஜஹ்லின் மகள் என்ற குறியீடு செய்து மறுக்கப்படுவதால ் மற்றவர் தூதரின் மகளுடன் ஒரே இடத்தில் ஒன்று சேர முடியும் என்றே விளங்க வேண்டும். இல்லையேல் முரண்பாடுகளைத் தவிர்க்க இயலாது.
Quote | Report to administrator
Abu Muhai
0 #4 Abu Muhai 2015-12-02 11:07
//1. இரண்டாவது திருமணம் செய்ய முந்தைய மனைவியின் அனுமதி தேவையில்லை என விளங்கியிருக்கி றேன். எனினும், தகவல் தெரிவிப்பது அவசியமா அல்லையா? சிலர், முந்தைய மனைவிக்குத் தெரியாமல் அடுத்த திருமணம் செய்கின்றனர். இது ”அவர்களைச் சமமாக நடத்துவது” என்ற விதியில் பாதிப்பு ஏற்படுத்தும் அல்லவா?//

"உங்கள் திருமணத்தை அறிவித்து விடுங்கள்" (நபிமொழி)

மணப்பெண் தேர்வு செய்தல், பெண்பார்த்தல், நிச்சயித்தல், திருமண சொற்பொழிவு உரை, மண விருந்து அளித்தல் என இஸ்லாமிய வழிகாட்டலில் ஊரறிய வெளிப்படையாக திருமணத்தை அறிவிப்புச் செய்பவைகளாகத்தா ன் அமைந்திருக்கின்றன.

எவருக்கும் தெரிந்து விடக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்ட விபச்சாரத்திற்க ு ரகசியமாகச் செல்வதுபோல் அல்ல திருமணம்.

"திருமணம் நபிமார்களின் வழிமுறை" நபியின் வழிமுறைகள் பகிரங்கமாக பின்பற்றப்பட வேண்டும். எனவே, திருமணம் முடிப்பதில் ரகசியத் திருமணம் என்றில்லாமல் முதல் மனைவி உள்பட சமுதாயத்தினருக் கும் தெரிவித்தல் வேண்டும் இதுதான் இஸ்லாமிய வழிகாட்டல்.

எனினும், இரண்டாம் திருமணம் செய்பவர் தமது முதல் மனைவிக்கும் தெரியாமல் ஏன் மறைக்கிறார் என்கின்ற காரணியை அலசினால் இந்தியா போன்ற நாடுகளில் பொது சிவில் சட்டத்தையும் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் முஸ்லிம் சமுதாயம் உள்ளது.

அதோடு, இஸ்லாம் விதிக்காத வரதட்சணை எனும் நாட்டு நடப்பு வழக்கத்தையொட்டி பெண் வீட்டாரிடமிருந் து ரொக்கமாகவும், தங்கம் நகை ஆபரணங்களாகவும் சீர் செனத்தி என வரதட்சணைப் பெற்று திருமணமாகி சில மாதங்களில், சில வருடங்களில் அத்தனை ரொக்கத்தையும் பொறுப்பின்றி ஊதாரித்தனமாக செலவு செய்துவிட்டு, மனைவியின் நகைகளையும் காலியாக்கிய கணவன் இரண்டாம் தாரம் முடிக்க பெண்பேசினால் அதை அறிந்த முதல் மனைவி குளிர்ந்து போகமாட்டாள் மாறாக, கொதித்தெழத்தான் செய்வாள்.

"என்னிடமிருந்து வாங்கிய வரதட்சணை, நகைகள் எல்லாவற்றையும் ஒரு பைசா பாக்கி இல்லாமல் கீழே வைத்துவிட்டு நீ எவளை வேண்டுமானாலும் கட்டிக்க!" என தன் நிலை நியாயத்தை வெளிப்படுத்துவா ள். விளைவு, நீதி கேட்டு ஜமாத்து பஞ்சாயத்து என வரதட்சணைக் கொடுமை என்று காவல் நிலையம் வரை வழக்கு நீண்டு செல்லும்.

நம் சமூக அமைப்பின் நடப்பு இப்படித்தான் உள்ளது. இதனால் இஸ்லாமிய முறைப்படி திருமணம் முடித்த கணவனும் இரண்டாம் தாரம் மணமுடிக்க விரும்பி முதல் மனைவிக்குத் தெரியப்படுத்தின ால் வரதட்சணைக் கொடுமை எனப் பொய் வழக்குத் தொடரப்பட்டு முதல் மனைவியால் கணவன் மிரட்டப்படுவான் . கணவன் இரண்டாம் மணமுடிக்காமல் இருப்பதைத் தடுக்க மனைவி கையிலெடுக்கும் ஆயுதம் வரதட்தணை வழக்கு. வரதட்சணை சட்டத்தின் அடிப்படையோ பெண்கள் வரதட்சணைக் கொடுமை என்று புகாரளித்தால் போதும் எவ்வித தெளிவும் இல்லாமல் ஆண்கள் குற்றவாளிகள் எனக் கைது செய்யப்படுவர் என நியாயமற்ற சட்டமாக உள்ளது.

இஸ்லாமிய வட்டத்திற்குள் மட்டும் நிற்கவேண்டிய முஸ்லிம்கள் இந்திய பொதுசிவில் சட்டத்தையும் மதித்து செயல்பட வேண்டியிருப்பதா ல் முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாம் தாரம் மணமுடித்துக் கொள்கின்றனர். இதனால் முதல் மனைவிக்குத் தெரியாமல் கணவன் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதை நியாயம் கற்பிக்கவில்லை. இந்திய நாட்டில் நம் சமூக அமைப்பு அப்படித்தான் இருக்கின்றன என்கிற புரிதலுக்காக.
Quote | Report to administrator
Abu Muhai
0 #5 Abu Muhai 2015-12-02 11:10
//ஒருவேளை தெரிவிக்காமலேயே அக்கணவர் மரணித்துவிட்டால ் அது இரண்டாவது திருமணம் செய்த பெண்ணின் மானத்துக்குப் பங்கம் விளைவிக்கப்படும ் வாய்ப்பும் இருக்கிறதே?//

தக்க சாட்சிகளுடன் உள்ளூர் வெளியூர் ஜமாத்தில் அல்லது சர்பதிவாளர் அலுவலகத்தில் முறையாக திருமணம் பதிவு செய்யப்படுவதால் பெண்ணின் மானத்துக்குப் பங்கம் ஏற்பட வாய்ப்பில்லை. கணவர் மரணித்து விட்டாலும் திருமணச் சான்றிதழ் இருக்க நிரூபித்து விடலாம். திருமணமின்றி உறவு வைத்துக் கொள்பவர்களுக்கே சிக்கல் ஏற்படும்.
Quote | Report to administrator
Abu Muhai
0 #6 Abu Muhai 2015-12-02 11:14
//ஆகவே, தமக்கு ஏற்கனவே மனைவி இருப்பதை புதிதாகத் திருமணம் செய்யப்போகும் பெண்ணிடமும், அடுத்து திருமணம் செய்ய இருப்பதை முந்தைய மனைவிக்கும் நிச்சயம் தெரிவிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இஸ்லாத்தில் உண்டா? அதுகுறித்து விளக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.//

இருவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்றே முன்மாதிரி ஆதாரங்கள் உள்ளன.

...ஒரு பெண் தன் (இஸ்லாமிய) சகோதரியின் பாத்திரத்தைக் கவிழ்த்து (விட்டு அதைத் தனதாக்கி)க்கொள் ளும் பொருட்டு அவளை மணவிலக்குச் செய்யுமாறு (தாம் மணக்கப் போகின்றவரிடம் ) கோரலாகாது. அவள் (முதல் மனைவி இருக்கவே) மணந்துகொள்ளட்டு ம். ஏனெனில், இவளுக்காக அல்லாஹ் விதித்துள்ளது நிச்சயமாக இவளுக்குக் கிடைக்கும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கும் செய்தி: முஸ்லிம் 2747.

இரண்டாம் தாரமாக மணக்கயிருக்கும் பெண்ணிடம் தாம் திருமணம் ஆனவன், தமக்கு மனைவி மக்கள் இருக்கின்றனர் என்கின்ற ஏதார்த்த உண்மையைச் சொல்லியேப் பெண்பேச வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்குகிறோம்.

அலீ (ரலி) இரண்டாம் தாரம் மணமுடிக்கயிருந் ததை முதல் மனைவி ஃபாத்திமா (ரலி) அறிந்திருந்தார் என்பதை தொடர்புடைய (புகாரி 3110) ஹதீஸிலிருந்து விளங்குகிறோம்.

திருமணம், அது முதல் தாரமாகட்டும் இரண்டாம் தாரமாகட்டும் ஏதார்த்த நிலையின் உண்மையை விளக்கிச் சொல்லி நேர்மையான முறையில் மணமுடிக்க வேண்டும். முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாம் தாரம் மணமுடிப்பது, இரண்டாம் தாரம் மணமுடித்ததை முதல் தாரத்துக்குத் தெரியாமல் மறைப்பது இந்த ஏமாற்று மோசடிக்கெல்லாம் இஸ்லாம் துணை நிற்காது.
Quote | Report to administrator
சஃபி
0 #7 சஃபி 2015-12-02 15:56
Quoting Abu Muhai:
//2. நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களுக்கு அபூஜஹ்லின் மகளைத் திருமணம் செய்ய அனுமதி மறுத்த காரணம் சரி. ஆனால், ஏன் அவர்கள் வேறு பெண்ணை மணந்துகொள்ளும்படி கூறவில்லை?//


இந்தக் கேள்விக்கு உரியவர்கள் நபி(ஸல்) அவர்கள் என்பது எனது கருத்து.

இதைப் போல் என்னிடம் நிறைய கேள்விகள் உண்டு:
1. தன் மரணவேளை நெருங்கிவிட்டது என்று தெளிவாகத் தெரிந்திருந்தும ் தனக்குப்பின் யார் கலீஃபா என்று நபி அறிவிக்காதது ஏன்?
Quote | Report to administrator
Abu Muhai
0 #8 Abu Muhai 2015-12-04 19:58
Quoting சஃபி:
Quoting Abu Muhai:
//2. நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களுக்கு அபூஜஹ்லின் மகளைத் திருமணம் செய்ய அனுமதி மறுத்த காரணம் சரி. ஆனால், ஏன் அவர்கள் வேறு பெண்ணை மணந்துகொள்ளும்படி கூறவில்லை?//


இந்தக் கேள்விக்கு உரியவர்கள் நபி(ஸல்) அவர்கள் என்பது எனது கருத்து.

இதைப் போல் என்னிடம் நிறைய கேள்விகள் உண்டு:
1. தன் மரணவேளை நெருங்கிவிட்டது என்று தெளிவாகத் தெரிந்திருந்தும் தனக்குப்பின் யார் கலீஃபா என்று நபி அறிவிக்காதது ஏன்?


தமக்குப்பின் வழி நடத்த அல்லாஹ்வின் வேதமும் அல்லாஹ்வின் தூதரின் வழிமுறைகளையும் விட்டுச் செல்வதால் இவற்றின் அடிப்படையில் ஆன்மிகம், ஆட்சியதிகாரம் தேர்வு செய்யப்பட்டு குர்ஆன், சுன்னாவின் அடித்தளத்தில் இஸ்லாம் நிறுவப்பட்டு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக, தமக்குப்பின் யார் கலீஃபா என்பதை நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கவில்லை.

கலீஃபா இன்னார் என்று நபி (ஸல்) அவர்கள் அறிவிப்புச் செய்திருந்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்த கலீஃபா எனக் குர்ஆன், சுன்னாவோடு மூன்றாவதாக கலீஃபாவும் பின்பற்றப்பட்டி ருப்பார் - படுவார். இது, "நான் உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன்" என்ற அறிவுப்புக்கு முரண்படும் என்பது நமது கருத்தாகும்.

நிறைவுபெற்ற மார்க்கத்தில் குர்ஆன், சுன்னாவில் மட்டுமே தீர்வுகளைத் தேடவேண்டும். அதைவிடுத்து, நபி (ஸல்) அவர்கள் "ஏன் அப்படிச் சொல்லவில்லை, இப்படிக் கூறவில்லை" என்ற கேள்விகள் மார்க்கத்திற்கு அப்பாற்பட்டவையாகாகும்.

"தர்க்கிப்பதற்காக கேட்கவில்லை" என்ற வாசகியின் கேள்வியில் இவ்வளவு இறுக்கம் தேவைதானா என மிக முக்கிய விளக்கம் விடுபட்டுவிட்டது.

சகோதரர் சஃபி சுட்டியமைக்கு நன்றி!
Quote | Report to administrator
J.m.Ikram
0 #9 J.m.Ikram 2018-02-20 18:50
அஸ்ஸலாமு அலக்கும் தொழுகையில் விரல் அஅசைக்க வேண்டுமா? கூடாதா?ஆதாரத்து டன் வவிளக்கம் தரவும் உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்