முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

முஸ்லிம்களுக்காக

ஐயம்:-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

தொழுகை பற்றிய விவரங்கள் மற்றும் விளக்கங்கள், எந்த எந்த நேரத்தில் என்ன தொழுகை தொழ வேண்டும் என்பதனையும் மேலும் அதில் சுன்னத்தான, நஃபிலான தொழுகைகளின் விவரங்களையும் இஷ்ராக், லுஹா போன்ற தொழுகைகள் உண்டா? என்பதனையும் தக்க ஆதாரங்களுடன் கொடுத்தால் வாசகர்களுக்கு மிகவும் பயன் உள்ளதக இருக்கும்.

அன்புடன்,
உங்கள் ஜமில் பாபு (மின்னஞ்சல் வழியாக)தெளிவு:-
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

பகலின் இரு ஓரங்களிலும், இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நிச்சயமாக நல்லவை தீயவற்றைப் போக்கிவிடும். இது (அல்லாஹ்வை) நினைவு கூர்வோருக்கு நல்லுபதேசமாகும் (அல்குர்ஆன் 11:114).

(நபியே!) அவர்கள் கூறுபவை குறித்து நீர் பொறுமையாக இருப்பீராக! சூரியன் உதிப்பதற்கு முன்னரும், அது மறைவதற்கு முன்னரும் உமது இறைவனின் புகழைக் கொண்டு துதிப்பீராக. மேலும், இரவு வேளைகளிலும், பகலின் ஓரங்களிலும் (அவனைத்) துதிப்பீராக! (இதன் நன்மைகளால்) நீர் திருப்தி அடைவீர் (அல்குர்ஆன் 20:130).

சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை தொழுகையையும், இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் நிலைநாட்டுவீராக! நிச்சயமாக ஃபஜ்ருடைய தொழுகை சாட்சிக் கூறத்தக்கதாக இருக்கின்றது (அல்குர்ஆன் 17:78).

நீங்கள் மாலைப்பொழுதை அடையும் போதும், காலைப்பொழுதை அடையும் போதும் அல்லாஹ்வைத் துதி செய்யுங்கள். வானங்கள் மற்றும் பூமியில் எல்லாப் புகழும் அவனுக்கே உரியன. முன்னிரவிலும் நண்பகலிலும் இருக்கும் போதும் (துதி செய்யுங்கள்) (அல்குர்ஆன் 30:17, 18).

ஐவேளைத் தொழுகைகளின் நேரங்களை அறிவிக்கும் நபிமொழிகள்.

(ஒவ்வொரு தொழுகையின் ஆரம்ப நேரம் மற்றும் கடைசி நேரம் ஆகிய இரு நேரங்களில்) இரண்டு தடவை எனக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் கஅபாவில் இமாமத் செய்தார்கள். முதல் தடவை இமாமத் செய்யும்போது செருப்பின் வார் அளவு நிழல் (உச்சியிலிருந்து) சாய்ந்தபோது லுஹரைத் தொழுவித்தார்கள். ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு நீண்டபோது அஸ்ரைத் தொழுவித்தார்கள். சூரியன் மறைந்து, நோன்பு வைத்திருப்பவர் நோன்பு துறக்கும்போது மஃக்ரிபைத் தொழுவித்தார்கள். அடிவானத்தில் செம்மை மறையும்போது இஷாவைத் தொழுவித்தார்கள். அடிவானத்தில் வெண்மை தோன்றி நோன்பாளிக்கு உணவு ஹராமாகும்போது ஃபஜ்ரைத் தொழுவித்தார்கள்.

இரண்டாம் முறை தொழுவிக்கும்போது ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு வரும் நேரத்தில் அதாவது முதல் நாள் அஸ்ருத் தொழுத நேரத்தில் லுஹரைத் தொழுவித்தார்கள். ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளைப் போல் இருமடங்காக ஆகும் நேரத்தில் அஸ்ரைத் தொழுவித்தார்கள். மஃக்ரிபை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவித்தார்கள். இரவில் மூன்றிலொரு பங்கு கழிந்த போது இஷாவைத் தொழுவித்தார்கள். நிலம் வெளிச்சத்தை அடைந்தபோது ஸுப்ஹுத் தொழுவித்தார்கள்.

பின்னர், என்னை நோக்கித் திரும்பி ''யா முஹம்மத்! இவ்விரண்டு நேரங்களுக்கும் இடையில் உள்ள நேரங்களே தொழுகையின் நேரங்களாகும். இது உமக்கு முன்சென்ற நபிமார்களின் நேரமுமாகும்" என்று ஜிப்ரீல் (அலை) வரையறுத்ததாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்கள் - திர்மிதீ 138, அபூதாவூத், அஹ்மத்).

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் தொழுகையின் நேரம் குறித்துக் கேட்டார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ''நம்முடன் இரு நாள்கள் தொழுங்கள்!'' என்று கூறினார்கள். (அன்றைய தினம்) சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்தபோது பிலால் (ரலி) அவர்களிடம் பாங்கு(ம் பிறகு இகாமத்தும்) சொல்லுமாறு உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் லுஹ்ருத் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (அஸ்ருத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்திரவிட, பிலால் (ரலி) அவர்கள் அஸ்ருத் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். அப்போது சூரியன் ஒளி மிக்கதாகவும் தெளிவாகவும் (வானில்) தெரிந்தது. பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (மஃக்ரிப் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்திரவிட, பிலால் (ரலி) அவர்கள் சூரியன் மறையும்போது மஃக்ரிப் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள்.

பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (இஷாத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் செம்மேகம் மறையும்போது இஷாத் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். பிறகு (ஃபஜ்ருத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்திரவிட, பிலால் (ரலி) அவர்கள் வைகறை புலரும்போது ஃபஜ்ருத் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள்.

இரண்டாம் நாள் நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் வெப்பம் தணிந்த பின் லுஹ்ருத் தொழுகைக்கு (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட பிலால் (ரலி) அவர்கள் வெப்பம் தணிந்தபின், நன்கு வெப்பம் குறைந்திருந்த வேளையில் இகாமத் சொன்னார்கள். பின்னர் சூரியன் உயர்ந்திருக்கும்போது அஸ்ருத் தொழுதார்கள். முந்திய நாளைவிடச் சிறிது நேரம் தாமதப்படுத்தினார்கள். செம்மேகம் மறைவதற்குமுன் மஃக்ரிப் தொழுதார்கள். இரவின் மூன்றில் ஒரு பகுதி சென்றபின் இஷாத் தொழுதார்கள். நன்கு வெளிச்சம் வந்த பின் (சூரிய உதயத்துக்கு முன்) ஃபஜ்ருத் தொழுதார்கள். பிறகு ''தொழுகை நேரம் குறித்து என்னிடம் கேட்டவர் கேட்டவர் எங்கே?'' என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் ''நான் (இதோ இருக்கிறேன்) அல்லாஹ்வின் தூதரே!'' என்றார் நபி (ஸல்) அவர்கள் ''நீங்கள் (இரு தினங்கள்) கண்ட நேரங்களுக்கு இடைப்பட்ட நேரம்தான் உங்கள் (ஐவேளைத்) தொழுகையின் நேரமாகும்'' என்று கூறினார்கள் அறிவிப்பவர் புரைதா (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 969, 970, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத்).

லுஹ்ரு, அஸ்ரு, மஃக்ரிப், இஷா, ஃபஜ்ரு என்னும் ஐவேளைத் தொழுகைகளின் நேரங்கள் மேற்கண்ட அறிவிப்புகளில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன!

ஒரு நாளுக்கு எத்தனை மணித்துளிகள் என்கிற நவீன மணிகாட்டும் கருவியை மனிதன் பயன்படுத்துவதற்கு முன்னால், பகலில் சூரிய ஒளியினால் ஏற்படும் நிழலைக்கொண்டும், பின்னர் சூரியன் மறைவினால் ஏற்படும் இரவின் இருளைக் கொண்டும் நேரங்களைக் கணித்து வந்தனர். நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் இந்தக் கணிப்பின்படி ஒவ்வொரு தொழுகையின் நேரத்தையும் அறிந்து தொழுது வந்தனர். இக்காலத்திலும் இவை சாத்தியப்படும் என்றாலும், ஒரு நாளுக்கு 24 மணி நேரம் எனக் கணக்கிட்டு அதற்கான நேரம் காட்டியான மணி காட்டும் கெடிகாரம் என்கிற கருவியைப் பயன்படுத்துவதால் பகலில் சூரியன் தெரிந்தாலும், மேகமூட்டம் மற்றும் அடைமழை காலத்தில் சூரியன் மறைக்கப்பட்டாலும் நிழல் இல்லாமலேயே தொழுகையின் நேரத்தைத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.

தொழக்கூடாத நேரங்கள்.

சூரியனின் தலைப்பகுதி உதயமாகிவிட்டால் அது முழுமையாக வெளிப்படும் வரை தொழுகையைவிட்டு விடுங்கள். சூரியனின் தலைப் பகுதி மறைந்துவிட்டால் அது (முழுமையாக) மறைந்து விடும் வரை தொழுகையைவிட்டு விடுங்கள். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 3272)

சூரியன் உதிக்கும் நேரத்தையோ சூரியன் மறையும் நேரத்தையோ நீங்கள் தொழுவதற்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள். ஏனெனில் அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதிக்கின்றது. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) (நூல்கள் - புகாரி, 3273, முஸ்லிம் 966, நஸயீ, அஹ்மத், முவத்தா மாலிக்)

''ஸுப்ஹுத் தொழுகையைத் தொழுங்கள். பிறகு சூரியன் உதயமாகி உயரும் வரை தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் அது உதயமாகும்போது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதயமாகிறது. அப்போதுதான் அதற்கு இறைமறுப்பாளர்கள் சிரவணக்கம் செய்கின்றனர். பிறகு தொழுங்கள் அந்த நேரத்தில் தொழும் தொழுகை (வானவர்களால்) சாட்சியமளிக்கக்கூடியதும், (வானவர்கள்) வருகை தரக்கூடியதுமாகும். ஈட்டியின் நிழல் கிழக்கிலோ மேற்கிலோ சாயாமல் அதன் மீதே விழும்(நண்பகல் நேரம்)வரைத் தொழுங்கள். பிறகு தொழுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில் அப்போது நரகம் எரிக்கப்படுகிறது. பிறகு நிழல் (கிழக்கே) சாய்ந்து விட்டால் தொழுது கொள்ளுங்கள். அந்நேரத் தொழுகைக்கு (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படுகிறது. அவர்கள் அதில் பங்கேற்கின்றனர். பிறகு அஸ்ரு வரைத் தொழுதுகொள்க! பிறகு சூரியன் மறையும்வரைத் தொழுவதை நிறத்திவிடுக! ஏனெனில் அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையேதான் மறைகிறது. இந்த நேரத்தில் அதற்கு இறைமறுப்பாளர்கள் சிரவணக்கம் செய்கின்றனர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அம்ர் பின் அபசா (ரலி) (நபிமொழிச் சுருக்கம்: நூல்கள் - முஸ்லிம் 1512, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத்)

''மூன்று நேரங்களில் தொழவேண்டாம் அல்லது இறந்தவர்களை புதைக்க வேண்டாம் என எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

1. சூரியன் உதயமாகத் துவங்குவதிலிருந்து நன்கு உதயமாகும் வரை.

2. (உச்சிப் பொழுதில் நிற்கும் போது நிழல் விழாது போகும்) நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் சாயும் வரை.

3. சூரியன் மறையத் துவங்கியதிலிருந்து நன்கு மறையும் வரை அறிவிப்பவர் உக்பா பின் ஆமிர் (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 1511, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், தாரிமீ.

சூரியன் உதிக்கின்ற நேரம், சூரியன் உச்சியிலிருக்கும் நேரம், சூரியன் மறையும் நேரம் ஆகிய மூன்று நேரங்களை தொழுகைக்காகத் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று பல அறிவிப்புகள் உள்ளன.

சூரியன் உதிக்கும் நேரத்தையும், அது மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்து அந்நேரங்களில் பிற மதத்தினர் சூரியனை வழிபடுகின்றனர். இதன் காரணியாக, சூரியன் ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதயமாகிறது, மறைகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே, இந்நேரங்கள் தொழுவதற்குத் தடைசெய்யப்பட்டதாகும் என்பது இதன் கருத்து என்றாலும், சூரியன் உதயம் மற்றும் அஸ்தமனமாகும் நேரத்திற்காகக் காத்திருந்து அந்நேரத்தைத் தேர்ந்தெடுத்துத் தொழக்கூடாது என்பதே இதன் பொருளாகும். உறக்கம் அல்லது மறதியால் விடுபட்ட தொழுகையை ஒருவர் தொழுகின்ற நேரம், அந்நேரமாக இருந்தால் தொழுவதில் குற்றமில்லை.

யாரேனும் ஒருவர் தொழுகையை(த்தொழ) மறந்து விட்டால் நினைவு வரும்போது அதைத் தொழட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் அனஸ் (ரலி) (நூல்கள் - புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ, அபூதாவூத், அஹ்மத், இப்னுமாஜா).

தொழாமல் உறங்கிவிடுவது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ''உறங்கி விடுவதில் வரம்பு மீறல் இல்லை. விழித்திருப்பதிலேயே வரம்பு மீறல் உண்டு. உங்களில் ஒருவர் தொழ மறந்து விட்டால் அல்லது உறங்கி விட்டால் அதன் நினைவு வந்ததும் தொழுது கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் அபூ கதாதா (ரலி) (நூல்கள் - திர்மிதீ 162, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா).

உறக்கம், மறதி காரணமாக தொழுகை தவறி விடுமானால், உறக்கத்திலிருந்து விழித்ததும், மறதியிலிருந்து நினைவு வந்தவுடன் தொழுதுகொள்ளலாம். அது சூரியன் உதயம் - மறையும் நேரமாக இருந்தாலும் சரியே, தொழுவதற்குத் தடையில்லை!

(இறைவன் மிக்க அறிந்தவன்)
பி.கு: சுன்னத், நஃபில், இஷ்ராக், ளுஹா போன்ற தொழுகைகள் பற்றிய விபரங்கள் இன்ஷா அல்லாஹ் தனிப்பதிவாக வரும்.
Comments   
niyas
0 #1 niyas 2011-10-30 20:29
masha allah. mihavum payanulle hadeesh
Quote | Report to administrator
ரபீக் முஹம்மது
0 #2 ரபீக் முஹம்மது 2013-07-21 19:44
ASLAM ALAIKUM
Quote | Report to administrator
ibrahim
0 #3 ibrahim 2013-07-31 14:57
new message
Quote | Report to administrator
நாராயணன்
0 #4 நாராயணன் 2018-01-29 19:26
தொழுகையின் நேரம் 5.30,
12.45,
4.30,
6.10,
8.20
எனப்பது தான் சரியா என்று தெரியவில்லை.
குறிப்பிட்டிருந்தால் மற்ற மதத்தவர்களும் தெரிந்து கொள்ள ஒரு வாய்பாகும்.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்