சான்றோர் – 8 : முற்பகல் அறம் செய்யின்…

Share this:

ம் மனைவியின் அழகையும் அவளது ஆபரணங்களையும் அபூபக்ரு வியந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஏகப்பட்ட நகைகளின் நடுவே ஒரு முத்து மாலை. அது அவரது கவனத்தை ஈர்த்தது. கண்ணை உறுத்தியது. அதுவா இது? திகைத்துப்போய் யோசனையில் மூழ்கினார்.

ஹிஜ்ரீ ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அபூபக்ரு. “காழீ அல்-மாரிஸ்தான்” என்று சுருக்கமான மற்றொரு பெயரும் அவருக்கு இருந்திருக்கிறது. ஆனால் அவரது முழநீள முழுப்பெயர் “அல்-காழீ அபூபக்ரு முஹம்மது இப்னு அப்துல் பாகீ இப்னு முஹம்மது அல்-அன்ஸாரீ அல்-ஃபுர்தீ”. அவரது பெயருக்கு முன்னால் இருக்கும் அல்-காழீ என்பது அவர் நீதிபதியாக பதவி வகித்தபின் வந்து ஒட்டிக்கொண்ட பட்டம். ஹதீஸ் கலையின் சிறந்த மாணாக்கரான அபூபக்ருவிடம் பாடம் பயின்ற மாணவர்கள் ஏராளம். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் மார்க்க அறிஞரும் வரலாற்று ஆசிரியருமான இமாம் இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்).

அபூபக்ரு தம்முடைய இளம் பிராயத்தில் ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவிற்குச் சென்றார். வாழும் காலம் முழுக்க செய்வதையெல்லாம் செய்துவிட்டு, கட்டையில் போகும் காலத்தில் ஹஜ்ஜை முடிப்போம் எனும் பழக்கம் உருவாகாத காலம் போலும். ஹஜ் வழிபாட்டின் ஒருபகுதியான தவாஃபை நிறைவேற்ற அபூபக்ரு கஅபாவைச் சுற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது காலில் ஏதோ ஒன்று இடர, எடுத்துப் பார்த்தால் கழுத்தணி; முத்து மாலை. அதை எடுத்து தமது இஹ்ராம் ஆடையின் ஓரத்தில் கட்டி முடிச்சிட்டு, தவாஃபைத் தொடர ஆரம்பித்தார். சற்று நேரத்திற்குப் பின் கூட்டத்தில் ஒருவர் இரைந்து கூவுவது கேட்டது.

‘நான் வைத்திருந்த முத்து மாலை தொலைந்துவிட்டது; கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு இருபது தீனார் சன்மானம்’ என்று அறிவித்துக் கொண்டிருந்தார் அந்த மனிதர். அவரிடம் சென்ற அபூபக்ரு, ‘உங்களது முத்து மாலை எப்படி இருக்கும், விவரியுங்கள்’ என்று விசாரித்தார்.

கண்டெடுத்த நகைக்கு ஒத்துப்போனது அந்த மனிதர் தெரிவித்த அடையாளங்கள். இந்தாருங்கள் என்று பொறுப்பாக அவரிடம் நகையை ஒப்படைத்தார் அபூபக்ரு.

கீழே கிடந்த பொருள். தமக்கு உரிமையற்றது. உரிமையாளரைத் தெரிந்தபின் அவரிடம் ஒப்படைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? அதுவும் இருக்கும் இடம், திருடனுக்கே சபலம் தற்காலிகமாய் விடைபெறும் புனித நகரம் எனும்போது. ஆச்சரியமெல்லாம் பின்னர்.

“நான் தங்கியிருக்கும் இடத்திற்கு என்னுடன் வா. வாக்களித்த சன்மானத்தைத் தருகிறேன்” என்றார் நகையைப் பெற்றுக் கொண்ட பெரிய மனிதர்.

“அதெல்லாம் எனக்குத் தேவையில்லை. சன்மானத்தை எதிர்பார்த்து நான் அதைத் தங்களிடம் ஒப்படைக்கவில்லை. இறைவன் எனக்குப் போதிய அளவு அருள் வழங்கியுள்ளான்” என்று மறுத்துவிட்டார் அபூபக்ரு.

“எனில் வல்லமைப் பொருந்திய மாட்சிமை மிக்க அல்லாஹ்வுக்காகத்தான் இதைத் திருப்பித் தந்தாயா?” என்று கேட்டார்.

“ஆம்.”

“அப்படியானால் கஅபாவை நோக்கித் திரும்பு. நான் இறைவனிடம் இறைஞ்சுகிறேன். நீ ஆமீன் கூறு.”

இருவரும் கஅபாவை நோக்கித் திரும்பினர். “யா அல்லாஹ், இவரின் பாவங்களை மன்னிப்பாயாக. அவருக்கு நன்றிக் கடனைச் செலுத்தும் பாக்கியத்தை எனக்கு அருள்வாயாக” என்று அந்த மனிதர் இறைஞ்சினார். அவ்வளவுதான். ஒருவர் முகத்தை ஒருவர் சரியாகக்கூடப் பார்த்துக் கொள்ளவில்லை. இருவரும் விடைபெற்றுக்கொண்டு தத்தம் வழியே சென்றுவிட்டனர்.

ஹஜ் கடமையெல்லாம் முடிந்தபின் மக்காவிலிருந்து எகிப்திற்குச் சென்றார் அபூபக்ரு.  பிறகு அங்கிருந்து கப்பல் ஏறி மக்ரிபு பகுதிக்குப் பயணமானார். ஆப்பிரிக்கக் கண்டத்தில் மத்தியத் தரைக்கடல் அமைந்திருக்கும் வடபகுதி மக்ரிபு. சமகாலத்தில் மொராக்கோ, அல்ஜீரியா, துனிஷீயா, லிபியா அமைந்துள்ள பகுதி. கப்பல் ஆடி, அசைந்து புறப்பட்டது. கடலில் மிதக்க ஆரம்பித்தது. அப்பொழுது நடுக்கடலில் அவர்களை ரோமர்களின் கப்பல் வழிமறித்து, பாய்ந்தார்கள்; புகுந்தார்கள். பயணிகளின் கப்பலைக் கைப்பற்றினார்கள். சடுதியில் பயணிகள் எல்லாம் ரோமர்களின்முன் கைதிகளாகி நின்றார்கள்.

அபகரித்தப் பொருள்களையும் கைதிகளையும் அவர்கள் பங்கிட்டுக்கொள்ள, பாதிரி ஒருவரின் பங்காக அபூபக்ரு போய்ச் சேர்ந்து, அடிமையானார் அவர். அந்தப் பாதிரிக்குச் சேவகம் புரிவதும் இட்ட பணியை நிறைவேற்றுவதும் என்றாகிப் போனது வாழ்க்கை. இப்படியே அவரது காலம் ஓட, குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குப்பின் ஒருநாள் அந்தப் பாதிரி இறந்துபோனார். என்ன கருணையோ, இரக்கமோ, தனது உயிலில், ‘அபூபக்ருவுக்கு விடுதலை அளிக்கவும்’ என்று ஓர் ஓரத்தில் அவர் எழுதிவிட்டுத் தன் மண்டையைச் சாய்த்ததால் அபூபக்ருவுக்கு விடுதலை கிடைத்தது.

அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவருக்கு அன்று திசைமாறிய மக்ரிபை நோக்கி கவனம் திரும்பி, மீண்டும் தமது பயணத்தைத் துவக்கி, அங்குள்ள ஏதோ ஒரு நகருக்கு வந்து சேர்ந்தார். வாழ்க்கையை ஓட்ட வேலை வேண்டுமில்லையா? ரொட்டி சுடுபவரின் கடையில் கணக்கு எழுதும் வேலை கிடைத்தது. பெரிய அளவில் வருமானம் இல்லாவிட்டாலும் உணவும் இதர முக்கிய தேவைகளும் நிறைவேற்றிக்கொள்ளப் போதுமானதாக அது இருந்ததால் விடுதலைக் காற்றை சுவாசித்தவாரே தம் பணியைக் கவனிக்க ஆரம்பித்தார் அபூபக்ரு. அந்நகரில் புகழ்பெற்ற நிலச் சுவான்தார் ஒருவர் இருந்தார். வயது முதிர்ந்தவர். அவர் ரொட்டிக் கடைக்காரரிடம் மொத்தக் கொள்முதல் போல் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். மாதத்தின் முதல் நாளன்று அவருடைய சேவகன் ரொட்டிக் கடைக்காரரிடம் வந்து, “ஐயா உன்னை வரச் சொன்னார். கணக்கு கொடுத்துவிட்டுப் போவாயாம்” என்று தகவல் தெரிவித்தான். வரவு செலவு குறித்து வைத்திருந்த கணக்குப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு, தம்முடைய கணக்குப் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு, அந்த முதியவரைச் சந்தித்தார் ரொட்டிக் கடைக்காரர்.

கணக்குப் புத்தகத்தைப் பார்த்த அந்த நிலச் சுவான்தாருக்கு கணக்கு, வரவு செலவு விபரங்களை எல்லாம் தாண்டி, அந்தக் கையெழுத்தும் நேர்த்தியும் மிகவும் பிடித்துப் போனது. கணக்கின் துல்லியமும் எழுதியவரின் அறிவுக்கு சாட்சியம் பகர்ந்தது. புத்தகத்தை ஓரமாக வைத்துவிட்டு தீர்மானமாகச் சொன்னார். “இந்தக் கணக்குப் பிள்ளை எனக்கு வேண்டும்.”

மறுக்க முடியுமா என்ன? தவிரவும் நல்ல இடத்தில் வேலை கிடைக்கிறது என்பதால் ரொட்டிக் கடைக்காரருக்கும் சரி, அபூபக்ருவுக்கும் சரி ஆட்சேபம் தோன்றவில்லை. நிலச் சுவான்தாருக்கு கணக்கரானார் அபூபக்ரு. வாய்க்கும் கைக்குமான அளவுதானே முன்னர் அவரது வருமானம் இருந்தது. அதனால் அவரது தோற்றமும் உடையும் வறிய நிலையில் இருந்தன. அவருக்குச் சிறப்பான ஆடைகள் அளித்து, தமது வீட்டிற்குப் பக்கத்து வீட்டையும் அவர் தங்கிக்கொள்ள கொடுத்து, உடனே வேலையில் சேர்த்துக் கொண்டார் அந்த முதியவர். அவருக்கு எக்கச்சக்க வருமானமுள்ள சொத்துபத்து. அத்தனைக் கணக்கு வழக்கையும் அபூபக்ருவிடம் அளித்து, இதை நிர்வகிப்பது இனி உன் பொறுப்பு என்று சொல்லிவிட்டார்.

அப்படியே ஆகட்டும் என்று தமது புது வேலையில் கண்ணும் கருத்துமானார் அபூபக்ரு. நாளாக, நாளாக முதலாளிக்கு அவரை மேலும் பிடித்துப் போனது. சில காலம் கழிந்திருக்கும். ஒருநாள், “அபூபக்ரு, நீ ஏன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது?” என்று அக்கறையுடன் விசாரித்தார்.

“ஐயா, என்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளத்தான் என் வருமானம் சரியாக இருக்கிறது. இந்நிலையில் மனைவியின் தேவைகளை நான் எப்படி கவனிக்க முடியும்? நிறைவேற்ற முடியும்?” என்றார் அபூபக்ரு.

“ஓ அதுதான் பிரச்சினையா? உன் திருமணத்திற்கான மஹர் பணம் நான் தருகிறேன். உனக்கு ஒரு புது வீடு. உன் ஆடைகள் மற்றும் தேவைகள் அனைத்திற்கும் நான் பொறுப்பு. என்ன சொல்கிறாய்?” என்றார் எசமானன்.

இன்னும் என்ன வேண்டும்? மகிழ்ச்சி மிகைத்தாலும்  தன்னடக்கத்துடன், “தங்கள் விருப்பம்” என்றார் அபூபக்ரு.

பிறகுதான் இறங்கியது இடி. “என் மகனே, உனக்கு ஒரு பெண் பார்த்திருக்கிறேன். ஆனால் அவளுக்குச் சில குறைகள் உள்ளன” என்றார்.

கேள்வியுடன் பார்த்தவரிடம், அப் பெண்ணின் தலை முதல் கால் வரை அது கோணல், இது மட்டம் என்று நிறைய குறைகளைத் தெரிவித்தார் முதியவர். தம் விதி என்று நினைத்தாரோ, கைம்மாறு என்று நினைத்தாரோ, “ஏற்றுக் கொள்கிறேன்” என்று மனமொப்பி பதில் அளித்துவிட்டார் அபூபக்ரு.

முத்தாய்ப்பாய் அடுத்து ஒன்றைக் கூறினார் எசமானர். “அந்த மணப்பெண் என் மகள்”.

தெரிவித்துவிட்டு உடனே எழுந்தார். தமக்கு நெருக்கமான மக்களை வரவழைத்தார். திருமண ஒப்பந்தம் உடனே கையெழுத்தானது.

சிலநாள் கழித்து முதலிரவுக்கு ஏற்பாடானது. மணமகன் அபூபக்ருவுக்குச் சிறப்பான புதிய உடைகள் அளிக்கப்பட்டன. அவர் அழைத்துச் செல்லப்பட்ட வீடும் சீரும் சிறப்புமான பங்களா. சொகுசான அறைகலன்கள், இராணுவ உடைகள், என்று ஏகப்பட்ட பொருள்கள் நிறைந்திருந்தன. சுற்று முற்றும் பார்த்துவிட்டு, மெத்தையில் அமர்ந்தார் அபூபக்ரு. முகத்தை மூடியபடி மணப்பெண் வந்தார். எழுந்து சென்று அவரது முகத் திரையை நீக்கியவர் அப்படியே அதிர்ந்து போனார். அவர் எதிரே பேரழகி. வீடு மாறிவிட்டதா? அல்லது பெண் மாறிப்போனரா? என்று தெரியாமல் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓட, அவரை வழிமறித்தார் மாமனராகிப்போன எசமானர்.

“ஏன் இப்படி தலைதெறிக்க ஓட்டம்?”

“ஐயா. பெண் மாறிப் போய்விட்டாள். தாங்கள் விவரித்த குறைகளுடைய பெண் இவளன்று.”

புன்னகைத்தார் முதியவர். “அன்பு அபூபக்ரு! அவள் உன் மனைவிதான். அவளைத் தவிர எனக்கு வேறு வாரிசும் இல்லை. அவளைக் குறைபாடுடையவளாக நான் உன்னிடம் வர்ணித்ததன் காரணம், அவளை நேரில் பார்க்கும்போது உனக்கு ஏதும் குறை தென்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே. உள்ளே செல்” என்றார்.

அப்படியாக இனிய அதிர்ச்சி வைத்தியத்துடன் அபூபக்ருவின் தாம்பத்ய வாழ்க்கை துவங்கியது.

மறுநாள் தம் மனைவியின் அழகையும் அவளது ஆபரணங்களையும் அபூபக்ரு வியந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஏகப்பட்ட நகைகளின் நடுவே ஒரு முத்து மாலை. அது அவரது கவனத்தை ஈர்த்தது. மக்காவில் ஒரு முத்து மாலையைக் கண்டெடுத்து ஒரு மனிதரிடம் ஒப்படைத்தாரே அதைப் போலவே இருந்தது. அதுவா இது? யோசனையில் மூழ்கினார்.

பகலில் மாமனார் மருமகனை நலம் விசாரித்தார். “அனைத்தும் நலமா? ஏதும் குறையில்லையே.”

“தாங்கள் எனக்குப் பேருபகாரம் புரிந்திருக்கிறீர்கள். வேறு என்ன சொல்வது?” என்றவர் சற்று யோசனையுடன் பேச்சை நிறுத்தினார்.

“என்ன யோசனை?”

“ஒரு குறிப்பிட்ட நகையைப் பற்றி” என்று விவரிக்க ஆரம்பித்தார். “முன்னொரு காலம் மக்காவில் நான் யாத்திரை புரியும்போது ஒரு நகையைக் கண்டெடுத்தேன். அதைத் தவற விட்டவரிடம் ஒப்படைத்தேன். இந்த நகை அதைப் போலவே உள்ளது.”

அதைக் கேட்டதுதான் தாமதம். அந்த முதியவர், எசமானர், அபூபக்ருவின் மாமனார் அழ ஆரம்பித்துவிட்டார். “ஆஹா! நீர்தாம் அந்த நகையைக் கண்டுபிடித்துத் தந்தவரா!”

“ஆம்” என்றார் அபூபக்ருவும் ஆச்சரியம், ஆனந்தத்துடன்.

“நற்செய்தியைக் கேளும். அல்லாஹ் எம்மையும் உம்மையும் மன்னித்துவிட்டான். தொலைந்துபோன நகை அன்று கிடைத்ததுமே புகழுக்குரிய அல்லாஹ்விடம் நம்மிருவர் பாவங்களையும் மன்னிக்கும்படியும் உமக்குச் சிறந்த முறையில் பிரதியுபகாரம் புரிய எனக்கு வாய்ப்பு அளிக்கும்படியும் இறைஞ்சினேன். இப்பொழுது இதோ என் மகளையும் செல்வத்தையும் உன் வசம் ஒப்படைத்துவிட்டேன். என் நேரம் நெருங்கிவிட்டது எனச் சந்தேகமற உணர்கிறேன்.”

அதற்குப் பிறகு வெகு சில காலத்தில் மரணமடைந்தார் அந்த நிலச்சுவான்தார்.

சிறிதோ, பெரிதோ நல்லறம் காலாவதி ஆவதில்லை!

– நூருத்தீன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.