முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

இஸ்லாம்

விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே செல்கின்ற இன்றைய காலகட்டத்தில் மனிதன் இயந்திரமாக மாறி விட்டான். காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்கின்ற வரை மனித வாழ்க்கை இயந்திரமாகவே செல்கின்றது. எந்தக் காரியத்தைச் செய்யும் போதும் மனிதனிடம் அவசரம் தான் உள்ளது. நிதானம் என்பது இல்லை.

ஒரு மனிதன் பிறந்ததில் இருந்து மரணிக்கின்ற வரை அவன் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்கின்ற வரை தன்னுடைய ஒவ்வொரு செயலையும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும், அந்தச் செயல்களைச் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய, இம்மை மற்றும் மறுமை வாழ்வில் நன்மை பெற்று தரக்கூடிய ஒழுங்கு முறைகள் என்னென்ன என்பதையும் இஸ்லாம் அழகாக சொல்லித் தருகின்றது. இதில் ஒரு மனிதன் படுக்கைக்குக் செல்லும் முன் செய்ய வேண்டிய காரியங்கள் எவை எனப் பார்ப்போம்.

படுக்கைக்குச் செல்லும் முன் தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்ய வேண்டும்.

பராவு பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.''நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்து கொள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள். நூல்: புகாரி 247

இது நபி (ஸல்) அவர்கள் காட்டிய ஒழுங்கு முறையாகும். ஆனால் இன்று பலர் இதைக் கடை பிடிப்பதில்லை. உளூச் செய்து விட்டு உறங்குவதற்கும், உளூச் செய்யாமல் உறங்குவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நபியவர்கள் காட்டித் தந்தபடி உளூச் செய்து விட்டு படுத்தால் புத்துணர்ச்சியுடன் கூடிய நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.

அன்றாடம் வேலை பார்த்து விட்டு, வெயிலில் அலைந்து திரிந்து விட்டு, வியர்வை நாற்றத்துடன் அப்படியே படுக்கைக்குச் சென்று விடாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ள படி உளூச் செய்து விட்டு, உறங்குவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி வகுக்கின்றது.

படுக்கை விரிப்பை உதறுதல்

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டி விடுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 7393

இஸ்லாம் எதைச் சொன்னாலும் அதில் ஒரு நன்மை இருக்கும். நாம் படுக்கும் இடத்தை நன்றாகச் சுத்தம் செய்து விட்டு நம் படுக்கைகளையும் நன்றாக உதறிக் கொள்ள வேண்டும். ஏனெனில் அதில் ஏதாவது பூச்சிகளோ, அல்லது எறும்புகளே இருக்கலாம். படுக்கையை உதறாமல் படுத்தோம் என்றால் அந்தப் பூச்சிகளால் ஏதாவது தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. எனவே இந்த ஒழுங்கையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

ஓத வேண்டிய துஆக்கள்

''நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது, ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். உங்களுடன் ஒரு பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்'' என்று நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3275

மேலும் பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களையும் ஓத வேண்டும்.

''எவர் அல்பகரா எனும் (2வது) அத்தியாயத்தின் இறுதி இரு (286, 287) வசனங்களை இரவில் ஓதுகின்றாரோ அவருக்கு இந்த இரண்டுமே போதும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் (ரலி) நூல்: புகாரி 5009

மேலும் படுக்கைக்குச் செல்லும் போது, திருக்குர்ஆனின் 112, 113, 114 அத்தியாயங்களையும் ஓதி, நமது உடல் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங் கைகளை இணைத்து அதில், ''குல்ஹுவல்லாஹு அஹத், குல் அவூது பிரப்பில் ஃபலக், குல் அவூது பிரப்பின்னாஸ்'' ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதுவார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் தடவுவார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 5017

இன்றைய பெண்கள் வீட்டு வேலைகளில் எந்த வேலையைச் செய்தாலும் இயந்திரங்கள் மூலமாகவே செய்கின்றார்கள். ஆனால் அதுவும் கூட அவர்களுக்குச் சிரமமாக உள்ளது. இதனால் சில பெண்கள் காலை முதல் மாலை வரை வீட்டு வேலைகளைச் செய்து விட்டு, இரவில் கணவரிடம் சென்று தங்கள் மனக் குறைகளைக் கொட்டுகின்றார்கள். இதனால் கணவனின் வெறுப்பைச் சம்பாதிக்கின்றார்கள். ஆனால் இவர்கள் இஸ்லாம் சொல்கின்ற அடிப்படையில் படுக்கைக்குச் செல்லும் முன் சொல்ல வேண்டிய திக்ருகளையும், தஸ்பீஹ்களையும் செய்து விட்டுப் படுத்தால் அவர்கள் என்ன தான் அன்று சிரமப்பட்டிருந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியாது. அது மட்டுமின்றி இதன் மூலம் கணவனின் வெறுப்பையும் சம்பாதிக்காமல் இருக்கலாம்.

(என் மனைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தமது கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (தம் தந்தை) நபி (ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள். ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்தது. ஆனால் நபி (ஸல்) அவர்களைக் காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்கு வந்த போது, ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்று விட்டோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே எழுந்திருக்க முயற்சித்தோம். அவர்கள், ''நீங்கள் இருக்கும் உங்கள் இடத்திலேயே அமருங்கள்'' என்று சொல்லி விட்டு, அவர்களே வந்து எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். அவர்களின் பாதங்கள் என் வயிற்றில் பட்டு அதன் குளிர்ச்சியை உணரும் அளவுக்கு நெருக்கமாக அமர்ந்தார்கள். அப்போது அவர்கள், ''நீங்கள் இருவரும் கேட்டதை விடச் சிறந்ததை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும் போது, 33 முறை சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்றும், 33 முறை அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், 33 முறை அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதை விடச் சிறந்ததாகும்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: புகாரி 5361

பிறகு பின்வரும் துஆக்களில் ஒன்றை ஓத வேண்டும்.

பி(இ)ஸ்மி(க்)க ரப்பீ(இ), வளஃது ஜன்பீ(இ) வபி(இ)(க்)க அர்ப(எ)வுஹு, இன் அம்ஸக்(த்)த நப்(எ)ஸீ ப(எ)ர்ஹம்ஹா வஇன் அர்ஸல்(த்)தஹா ப(எ)ஹ்ப(எ)ள்ஹா பி(இ)மா தஹ்ப(எ)ளு பி(இ)ஹி இபா(இ)த(க்)கஸ் ஸாலிஹீன்.
பொருள்: என் அதிபதியே! உன் பெயரால் நான் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ மன்னிப்பளிப்பாயாக! அதை நீ (கைப்பற்றாமல்) விட்டு விட்டால் உன் நல்லடியார்களை நீ எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக! அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 7393

அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வஅஹ்யா
பொருள்: இறைவா! உன் பெயரால் மரணிக்கின்றேன். உன் பெயரால் உயிர் பெறுகின்றேன். நூல்: புகாரி 6325

இவைகள் அனைத்தையும் ஓதி முடித்த பின் வலப்புறமாக ஒருக்களித்துப் படுத்து, பின்வரும் துஆவை ஓதி அந்த வார்த்தையையே அன்றைய தினத்தின் இறுதி வார்த்தைகளாக ஆக்கிக் கொள் வேண்டும். ''நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உனது வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர், அல்லாஹும்ம அஸ்லம்(த்)து வஜ்ஹீ இலை(க்)க, வப(எ)வ்வள்(த்)து அம்ரீ இலை(க்)க, வஅல்ஜஃ(த்)து ளஹ்ரீ இலை(க்)க, ரஃக்ப(இ)(த்)தன் வரஹ்ப(இ)(த்)தன் இலை(க்)க லா மல்ஜஅ வலா மன்ஜஅ மின்(க்)க இல்லா இலை(க்)க அல்லாஹும்ம ஆமன்(த்)து பிகிதாபி(இ)(க்)கல்லதீ அன்ஸல்(த்)த வபி(இ)நபி(இ)ய்யி(க்) கல்லதீ அர்ஸல்(த்)த

பொருள்: யா அல்லாஹ்! நான் எனது முகத்தை உன்னிடத்தில் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கின்றேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னை விட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உனது நபியையும் நான் நம்பினேன். என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையான வனாய் ஆகி விடுகின்றாய். இந்தப் பிரார்த்தனையை உனது (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள். அறிவிப்பவர் : பராஃ இப்னு ஆஸிப் (ரலி) நூல் : புகாரி (247)

இவ்வாறு உன்னதமாக இஸ்லாம் உறங்கும் முறையைப் போதிக்கின்றது. எனவே இதன் அடிப்படையில் நாமும் செயல்பட்டு, நம் சந்ததிகளையும் நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் செயல்படச் செய்து, நபிவழியைப் பின்பற்றியவர்களாக அல்லாஹ் என்றென்றும் நம்மை ஆக்கி வைப்பானாக!

எஸ். சிராஜ் ஃபாத்திமா இ.ஒ.நஸ்ரீ. ஆசிரியை, அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்வியகம். (நன்றி: ஏகத்துவம் ஏப்ரல் 2006 இதழ்)

(குறிப்பு: இது மின்மடல் மூலம் கிடைக்கப்பெற்ற ஒரு ஆக்கம். எழுதிய சகோதரருக்கு எமது நன்றி. எழுதியவர் பெயர் அறியப்படின் இங்கே பதியப்படும். வாசகர் ஷர்ஃபுத்தீன் அவர்களின் பின்னூட்டத்தைத் தொடர்ந்து எழுதிய சகோதரியின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. சகோதரருக்கு நன்றி.)

Comments   
J.MOHAMMED ALI--MANAKADU SALEM
0 #1 J.MOHAMMED ALI--MANAKADU SALEM -0001-11-30 05:21
HALHAMDULILILA
ELLABBUGALUM ALLAH ORUWANUKK
Quote | Report to administrator
raja
0 #2 raja 2011-07-10 21:06
Allah is Great!
Quote | Report to administrator
Sharafudheen
0 #3 Sharafudheen 2014-01-30 17:43
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...!

மின்மடல் மூலம் உங்களுக்கு கிடைக்கப்பெற்ற இந்தக் கட்டுரையை எழுதியது, எஸ். சிராஜ் ஃபாத்திமா இ.ஒ.நஸ்ரீ. (ஆசிரியை, அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்வியகம்)

இது 'ஏகத்துவம்' மாத இதழுக்காக எழுதப்பட்டு, 'ஏகத்துவம்' - 2006 ஏப்ரல் இதழில் பிரசுரித்து, ஆன்லைன்பிஜெ இணையதளத்திலும் வெளியிட்டிருந்த ார்கள். இப்போதும் அந்தக் கட்டுரை ஆன்லைன்பிஜெ இணையதளத்தில் உள்ளது.
(பார்க்கவும்: onlinepj.com/.../ega_apr_2006)

எனவே எழுதியவர் பெயருடன், எந்த இதழுக்காக எழுதப்பட்டு முதலில் இணையத்தில் வெளியிடப்பட்டதோ , அந்த‌ தளமனா ஆன்லைன்பிஜெ தளத்தையும் இங்கே பதிந்துவிடுங்கள ். ஏனெனில் அந்த தளத்திலிருந்து காப்பி பண்ணிதான் உங்களுக்கு மெயிலில் அனுப்பியுள்ளார் கள்.

அல்லாஹ் நம் காரியங்களை நலவாக்கித் தரட்டும்!
Quote | Report to administrator
Sharafudheen
0 #4 Sharafudheen 2014-01-31 17:49
எழுதியவரின் பெயரும், விபரங்களும் உடனே இணைத்தமைக்கு ஜஸாகல்லாஹ் ஹைரா.
Quote | Report to administrator
மீரா ஜுபைர்
0 #5 மீரா ஜுபைர் 2018-08-13 23:13
தெர்க்கு திசையில் தலை வைத்து தூங்கலாமா இந்தியா ராமனாதபுரம்
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்