| ஒற்றுமையும் தமிழக முஸ்லிம் இயக்கங்களும்! |
|
|
| கட்டுரைப் போட்டிகள் - வருடம் 2007 | |
| புதன், 19 டிசம்பர் 2007 08:59 | |
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்! "... இந்த மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள்; பிரிந்து விடாதீர்கள் ..." (அல்குர்ஆன் 42:13). அல் குர்ஆன் மார்க்கத்தை - இஸ்லாத்தை நிலைநிறுத்துமாறு முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுகிறது. அவர்களின் அன்றாட வாழ்வில், பொருளாதாரத் தேடலில், சமூகப் பங்களிப்புகளில், ஒழுக்கவியலில் இஸ்லாமியக் கோட்பாடுகள் மிளிர வேண்டும். நபி(ஸல்) அவர்கள் உருவாக்கிய சத்திய சஹாபாக்கள் - நபித் தோழர்கள், இஸ்லாத்தை எவ்வளவு உறுதியாக நிலைநிறுத்தினார்களோ, பின்பற்றினார்களோ, தங்கள் குருதியில் இரண்டற கலந்திட்ட உயிர்ப் பொருளாகக் கருதினார்களோ அப்படிப்பட்ட உறுதியான நம்பிக்கையுடனமைந்த சிந்தனையுடைய ஒன்றுபட்ட முஸ்லிம்களாக இந்தச் சமுதாயம் வாழ வேண்டும். இஸ்லாமின் தேக்கம்: ஒரு காலத்தில் நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்திய ஓரிறைக் கொள்கை என்னும் தவ்ஹீத் சிந்தனையும், அவர்கள் செயல்படுத்திய சுன்னத்தான நடைமுறைகளும் கற்றுத் தந்த நல்லொழுக்கங்களும் தமிழக முஸ்லிம் மக்களிடையே அரிதாகி விட்டிருந்தது. பெயர் தாங்கி முஸ்லிம்களாக எந்த விதக் கொள்கை பிடிப்பும் ஈமானிய உறுதியும் இஸ்லாமியச் செயல்பாடும் அற்று தமிழக முஸ்லிம் சமுதாயம் வாழ்ந்து வந்தது. இறை நிராகரிப்பின் பிடியில் வாழ்வதை உணராமலே முஸ்லிம்கள் தர்காக்களை வலம் வந்தனர். நேர்ச்சை என்ற பெயரில் அல்லாஹ் தஆலாவிற்குச் செலுத்த வேண்டிய வணக்கத்தை, இறைநேசர்கள் என்று தாம் நம்பிய மனிதர்களுக்கெல்லாம் செய்தனர். "அல்லாஹ்வையன்றி எந்தத் தீமையையோ, நன்மையையோ செய்ய அதிகாரம் இல்லாதவற்றையும் நீங்கள் வணங்குகிறீர்களா?" (5:76) என்று திருக்குர்ஆன் இதனை வன்மையாகக் கண்டிக்கிறது. முஹம்மது(ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டிய முஸ்லிம்கள், தமது மூதாதையர்கள் கொண்டு வந்த பிற மதச் சடங்கு, சம்பிரதாயங்களை ஏற்று அவர்களைப் பின்பற்றி நடந்தனர். அவர்களிடையே ஒற்றுமையின்மையும் காணப்பட்டது. கல்வியிலும் சமுதாயத்திலும் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருந்தார்கள். அக்காலங்களில் சில இயக்கங்கள் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காகச் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் பெயரளவில் மட்டுமே அவை இஸ்லாமைத் தாங்கி நின்றன. செயல்பாடுகளில் தலைவர்களின் மன இச்சையை அவ்வியக்கங்கள் பின்பற்றின. முஸ்லிம்களின் வாழ்வைப் பற்றிய அக்கரையோ, அவர்தம் மார்க்கம் நெறிபட வேண்டும் என்ற எண்ணமோ கிஞ்சிற்றும் இல்லாமல் சுயநலப் போக்கை அவை கையாண்டன. மார்க்கத்தைப் பரப்ப வேண்டிய மார்க்க அறிஞர்கள் ஃபாத்திஹா, மௌலிது, கந்தூரிகளில் மூழ்கிக் கிடந்தனர். தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக மார்க்கத்தை வியாபாரம் ஆக்கினர். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மனிதர்களின் கோபத்திலும் அல்லாஹ்வின் திருப்தியைத் தேர்ந்தெடுப்பவருக்கு மனிதர்களால் ஏற்படும் ஆபத்திலிருந்து பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன். அல்லாஹ்வின் கோபத்திலும் மனிதர்களின் திருப்தியைத் தேர்ந்தெடுப்பவரை அல்லாஹ் மனிதர்களின்பால் சாட்டி விடுகிறான்." (திர்மிதி). முஸ்லிமான ஒவ்வொருவரின் மீதும் இஸ்லாம் விதிக்கும் சில அடிப்படைப் பொறுப்புகள் உள்ளன. அவற்றில் தலையாயது, மனிதர்களைத் தொழுகையின் பக்கம் அழைப்பதோடு, நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதாகும். "உங்களில் ஒருவர் வெறுக்கத் தக்கதைக் கண்டால் அதைத் தனது கரத்தால் மாற்றட்டும்; அதற்குச் சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும்; அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்து ஒதுக்கட்டும். இதுவே ஈமானின் பலவீனமான நிலையாகும்" என நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். (அபூஸயீத் அல் குத்ரி (ரலி), முஸ்லிம்). ஒவ்வொரு முஸ்லிமும் தன் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டியவனாவான். குடும்பத்தைப் பிரிந்து விட்டு மார்க்கத்திற்காக மாதங்கள் பல, ஊர் ஊராகச் செல்பவர்களும் தவறு சுட்டிக்காட்டப்படும் போது, அதைத் திருத்திக் கொண்டு, நபி(ஸல்) அவர்கள் வழிமுறைப்படி வாழவேண்டும். மார்க்கத்தின் பெயரைச் சொல்லி, குடும்பப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது. "ஒவ்வொருவரும் தனது பொறுப்பைக் குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவர்..." (அனஸ்(ரலி), இப்னு ஹிப்பான்). முஸ்லிம்கள் அனைவரும் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் மக்களாக ஒன்றுபட வேண்டும். முஸ்லிம்களின் நலனை அல்லாஹ் தஆலா விதித்தச் சட்டங்களின்படி பேணி, தூய இஸ்லாத்தைக் கடைப் பிடிக்க முயல வேண்டும். பல்வேறு ஆரம்பகாலச் சோதனைகளுக்குப் பின் முதல் இஸ்லாமிய அரசு மதீனாவில் அமைந்தவுடன் நபி(ஸல்) அவர்கள் நபித்தோழர்களை இரண்டிரண்டாக இணைத்து சகோதரச் சிந்தனையை விதைத்தார்கள். மதீனத்து அன்சாரிகளுடன் மக்கத்து முஹாஜிர்கள் இவ்வாறு இணைக்கப்பட்ட உடனேயே, அன்சாரிகளின் சொத்தில், குடும்பத்தில் உடன் பிறந்த சொந்தச் சகோதரர்போல் முஹாஜிர்கள் நேசிக்கப் பட்டனர். வெவ்வேறு ஊரைச் சேர்ந்த, வெவ்வேறு பழக்க வழக்கங்களை உடைய மனிதர்களை இஸ்லாம் உடன்பிறவாச் சகோதர்களாக நேசிக்க வைத்தது. ஒற்றுமையை விதைத்தது. "லாயிலாஹ இல்லல்லாஹ்" என்ற கலிமா முஸ்லிம்களைச் சகோதரத்துவத்தால் பிணைத்தது. "ஒரு முஃமின் மற்றொரு முஃமினுக்குக் கட்டிடத்தைப் போன்றவர் ஆவார். அதில் ஒரு பாகம் மற்றொரு பாகத்திற்கு வலுச் சேர்க்கிறது." (அபூமூஸா(ரலி), ஸஹீஹ் புகாரி) என்ற நபியவர்களின் பொன்மொழிக்கிணங்க கூட்டாகச் சேர்ந்து சமூக உயர்வுக்கு, முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்குப் பாடுபடும்போது, அதில் உள்ள பலம் பெரியது. சமூகத்தைப் பலனடையச் செய்ய ஒற்றுமையாய் செயல்பட வேண்டியது மிக முக்கியம். எப்படி, நபி(ஸல்) அவர்கள் முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் இணைத்து, சகோதரத்துவம் என்ற சிமெண்டால் உறுதியான கட்டடத்தை எழுப்பினார்களோ, அப்படிபட்ட ஒன்றுபட்ட சமூகம் அதற்கு மிக அவசியமானது. ஓரிறைக் கொள்கை என்ற தவ்ஹீதுச் சிந்தனைத்துளி தமிழகத்தில் விதைக்கப் பட்டபோது, கடுமையாகப் போராட வேண்டி இருந்தது. கொஞ்ச நஞ்சமல்ல; அடிபட்டு, மிதிபட்டு, வெட்டுப்பட்டு, குத்துப்பட்டு, சிலராயிருந்த சகோதரர்கள் தம் சகோதர முஸ்லிம்களுக்காகப் போராடினார்கள். அன்றைக்கு இருந்தது அழகியதோர் ஒற்றுமையும் பரஸ்பர புரிந்துணர்வும். என்றைக்குச் சிறுசெடிகள், வேர் ஊன்றி மரமானதோ, அத்தோடு அது தோப்பாகாமல் தனி மரமானது. குஃப்ரை வளர்த்த எதிரணியினர் பெருங்கூட்டத்தினராக இருந்தவரை, சத்தியப்பாதைக்கு அழைப்பு விடுத்த இவர்களின் உறுதியான ஒற்றுமை குலையாமல் இருந்தது. அல்லாஹ்வின் பேரருளால் மூடப்பழக்க வழக்கங்களை ஒழித்து ஓரிறைச் சிந்தனை தமிழகத்தில் வளர்ந்தவுடன், முஸ்லிம் சமூகத்திடம் நம்பிக்கை வேர் விட்டது. சமுதாயம் எழுச்சியுடன் முன்னேறுவதற்கானத் தருணம் வந்ததாகப் பூரித்தார்கள். ஆனால் களையத் தக்க அற்பக் கருத்து வேறுபாடுகள், முஸ்லிம்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை விடுத்து, வலிய ஓர் ஆயுதமாக மாறி, ஒற்றுமையின் ஆணிவேரை அறுத்தது. ஈமானியச் சிந்தனையுடைய ஒன்றுபட்ட முஸ்லிம் சமூகத்தை வளர்த்தெடுக்கத் தலைப்பட்டவர்கள், திருமறை குர்ஆனின் கட்டளையைச் செயல்படுத்திட முனைந்தச் சகோதரர்கள், "(நபியே!) நிச்சயமாக, தங்கள் மார்க்கத்தை(ப் பலவாறாக)ப் பிரித்து, பல பிரிவினர்களாகி விட்டவர்களின் எந்த ஒரு செயலிலும் உமக்குத் தொடர்பில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடம் இருக்கின்றது..." (அல்குர்ஆன் 6:159) என்ற சத்திய வேதத்தின் எச்சரிக்கையைச் சடுதியில் மறந்தனரோ? இஸ்லாத்தினுடைய விஷயத்தில் ஆய்வு செய்து முடிவுகள் எடுக்கும்போது கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். இத்தகைய கருத்து வேறுபாடுகள் அல்குர்ஆன், ஹதீஸ் இரண்டையும் விளங்கி ஆய்வு செய்து மார்க்க விஷயங்களில் தீர்ப்புகள் சொல்ல விழையும்போது ஏற்படலாம். இது இயற்கையானது. ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகள் பிளவுகளை ஏற்படுத்தாது. சகோதரத்துவச் சிந்தனையைக் குலைக்காது. பிரிவினைகளுக்கு இத்தகையக் கருத்து வேறுபாடுகள் காரணிகளாக அமைந்திடக் கூடாது. உதாரணத்திற்கு தமத்துஉ, கிரான் ஆகிய இரண்டு விதமான ஹஜ் வழிமுறைகளையும் உஸ்மான்(ரலி) அவர்கள் தடுத்தார்கள். ஆனால் அலி(ரலி) அவர்கள் "யாருடைய சொல்லிற்காகவும் நபியுடைய வழிமுறையை விட்டு விட மாட்டேன்" என்றுக் கூறி தமத்து முறையில் ஹஜ் செய்தார்கள். கருத்தில் அவர்கள் வேறுபட்டாலும், தங்களிடையே ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் பேணினார்கள். அவர்கள் தங்களுக்குள் விவாதப்போர் நடத்திக் கொண்டிருக்கவில்லை; ஒருவருக்கொருவர் பேசாமல், பார்க்காமல், ஸலாம் கூறாமல் இருக்கவில்லை. பரஸ்பரம் தூற்றிப்பேசித் தங்கள் ஈமானைக் குறைத்துக் கொள்ளவில்லை; ஒருவர் மற்றவரை "வழிகேடர்", "யூதக் கூட்டத்தினர்" என்று பழித்துரைக்கவில்லை; தனிப் பள்ளிவாயில்களை அமைத்துக் கொள்ளவில்லை; பள்ளிவாயிலில் தொழுகையின் போது இடையூறு செய்யவில்லை; முகம் திருப்பிக் கொண்டு போகவில்லை. நபி(ஸல்) அவர்களால் பண்படுத்தப்பட்ட, சீர்படுத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட உத்தம சஹாபாக்கள் அவ்வாறெல்லாம் செய்யவில்லையே! இவ்வுண்மைகளை ஊன்றி உணர விடாமல் சமுதாய மேம்பாட்டுக்காக இயங்க வேண்டியவர்களை இயக்க வெறி தடை செய்கிறதே. "நிச்சயமாக, விசுவாசிகள் அனைவரும் சகோதரர்களே!..." ( அல்குர்ஆன் 49:10). என்ற சத்திய வேதத்தின் வாக்குகளை உண்மைப் படுத்தி வாழ்ந்தச் சத்திய சஹாபாக்களைப் போல் வேற்றுமைக்குள் ஒற்றுமை காண வேண்டும். குர்ஆனின் கட்டளைகளை சிரமேற் கொண்டு செயலாற்ற வேண்டும். சமூகத்தில் இஸ்லாம் ஓங்கப் பாடுபட வேண்டும் என்ற எண்ணத்தை நிலை நிறுத்தியவர்கள், இஸ்லாமிய அகீதாவைப் சரிவரப் பின்பற்ற முஸ்லிம்களை வற்புறுத்தியவர்கள், "...நீங்கள் ஒருவரை ஒருவர் துருவி ஆராயாதீர்கள்..." (அல்குர்ஆன் 49:12) என்று குர்ஆன் கட்டளையிடுவதை மறந்து, "பிற இயக்கங்களின் குறைகளை அம்பலப்படுத்துவதும் அறிக்கைகள் விடுவதும் தரக் குறைவாக விமர்சிப்பதும் அடுத்த இயக்கங்களின் எண்ண ஓட்டத்தைக் கண்டறியத் துப்பு துலக்குவதும்" என்று தங்களின் நேரத்தை - தஃவாவிலும் சமுதாயப் பணிகளிலும் கழிக்க வேண்டியப் பொன்னான நேரத்தை - வீண் ஆராய்ச்சிகளில் கழிக்கின்ற நிலைக்கு இன்று கீழிறங்கி விட்டனர். அல்லாஹ் தஆலா கொடுத்திருக்கும் நிஃமத்-பேரருள், ஓரிறைக் கொள்கையை எத்தி வைக்கப்பயன்பட வேண்டியப் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் அறிவாற்றலும் வீணாகச் செலவழிக்கப்படுவது மனதிற்கு வேதனை அளிக்கிறது! சீரழிவிலிருந்து இஸ்லாமியச் சமூகத்தைக் காப்பாற்றத்தானே "லா இலாஹா இல்லல்லாஹ்" -வை அடித்தளமாகக் கொண்டு மேம்பட்ட இஸ்லாமியக் கட்டடத்தை எழுப்பிட முயன்றார்கள்?. இன்றையச் சமூகத்தின் ஒற்றுமையில்லாதச் சீரழிந்தப் போக்கை மாற்றுவது யார்?. அதற்காக உழைக்க முன்வருவது யார்?. "இவர்கள் செய்யத் தவறும் பொழுது இவர்களை அழித்து விட்டு வேறோர் உன்னத, நடுநிலையான சமூகத்தைக் கொண்டுவருவதாகக்" கூறும் இறை வசனம் உண்மையாகக் காத்திருக்கிறார்களா?. இயக்கவெறி இஸ்லாத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. எந்தச் சகோதரர்கள் மூலம் வல்ல நாயன் இஸ்லாத்தின் உயிர் மூச்சான ஓரிறைக் கொள்கையைத் தமிழக முஸ்லிம்களில் பலருக்கும் உறுதிபடப் பின்பற்ற வழி வகுத்தானோ, எந்தச் சகோதரர்கள் ஆற்றிய சொற்பொழிவுகள் மூலம் பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை, மன்னித்தல், கோபம் தவிர்த்தல் ஆகிய இஸ்லாத்தின் அறிவுரையை ஆழப்பதித்தானோ, திருமறைக் குர்ஆனின் உன்னதத்தையும் அதை ஊன்றிப் படிக்க வேண்டிய அவசியத்தையும் ஆசையையும் மனதில் விதைத்தானோ, அந்தச் சகோதரர்களிடம் இந்தச் சகிப்புத்தன்மையும் மன்னிக்கும் மனப்பாங்கும் ஒற்றுமையும் ஏற்படாதது ஏன்?. சகோதர முஸ்லிமுடன் உறவாடாமல், பகைமை மனப்பான்மையினால் - இயக்க வெறியினால், ஒன்றுபட்டுச் செயாலாற்றாமல், முகம் பார்த்துப் பேசாமல், ஏன் - ஸலாமுக்குக் கூட மறுமொழி கூறாமல் வெறுப்பு காட்டுவது இஸ்லாம் கற்றுத் தந்ததா? "முஃமினை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருக்க இன்னொரு முஃமினுக்கு அனுமதி இல்லை"(அபூஹுரைரா(ரலி), அல் அதபுல் முஃப்ரத்) என்ற நபிமொழிகள் காற்றோடு போனதோ?. அல்லது அவை மற்றவர்களுக்கு மட்டும் தானோ?. நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கை: "ஒருவர் தனது சகோதரனை ஒரு வருடம் வெறுத்திருந்தால், அவர் அந்தச் சகோதரனின் இரத்தத்தை சிந்தியவர் போலாவார்". (அல் அதபுல் முஃப்ரத்; அபூ ஹிராஷ் ஹத்ர் பின் அபீ ஹத்ரத் அல் அஸ்லமீ (ரலி), அபூதாவூத்). இந்தத் துவேஷம் மாபெரும் பாவமான கொலைக்கு ஈடாகக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது என்பதைச் சகோதரர்களிடையே துவேஷம் பாராட்டுபவர்கள் அறிந்து கொள்ளட்டும். உமர்(ரலி) அவர்கள், அபு லுஃலூ ஃபரோஸ் என்ற நெருப்பு வணங்கியால், பஜ்ர் தொழுகையில் முதுகில் குத்துப்பட்டு சுருண்டார்கள். தன்னைக் குத்தியது யார் என்றறிந்தவுடன், உமர்(ரலி) அவர்கள் மகிழ்ச்சியுடன், "அல்ஹம்துலில்லாஹ், அவன் ஒரு முஸ்லிம் அல்லன்" என்றார்கள். (அம்ர் பின் மைமூன் (ரஹ்), புகாரீ 3700). சுபஹானல்லாஹ்!!! எந்த அளவிற்கு ஒவ்வொரு நபித்தோழரும் முஸ்லிம்களை நேசித்திருக்கிறார்கள்! எந்த ஒரு முஸ்லிமும், அத்தகைய பெரும்பாவமான செயலைச் செய்து நரகில் விழுந்து விடக் கூடாது என்றுதான் ஒரு மனிதனால் தான் தாக்கப்பட்ட போது கூட உமர்(ரலி) விரும்பினார்கள். நம்மை ஒருவர் குறை சொல்லிவிட்டால் எப்படி எல்லாம் கொதித்துப் போகிறோம். ஒருவர் மற்றவர் மீது பழி சுமத்தும் போது, மறுமையில் அல்லாஹ்விடத்தில் நீதி கேட்க சந்தர்ப்பம் இருந்தும், "உங்களை மன்னித்து விடுகிறேன்" என்று ஈமான் உறுதியோடு, முஸ்லிம்களின் மீதுள்ள பற்றால் மன்னிப்பை வழங்கி, அவர்களுக்காகவும் மன்னிப்பைத் தேடுகிறோமா சகோதரர்களே?. அழைப்பாளர்களின் பண்பு இதுவல்லவா?. "...அவர்கள் கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களின் குற்றத்தை மன்னித்தும் விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான்." (அல்குர்ஆன் 3:134). பிரிந்து நிற்கும் சகோதரர்கள் தங்களுக்குள் இருக்கும் மனஸ்தாபங்களை மறந்து விட்டு, சமுதாயப் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சீரமைக்கப்பட வேண்டிய முஸ்லிம் மக்களின் வாழ்க்கைக்காக ஒருங்கிணைந்து பாடுபட முன்வர வேண்டும். மன்னிப்பதும், மறப்பதும் ஒவ்வொரு முஸ்லிமிடமும் இருக்க வேண்டிய பண்பாகும். அபூபக்ர்(ரலி) அவர்களுக்கும் உமர்(ரலி) அவர்களுக்கும் ஒருமுறை ஏதோ பிணக்கு ஏற்பட்டுப் பிரிந்து சென்றார்கள். வீட்டுக்குக் கூடப் போய் சேரவில்லை, இருவரும் ஒருவரை ஒருவர் தேடிச் சென்று, உடனே ஸலாம் சொல்லி முந்திக் கொண்டார்கள். (அபுத்தர்தா (ரலி), புகாரீ 3661). அல்ஹம்துலில்லாஹ்! என்னே ஒரு சகோதரத்துவ வாஞ்சை!!. தமிழக ஓரிறைக் கொள்கைச் சகோதரர்கள் எந்தச் சகோதரத்துவத்தை ஏற்படுத்த பாடுபட்டார்களோ, அதை அவர்களே தொலைத்து விட்டார்களே!. யா அல்லாஹ், இந்தச் சகோதரர்களுக்கு அருள்புரிவாயாக! மனிதன் தவறு செய்யக் கூடியவன். மனிதனுக்கு மிக சொற்ப அறிவே கொடுக்கப் பட்டுள்ளது . கருத்து வேறுபாடுடைய விஷயங்களில் "என்னுடைய ஆய்வின் முடிவே சரி; மற்றவர்களின் ஆய்வு தவறு" என்று மற்றவர்களை ஒதுக்கி, தூற்றி வசைபாடக் கூடாது. எல்லாருடைய தவறுகளையும் வல்ல ரஹ்மான் மன்னிக்க பிராத்தனை புரிதல், இதயத்தின் சாந்திக்கும், ஈமானின் மேன்மைக்கும் நல்லது. "அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து, நற்செயல்களைச் செய்து, நிச்சயமாக நான் முஸ்லிம்களைச் சேர்ந்தவன் என்று கூறுகின்றவரை விட சொல்லால் அழகியவர் யார்?" (குர்ஆன் 41:33) என்று ரப்புல் ஆலமீன் கேட்கிறான். ஆக ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டவனுக்கு அல்லாஹ் தஆலா சூட்டியிருக்கும் "முஸ்லிம்" என்ற பெயர் கொண்டு மட்டும்தான் ஒவ்வொருவரும் அறியப்பட வேண்டும். யார்? என்ற கேள்விக்கு "நான் தவ்ஹீத்வாதி", "நான் ஷாஃபி", "நான் ஹனஃபி" என அறிமுகப் படுத்தப்படுவதைவிட "நான் முஸ்லிம்" என்றே தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள வேண்டும். மரியாதைக்குரிய இமாம்கள் வெளியிட்டக் கருத்துகள் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமில்லாத பட்சத்தில் அவற்றை எடுத்துச் செயல்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் அதற்காக ஹனபி, ஷாஃபி எனத் தன்னை அடையாளப்படுத்துவது கூடாது. அல்லாஹ் பெயர் சூட்டிய பிறகு அதனை அமல்படுத்துவதில் முதலிடம் தந்து அவ்வாறு அழைப்பதில் விருப்பம் காட்ட வேண்டும். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் ஏனைய ஆட்சியாளர்களுக்குத் தபால் மூலம் அழைப்பு விடுக்கும் போதெல்லாம் "...நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சியாளர்களாக இருங்கள்"(குர்ஆன் 3:64) என்ற வசனத்தைக் குறிப்பிட்டு தபால் அனுப்பி வைப்பார்கள். மாநபி(ஸல்) அவர்கள் தன்னை அறிமுகப்படுத்திய விதத்தையே ஓரிறைக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும். ஒரு முஸ்லிம் தன்னை சமூகத்துடன் ஒப்பீடு செய்து, தான் சிறந்து விளங்குகிறோம் என்று குதூகலிப்பதை விட, தன் சகோதர முஸ்லிம்களுக்குத் தான் செய்ய வேண்டியிருக்கும் - தன் மீது சுமத்தபட்டு இருக்கும் பொறுப்பினை எண்ணிப் பார்க்க வேண்டும். "மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சமுதாயத்தில் சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள் ..." (3:110). நன்மையைக் கொண்டு தீமையைத் தடுக்கிறீர்கள்; அதானாலே சிறந்த சமுதாயம் என்று குர்ஆன் கூறுகிறது. நபி( ஸல்) அவர்கள் தங்கள் உம்மத்தைப் பற்றிக் கவலை அடைந்ததைப்போல், அறியாமையில் இருக்கும் முஸ்லிம்களைப் பற்றிய கவலை, ஒவ்வொரு முஸ்லிம்களுக்குள்ளும் இருக்கவேண்டும். "ஆகா! நான் நேர்வழி பெற்று விட்டேன்" என்று பெருமை பாராட்டி மற்றவரை இகழ்வாகக் கருதுதல் கூடாது. இறுதி மூச்சின் நிலையை எவரும் அறியார். "தவறான கருத்துக்களால் இஸ்லாத்தைச் சரிவரப் புரியாத முஸ்லிம்களிடம் ஏற்பட்ட தீமைகளுக்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்கும் முன், அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, மக்கள் மன்றத்தில் மார்க்கத்தில் தவறாகச் சொல்லிய விஷயங்களை ஒவ்வொரு இயக்கத்தாரும் சுய பரிசோதனை செய்து தெளிவு படுத்திட வேண்டும். தங்கள் தவறான சிலக் கருத்துக்களும் சகோதரர்களுக்கு, சகோதர இயக்கங்களுக்கு எதிராகச் செய்த சிலச் செயல்களும் குர்ஆன், சுன்னாவிற்கு மாற்றமானது எனப் புரிந்து அவற்றை விட்டு விலகி அல்லாஹ்வின் அதிருப்தியை பெறுவதை விட்டும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு இயக்கமும் மற்ற இயக்கங்களுடனான நல்லுறவை வளர்க்கவும் பரஸ்பரப் புரிந்துணர்வுடன் செயல்படத் தங்களுக்குள் மாதாந்திரக் கூட்டங்கள் நடத்திக் கொள்ளலாம்; கலந்தாலோசனைகள் மூலம் சமூகத்தின் பொதுப் பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்துப் பாடுபடலாம்; இணைந்து போராடலாம்; ஒருவர் மற்றவர்கள் பணிகளைப் பாராட்டி, ஊக்குவிக்கலாம்; தவறுகள் இருந்தால் கண்ணியமான முறையில், மனதை நோகடிக்காமல் தனிப்பட்ட முறையில் சுட்டிக் காட்டலாம். இஸ்லாத்திற்காகப் பாடுபடுவது சுவனத்திற்குக் கொண்டு சேர்க்கும் உயரிய பாதை அல்லவா? அதில் ஏன் சகோதரர்களிடையே கடினத்தன்மை?. "எவர் மென்மையை இழந்தாரோ, அவர் நன்மையை இழந்தார்." (ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி), முஸ்லிம்). இஸ்லாமியப் பாலர் பாடங்களை ஆசிரியர்களுக்கு நினைவு படுத்த வேண்டியுள்ளதே என்று மனம் சங்கடப்படுகிறது! தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது யாரையும் ஏளனமாகக் கிண்டல், கேலி செய்யாமல், குத்திக் காட்டாமல் மென்மையான முறையில் தவறுகளைச் சுட்டிக் காட்டினால் எத்தனை அழகாக இருக்கும்!. "... நன்மைக்கும், பயபக்திக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திலும் வரம்பு மீறுதலிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம்." (அல்குர்ஆன் 5:2). யாரையும் காயப்படுத்த எழுதப்பட்டதல்ல இக்கட்டுரை. ஒன்றுபடாமல் இஸ்லாமியச் சமூகம் சிதறுண்டுப் போவதைத் தாங்க முடியாத அல்லாஹ்வின் ஓர் அடியாளின் மன வேதனை மட்டுமே இது! பிற சமூகங்களுக்கு எப்போதும் இஸ்லாம் முன்மாதிரிதான். அது பண்புகளால் மட்டுமல்ல, ஒன்றுபடலிலும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் அல்லவா?. எனவே, நன்மையில் முந்துவதற்கு ஓடி வந்து முந்திக் கொள்ளுங்கள்!. "தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுகளில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியை வழங்குவோம்" (திருக்குர்ஆன் 4:114). ஆக்கம்: சகோதரி. ஜியா ஸித்தாரா (உம்மு ஹிபா) 2007-ஆம் ஆண்டு சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப்போட்டி முடிவுகளை அறியவும் பரிசுகளை வென்ற அனைத்துக் கட்டுரைகளையும் படிக்கவும் இங்கு சொடுக்குங்கள். கருத்துக்கள் (32)
![]()
அருமையான கட்டுரை! தற்காலச் சூழலை அப்படியே பிரதிபலிக்கும் கட்டுரை. இதனை இன்று கொசுவின் இறக்கையை விடக் கேவலமான உலகியல் விஷயங்களுக்காக அடித்துக் கொள்ளும் இயக்கத்தின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்க சத்தியமார்க்கம் தளத்தினர் முயற்சி செய்வீர்களா?
1
December 19, 2007 11:08
கட்டுரைப்போட்டியில் சிறப்புப் பரிசு வென்ற சகோதரி உம்மு ஹிபா அவாகளின் கட்டுரை காலத்திற்கேற்ற அருமையான கட்டுரை. நடுவர் குழு மிகச் சரியான கட்டுரையைத் தான் தேர்வு செய்துள்ளது. பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களில் தம்மை இணைத்துக் கொண்டுள்ள ஒவ்வொரு தமிழக முஸ்லிம் சகோதரரும் இக்கட்டுரையை விருப்பு வெறுப்பின்றி ஊன்றிப் படித்து இதன் கருத்துக்களை தம் இதயத்தில் தேக்கிக் கொண்டால் தமிழ் முஸ்லிம் சமுதாயம் வளமான எதிர்காலத்தை நோக்கி பீடுநடை போடும் இன்ஷா அல்லாஹ்
2
December 19, 2007 13:11
ஒற்றுமையின் வலிமையை அறிந்திருந்தும் பிளவுப்பட்டு பிரிவினையைப் பாராட்டிப் பேசிக் கொண்டிருக்கும் இன்றைய தமிழக முஸ்லிம்களுக்கு மிகவும் அவசியமான ஆக்கம் இது.
ஆக்கத்தை வடித்த சகோதரி உம்மு ஹிபா அவர்களுக்கும, வாசகர்களின் ஆற்றலை வெளிப்படுத்திய சத்தியமார்க்கம் நிர்வாகத்தினருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்
நன்றி!
3
December 19, 2007 13:13
///'... இந்த மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள்; பிரிந்து விடாதீர்கள் ...' //
சகோதரி உம்மு ஹிபா!
இன்று பிரிந்து நின்று பரஸ்பரம் வசைமாறி பொழிந்து கொண்டிருப்பாவர்கள் மார்க்கத்தை நிலைநிஉறுத்துவதற்காகப் பிரியவில்லை. தத்தமது உலகாதாய தலைமையை தக்க வைக்கவே. சகோதரர் ஒருவர் சொனதுபோல், கொசுவின் இறக்கையைவிட அற்ப உலகில் இவர்களின் தலைமைப்போட்டியால் எதிர்பார்த்ததில் அதிகம் கிடைத்துவிடாது.
அல்லாஹ் இவர்களிடமிருந்து நம் சமுதாயத்தைக் காக்க வேண்டும்!
//யாரையும் காயப்படுத்த எழுதப்பட்டதல்ல இக்கட்டுரை. ஒன்றுபடாமல் இஸ்லாமியச் சமூகம் சிதறுண்டுப் போவதைத் தாங்க முடியாத அல்லாஹ்வின் ஓர் அடியாளின் மன வேதனை மட்டுமே இது!//
அதே ஆதங்கத்தில் எழுந்ததுதான் மேற்கண்ட இறுதி வரிகள்!
4
December 20, 2007 08:58
சகோதரர் இபுனு ஹமீது,
உங்களது ஆலோசனைக்கு மிக்க நன்றி!
ஆலோசனை பரிசீலனையில் உள்ளது.
5
December 20, 2007 13:42
ஆயிரக்கணக்கான தமிழ் முஸ்லிம்கலின் மனக்குமுரல் களை மிகவும் அழகாக, நளினமாகப் படம் பிடித்து எழுதியுள்ளார். கட்டுரையை கன்டிப்பாக தமிழக முshலிம் இயக்கத் தலைவர்களுக்கு அனுப்பவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
6
December 20, 2007 20:08
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்ஹம்து லில்லாஹ்! மிகவும் சிறப்பான கட்டுரை 'சிறப்புக் கட்டுரை'யாகத் தேர்வாகியுள்ளது. இக்கட்டுரை, இன்றைய இயக்கங்களுக்கும் அவற்றின் தலைவர்களுக்கும் அவர்களின் பின்னால் சுய சிந்தனையின்றி, அவர்களை ஒன்றிணைக்கும் எண்ணமின்றிச் செல்லும் அனைவருக்கும் ஒரு பாடமாகும்.
இயக்கத் தலைவர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்தத் தமிழ் முஸ்லிம்களுக்கும் இதை வினியோகித்து அவர்களனைவரும் தத்தம் செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்யத் தூண்டும் ஓர் அருமையான, அவசியமான, பலரின் உள்ளத்தில் இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்திய சகோதரி உம்மு ஹிபா அவர்களுக்கும் சத்தியமார்க்கம் தளத்தினர் அனைவருக்கும் கட்டுரையின் கருவைத் தம் கண்ணோட்டமாகக் கொண்ட அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன்.
7
December 21, 2007 18:35
சகோ. முஹம்மது அவர்களுக்கு,
தங்களது ஆங்கிலப் பின்னூட்டம் தமிழ்ப் படுத்தப் பட்டு அனுமதிக்கப் பட்டுள்ளது.
தமிழில் தட்டச்சு வசதி இல்லாதவர்கள் கீழ்காணும் எமது தளச் சுட்டிக்குச் சென்று ஒருங்குறித் தமிழில் தட்டச்சுச் செய்ய வசதி செய்யப் பட்டுள்ளது; பயன் பெற்றுக் கொள்க:
http://www.satyamargam.com/index.php?option=com_wrapper&Itemid=161
8
December 21, 2007 18:40
சகோதரி உம்முஹிபா அவர்களின் உயரிய சிந்தனை, மார்க்கப்பற்று, சமுதாயத்தின் மீதுள்ள கவலை, எதையுமே குர்ஆன் ஹதீஸோடு ஒப்பிட்டுப் பார்க்கும் நேர்த்தி, அல்லாஹ் மற்றும் ரஸூல் மீதுள்ள ஆழியப்பற்று ஆகியவைதாம் இக்கட்டுரையின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.
மாஷாஅல்லாஹ் அருமையான, நேர்த்தியான, உருக்கமான ஒரு கட்டுரையைக் கொடுத்திருக்கிறார்கள்.
அல்லாஹ் சகோதரியின் ஆசையும் நோக்கமும் இக்கட்டுரை மூலம் நிறைவேற கிருபை
செய்வானாக.
சகோதரி அவர்களின் உடல் நலத்துக்கும்
பூரண ஆரோக்கியத்துக்கும் மென்மேலும் இஸ்லாமிய சேவை செய்வதற்காக நீண்ட ஆயுளைப் பெற்று திகழ்வதற்கும் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
இக்கட்டுரையை, 'சிறப்புக்கட்டுரை'யாக தேர்வு செய்த தேர்வுக் குழுவினருக்கு நன்றி.
9
December 23, 2007 08:18
சகோதரர் இபுனுஷா,
தங்களது பின்னூட்டம் சற்றே தணிக்கை செய்யப் பட்டுள்ளது.
புரிதலுக்கு நன்றி!
10
December 23, 2007 08:20
//சமூகத்தில் இஸ்லாம் ஓங்கப் பாடுபட வேண்டும் என்ற எண்ணத்தை நிலை நிறுத்தியவர்கள், இஸ்லாமிய அகீதாவைப் சரிவரப் பின்பற்ற முஸ்லிம்களை வற்புறுத்தியவர்கள்,
'...நீங்கள் ஒருவரை ஒருவர் துருவி ஆராயாதீர்கள்...' (அல்குர்ஆன் 49:12) என்று குர்ஆன் கட்டளையிடுவதை மறந்து, 'பிற இயக்கங்களின் குறைகளை அம்பலப்படுத்துவதும் அறிக்கைகள் விடுவதும் தரக் குறைவாக விமர்சிப்பதும் அடுத்த இயக்கங்களின் எண்ண ஓட்டத்தைக் கண்டறியத் துப்பு துலக்குவதும்' என்று தங்களின் நேரத்தை - தஃவாவிலும் சமுதாயப் பணிகளிலும் கழிக்க வேண்டியப் பொன்னான நேரத்தை - வீண் ஆராய்ச்சிகளில் கழிக்கின்ற நிலைக்கு இன்று கீழிறங்கி விட்டனர்.//
//உழைத்துச் சம்பாதிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும், இஸ்லாமியச் சமூகம் ஆன்மீகத்திலும் வாழ்வியலிலும் மேம்பட வேண்டும் என்ற எண்ணத்தில், அதற்காக உழைப்பார்கள் என்ற நம்பிக்கையில் தங்கள் வியர்வைகளால் சமுதாய இயக்கங்களின் கஜானாக்களை நிரப்புகிறார்கள். அறிக்கையாகவும், பிறர் குறைகளை வெளிப்படுத்தத் தயாரிக்கப்படும் குறுந்தகடாகவும் உருமாறும் இந்த வியர்வைத் துளிகள் கணக்குக் காட்ட வேண்டிய இடத்திற்கு வந்து சந்தி சிரிக்கிறது. அல்லாஹ்விடத்தில் கணக்குக் காட்ட வேண்டிய அமானிதமாக மாறி விடுகிறது. இதைப் பற்றி யாராவது கேட்டால், 'நாங்கள் சமூகத்தின் சீரழிவுக்குக் காரணமானவர்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறோம்' என்று பதிலளிக்கின்றனர்.//
//சீரழிவிலிருந்து இஸ்லாமியச் சமூகத்தைக் காப்பாற்றத்தானே 'லா இலாஹா இல்லல்லாஹ்' -வை அடித்தளமாகக் கொண்டு மேம்பட்ட இஸ்லாமியக் கட்டடத்தை எழுப்பிட முயன்றார்கள்?. இன்றையச் சமூகத்தின் ஒற்றுமையில்லாதச் சீரழிந்தப் போக்கை மாற்றுவது யார்?. அதற்காக உழைக்க முன்வருவது யார்?. 'இவர்கள் செய்யத் தவறும் பொழுது இவர்களை அழித்து விட்டு வேறோர் உன்னத, நடுநிலையான சமூகத்தைக் கொண்டுவருவதாகக்' கூறும் இறை வசனம் உண்மையாகக் காத்திருக்கிறார்களா?. இயக்கவெறி இஸ்லாத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. //
அல்ஹம்துலில்லாஹ்!
லட்சங்களின் கொதிக்கும் மனதை வார்த்தைக்கு வார்த்தை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள் சகோதரி.
அல்ஹம்துலில்லாஹ்!
இறையச்சமுடியவர்களுக்கு, சிந்திக்கக் கூடியவர்களுக்கு, உண்மையான சமுதாய அக்கறைக் கொண்டவர்களுக்கு, தூய இஸ்லாமியச் சிந்தை கொண்டவர்களுக்கு தங்களின் நிலைபாடுகளை மறுபரிசீலனை செய்து, தவறுகளைக் களைந்து, சமுதாய ஒற்றுமைக்காகக் குரல் கொடுக்கவும் அனைத்து சகோதரர்களையும் தமது மார்க்கச் சகோதரர்களாகக் கருதி அவர்களுடன் ஒன்றிணைந்து நிற்கவும் முன்வர இதனை விட வேறு அறிவுரைகளும் ஆதங்கங்களும் தேவையில்லை.
உடனடியாக சமுதாயத் தலைவர்கள், இயக்க/குழு செயல்வீரர்கள் கூடி அமர்ந்து சமுதாய ஒற்றுமைக்கான வழிமுறைகளை ஆலோசித்து முடிவுக்கு வர வேண்டும்.
சகோதரிக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
- ஹாஜியார்.
11
December 23, 2007 08:55
அல்ஹம்துலில்லாஹ்
ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் இருக்கும் எண்ணவோட்டங்களை மிகத் தெளிவாக முன் வைத்திருக்கிறார் கட்டுரையாளர்.
கருத்தாளர்களும் ஆதங்கங்களை கவலையோடு வெளிப்படுத்தி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
அனைத்து ஓரிறைக் கொள்கைவாதிகளும் அல்லாஹ்வுக்காக ஒன்று படவேண்டுமென்பதே நம்மனைவரதும் அவா.
அல்லாஹ் இந்த அவாவை நிறைவு செய்வானாக.
12
December 23, 2007 12:21
மிக அருமையான (கட்டுரை என்பதைவிட) மன ஆதங்கம், ஒவ்வொரு எழுத்துக்களிலும் சகோதரி உம்மு ஹிபா தற்கால எதார்த்தத்தை எடுத்து வைத்து மிளிர்கிறார்கள். சகோதரிக்கும் இத்திறமையை வெளிக்கொணர்ந்த சத்தியமார்க்கம்.com -க்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.
கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெறும் அளவிற்கு நமது இயக்கங்களின் வெறி சென்றுவிட்டதை என்ன சொல்ல?.
//யாரையும் காயப்படுத்த எழுதப்பட்டதல்ல இக்கட்டுரை. ஒன்றுபடாமல் இஸ்லாமியச் சமூகம் சிதறுண்டுப் போவதைத் தாங்க முடியாத அல்லாஹ்வின் ஓர் அடியாளின் மன வேதனை மட்டுமே இது!//
இதில் காயப்படுத்துவதற்கு ஒன்றுமில்லையே சகோதரி. உண்மையை உறக்கச் சொல்லியிருக்கிறீர்கள் அவ்வளவுதான்.
இயங்கங்களால் பிரிந்து நிற்கும் சகோதரர்கள் அல்லாஹ்விற்க்காக மீண்டும் இணைந்தால் மிகவும் சந்தோஷம்.
நபி வழியைப் பின்பற்றுவோர் மட்டுமே சொர்க்கம் புக இயலும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு, நபியின் வழியில் இல்லாத சகோதரர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் இப்பண்பில் இருந்து விலகி நமது சமுதாய மக்களை வெற்றிப்பாதையில் இட்டுச்செல்ல ரஹ்மான் நம் சமுதாயத்தலைவர்களுக்கு அருள்பாலிப்பானாக ஆமீன்.
13
December 23, 2007 14:09
இதன் ஒரு பிரதியை இயக்கங்களின் தலைமைகட்கு அனுப்பி வையுங்கள், இனியாவது 'ரோஷம்' வரட்டும்
14
December 23, 2007 14:37
இஸ்லாமிய வாழ்க்கை பாடத்தை கட்டுரையாக தந்த சகோதரி உம்மு ஹிபா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
அருமையான ஒருசில வரிகளை நினைவுபடுத்த விரும்புகிறேன்
\இஸ்லாமியப் பாலர் பாடங்களை ஆசிரியர்களுக்கு நினைவு படுத்த வேண்டியுள்ளதே என்று மனம் சங்கடப்படுகிறது!//
\எதிரிக்கு எதிரி நண்பன் என்ற எண்ணத்துடன் கூட்டுச் சேராமல், சமுதாயப் பணிகளுக்காக ஒருவருக்கொருவர் கைகோர்க்க வேண்டும்.
'அல்லாஹ் தஆலா உங்கள் உடலையோ, தோற்றத்தையோ பார்ப்பதில்லை. மாறாக உங்களது உள்ளங்களையும் செயற்பாடுகளையும் பார்க்கிறான்' (அபூஹுரைரா (ரலி), புகாரி).//
சகோதரி அவர்களின் எண்ணஓட்டத்தை நிறைவேற்றி வைப்பானாக!
15
December 24, 2007 12:06
மென்மையாகச் சொல்லப் பட்டுள்ள வலிமையான கருத்துகள்!
சகோதரியின் ஆசை நிறைவேறினால் தமிழகம் ஒரு புது எழுச்சியைக் காணும்.
16
December 24, 2007 12:07
//சீரழிவிலிருந்து இஸ்லாமியச் சமூகத்தைக் காப்பாற்றத்தானே 'லா இலாஹா இல்லல்லாஹ்' -வை அடித்தளமாகக் கொண்டு மேம்பட்ட இஸ்லாமியக் கட்டடத்தை எழுப்பிட முயன்றார்கள்?. இன்றையச் சமூகத்தின் ஒற்றுமையில்லாதச் சீரழிந்தப் போக்கை மாற்றுவது யார்?. அதற்காக உழைக்க முன்வருவது யார்?. 'இவர்கள் செய்யத் தவறும் பொழுது இவர்களை அழித்து விட்டு வேறோர் உன்னத, நடுநிலையான சமூகத்தைக் கொண்டுவருவதாகக்' கூறும் இறை வசனம் உண்மையாகக் காத்திருக்கிறார்களா?. இயக்கவெறி இஸ்லாத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது.//
இயக்கம் அமைய 'இஸ்லாத்தை வளர்த்தல்' காரணமாகக் கூறப்பட்டது.
ஆனால் நிலைமையோ இயக்கம் வளர இஸ்லாம் பயன்படுத்தப்படுகிறது.
சகோதரியின் ஒவ்வொரு வார்த்தைகளும் நெஞ்சில் தைத்து இறங்குபவை - நெஞ்சம் இருப்பவர்களுக்கு.
நல்ல மாற்றம் வர இறைஞ்சுவோம்.
17
December 24, 2007 12:12
assalamu alaikkum(warahu)
otrumaien avaciathai athagathodu eluthiirukkerkal,samuthayam sitharundu kidakkirathu ontrupadutha vantha thalaivarkalo 2pattu nirkintranar allah anaivarkalukkum nal vali katuvanaha alhamdulillahi rabbil alameen..wassalam
18
December 26, 2007 06:13
ஆங்கிலத்தில் தட்டச்சும் சகோதர, சகோதரியரின் பார்வைக்கு:
http://www.satyamargam.com/index.php?option=com_wrapper&Itemid=161
நமது தளத்திலுள்ள மேற்காணும் சுட்டிக்குச் சென்று, அல்லது தளத்தின் இடப்புறம் அடுக்கப் பட்டுள்ள பலகைகளில் 'Tamil Typing'இல் சொடுக்கித் தமிழில் தட்டச்சலாம்.
நன்றி!
19
December 26, 2007 07:29
இயக்கங்களின் மூலம் சமுதாயத்தைக் கூறுபோடும் தலைவர்களும் தொண்டர்களும் தங்களின் செயல்பாடுகளைச் சீர்தூக்கிப் பார்க்க வைக்கத் தூண்டும் ஓர் இஸ்லாமிய அழைப்பு.
ஆம், இஸ்லாமிய அழைப்பு என்றே கூறத் தோன்றுகிறது. அவ்வளவு அருமையாகத் தலைவர்கள்/வழிகாட்டிகள் செய்யும் அதி பயங்கரத் தவறுகளை அன்பான வார்த்தைகளால் சுட்டிக்காட்டி ஆதங்கத்துடன் ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கிறார் சகோதரி.
சகோதரியின் எண்ண ஓட்டமே தற்போதையச் சமுதாயத்தின் எண்ண ஓட்டமும் என பொங்கி வந்திருக்கும் பின்னூட்டக் கருத்துக்களும் பறை சாற்றுகின்றன.
இனி இயக்கத்தலைமைகளுக்கு வேறு வழியில்லை.
சமுதாயம் மிகச் சரியான வழியிலேயே சிந்திக்கத் தலைப்பட்டு விட்டதன் அடையாளம் இது. இனியும் செம்மறியாட்டுக் கூட்டங்களாக இச்சமுதாயத்தை ஓட்டிச் செல்வது கடினம் என்பதைத் தலைமைகள் புரிந்து கொண்டு உடனடியாகத் தங்களின் நிலைபாடுகளை மறுசீரமைப்புச் செய்து கொள்ளட்டும்.
இல்லையேல் காலத்தின் ஓட்டத்தில் அவை கரைந்து போகும் என்பது உறுதி.
அன்புடன்
இறை நேசன்.
20
December 27, 2007 07:53
தகுதிவாய்ந்த கட்டுரை!(Deserved Article) - அல்ஹம்துலில்லாஹ்.
//'ஒவ்வொருவரும் தனது பொறுப்பைக் குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவர்...' (அனஸ்(ரலி), இப்னு ஹிப்பான்). //
//'தனது சகோதர முஸ்லிமை இழிவுபடுத்துவதே ஒருவர் மோசமானவர் என்பதற்குப் போதிய சான்றாகும்' (அபூஹுரைரா( ரலி), புகாரி).//
//'எவர் மென்மையை இழந்தாரோ, அவர் நன்மையை இழந்தார்.' (ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி), முஸ்லிம்).//
மேலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அனைத்து குர்ஆன்-ஹதீஸ் வசனங்களும்.. மிகப் பொருத்தமாக தம்மை சமுதாயத்தலைவர்களாக கருதிக் கொண்டிருப்பவர்களுக்கும், ஏனையோருக்கும் என்றென்றும் நினைவில் நிறுத்தவேண்டியவை.
21
December 27, 2007 08:46
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சமுதாய மற்றும் இயக்கங்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் கட்டுரையாகும். சகோதரிக்கு பாராட்டுக்கள். சுட்டிக்காட்டப்படவேண்டிய விசயம்.
ஒவ்வொரு முஸ்லிமும் தன் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டியவனாவான். குடும்பத்தைப் பிரிந்து விட்டு மார்க்கத்திற்காக மாதங்கள் பல, ஊர் ஊராகச் செல்பவர்களும் தவறு சுட்டிக்காட்டப்படும் போது, அதைத் திருத்திக் கொண்டு, நபி(ஸல்) அவர்கள் வழிமுறைப்படி வாழவேண்டும். மார்க்கத்தின் பெயரைச் சொல்லி, குடும்பப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது.
மார்க்கத்திற்காக குடும்பத்தைவிட்டுச் செல்பவர்கள், குடும்பப்பொறுப்பை நிச்சயமாக தட்டிக்கழிப்பதில்லை. மார்க்கத்திற்காக அவர்கள் வெளிக்கிளம்பி செல்லும்பொழுது குடும்பத்தின் அனைத்துவிசயங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து முன்ஏற்பாடு செய்துவிட்டுத்தான் செல்கிறார்கள். மீண்டும் திரும்பவந்தும் குடும்பசூழ்நிலையோடுதான் மார்க்கப்பணி செய்துவருகிறார்கள்.
தாங்களும் இன்ஷாஅல்லாஹ் அந்தஅழைப்புப்பணியில் செல்லும்பொழுது தங்களுடன் கூடவரும் அப்பணியாளர்கள் குடும்பவிசயத்தில் எவ்வளவு பொறுப்புடன் செயல்படுகிறார்கள் என்பது விளங்கும்.
சகோதரன்
கனி
22
December 27, 2007 21:06
அல்ஹம்துலில்லாஹ்!
பெரும்பாலான சகோதர, சகோதரிகளின் மனதிலுள்ள வருத்தத்தை சகோதரி சித்தாரா அவர்கள் கட்டுரையாகத் திரட்டியுள்ளார்.
சத்தியமார்க்கம் சைட்டினர் கண்டிப்பாக இதை - ஒருவர் இரைச்சியை மற்றவர் தின்னும் - இயக்கத்தவர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
23
December 29, 2007 13:28
சமுதாயம் சிந்திக்க வேண்டிய அருமையான கருத்துக்களை உள்ளடக்கிய நல்ல கட்டுரை. சத்தியமார்க்கம் தளத்தினர் இதனை நிச்சயம் இயக்கத் தலைவர்களுக்கும் சமுதாய நலன் விரும்பிகளுக்கும் அனுப்பி வைப்பார்கள் என நம்புகின்றேன்.
அவர்கள் தரும் பதிலையும் இங்கு வெளியிட்டால் சமுதாய ஒற்றுமை விஷயத்தில் அவர்கள் என்ன கருத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதை ஒற்றுமையை விரும்பும் என்னைப் போன்ற சமுதாய மக்கள் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
சத்தியமார்க்கம் தளத்தினர் செய்வார்களா?
24
December 31, 2007 09:39
தௌஹீதின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்களை நன்றாக தோலுரிக்கும் கட்டுரை.
உபதேசம் ஊருக்கு மட்டும் தானா? என கேட்கும்,
//'தனது சகோதர முஸ்லிமை இழிவுபடுத்துவதே ஒருவர் மோசமானவர் என்பதற்குப் போதிய சான்றாகும்' (அபூஹுரைரா( ரலி), புகாரி). ஆக, எந்த முஸ்லிமையும் இன்னொரு முஸ்லிம் இழிவாகக் கருதக்கூடாது; கருதக் கூடாது என்பது மட்டுமல்ல மற்றவர்கள் முன் அவ்வாறு இழிவுபடுத்தும் வகையில் எவ்வித நடவடிக்கையும் கூட மேற்கொண்டு விடக்கூடாது. எத்தனையோ ஹதீஸுகளை ஆய்வு செய்த அறிஞர் பெருமக்களுக்கு இந்த ஹதீஸும் தெரியும். பயான்கள் பேசப்படுவதற்கு அல்ல; பின்பற்றபடுவதற்காகதானே?. கற்றதையும் மற்றவர்களுக்குப் போதிப்பதையும் செயல்பாட்டில் கொண்டு வந்தால் மிக மகிழ்ச்சியாக இருக்கும்!//
மேற்கண்ட வரிகள் உணர்வுள்ள ஒவ்வொரு முஸ்லிமையும் சிந்திக்க வைக்கும். உபதேசம் செய்பவர்கள் திருந்துகின்றார்களோ இல்லையோ அவர்களின் உபதேசத்தைக் கேட்டு ஆஹா ஓஹோ என ஆட்டுமந்தைகளாக தலையாட்டிச் செல்லும் தொண்டர்களில் சிலபேரையாவது தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்ய வைக்கும்.
ஒற்றுமை, ஒற்றுமை என முழங்கி சமுதாயத்தைப் பிரித்துக் கொண்டு செல்பவர்களிடையே எவ்வகையில் அந்த ஒற்றுமையை பிரச்சினை இல்லாமல் கொண்டு வரலாம் என பல்வேறு உதாரணங்களுடன் சகோதரி விளக்கி இருக்கும் விதம் அருமையானது.
அதிலும் குறிப்பாக,
//யார்? என்ற கேள்விக்கு 'நான் தவ்ஹீத்வாதி', 'நான் ஷாஃபி', 'நான் ஹனஃபி' என அறிமுகப் படுத்தப்படுவதைவிட 'நான் முஸ்லிம்' என்றே தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள வேண்டும்.//
மேற்கண்ட வழிமுறையை ஒவ்வொருவரும் பின்பற்ற தலைபட்டால் நிச்சயம் சமுதாயம் ஒற்றுமையின் அருமையினை ருசிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
சகோதரிக்கும் இதனை வெளிக்கொணர்ந்த இத்தளத்தினருக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்!
உங்களின் நன்முயற்சியை அல்லாஹ் வெற்றிபெறச் செய்வானாக.
உங்களின் இவ்வரியப் பணியில் என்னையும் இணைத்துக் கொள்ள விரும்புகின்றேன்.
25
December 31, 2007 09:59
//ஒவ்வொரு இயக்கமும் மற்ற இயக்கங்களுடனான நல்லுறவை வளர்க்கவும் பரஸ்பரப் புரிந்துணர்வுடன் செயல்படத் தங்களுக்குள் மாதாந்திரக் கூட்டங்கள் நடத்திக் கொள்ளலாம்; கலந்தாலோசனைகள் மூலம் சமூகத்தின் பொதுப் பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்துப் பாடுபடலாம்; இணைந்து போராடலாம்; ஒருவர் மற்றவர்கள் பணிகளைப் பாராட்டி, ஊக்குவிக்கலாம்; தவறுகள் இருந்தால் கண்ணியமான முறையில், மனதை நோகடிக்காமல் தனிப்பட்ட முறையில் சுட்டிக் காட்டலாம். //
//பிரிந்து நிற்கும் சகோதரர்கள் பெருநாட்களில் வாழ்த்து பரிமாறிக் கொள்ளலாம்; நலம் விசாரிக்கலாம்; சகோதரத்துவத்தை நிலைநிறுத்தலாம்; ஒரே மாதிரியான சமுதாயக் களப்பணிகளில் ஒன்றுபடலாம். உலகில் மனிதர்களது பாராட்டை விட, மறுமையில் கிடைக்கப் போகும் அல்லாஹ் தஆலாவின் உவப்பை ஆசை வைக்க வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற எண்ணத்துடன் கூட்டுச் சேராமல், சமுதாயப் பணிகளுக்காக ஒருவருக்கொருவர் கைகோர்க்க வேண்டும்//.
ஆழ்ந்த சிந்தனையின் விளைவாக வந்த வலிமையான கருத்து இது.
'நாங்க அவய்ங்க மேடைலெ பேச மாட்டோம்; அவய்ங்களையும் எங்க மேடைலெ பேச அனுமதிக்க மாட்டோம்.'
' ஏங்க?'
' அவய்ங்க கொள்க வேறெ; எங்க கொள்க வேறெ.'
'ஒங்க கொள்க என்ன?'
' குர் ஆன் ஹதீஸ்'
'அவங்க கொள்க என்ன?'
'அது.. வந்து.. அவய்ங்களும் குர் ஆன் ஹதீஸ் தான் சொல்றாய்ங்க'
'பின்னெ என்ன பிரச்னெ?'
சிக்கல் என்ன, எங்கே என்று ஆய்ந்தால், அது தனி மனித ஆணவம் (EGO) என்பது தெள்ளெனப் புலப்படும்.
சகோதரியின் ஆக்கப்பூர்வமான கட்டுரை, சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் சீரிய முயற்சியின் முதல் படியாகட்டும்.
//எந்தச் சகோதரர்கள் மூலம் வல்ல நாயன் இஸ்லாத்தின் உயிர் மூச்சான ஓரிறைக் கொள்கையைத் தமிழக முஸ்லிம்களில் பலருக்கும் உறுதிபடப் பின்பற்ற வழி வகுத்தானோ,
எந்தச் சகோதரர்கள் ஆற்றிய சொற்பொழிவுகள் மூலம் பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை, மன்னித்தல், கோபம் தவிர்த்தல் ஆகிய இஸ்லாத்தின் அறிவுரையை ஆழப்பதித்தானோ,
திருமறைக் குர்ஆனின் உன்னதத்தையும் அதை ஊன்றிப் படிக்க வேண்டிய அவசியத்தையும் ஆசையையும் மனதில் விதைத்தானோ,
அந்தச் சகோதரர்களிடம் இந்தச் சகிப்புத்தன்மையும் மன்னிக்கும் மனப்பாங்கும் ஒற்றுமையும் ஏற்படாதது ஏன்?. சகோதர முஸ்லிமுடன் உறவாடாமல், பகைமை மனப்பான்மையினால் - இயக்க வெறியினால், ஒன்றுபட்டுச் செயாலாற்றாமல், முகம் பார்த்துப் பேசாமல், ஏன் - ஸலாமுக்குக் கூட மறுமொழி கூறாமல் வெறுப்பு காட்டுவது இஸ்லாம் கற்றுத் தந்ததா?//
தாங்களும் பிரிந்து சமுதாயத்தையும் பிரித்து வைத்துள்ள ஓரிறைக் கொள்கை இயக்கங்களின் தலைவர்கள் அனைவர்க்கும் கட்டாயம் அனுப்பப்பட வேண்டிய ஆவணம் இது.
கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்.
26
January 03, 2008 15:22
மாஷா அல்லாஹ்...
தமிழக முஸ்லிம் மக்கள் அனைவரின் எண்ணங்களை ஒரே ஒரு கட்டுரையின் மூலம் பிரதிபலித்துள்ள சகோதரி உம்மு ஹிபா அவர்களின் சமூக சிந்தனை மென்மேலும் வளர்ந்து அவர்கள் சமுதாய கடமைகளை நிலைநிறுத்துவதற்கு வல்ல ரஹ்மான் அருள்புரியட்டும். மேலும் இந்த கட்டுரையைப் படிக்கின்ற ஒவ்வொரு முஸ்லிம் சகோதர, சகோதரிகளும் நம் சமுதாய ஒற்றுமைக்கு எந்தெந்த வழிகளில் உதவிடமுடியுமோ அந்தந்த வழிகளில் முனைந்து செயல்பட முன்வர வேண்டும்.
நாமும் சகோதரி தனது கட்டுரையில் தெளிவு படுத்தியதுபோன்று பகைமை மறந்து ஒற்றுமையாக வாழவும் அல்லாஹ் மற்றும் அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டிதந்த வழிமுறைகளைப் பின்பற்றி நடக்கவும் வல்ல ரஹ்மான் நமக்கு அருள்புரியட்டும். ஆமீன்...
27
January 12, 2008 13:45
அஸ்ஸலாமு அலைக்கும்
//'பின்னெ என்ன பிரச்னெ?'
சிக்கல் என்ன, எங்கே என்று ஆய்ந்தால், அது தனி மனித ஆணவம் (EGO) என்பது தெள்ளெனப் புலப்படும்.
சகோதரியின் ஆக்கப்பூர்வமான கட்டுரை, சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் சீரிய முயற்சியின் முதல் படியாகட்டும்.//
அன்பு சகோதரியின் ஆக்கத்தின் பின்னூட்டத்தில் நாஞிலன் அவர்கள் குறிப்பிட்ட வாசகங்கள் குறிப்பாக
//சிக்கல் என்ன, எங்கே என்று ஆய்ந்தால், அது தனி மனித ஆணவம் (EGO) என்பது தெள்ளெனப் புலப்படும்.//
மும்பையில் அண்மையில் நடந்த பீஸ் மாநாட்டில் ஒரு பேச்சாளர் இந்த EGO என்பதற்கு கொடுத்த விரிவாக்கத்தை கவனத்திற்கு கொண்டு வர ஆசைப்படுகிறேன்.
EGO is Edging God Out
(இறைவனை புறக்கணித்தல் )
இறைவனை மறக்கச்செய்து இறைவனை புறக்கணிக்கச் செய்யும் இந்த EGO வை புறக்கணித்து வாழ முயலாதவரை சமுதாயத்தில் சுமூகம் ஒற்றுமை அன்பு அமைதி நிலவுவது அரிது என்பதை அனைவரும் குறிப்பாக முஸ்லிம்களின் தலைவர்கள் உணர்ந்து உணர்த்தி ஈடேற்றம் பெற அல்லாஹ் அருள் புரியவேண்டும்.
மனித நேயமும் அமைதியும் உலகில் என்றும் மலர வேண்டும் என்று நாடும் சகோதரன்.
28
January 13, 2008 05:25
Where can I download a copy of Bukhari and other hadith books in the Tamil Language?
29
February 17, 2008 05:20
நண்பர் நஸீம் அவர்களுக்கு1 அஸ்சலாமு அலைக்கும். தங்களின் தேவைகளான புகாரி,முஸ்லிம் ஹதீஸ்களை தமிழில் பதிவிறக்கம் செய்ய எனது இளைய தளமான www.tamilislam.webs.com க்கு சென்று பதிவிறக்கம் செய்யலாம். உங்களது கருத்துக்களையும் Feed back பக்கத்தில் தவறாமல் பதிவு செய்யவும். நன்றி.
30
February 22, 2008 13:11
//www.tamilislam.webs.com//
இத்தளத்தில் முஸ்லிமின் தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையே. தேர்ந்தெடுக்கப்பட்ட 500 ஹதீஸ்களின் மொழிபெயர்ப்பு மட்டும் தான் காணப்படுகின்றது. அதுவும் ஏற்கெனவே தமிழ்முஸ்லிம் என்ற தளத்தில் வெளியிடப்பட்டதைப் பிரதி எடுத்து ஒவ்வொரு பக்கங்களிலும் தனது பெயரைப் பதித்து வேறு எவரும் எடிட் செய்து விடா வண்ணம் பாஸ்வேர்ட் போட்டு வைத்துள்ளார்.
திருக்குர்-ஆனையும் ஹதீஸையும் எவரும் தங்களின் சுய இலாபத்திற்காகவோ விளம்பரத்திற்காகவோ பயன்படுத்திக் கொள்வது சரியான செயல்பாடல்ல.
சகோதரர் சுல்தான் அவர்கள் உடனடியாக இக்குறைகளைச் சீர் செய்து அனைவரும் பயன்படுத்தும் வகையிலும் மறு பிரதிகள் எடுக்கும் வகையிலும் அதனை வெளியிட வேண்டும்.
அல் அமீன்
31
June 12, 2008 08:16
சத்தியமார்க்கம் தளத்தினரே, இக்கட்டுரையைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து நின்று சமுதாயத்தைப் பலவீனப்படுத்தும் நமது சமுதாய இயக்கங்களுக்கு அனுப்பி கொடுத்தீர்களா?. அவர்கள் என்ன பதிலைத் தந்தனர்?
ஒற்றுமை குறித்து நமது சமுதாய இயக்கங்களின் நிலைபாட்டினை அறிய ஆவலாக உள்ளோம். குறைந்தப் பட்சம் இக்கட்டுரை குறித்த அவர்களின் கருத்துகளையாவது. அவர்கள் தந்தப் பதில்களை வெளியிடுவீர்களா?
அல் அமீன்
32
June 12, 2008 08:19
கருத்து எழுதுக :
|