சத்தியமார்க்கம்.காம்

நான் குதிருக்குள் இல்லை! print Email
ஏடு-இட்டோர்-இயல் - தலையங்கம்
வெள்ளி, 03 ஏப்ரல் 2009 07:07

ஜனநாயகம், மதச்சார்பின்மை இவ்விரண்டும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரு பெரும் தூண்களாகும். "சட்டத்தின் முன் அனைவரும் சமம்; அனைவருக்கும் அவரவர்களின் மத நம்பிக்கைகளின்படி செயல்பட்டுக் கொள்வது நமது ஜனநாயகம் வழங்கும் அடிப்படை உரிமையாகும்" - உலக அளவில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்புடன் வைக்கும் சட்டத்தின் மிக முக்கிய நிபந்தனைகளான இவை இரண்டும் துரதிஷ்டவசத்தால் பெரும்பாலான சமயங்களில் வெறும் ஏட்டில் மட்டும் வைத்து அழகு பார்க்கும் வரிகளாக மாறிப்போகின்றன.

அனைவருக்கும் சமமான நீதி நடைமுறை உறுதிப் படுத்தப்படுவதே ஜனநாயகம் தழைப்பதற்கும் மக்கள் அமைதியாக வாழ்வதற்குமான அடிப்படை காரணிகளாகும். ஆனால், நம் நாட்டைப் பொருத்தவரை நீதி என்பது பணம், பதவியுடையவர்களுக்கு ஒரு விதமாகவும் ஏழைகளுக்கு வேறு விதமாகவுமே உள்ளது. அதனாலேயே காஞ்சி காம கோடி, அத்வானி, மோடி, ஜெயலலிதா, ஹர்ஷத் மேத்தா போன்ற இன்னபிற கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அராஜகம், மோசடி போன்றவற்றில் ஊறிப்போனவர்கள் உள்ளேயும் வெளியேயும் சுதந்திரமாக எவ்வித பயமும் இன்றி வலம்வருகின்றனர். அதேவேளை, சின்னஞ்சிறு குற்றச்செயல்களில் ஈடுபடும் சாதாரணமானவர்கள் மீது மட்டும் சட்டம் தனது முழுவலிமையைப் பிரயோகிக்கின்றது.

சமநீதி விஷயத்தில் வலியவன், எளியவன் என்ற பாரபட்சம் பார்க்கும் நீதி, முஸ்லிம்கள் என்று வரும் பொழுது அத்தகைய கருணை வாசலையும்கூட அடைத்து விடுகின்றது.

அநியாயம் செய்திருந்தாலும் வலியவனுக்குச் சாதகமாகவும் அநீதி இழைக்கப் பட்டிருந்தாலும் எளியவனுக்குப் பாதகமாகவும் வளைந்து கொடுக்கும் இத்தகையச் செயலைளை "நீதி தேவன் மயக்கம்" என்ற பெயரில் அறிஞர் அண்ணா ஒரு நாடகம் எழுதினார். 1954ஆம் ஆண்டு மேடையில் அரங்கேறிய அவரது நாடகம் இப்போது(ம்) அரங்கேறிக் கொண்டிருப்பது நமது நீதிமன்றங்களில்!

இந்திய விமானப்படை ஊழியர் அன்ஸாரீ அஃப்தாப் அஹ்மது என்பவர் சீக்கிய ஊழியர்களுக்கு வழங்கப் பட்டு நடைமுறையிலிருக்கும் தாடி வளர்த்துக் கொள்ளும் மத உரிமையைத் தனக்கும் அளிக்க வேண்டும் எனக் கேட்டுத் தொடர்ந்த வழக்கில், இந்திய விமானப்படை வழிகாட்டு நெறிமுறைகள் 2003இன்படி "சீக்கியர்களுக்கு வழங்கும் உரிமையை 2002ஆம் ஆண்டுக்குப்பிறகு விமானப்படைக்குத் தேர்வு செய்யப் பட்ட முஸ்லிம்களுக்கு வழங்க முடியாது" என்று கடந்த ஆண்டு பஞ்சாப்/ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மற்றவர்க்கு வளைந்தும் முஸ்லிம் என்றால் நிமிர்ந்தும் நிற்கும் சட்டம் இந்திய விமானப்படைக்கு மட்டும் சொந்தமானதன்று.

மத்தியப்பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்திலுள்ள சிரஞ்ச் நகரில் இயங்கி வரும் 'நிர்மலா கான்வெண்ட்' என்ற பள்ளியில் தொடக்கம் முதல் பத்தாம் வகுப்புவரை முஹம்மது ஸலீம் என்ற முஸ்லிம் மாணவர் கல்வி பயின்று வந்தார். பத்தாம் வகுப்புப் படிக்கும்போது அவருக்குத் தாடி வளர்ந்து விட்டது. "தாடியை மழிக்காமல் பள்ளிக்கு வருவதாக"க் கூறிப் பள்ளியின் நிர்வாகி ப்ரின்ஸிபால் தெரஸா மார்ட்டின், மாணவர் ஸாலிமைப் பள்ளியிலிருந்து நீக்கினார். அதை எதிர்த்து, தன்னைத் "தாடி வளர்த்துக் கொள்ளப் பள்ளி அனுமதிக்க வேண்டும்" எனக் கோரி முதலில் பள்ளிக்கு முறைப்படி விண்ணப்பித்தார். பள்ளி நிர்வாகம் மறுதலித்துவிடவே, உயர்நீதி மன்றத்தில் மாணவர் ஸலீம் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார்.

"முழுமையாக மழித்துக் கொண்டு வரவேண்டும்" என்ற பள்ளிச் சட்ட-திட்டத்தினைத் தளர்த்தக் கோரி ஸலீம் சமர்ப்பித்த மனு உயர்நீதி மன்றத்தில் கடந்த 30.12.2008இல் தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து விடாப் பிடியாக, "தாடி வளர்ப்பது என்னுடைய மத உரிமை. மதசார்பற்ற இந்தியாவில் வாழும் குடிமகனுக்கு (சட்டப் பிரிவு 25இன்படி) தன் மத நம்பிக்கைப்படி வாழ்வதற்கான உரிமையை மறுக்கக் கூடாது. எனவே தாடி வளர்த்துக் கொண்டு பள்ளிக்கு வருவதற்கு எனக்கு அனுமதி வழங்க வேண்டும்" எனக் கோரி, உச்சநீதி மன்றத்துக்கு வழக்கைக் கொண்டு சென்றார்.

ஸலீம் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி இரவீந்திரன் தலைமையிலான அமர்வு நீதிமன்றம் விசாரித்தது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு, மாணவர் ஸாலிமுடைய கோரிக்கையை, அவர் பயிலும் பள்ளியின் சட்ட-திட்டங்களை மட்டும் காரணம் காட்டி மறுதலித்திருந்தால் பிரச்சினை பெரிதாகி இருக்காது.

ஆனால், சட்டம் கற்றுத் தேர்ந்ததாகச் சொல்லப் படும் ஒரு நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜு என்பவர், "தாடி வைப்பதும் பர்தா அணிவதும் தாலிபானிசமாகும்" என்ற காரணம் கூறி கடந்த திங்கட்கிழமை (30.3.2009) வழக்கைத் தள்ளுபடி செய்து, தன் அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார். சுமார் 1400 ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கும் இஸ்லாமிய நடைமுறைக்கும் வெறும் 30 ஆண்டுகால வரலாறுடைய தாலிபானுக்கும் என்ன சம்பந்தம்? நீதிபதி மார்கண்டேய கட்ஜுவிற்கே வெளிச்சம்!

தாலிபான் என்ற பெயரே அறியப் படாத ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டில் முஸ்லிம் ஆண்கள் தாடி வளர்த்தும் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்தும் வருகின்றனர். தாடி இல்லாத ஆண் சீக்கியர் இல்லை என்னும் அளவுக்கு சீக்கிய ஆண்கள் தாடியோடுதான் இருப்பர். தாடி வளர்த்திருப்பவரெல்லாம் தாலிபான் அமைப்பின் உறுப்பினரா? நம் பிரதமரை நீதிபதி கட்ஜு ரொம்பத்தான் தாக்குகிறார்!

"தாலிபான்களை நம் நாட்டில் அனுமதிக்க முடியாது" என்று கூறியதோடு, "நாளைக்கு ஒரு (முஸ்லிம்) மாணவி, பர்தா அணிந்து கொண்டு பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கலாம். நாம் அதை அனுமதிக்க முடியுமா?" என்று நீதிபதி கட்ஜு அறிவு(?)ப்பூர்வமான ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

"நாட்டின் மதசார்பற்ற நிலைபாட்டைப் பயன் படுத்திக் கொண்டு இந்தியாவைத் தாலிபான் மயமாக்குவதை அனுமதிக்க இயலாது" எனவும் நீதிமன்றத்துக்குள்ளேயே நீதிபதி ஜோக்கடித்திருக்கிறார்.

"சீக்கியர்களுக்குத் தாடி வளர்த்துக் கொள்ளவும் தலைப்பாகை அணியவும் அனுமதி இருக்கும்போது, என்னை மட்டும் தாடியை மழிக்க நிர்பந்திப்பது பள்ளி நிர்வாகத்தின் தெளிவான இரட்டை நிலைபாடு" என ஸலீம் வாதித்தார்.

ஆனால் பயனில்லை. "இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 30ஆம் பிரிவின்படி சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள், தனியாக சட்டம் உருவாக்கிக் கொள்வதற்கு அனுமதியுள்ளது. அவற்றைப் பின்பற்றுவதற்கு இயலாது எனில், ஸலீம் வேறு ஒரு பள்ளியைத் தேர்வு செய்து கொள்ளட்டும்" எனவும் நீதிபதி அறிவுரை கூறியுள்ளார்.

இந்நாட்டில் ஒரு சமுதாயத்திற்கு அனுமதிக்கப்படும் நீதி, அதே வடிவில் பின்பற்றுவதற்கு முஸ்லிம்கள் எனில் மறுக்கப்படுகிறது. இது "இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் மத அடிப்படைகளைப் பின்பற்றுவதற்கான உரிமைகளுக்கு" முரணான நிலைபாடு எனில், வழக்கிற்குத் தொடர்பில்லாத வகையில் இஸ்லாமிய அடிப்படைகளைச் சம்பந்தமில்லாத தனிப்பட்ட குழுக்களோடு தொடர்பு படுத்தி இழிவுபடுத்துவது இந்திய நீதித்துறைக்கு அவமானத்தைப் பெற்றுத்தரும் செயலாகும். அனைவரையும் சமமான கண்ணோட்டத்தோடு அணுகவேண்டிய, நாட்டின் உன்னத பீடத்தில் அமர்ந்திருக்கும் பொறுப்பான அதிகாரியின் சட்டமீறலுமாகும்.

"தாடி வளர்ப்பதும் பர்தா அணிவதும் தாலிபானிசமாகும்; இந்தியாவில் தாலிபானிஸம் வளர்வதை அனுமதிக்கமுடியாது" என்று உண்மையைப் பொய்களுடன் கலந்து உண்மையைப் பொய்யாக்குவதையும் பொய்யை உண்மையாக்குவதையும் அதனை வைத்து சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதையும் தங்களது பாணியாகக் கொண்டுள்ள ஹிந்துத்துவத்தின் ஒரு மோடி, அத்வானி வகையறாக்களின் வாயிலிருந்து இத்தகைய சொற்கள் உதிர்ந்திருந்தால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால், அதுவே நாட்டின் உன்னத பீடத்தை அலங்கரிக்கும் ஒரு நீதிபதியின் வாயிலிருந்து வருவதென்றால்.....?

நீதிபதி கட்ஜுவின் அறியாமைக் கருத்துகளுக்கு எதிராகவும் நீதியின் இரட்டைமுக நிலைபாட்டிற்கு எதிராகவும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்திய நீதித்துறையின் மீது இப்பொழுதும் நம்பிக்கை இழக்காத முஸ்லிம்கள் என்ன செய்யலாம்? என்று சிந்தித்தோமெனில், நமக்குக் கிடைக்கும் விடை, நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் 'தாலிபான்' பேச்சை எதிர்த்து வழக்குத் தொடுக்கலாம் என்பதே.

"நான் ஒரு மதசார்பற்றவன்" என்று நீதிபதி கட்ஜு கூறிய தன்னிலை விளக்கத்தில் ஓர் உண்மை பொதிந்திருக்கிறது.

தலைப்பை இன்னொரு முறை படித்துக் கொள்ளவும்!

கருத்துக்கள் (9)add comment
0
Khaja:
இது சம நீதி இல்லை மனுநீதி. இதைதான் பெரியார் அன்றே சொன்னார் ' உச்சநீதிமன்றத்திலே நீதி கேட்பவர்களே தெரிந்து கொள்ளுங்கள்!!!! அது உச்சநீதிமன்றம் இல்லை உச்சிகுடுமிமன்றம்!!!' மார்கண்டேய கட்ஜு போன்ற உயர்ஜாதி இந்துக்களின் கட்ட பஞ்சாயத்து கூடாரம். இந்த எழவு சனநாயககத்தின் நீதித்துறை தூண்கள் என்று மார்தட்டுபவர்கள், தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற மமதையிலே பேசுகிறார்கள், இவர்களையெல்லாம் மும்பை மாணவிகள் செருப்பால் அடித்ததுபோல் அடிக்க வேண்டும். இந்த மக்கள் சனநாயகம் என்ற போலி முகம் அதன் நிஜத்தை வெளிகாட்டுகிறது. சனநாயகதிலே பெரும்பான்மை மக்களின் எண்ணம்தான் அரசாங்கத்தின் எண்ணமாக மாறும். அதைத்தான் நாம் மேலை நாடுகளிலே கண்கூடாக பார்க்கிறோம். ஓரினசேர்க்கை என்பது 1980 களிலே நோயாக பார்க்கப்பட்டது போய் இப்போது அதனை எதிர்பவர்கள் மனநோய் உடையவராக பார்க்கப்படுகின்றனர், ஏனென்றால் இப்போது ஓரினசேர்க்கை பெரும்பான்மை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது, அதனால் சனநாயக அரசாங்கமும் அதனை ஏற்றுக்கொண்டுவிட்டது. இதன் விளைவாக நாம் நித்தம் ஒரு ஓரினசேர்க்கை திருமணத்தை தினசரிகளிலே படிக்கின்றோம். அமெரிக்க ஏகாதிபத்தியம் தன் மீடியாக்களின் மூலம் மக்களிடம் ஏற்படுத்திய மூளைச்சலவையின் விளைவை பார்க்கின்றோம், எபபடியன்றால் ஒரு APEX Court இன் நீதிபதி கூட அதற்க்கு தப்பவில்லை.
1

April 03, 2009 10:47
0
இப்ராகீம்:
தாடி வைப்பது தாலிபானிஸமா? உச்சநீதிமன்ற கருத்துக்கு PFI எதிர்ப்பு முஸ்லிம்ககளின் மத உரிமையை தாலிபானிஸம் என்று உச்சநீதிமன்றம் சித்தரித்தது ஒரு சமூகத்தையே குற்றம் பிடிக்கும் கருத்து பாப்புலர் ஃப்ரண்ட் அதிர்ச்சி மத்தியபிரதேசத்திலுள்ள சிறுபான்மையின பள்ளியான நிர்மலா கான்வென்ட் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் முஸ்லிம் மாணவன் முஹம்மது சலீமை தாடி வைக்கக் கூடாது என தடுத்த பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து அந்த மாணவன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முஸ்லிம் சமுதாயத்தையும் சமூக உரிமைப் போரõளிகளையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரத்தை சீக்கிய மதத்தினர் அனுபவிக்கின்றனர். மற்ற மதத்தினரும் அனுபவிக்கின்றனர். இந்து மாணவர்கள் பொட்டு வைத்துக்கொண்டு பள்ளிக்கு வருகின்றனர். ஐயப்பபன் கோவிலுக்கு செல்ல நேர்ச்சை செய்திருக்கும் இந்து மாணவர்கள் மாலை அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். கிறிஸ்தவ மாணவர்கள் சிலுவை அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் மத உரிமையை மறுத்து தாடி வைக்கக் கூடாது, புர்கா அணியக் கூடாது என அனுமதி மறுப்பது மத ரீதியான பாகுபாடே ஆகும். உச்சநீதிமன்ற தீர்ப்பு முஸ்லிம்களின் மத நம்பிக்கையில் மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய அரசியல் சட்டம் உறுப்பு எண் 14 வழங்கியுள்ள சமஉரிமையை மறுப்பதாகவும் உள்ளது. தாடி வளர்ப்பது முஸ்லிம்களின் மத அடையாளம். முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கையான தாடியை தாலிபானிசம் என உச்சநீதிமன்றம் கூறியது இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளியாக சித்தரிக்கும் வகையில் உள்ளது என முஸ்லிம் சமூகம் கருதுகின்றது. வேதனையடைகின்றது.ஷாபானு வழக்கில் ஷரீஅத்தைப் பாதுகாக்க சட்டம் கொண்டுவந்தது போல் முஸ்லிம்களின் மத உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வந்து முஸ்லிம்களின் மத நம்பிக்கையை பாதுகாக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது. இவண் எம். முஹம்மது அலி ஜின்னா மாநிலத் தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
2

April 03, 2009 12:32
0
முஹம்மது:
முஸ்லிம்களுக்கு உச்சநீதிமன்றத்திலேயே நீதி கிடைக்கவில்லை எனும் போது மீண்டும் அ(ந்)நீதிமன்றத்திலேயே அந்த 'காவி கோட்டு' நீதிபதிக்கு எதிராய் வழக்கு தொடுப்பது என்பது கேலிக்கூத்து. வேறு எங்கு சென்றால் நமக்கு மறுக்கப்பட்ட நீதி கிடைக்கும் என்று சொன்னால் அநீதி இழைக்கப்பட்டவர்களை 'தவறான முடிவை' நோக்கி செல்லாமல் காப்பாற்றலாம். சத்தியமார்க்கம் வெளிச்சமிட்ட இந்த கொடுமை நம் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. நன்றி.
3

April 03, 2009 13:00
0
abdul azeez:
பொறுமையை மேற்கொள்ளவேண்டியதுதான். இறைவழியில் நடக்க இந்நாட்டில் இடம் வேண்டும் என்று வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக. இப்படி நமக்கு நடந்தால் தான் ஈமான் இன்னும் அதிகரிக்கிறது. மற்றொன்று. இயற்க்கை அழிவு சம்பந்தப்பட்ட சுனாமியோ நிலநடுக்கமோ,புயல் கற்றோ இந்த மாதிரியான இழப்புகளில் நாம் நம்மவர்களுக்கு மட்டுமே உடனடி உதவிகள் ஏற்பாடு செய்ய பழகிக் கொள்வோமாக. ரெட் க்றேசென்டை எதிர்பார்க்க முடியாது. இந்திய அரசையும் எதிர்பார்க்கமுடியாது. நம்மவர்களுக்கு உதவியது போக மீதமிருந்தால் மற்றவர்களுக்கு செய்யலாம் என்பது. இப்போதுள்ள இந்திய சட்டத்தின் பாரபட்ச போக்கை வைத்து நாம் நடந்துக் கொல்லனும். இன்னொன்று தாடி விஷயத்தையோ ! அல்லது முக்காடு சம்பந்தப்பட்டதில் மாணவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் சிறுபான்மை பள்ளியில் முஸ்லிம்கள் நடத்தும் பள்ளியில் நம்மவர்களை உடனடியாக சேர்த்துக்கொள்ள முன்வரவேண்டும். அதே முஸ்லிம்கள் நடத்தும் பள்ளியில் சிலுவை அணிந்து கிறிஸ்துவமானவர் வரக்கூடாது. மாலை அணிந்துக் கொண்டு ஹிந்து மாணவர் வரக்கூடாது. என்றும் அவர்கள் மாதிரி நாமும் நம் பள்ளிகளில் கடும் விதிமுறைகளை போடணும். இந்த மாதிரியான மடயன்கள் எல்லாம் நீதிபதியாக இருப்பதனால். இப்படி மாற்றி மாற்றி நாம் விதிமுறைகளை அமைத்துக்கொண்டால் பாம்பு தானாகவே பெட்டிக்குள் அடங்கிவிடும். மா சலாம். அப்துல் அசீஸ்.
4

April 03, 2009 21:35
0
Abdullah:
தமிழகத்திளுள்ள சமுதாயக்காவலர்கள் இதற்க்கு எதாவது செய்வார்களா?
5

April 05, 2009 06:05
0
Ferozkhan-Abudhabi:
ஜனநாயகத்தை பற்றி காண்டேகர் சொன்னார் “ நீங்கள் விரும்பும் தலைவரை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் உங்களை விரும்பும் தலைவரை தேர்ந்தெடுக்க முடியாது”. இது தான் ஜனநாயகம். Democracy is nothing but Hypocrisy. ஜனநாயகத்தை சுத்தப்படுத்த போகிறோம் என்று கிளம்பிய அப்துஸ் ஸமது ஸமதானியிலிருந்து மலேஷியாவின் அன்வர் இப்ராஹிம் வரை தோற்று தான் போயிருக்கிறார்கள். இத்தகைய சூழலில் எந்த அடிப்படையில் அனைத்து சமுதாய இயக்கங்களும் பாபரி மஸ்ஜித் விஷயத்தில் கோர்ட் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்கின்றன என்பது தான் புரியவில்லை. இந்த மனித மனோ இச்சைகளில் உருவான சித்தாந்தத்திற்கு எதிரான பதிவுகளை இஸ்லாமிய ஊடகங்களும் ஊக்குவிப்பதில்லை என்பது தான் வேதனைக்குரியது.
6

April 06, 2009 07:00
0
இப்னு பஷீர்:
//இந்நிலையில் இந்திய நீதித்துறையின் மீது இப்பொழுதும் நம்பிக்கை இழக்காத முஸ்லிம்கள் என்ன செய்யலாம்? என்று சிந்தித்தோமெனில், நமக்குக் கிடைக்கும் விடை, நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் 'தாலிபான்' பேச்சை எதிர்த்து வழக்குத் தொடுக்கலாம் என்பதே.// முஸ்லிம்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய வழக்குத் தொடுப்பது ஒரு வழி. அதே சமயத்தில் சில நீண்டகால செயல்திட்டங்களிலும் நம் சமுதாயத்தினர் கவனம் செலுத்த வேண்டும். கல்வியை ஆணுக்கும் பெண்ணுக்கும் கடமையாக்கிய மார்க்கம் நம் மார்க்கம். நம் சமுதாய மாணவர்களின் கல்வித்தேவைகளை பூர்த்திசெய்யும் அளவிற்கு போதுமான தரமான கல்வி நிறுவனங்கள் நம்மிடம் இருந்தால் நாம் இன்னொரு சிறுபான்மையினரின் கல்விக்கூடத்தில் சேர்ந்து நம் உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. சமுதாயத்தின் இந்தத் தேவையை கவனத்தில் கொண்டு, அதிகமதிகம் இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட வேண்டும். ஏற்கனவே நடந்துக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்களின் தரத்தை மேலும் உயர்த்த அந்தந்த நிறுவனங்களின் நிர்வாகத்தினர் முயற்சி மேற்கொள்ள வேண்டும். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு முதன்முதலாக இந்தியாவில் அலிகார் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் ஒரு முஸ்லிம்தான் (சர் சையது அஹமது) என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
7

April 07, 2009 08:09
0
faizal:
இந்திய நீதித்துறையின் மீது இப்பொழுதும் நம்பிக்கை இழக்காத முஸ்லிம்கள் என்ன செய்யலாம்? என்று சிந்தித்தோமெனில், நமக்குக் கிடைக்கும் விடை, நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் 'தாலிபான்' பேச்சை எதிர்த்து வழக்குத் தொடுக்கலாம் என்பதே. because இந்த மாதிரியான வரலாற்று ஞானமில்லா சமூகப்பார்வையற்றவர்கள் எல்லாம் நீதிபதியாக இருப்பதனால்.
8

April 07, 2009 08:16
0
Khaja:
//கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு முதன்முதலாக இந்தியாவில் அலிகார் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் ஒரு முஸ்லிம்தான் (சர் சையது அஹமது) என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.// சகோதரர் இப்னு பஷீர், சர் சையது அஹமது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கைபாவையாக விளங்கினார், அலிகார் பல்கலைக்கழகத்தில் அரபி மொழியை தடைசெய்தார். முற்றிலும் ஆங்கிலமயமாக்கினர். மாணவர்கள் தாடி வைப்பதை தடைசெய்தார். இஸ்லாம் பழமைவாதத்தை போதிக்கின்றது என்று கூறி Modernisation in Islam என்பதை விரும்பினார். மேற்கத்திய கலாச்சாரம் நம்மவர்களில் மெல்ல மெல்ல இதன்வழியாக புகுத்தப்பட்டது. இஸ்லாத்தின் மீது அவதூறு பரப்புபவர்கள், கொச்சையாக விமர்சிப்பவர்கள் முஸ்லிம்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை விளம்பரங்களை பெற்றுதுதருவது மேற்கத்தியர்களின் வாடிக்கை, அதனால்தான் சையது அஹமதுவிற்கும் சர் பட்டம் வழங்கப்பட்டது ஏன் சல்மான் ருஸ்டிக்கும் கூட.. அதனால் நாம் இப்போது ஏங்குவது இஸ்லாத்தின் மீது நேசம்கொண்ட ஒரு சையது அஹமதுவிற்காக.... ஆம் முற்றிலும் மாறுபட்ட இஸ்லாமிய பல்கலைகழகங்கள் நிறுவுவதற்காக.....
9

April 14, 2009 11:28

கருத்து எழுதுக :
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
You are here  : முகப்பு