சோதனையும் இறையருளே!

Share this:

ஸ்லாத்தின் மீது வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் கொண்ட இஸ்லாமிய எதிரிகள் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதையும் உலக அளவில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாகத் தாக்கப்படுவதையும் கண்டு மனம் வேதனைப்படுகிறீர்களா?

பயங்கரவாத நாடுகளின் அடக்குமுறைகளால், முஸ்லிம்கள் நூற்றுக் கணக்கில் செத்து மடிவதைக் கண்டு முகம் திருப்பிக் கொள்ளும் ஊடகங்கள், எங்கோ ஓரிரு முஸ்லிம் பெயர் தாங்கிகள் செய்யும் வன்முறைகளை முதல்பக்கத்தில் தலைப்பிட்டு பிற மதத்தினர் மனதில் திகிலைக் கிளப்பும் இரட்டை நிலை கண்டு வெறுப்பு அடைந்திருக்கிறீர்களா?

நீங்கள் வெறுக்கக்கூடிய கஷ்டமும் சோதனையும் உங்களைத் தாக்குகின்றதா? எழுந்து நின்று அல்லாஹ்வைப் புகழுங்கள். உங்கள் கண்முன்னே நிகழும் சோதனைகள் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்த அருட்கொடையாக இருக்கலாம்.

உங்கள் உயிரைப் பிடித்து உலுக்கியெடுக்கின்ற, வாழ்க்கையையே புரட்டி தலைகீழாக்கி சின்னாபின்னப்படுத்தும் வகையான கஷ்டமா? அதிக நேசத்திற்குரிய ஒருவரின் மரணமா? வியாபாரத்தில் மீண்டு எழ முடியாத அளவிலான நட்டமா? எதுவாயினும் சரி. அது சுவனப்பாதையிலிருந்து விலகி தூரம் சென்றுவிட்ட உங்களை, அதன் கசடுகளிலிருந்தும் உள்ளம் வரை ஊடுருவியுள்ள நிராகரிப்பின் வேர்களிலிருந்தும் பிடுங்கியெடுத்து தூய்மைப்படுத்தி நேரான வழிக்கு உங்களை கொண்டுவருவதற்கான அல்லாஹ்வின் கருணையாக இருக்கலாம்.

இறை நிராகரிப்பு, இறை கட்டளைக்கு மாறுசெய்தல், இறைத்தூதரின் வழியைப் பின்பற்றாமல் விலகியிருத்தல், உலக வாழ்வில் ஊறித் திளைத்தல் போன்ற புரையோடிப்போன நோய்களுக்கான அறுவை சிகிச்சையாக இருக்கலாம்.

அல்லாஹ்வின் இந்த மருத்துவத்தில், வலியே மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. உடலினை உறுதி செய்ய கசக்கும்படியான, வெறுக்கும்படியான விதவிதமான மருந்துகளை காலையிலும் மாலையிலும் அருந்தச் சொல்கிறதே இன்றைய நவீன மருத்துவம், அதைப் போல் உள்ளத்தை உறுதிபடுத்தவே இந்த வலி மருத்துவம்.

உங்கள் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும்,  சோதனையே. அல்லாஹ்விடமே மகத்தான கூலி இருக்கிறது. (அல்குர்ஆன் 64:15)

ஈமானைக் கொண்டு உள்ளத்தை நிரப்பிக்கொள்ளுங்கள், நிராகரிப்பின் சிறு துளி கூட உங்கள் உள்ளத்தைத் தொடவேண்டாம் என இறைவன் இதைக்கொண்டு உங்களுக்கு அறிவிப்பு செய்திருக்கலாம். உங்கள் மீது அல்லாஹ் வைத்துள்ள நேசத்தின் காரணமாக நீங்கள் சிறிதளவுகூட அல்லாஹ்வின் பாதையைவிட்டு விலகிவிடக்கூடாது என்று இறைவன் விரும்பியிருக்கலாம்.

கடுமையான சோதனைகளைக் கொடுப்பதன் மூலம் தவறுகளிலிருந்து மீட்டு நேரான வழிக்குக் கொண்டு வருவதை இறைவன், தான் நாடுபவர்களுக்கு மட்டும்தான் செய்கிறான். இஸ்லாம் மீளெழுச்சியுற்றபோது நபித் தோழர்களாகிய அந்த முதல் சமுதாயத்தின் சிறிய தவறுகளுக்காகக்கூட மிகப்பெரிய வலிகளைக் கொடுத்து அவர்களின் தவறுகளை உணரச் செய்திருக்கிறான் கருணைமிக்க இறைவன்.

உஹது களம் முஸ்லிம்களுக்குத் தந்த படிப்பினைகள் ஏராளம். அதில் மிக முக்கியமான படிப்பினை “அல்லாஹ்வின் தூதருடைய கட்டளையை எந்த நிலையிலும் மீறாதீர்கள், அது உங்களது அறிவோடு முரண்பட்டாலும் சரியே” என்பது. இன்னும் இதனை விரித்து பொருட்கொண்டால் உலகப் பொருட்களின் மீதுள்ள இலேசான ஆசையினால் இனிமேல் தூதருடைய வார்த்தையை மீறினால் தவறில்லை, ஆபத்தில்லை என்று உங்களுடைய அறிவு ஆராய்ந்து கூறினாலும் கூட இறைத்தூதரின் வார்த்தைகளை மீறிவிடாதீர்கள் என்பதாகும்.

உஹது கள நிகழ்வுகளைச் சற்றே சிந்தித்துப்பாருங்கள். குன்றின் மீது நிறுத்தப்பட்டிருந்த வில் வீரர்கள், போர் முடிந்துவிட்டது; எதிரிகள் புறமுதுகிட்டு ஓடிவிட்டனர்; முஸ்லிம் வீரர்கள் கனீமத் பொருள்களை (போரில் வென்ற வெற்றிப் பொருள்களை) சேகரித்துக்கொண்டிருக்கிறார்கள்; நாமும் சென்று அவற்றைச் சேகரிக்கலாம் எனக் கருதி குன்றிலிருந்து கீழே இறங்கிவிட்டனர். ஒன்பது அல்லது பத்து வீரர்களைத் தவிர மற்ற அனைவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையை மீறி கீழே இறங்கிவிட்டனர். தர்க்க ரீதியில் இச்செயலை எப்படி வேண்டுமானாலும் நியாயப்படுத்தி வாதம் செய்யலாம். ஆனால், இறை நம்பிக்கையின் ஒளியில் இதனை அணுகும்போது இது எவ்வளவு வரம்பு மீறிய செயல் எனத் தெளிவாகப் புரியும். இதன் விளைவை அவர்கள் அறிந்துகொள்ள வெகுநேரம் ஆகவில்லை, மிக விரைவிலேயே முஸ்லிம் படையணியின் பின்னடைவு கீழே இறங்கியவர்களை அவர்களின் செயல் குறித்த உணர்வுக்கு உயிரூட்டிவிட்டது.

அதனைத் தொடர்ந்து இஸ்லாமியப் படை எதிர்கொண்ட சேதம் சாதாரணமானதன்று, வெறும் பொருட்களாலும் உடலாலும் அடைந்த பாதிப்பன்று. மாறாக அவர்களுடைய உள்ளத்தையே ஊடுருவி வாட்டி வதைத்த சேதம். ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக முஸ்லிம்களே ஒரு முஸ்லிமை எதிரியென்று நினைத்து கொல்ல நேர்ந்தது. ஹுதைஃபா (ரலி) என்பவரின் தந்தையான யமான் (ரலி) அவர்கள் முஸ்லிம்களாலேயே தவறுதலாகக் கொல்லப்பட்டார்.

சத்திய சஹாபா பெருமக்கள் அனைவரும் தங்களது உயிரைவிட அதிகம் நேசித்த கண்ணிய நபி (ஸல்) அவர்களின் மீது எதிரிகள் தாக்குதல் தொடுத்தனர். உத்தம நபி (ஸல்) அவர்களின் பற்கள் உடைந்து, உதடு கிழிந்து, அவர்களின் கண்களுக்குக் கீழே கண்ணத்தில் இரண்டு ஆணிகள் செருகிக்கொண்டன. கஸ்தூரி மணம் கமழும் சாந்த நபி (ஸல்) அவர்களின் கன்னங்களிலிருந்து இரத்தம் வழிந்தது. இவை அனைத்தும் வில் வீரர்கள் குன்றிலிருந்து இறங்கியதால் நிகழ்ந்தவை.

நாம் நேசிக்கின்ற சத்திய நபி (ஸல்) அவர்களின் மீது நடந்த இந்த தாக்குதல்களைப் பற்றி படிக்கும்போதே கண்கள் கசிகின்றனவே நம்மைவிட அதிகமாக முஹம்மத் நபி (ஸல்) அவர்களை நேசித்த சஹாபா பெருமக்கள் இவற்றை நேரடியாக கண்ணுற்றார்களே அவர்கள் எவ்வளவு வேதனையடைந்திருப்பர்கள் என சிந்தித்துப்பாருங்கள்.

இன்னும் உங்களுக்கு (உஹதில்) ஒரு துன்பம் வந்துற்றபோது, நீங்கள் (பத்ரில்) அவர்களுக்கு இது போன்று இருமடங்குத் துன்பம் உண்டு பண்ணியிருந்த போதிலும், “இது எப்படி வந்தது?” என்று கூறுகிறீர்கள். (நபியே!) நீர் கூறும்; இது (வந்தது) உங்களிடமிருந்தேதான் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்,” (அல்குர்ஆன் 3:165)

கருணை பொங்கும் இறைவன் அந்த முதல் சமுதாயத்தை அதிகம் நேசித்தான். தங்களின் அறிவு சரியென்று கூறினாலும்கூட அவர்கள் சிறிதளவுகூட தன் வழியைவிட்டு விலகிவிடக் கூடாது, இறைத்தூதரின் கட்டளைக்கு சிறிதளவுகூட மாறுசெய்துவிடக்கூடாது என நாடினான். ஆகவே அவர்களுக்கு உஹது களத்தின் பின்னடைவின் மூலம் அதனை உணர்த்தினான்.

குன்றிலிருந்து வில் வீரர்கள் இறங்கியது நமது பார்வைக்குச் சாதாரண குற்றமாகவும் மனித இயல்பாகவும் தென்படலாம். ஆனால், அல்லாஹ் ஏற்படுத்திய விளைவுகள் பாரதூரமானவை. ஏனென்று சிந்தித்து படிப்பினைப் பெறுவது நமது கடமை. இறைவன் தன் அடியார்கள்மீது கொண்டிருக்கும் நேசத்திற்குத் தகுந்தாற்போல் அவன் நாடிய அளவில் சோதனைகள் ஏற்படலாம். தான் அதிகம் நேசித்த சமுதாயத்தின் சிறிய குற்றங்களுக்குக் கூட பாரிய பின்விளைவுகளை அளித்து அவர்களைத் தூய்மைப்படுத்தியிருக்கிறான் அவன். 40 அல்லது 50 வீரர்கள் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையுமே உடல், பொருள் மற்றும் உள்ளத்தின் வேதனை மூலம் வாட்டி இருக்கிறான். போர்க்களத்தில் உள்ளவர்களை மட்டுமல்லாது, அண்ணலார் கொல்லப்பட்டுவிட்டதாகக் கிளம்பிய வதந்தியால் மதீனாவில் இருந்த முஸ்லிம் பெண்கள், குழந்தைகள், முதியவர்களின் உள்ளங்களையும் வாடச் செய்தான்.

வல்லமை பொருந்திய ரப்புல் ஆலமீன் இதன் மூலம் சமூகக் கட்டமைப்பின் தத்துவத்தை விளக்குகிறான். சமுதாயத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களின் உள்ளத்திலும் ஈமானிய தீபம் சுடர்விட்டு ஒளி வீச வேண்டியது கட்டாயம். அதுமட்டுமே முழுமையான வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை இறைவன் உணர்த்துகிறான்.

அல்லாஹ்வுக்கான அடிமைத்தனம் என்பது ஒட்டுமொத்த சமூகமும் ஒருவர் விடாமல் அனைவரும் முழுவதுமாக கீழ்படிந்து விடுவதில்தான் இருக்கிறது. அத்தகைய சமூகமே வெற்றி பெற்ற சமூகமாக இருக்கும் என்பது படிப்பினை.

அல்லாஹ் மாபெரும் கருணையாளனும் அளப்பெரும் அன்புடையோனும் ஆவான். அவர்களின் தவறினை உணரச்செய்த பின்பு அவர்களுக்கு வெற்றியை அருளினான், அவர்களுடைய உள்ளத்து வேதனைகளை நீக்க அவர்களை சிறுதூக்கம் பீடிக்குமாறும் செய்து அருளினான்.

இப்போது சொல்லுங்கள் உங்களை இறைவன் நேசித்தால், உங்களை அவனது நேரிய பாதையை நோக்கி இழுக்க அவன் நாடினால் உங்கள் மீது கடுமையான சோதனைகளையும் கஷ்டங்களையும் சாட்டலாமில்லையா? உங்களின் கடுந்துன்பங்களை இந்த கோணத்திலும் அணுகி அதனை அல்லாஹ்விடமிருந்து வந்த எச்சரிக்கை என உணர்ந்து அல்லாஹ்வின் அருட்கொடை என்றும் நம்பிக்கைகொண்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்பிவிடுங்கள்.

– மு. முஹம்மது யூசுஃப்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.