உறுதி ஏற்போம்! (பிறை-3)

Share this:

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 3

நோன்பின் பிரதிபலனை இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு, நோன்பு நோற்றவரிடம் காணப்பட வேண்டிய மாற்றம்தான் என்ன?

நோன்பு முடிந்து, தொடரும் அடுத்த 11 மாதங்களில் நோன்பு நாட்களில் உரிய வேளையில் நிறைவேற்றிய தொழுகைகள், கடைப்பிடித்த ஒழுக்கங்கள், நற்பண்புகள், இன்னபிற நற்செயல்களை விட்டு விலகி வாழ்வதா? அல்லது நோன்புக் காலங்களில் தன்னைக் கண்காணித்த அதே இறைவன்தான் இப்போதும்-எப்போதும் தன்னைக் கண்காணிக்கின்றான் என்ற உணர்வுடன் அந்நற்பண்புகளை விட்டு விலகாது தொடர்ந்து அவற்றை மேம்படுத்துவதா? என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு மாதத்தில் பழகிப் பக்குவப்பட்ட ஒழுக்க வாழ்க்கையை உதறித் தள்ளிவிட்டு, “பழைய குருடி …” உவமையாக வாழத் தலைப்பட்டவர்களுக்கு,

அந்நாளில் அவர்களுடைய நாவுகளும் அவர்களுடைய கைகளும் அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததைப் பற்றி சாட்சியம் கூறும்”.  (அல்குர்ஆன் : 24:24);

அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும கண்களும் அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்”. (அல்குர்ஆன் : 41:20).

நாளை மறுமையில் தமது சொல், செயல், செவி, பார்வைகள் அனைத்தும், கேள்விக்கு உட்படுத்தப்படும் என்பதை மறந்து ரமளானைத் தொடர்ந்து வரும் அடுத்த 11 மாதங்களில் குர்ஆன் போதனைகள் மற்றும் நபிவழிக்கு மாற்றமாகத் தமது வாழ்கையை அமைத்துக் கொள்பவர்களுக்கு மேற்கண்ட இரு வசனங்களும் எச்சரிக்கை விடுக்கின்றன. அடுத்த ரமளானில் இக்காலகட்டத்தில் செய்பவற்றுக்குப்  பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என இறுமாந்து இருப்பவர்கள், அடுத்த ரமளான் வருவதற்குள் இலட்சியமற்ற அலட்சிய வாழ்க்கை வாழும் நிலையில் மரணித்தால் தன் நிலை என்னவாகும் என்று சற்றும் கவலையற்றவர்களாக இருக்கின்றனர். அல்லாஹ் அருள் புரிந்து பாதுகாப்பானாக.

இனிமேலாவது இந்நிலையிலிருந்து தான் மாற வேண்டும் என்று ஒவ்வொருவரும் தன் மனத்தில் சங்கல்பம் எடுத்துக் கொண்டு இந்தப் புனித ரமளான் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும். உலகில் புத்தாண்டுத் தீர்மானங்கள், பழைய ஆண்டுத் தீர்மானங்கள் எனப் பல தீர்மானங்கள் (resolutions) நிறைவேற்றப் படுவதைப்போல் இப்புனித ரமளானின் ஆரம்பத்திலும் நம் இம்மை-மறுமை வாழ்க்கை செம்மையடைய சில தீர்மானங்களை ஒவ்வொருவரும் மனத்தில் எடுக்கலாம்.

 

இன்ஷா அல்லாஹ்!

இந்த ரமளான் முதல் நான் தினம் ஐந்து வேளை தொழுகைகளையும் ஜமாஅத்தோடு தொழுவது முதல், வாழ்வின் எல்லா காலகட்டத்திலும் எனது செயல்கள் எல்லாவற்றிலும் முறையாகக் குர்ஆன்-நபிவழியில் வாழ்ந்து வருவேன்.

 எல்லாவித தவறுகளில் இருந்தும் விடுபட்டு உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து இம்மை மறுமை வெற்றிக்கு உழைப்பேன்; அதற்காக அல்லாஹ்விடம் பிராத்திப்பேன்.

 அதிகமதிகமாக நன்மைகளை, தர்மங்களைச் செய்வேன்.

 மார்க்கப் பணிகளில் எனது உபரி நேரத்தைச் செலவழிப்பேன்.

 அல்லாஹ்விடம் அதிகமாகப் பாவமன்னிப்புத் தேடுவேன்.

 தீய பழக்கங்கள் / தீய காரியங்களில் ஈடுபடமாட்டேன்.

 இறைச் சிந்தனையுடன், எப்போதும் இறையச்சத்துடன் வாழ்வேன்.

 குர்ஆனைப் பொருள் உணர்ந்து படிப்பேன், அதை எனது வாழ்க்கையில் செயல் படுத்துவேன்.

செய்யும் எந்த நற்செயலையும் தொடர்ந்து இடைவிடாமல் செய்ய முயல்வேன்.

போன்ற பல தீர்மானங்களை மனத்தில் நிறைவேற்றி உறுதியான ஈமானுடனும் இறை நம்பிக்கையுடனும் வாழ்ந்து மரணிக்க சங்கல்பம் செய்து கொண்டு இப்புனித ரமளானை ஆரம்பிக்க வேண்டும். இதுவே நிரந்தரமான, முறையான பயனாக அமையும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்; பிறருக்கும் இதை உணர்த்தும் வகையில் தன் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படுத்தி முன்னுதாரணமாகத் திகழ இயன்றவரை முயல வேண்டும். இத்திட சங்கற்பத்தை மனத்தில் ஏந்தியவர்களாக இவ்வரிய புனித ரமளானை நாம் ஆரம்பிப்போம்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.