ரமளான் மாதத்தை அடைந்தும்… (பிறை-15)

Share this:

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 15

வணக்கங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கென்று எண்ணியே அடியார்கள் வழிபடுகின்றனர். அல்லாஹ்வை வணங்குவதற்கென்றே மனிதன்  படைக்கப்பட்டுள்ளான்.

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல் குர்ஆன் 51:56)

எல்லா நற்செயலுக்கும் கூலி தருபவன் அல்லாஹ் என்றாலும் நோன்பைக் குறிப்பிட்டுச் சொல்லும்போது ”நோன்பு எனக்கு உரியது” என இறைவன் சிலாகித்துக் கூறுகின்றான்.

“நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்!” என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் “நான் நோன்பாளி!” என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையைவிட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான். தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்: புகாரி, 1904)

மனிதன் பசித்திருப்பதிலும், தாகித்திருப்பதிலும் இறைவனுக்கு என்ன தேவை உள்ளது? ஒன்றுமில்லை! ஆயினும், “நோன்புக்கான கூலியை நானே  கொடுப்பேன்” என நோன்பைச் சிறப்பித்து இறைவன் கூறுவதைச் சிந்தித்தால் பிற வணக்கங்களிலிருந்து நோன்பு எனும் இபாதத்தில் தனிச் சிறப்பு உள்ளதை விளங்கலாம்.

பசிப்பதும் தாகிப்பதும் வெறும் உடல் அசைவுத் தொடர்பான விஷயமல்ல. உணர்வைக் கட்டுப்படுத்தும் செயலாகும். நோன்பு மாதம் அல்லாத மற்ற நாள்களில் மனம் விரும்பும் ருசியான உணவைத் தேடிச்சென்றேனும் பெற்றுச் சாப்பிட்டு நப்ஸைத் திருப்தியடைய வைத்துவிடுவோம். ஆனால் ரமளான் வந்துவிட்டால் உண்ணக்கூடாத நேரத்தில் ருசியான – விருப்பமான உணவை மனம் விரும்பினாலும் அதற்குத் தடைவிதித்து ஒரு கட்டப்பாடு மேற்கொள்ளப்படுகிறது.

ஸஹ்ர் நேர உணவில் விரும்பும் உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது பாங்கொலி கேட்டுவிட்டால் அது எவ்வளவு ருசியான உணவாக இருந்தாலும் அத்தோடு உண்பது நிறுத்தப்பட்டுவிடும். அதன் பின்னரும் பிறர் பார்க்காத சந்தர்பங்களில் தனிமையில் பசித்தும், தாகித்தும் இருந்து உணவு உண்ணும் வாய்ப்பு இருந்தாலும், ‘அல்லாஹ் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்’ என்று இறைவனுக்காகவே வைகறைப் பொழுதிலிருந்து பகல் நேரம் முழுவதும் சூரியன் மறையத் துவங்கும் நேரம்வரை உண்ணா நோன்புத் தொடர்கிறது.

ரமளான் மாதத்தில் பசித்திருப்பதும் தாகித்திருப்பதும் வெறும் பட்டினிக் கிடக்க வேண்டும் என்ற நோக்கமல்லாமல். இறைவன் நம்மைக் கண்காணிக்கிறான் என்ற அடியாரின் நம்பிக்கையும் உறுதிப்படுத்தப்பட்டு, அல்லாஹ்வுக்கும், ரஸுலுல்லாஹ்வுக்கும் கட்டுப்படும் பண்பு மேலோங்குகிறது. இப்படி நோன்பின் மாண்பைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ரமளான் மாதத்தை அடைந்தும்…

“எவர் ஒருவர் ரமளான் மாதத்தைப் பெற்று அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்புக் கோரவில்லையோ அவரும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாகட்டும்” என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் துஆ செய்தபோது நபி (ஸல்) “ஆமீன்” என்று கூறியதாகக் கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது. இதுவும் நமக்கு ரமளானின் துஆக்களில் பாவமன்னிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது:

நீங்கள் மிம்பருக்கு அருகில் செல்லுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். நாங்கள் அவ்வாறு சென்றோம். அவர்கள் முதல்படியில் ஏறிய போது “ஆமீன்” என்றனர். இரண்டாவது படியில் ஏறிய போதும் “ஆமீன்” என்றனர். மூன்றாவது படியில் ஏறிய போதும் “ஆமீன்” என்றனர்.

“இதுவரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுற்றோம்” என்றோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து, யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட(க்கோர)வில்லையோ அவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும் என்றார், நான் ஆமீன் என்றேன். உங்களைப் பற்றி நினைவு கூரப்படும்போது அதைக் கேட்டு உங்களுக்காக ஸலவாத் கூறாதவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும் என்றார், நான் ஆமீன் என்றேன். தன் பெற்றோர் இருவரை அல்லது இருவரில் ஒருவரை முதிய வயதில் பெற்று (அவர்களுக்குச் சேவை செய்து) யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவரும் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்” என்றார், நான் ஆமீன் என்றேன்” என நபி (ஸல்) விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: கபு பின் உஜ்ரா (ரலி), நூல்: ஹாகிம்).

oOo

(மீள் பதிவு)
-தொடரும் இன்ஷா அல்லாஹ் …


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.