ம(னி)த நம்பிக்கை….!

Share this:

இவ்வுலகில் நம்பிக்கை எனும் அடிப்படையான சிந்தனையே தனிமனிதனின் வாழ்வு முதல், ஒரு சமுதாயம் அல்லது ஒரு நாட்டின் பெரும்பாலான நிகழ்வுகளில் செயல்ரீதியாகவும், மனோரீதியாகவும் இயக்கக்கூடிய பிரதானமான ஒரு அம்சமாகவும், தூண்டுதல் சக்தியாகவும் திகழ்கிறது.

 

இறைநம்பிக்கை எனும் ஆத்திக நம்பிக்கை அல்லது 'இறைவன் இல்லை' எனும் நாத்திக நம்பிக்கை முதல், மனிதர்கள் தாம் ஒருவர் மற்றவர் மீது, அல்லது ஒரு பொருளின் மீது, ஒரு செயலின் மீது வைக்கும் நன்னம்பிக்கை, தம் மீதுள்ள  தன்னம்பிக்கை, ஆதாரமற்ற மூடநம்பிக்கை, அவநம்பிக்கை, தவறான நம்பிக்கை, என்று பல்வேறு நிலைகளில் இவை இருப்பினும் நம்பிக்கை என்பது இல்லாதவர் எவரும் இருப்பது அரிதே.

மேலும், நம்பிக்கையற்றவரால் எத்துறையிலும் ஆக்கப்பூர்வமாக எதையும் முறையாக சாதிக்க அல்லது செய்ய இயலாது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். ஒரு மனிதனின் அன்றாட குடும்ப வாழ்க்கை முதல் கல்வி, கைத்தொழில் மருத்துவம், வணிகம், வியாபாரம், விவசாயம், தொழிற்கூடம், நிறுவனம், சன்மார்க்கச் சேவை, சமூக நல அமைப்புகள், என்றும் இன்னும் ஒரு நாட்டையும் கூட இயக்குவதில் இதன் பங்கு மற்றும் பாதிப்பு கணிசமான அளவில் இருக்கிறது.

 

மனித நம்பிக்கையின் காரணமாகவே, பலவித எதிர்பார்ப்புகள், திட்டங்கள், செயல்பாடுகள், பலன்கள், விளைவுகள், இலாபங்கள், நஷ்டங்கள்,  இழப்புகள், ஏமாற்றங்கள் போன்ற பல்வேறு கோணங்கள் உள்ளடங்கிய செயல்பாடுகள், அதன் தாக்கங்களால் விளையும் சாதக பாதகங்களோடு அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருப்பதைக் காணலாம்.  

 

ஒரு சிலர் தன்னம்பிக்கையை மட்டுமே கொண்டு இறை நம்பிக்கையற்றவராகவும், இன்னும் சிலர் இறைநம்பிக்கையுடன் தன்னம்பிக்கையும் உடையவராகவும் இருப்பதையும் காணலாம். சிலர் அசைக்க முடியாத இறைநம்பிக்கையினால் எவ்விதமான தவறான மூட நம்பிக்கையுமற்றவராகவும், இன்னும் சிலர் இறை நம்பிக்கையுடன் ஒரு சில மூடநம்பிக்கைகள் உள்ளவராகவும் இருப்பதையும் பரவலாகக் காணலாம்.

 

ஆயினும் நம்பிக்கை எனும் இந்த சிந்தனை மிகவும் சீரானதாக, சரியானதாக இருப்பது மிகவும் அவசியமான ஒன்று என்பதையும் அதன் மகிமையை உண்மையில் பெரும்பாலானோர் அறிய முற்படுவதோ, உணர்வதோ இல்லை என்பது வருந்தக்கூடிய ஒன்றாக உள்ளது.

 

கல்வி, அறிவியல், வணிகம், பொறியியல், வானியல், மருத்துவம் கணிணி, இணையம், நுட்பியல் என்று இன்று மனிதர்கள் பல்வேறு துறையில் வல்லுனர்களாக இருக்கும் அதே நேரத்தில் தமது நம்பிக்கை விஷயத்தில் தவறிழைத்துக் கொண்டிருப்பதையும் சர்வசாதாரணமாகக் காணமுடிகிறது.

 

இன்றும் சிலர், மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவன் என்பதையும், இதர கோள்களில் குடியிருப்புகள் அமைக்க இயலும் என்பதையும் நம்பும் அளவிற்கு, இந்த அண்ட சராசரங்களின், அந்தரங்கத்தில் மிதக்கும் எண்ணற்ற கோள்களின் சீரான குறையற்ற படைப்பிற்கும் தன்மைக்கும் இயக்கத்திற்கும் பின்னர் ஒரு மாபெரும் சக்தியுள்ளது என்பதைச் சரிகாணத் தவறுகின்றனர், நம்ப மறுக்கின்றனர்.

 

அணுவின் தன்மையையும் சக்தியையும் அறியும், உணரும் மனிதர்கள் அந்த அணுவினைப் படைத்தவனை அறிய முறையாக உணர மறுக்கின்றனர். 

 

இம்மியளவும் குறையற்ற தன்மைகள் உள்ள நிகரற்ற இவற்றின் மகிமைகளை கண்டும் காணாமல், எல்லாம் தானாகவே தோன்றியது என்ற கருத்தில் சிலரும், அந்த கருத்தை வாயளவில் மொழியாமல் / ஏற்காமல் ஆனால் செயலளவில் தான்தோன்றிகளாகச் சிலரும் இயங்கி வருகின்றனர்.

 

இவ்வாறு ம(னி)த நம்பிக்கைகளை பல்வேறு நம்பிக்கைள், கோட்பாடுகளாக மனிதர்களில் சிலர் வாரிசுதாரர்களாகப் பெற்றதை போல் முன்னெடுத்து செல்கின்றனர், சிலர் இதை இவ்வழியில் சீராக பெற்று கொள்ளக்கூடிய நற்பாக்கியத்தை பெறுகின்றனர், இன்னும் சிலர் இவற்றை முறையாக ஆய்வுசெய்து சிந்தித்துணர்ந்து சீராக்கிக் கொள்கின்றனர்.  

 

ஒரு சிலரே தமது நம்பிக்கைகளில் உள்ள தவறுகள் சுட்டிக் காட்டப்படும்போது அவற்றை உணர்ந்து தவறுகளைக் கைவிட்டு முன்னேறுகின்றனர். இன்னும் சிலர் இவற்றை ஆய்வு செய்வதோ சிந்திப்பதோ, சுட்டிக்காட்டப்பட்டாலும் ஏற்பதோ இல்லை எனுமளவில் தமது பொன்னான வாழ்க்கை எனும் அருங்கொடையை வீணடித்து இம்மை வாழ்க்கையயும் மறுமை எனும் ஒரு நிலையான வாழ்க்கைக்கும் மிகப்பெரும் இழப்பையும் நஷ்டத்தையும் ஏற்படுத்திக்கொள்கின்றனர்.  மறுமை எனும் மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கையை நம்பும் முஸ்லிம்கள், தவறுகளைத் திருத்திக் கொள்ளும் முதல் தரப்பினராக இருப்பதே சிறப்பானதாகும்.  

 

இவ்வடிப்படையில் தமது நம்பிக்கையை ஆய்வு செய்து தமது செயல்பாடுகளை தூய இறை வழிகாட்டல்களின் அடிப்படையில் செயல்படுத்த மனிதர்கள் அனைவருமே – அவர் எவ்வளவு பெரிய அறிஞராக இருப்பினும் அல்லது சாதாரண மனிதராக இருப்பினும் – அறிவுறுத்தப்பட்டுள்ளனர், காலாகாலமாக எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஆயினும் இதை மனிதர்கள் பல்வேறு காரணங்களால் உணரத் தவறிவிடுகின்றனர். தமது நம்பிக்கையையே அது எதுவாக இருப்பினும் சரி கண்டு அதையே தொடர்கின்றனர்.  

 

முஸ்லிம்களிலும் பலர் தமது நம்பிக்கையே சரியானது என்றும் சீரான நம்பிக்கை தமக்கு மட்டும் சொந்தமானது எனக் கருதி அடுத்தவரிடம் எடுத்துரைக்காமல், பகிர்ந்து கொள்ளாமல், உபதேசிக்காமல், தாம் பெற்ற இறை அருட்கொடைகளுக்கு முறையாக நன்றி செலுத்திடாமல், 'இது நமது சகோதர மனித சமுதாயம் முழுவதும் பெற வேண்டியது' என்பதை உணராமல், அலட்சியமாக வாழ்வது ஒரு புறம், மறுபுறம் முறையாக ஆய்வு செய்து  செயல்படாததால் இத்தூய நம்பிக்கையில் களங்கம் ஏற்பட்டு இதர தவறான நம்பிக்கைகள் கலந்து, நல்ல/கெட்ட நாள், நேரம், வாரம், மாதம், அவற்றை அனுஷ்டானிக்க வெளிப்படுத்த, தவிர்க்க, சுய இலாப நோக்கத்தில், அறியாமையில் என்று பல்வேறு மூட நம்பிக்கைகள், ஆதாரமற்ற அறிவுக்கு ஒப்பாத வீணான அனாச்சாரங்களில், சடங்குகளில் மூழ்கி சத்திய இஸ்லாம் எனும் தூயநம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் உட்பட்ட இறைமார்க்கத்திற்கு களங்கம் மற்றும் அவநம்பிக்கை ஏற்படுத்தி,  அனைத்து மாந்தருக்கும் சொந்தமான இத்தூய மார்க்கத்தை விட்டு மக்கள் வெருண்டோட வழிவகுத்து விடுகின்றனர்.  

 

மேலும் இது அவர்களுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும், அவர்களைக் கண்டு தவறான நம்பிக்கையில் தொடரும் ஏனைய மனித சமூகத்திற்கும் மிகப்பெரும் இழப்பு, ஈடு செய்ய இயலா நஷ்டம் என்று நம்பவும் மறுக்கும் விதத்தில் செயல்படுகின்றனர் என்பது பெரும் கைசேதமே !!!. 

 

"காலத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும் (முறையாக) ஈமான்,(நம்பிக்கை) கொண்டு, நல்லறங்கள் செய்து, சத்தியத்தை ஒருவொருக்கொருவர் உபதேசித்து, பொறுமையையும் ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொள்பவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டத்தில் இல்லை)" (அல்குர்ஆன் 103:1-3)

 

ஆக்கம்: இப்னு ஆதம்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.