கண்ணாடிகள் கவனம்

Share this:

மது சமுதாயம் சந்தித்து வருகின்ற பிரச்சினைகளில் மிக முக்கியமானது வரம்பு மீறிய காதல் பிரச்சினைதான். ஓடிப்போகும் சீரழிவுச் செய்தி எல்லாப் பகுதிகளிலிருந்தும் நீக்கமற வந்த வண்ணமிருக்கின்றன.

இதற்கெல்லாம் இதுதான் காரணமென்று பொத்தம் பொதுவாய் ஒன்றைச் சொல்ல முடியாது. செல்போன், சின்னத்திரை, பெரிய திரை, கல்வி நிலையங்களில் கலந்து பழகுதல் எனப் பல காரணங்களைச் சொல்லலாம். காரணம் எதுவாயினும் சரி, செய்யப்பட வேண்டிய தலையாய விசயம் இது. இந்தப் பொறுப்பும் கடமையும் பெற்றோர்களையே சாருகின்றது.

பெற்றோர்களின் கவனக் குறைவினால்தானே அவர்கள் கீழிறங்கிப் போகின்றார்கள். செல்போன், தொலைக்காட்சி, இணையதளம் ஆகிய வசதிகளை ஏற்படுத்தித் தருவதோடு பெற்றோர்களின் பங்கு முடிந்து விடுவதில்லை. அதை அவர்கள் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லித்தர வேண்டும். அதன் நன்மை தீமைகளை விளக்கித் தரவேண்டும். தீவிர கண்காணிப்பும் வேண்டும். மீறும்போது கண்டிக்கவும் வேண்டும்.

தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்கும்போது அதில் காட்டப்படும் கற்பனைக் காட்சிகளால் ஈர்க்கப்படும் பிள்ளைகள் இளமைக் கால தூண்டுதலால் தானும் அதுபோலச் செய்ய வேண்டுமென உந்தப்படுகிறார்கள். பிள்ளைகளை வைத்துக் கொண்டே தொடர் நாடகங்கள், சினிமாக்களைப் பார்க்கின்றோம். வரம்பு மீறிய காட்சிகளைப் பார்க்கும் சூழலை நாமே உருவாக்கித் தருகின்றோம். பெற்றோர்கள் நல்ல முன் மாதிரிகளாக இருந்து தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

நம் பிள்ளைகள் தனி அறையில் நீண்டநேரம் யாரோடு பேசிக் கொண்டிருக்கின்றார்கள்? என்பதைக் கண்காணிக்க வேண்டும். அவர்களின் கல்லூரி நண்பர்கள் யார்? யாரோடெல்லாம் பழகுகின்றார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். செலவுகளுக்காக அதிகமாகப் பணம் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். அதிக நகைகளை அணிவிக்காமல் இருப்பதும், நகைகள் இருக்குமிடம், பணப்புழக்கம் அவர்களுக்குத் தெரியாமல் இருப்பதும் நல்லது. ஏனென்றால் ஓடிப்போகலாம் என்று முடிவெடுக்கும்போது பணபலமும் அவர்களுக்குச் சக்தி ஊட்டும் அம்சமாக இருக்கலாம். நம் பிள்ளைகளின் உரிமைகளில் தலையிடலாமா? என்றெல்லாம் பார்க்காமல் அவர்களின் நலன்களைக் கருதி கண்காணிக்க வேண்டும். “படியில் பார்த்து இறங்கு” என்று சொல்வது அவர்கள் ‘கீழே விழப் போகிறார்கள்’ என்பதற்காக அல்ல. ‘கீழே விழுந்து விடக்கூடாது’ என்பதற்காகத்தான். எல்லாவற்றிற்கும் மேலாக இறையச்சத்தையும் மறுமைச் சிந்தனைகளையும் ஊட்டி வளர்க்க வேண்டும். ஒழுக்க மாண்புகளை விதைக்க வேண்டும்.

குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் அழகிய வாழ்வுமுறைகளையும் தெளிவாகப் போதித்தாலே அவர்கள் சிறந்தவர்களாக வளர்வதற்குப் போதுமானதாகும். பெண்கள் கண்ணாடிகளைப் போன்றவர்கள் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள் (முஸ்லிம்). பெண்களைக் கண்ணாடியைப் போன்று பாதுகாக்க வேண்டும். கை தவறினால் கீழே விழுந்து உடைந்து நொறுங்கும். நம் காலையே அது குத்திக் கிழிக்கும். கவனமோடு நம் பிள்ளைகளை வளர்ப்போம்.

கண்ணாடிகள் கவனம்!

– M அப்துல் ரஹ்மான் M.P.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்
நன்றி : க்ஹைர உம்மத் – அக்டோபர் – டிசம்பர் 2011


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.