தமிழகத்துக்கு ரெட் அலர்ட்!

{mosimage}”வந்தாரை வாழ்வாங்கு வாழ்விக்கும்” எனப் புகழ் பெற்ற தமிழ்நாடு, சங்ககாலத்திலிருந்து அமைதிக்கும் பெயர் பெற்றது. “தமிழுக்கு அமுதென்று பேர்” என்றார் பாரதிதாசன். ‘இனிமை’ எனும் தன்மையைத் தன்னகத்தே கொண்ட தமிழ்மொழி  போன்றே பழக இனிமையானவர்களையும் பண்பாடு நிறைந்தப் பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களையும் பிறப்பிலிருந்தே உருவாக்குவதிலும் தனிச் சிறப்புப் பெற்ற நாடு இந்தத் தமிழ்நாடு.

இந்தியா விடுதலை அடைந்தக் காலகட்டங்களில் வடக்கே இனத்தின் அடிப்படையிலான பிரச்சனைகள் எழுந்து வங்காளத்தை மையமாகக் கொண்டு நாடெங்கும் கலவரம் தலைவிரித்தாடிய மோசமான காலகட்டத்தில்கூட, உலக நாடுகளுக்கிடையில் தலைநிமிர்த்தி நிற்க வைக்கும் இந்தியாவின் தாரக மந்திரமான “வேற்றுமையில் ஒற்றுமையை” நடைமுறையில் நிகழ்த்திக் காட்டிச் சாதனைப் படைத்த மண் இந்தத் தமிழ்மண்.

 

திராவிடம், திராவிடர் என்ற இந்தியாவிற்குச் சொந்தமான சொல், பொதுவாகத் தமிழகத்துடன் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று தென்னக மொழிகளைப் பேசும் தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்களைக் குறிப்பிட்டாலும் குறிப்பாகத் தமிழகத்தையும் தமிழர்களையும் குறிக்கவே இச்சொல் நடைமுறையில் கையாளப்படுகின்றது. தன்னைத் திராவிடன் என்றும் இது திராவிட நாடு என்றும் கூறுவதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இறுமாந்திருந்தக் காலமும் உண்டு. அத்துணைக்கு இந்நாட்டில் வாழ்ந்தவர்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, ஏழை, பணக்காரன் என்றப் பாகுபாடு காண்பிக்காமல் திராவிடன் என்ற ஒற்றைச் சொல்லில் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு இருந்தனர்.

 

ஒரு காலத்தில் தமிழகத்தின் பல பாகங்களிலும் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் தங்களின் மத, இன அடையாளங்களை மறந்து மாமன், மச்சான், அண்ணன், சித்தப்பா என முறைகொண்டாடி இன்பமுடன் வாழ்ந்திருந்தனர். இப்பொழுதும் கூட சில கிராமப்புறப் பகுதிகளில் இத்தகையப் பழக்கம் தமிழர்களிடையே காணப்படுவது கண்கூடு.

 

எத்தகையப் பிரச்சனைகள் என்றாலும் தங்களிடையே பரஸ்பரம் உதவிகளைச் செய்து கொண்டு ஒரு குடும்பம் போன்று வாழ்ந்து வந்தத் தமிழக மக்களிடையே அண்மைக்காலங்களில் விரும்பத்தகாதப் பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருவதைக் காணமுடிகிறது. முக்கியமாக இணக்கமாக வாழ்ந்து வரும் சமுதாயங்களுக்கிடையில் பிணக்குகளின் மூலம் பிளவுகளைத் தோற்றுவிக்கவும் சமூகத்தில் ஒரு குறிப்பிட்டச் சமூகத்தைத் தனிமைபடுத்துவதற்குமான பல நிகழ்வுகள்  திட்டமிட்டே நடத்தப்பட்டு வருகின்றன. விடுதலைக்கான போராட்ட வேளையில் ஆங்கிலேயனுக்கு எதிராகக் கப்பலோட்டிச் சாதனைப் படைத்தவர் திரு. வ.உ. சிதம்பரனார் அவர்கள். இந்துச் சமுதாயத்தைச் சேர்ந்த அவருக்குக் கப்பல் வாங்குவதற்கானப் பண  உதவியை வழங்கியவர் ஒரு முஸ்லிம். இந்த அளவிற்குச் சுதந்திரத்திற்கு முன்னர் இருந்தத் தமிழக மக்களின் இணக்க வாழ்வு, இன்று தாடி வைத்த ஒரு முஸ்லிமை ஒரு இந்து பார்த்தால் “இவன் தீவிரவாதியாக இருப்பானோ?” என்ற சந்தேகப் பார்வையுடன் விலகிச் செல்வதற்கும் அவனுக்கு எதிராக ஏதாவது செய்ய முடியுமா? எனச் சிந்திக்கத் தலைபடுவதற்கும் சாத்தியம் நிறைந்ததாக இன்றையத் தமிழக நிலை கவலைக்குரிய மாற்றம் அடைந்துள்ளது.

 

இதற்கான காரணம் என்ன? உண்மையிலேயே தமிழக முஸ்லிம்கள் அவ்வாறான பயங்கரவாதிகள்தாமா? நாட்டு விடுதலைக்காகத் தனது மக்கள் தொகை வீதத்திலும் மிகமிக அதிகமாக இரத்தமும் இன்னுயிரும் ஈந்த இந்தச் சமுதாயம், தேச ஒற்றுமையைக் குலைக்கும்  செயலில் ஈடுபடுமா? சாத்வீகத்தையும் அமைதியையும் சகோதர, சமத்துவத்தையும் போதிக்கும் ஒரு மார்க்கத்திற்குச் சொந்தக்காரர்கள் மனிதநேயத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களா? இல்லை! நிச்சயமாக இல்லை!

 

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) புகாரீ 6018, 6136, 6475)

 

அண்டை அயலாரை மாமன், மச்சான்களாகச் சொந்தம் கொண்டாடி வாழ்ந்த இறையச்சம் கொண்ட எந்த ஒரு முஸ்லிமும், தான் ஏற்றுக் கொண்ட வாழ்வியல் முன்மாதிரியான இறைத்தூதரின் வார்த்தைகளை சிரமேற்கொண்டு வாழ்ந்து வரும் எந்த ஒரு முஸ்லிமும் அத்தகையச் செயல்பாடுகளில் ஈடுபடமாட்டான் என்பது திண்ணம். பின்னர் எப்படி, எதனால் இவர்களுக்குப் பயங்கரவாதப் பட்டம் சூட்டப் படுகிறது? அதற்கான விடையினை மிகத் தெளிவாகத் தென் மாநிலங்களில் அண்மையில் நடந்து வரும் சில நிகழ்வுகள் தெளிவாக்குகின்றன.

இதை வாசித்தீர்களா? :   குழந்தைகள் செய்த குற்றமென்ன?

 

இந்தியாவை அடக்கியாண்டுக் கொண்டிருந்த அந்நியனுக்கு எதிராக இந்திய மக்கள் ஒற்றுமையாகத் தங்கள் வீரியப் போராட்டங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்த 1924 களின் பொழுது, இந்தியச் சுதந்திரத்திற்காகப் போராட வேண்டும் என்ற நோக்கம் அல்லாமல் மற்றொரு நோக்கத்திற்காக – முஸ்லிம்களை அழித்தொழிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட RSS என்றக் கூட்டுப் பார்ப்பனப் படை, இந்தியச் சுதந்திரத்திற்குப் பின் கடந்த 60 வருடக் காலயளவில் இந்தியாவின் வட மாநிலங்களில் தங்களின் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான சிந்தனையை இந்துக்கள் மனதில் ஓரளவு விதைத்து விட்ட வெற்றியோடுத் தற்பொழுது தென்னக முஸ்லிம் சமுதாயத்தைத் தனிமைப் படுத்தி இல்லாமலாக்க வேண்டும் என்றத் தெளிவான திட்டத்துடன் களமிறங்கியுள்ளன. கடந்த சில வருடங்களாகத் தென் மாநிலங்களான கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு போன்றவற்றில் நிகழும் சில நிகழ்வுகளை ஊன்றிக் கவனித்தால் இது புலனாகும்.

 

முஸ்லிம் சமுதாயத்தைத் தனிமைப் படுத்த RSS எடுத்துக் கொண்ட ஆயுதமான “தீவிரவாதம், தீவிரவாதி” என்றச் சொல் வடக்கில் தற்பொழுது நன்றாக எடுபட ஆரம்பித்து விட்டது. ஏதாவது ஒரு காரணத்திற்காக ஒரு முஸ்லிம் கைது செய்யப்பட்டால் அவனை தீவிரவாதி என்ற அடைமொழியினூடாகவே அழைக்கும் வடநாட்டுப் பழக்கத்தைத் தென்னகத்தில் விதைப்பதற்கான முஸ்தீபுகள் விரைந்து எடுக்கப்பட்டுள்ளன.

 

இதன் வெளிப்படையான ஆதாரமே, கடந்த ஜனவரி 24 ஆம் தேதி தமிழகத்தின் முக்கிய நகரான தென்காசியில் மக்கள் கூடும் பேருந்து நிலையம் மற்றும் RSS அலுவலகம் மீது நடந்த வெடிகுண்டுத் தாக்குதல். இத்தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே இந்து முன்னணித் தலைவர் ராம கோபாலன் உட்பட அனைத்து இந்துத்துவ முக்கியஸ்தர்களும் ஒரே குரலில் “இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் கைது செய்” எனக் கூக்குரல் எழுப்பினர். தனது 1998 ஆட்சியின் பொழுது முஸ்லிம்களுக்கு எதிராகக் கோயம்புத்தூர் விஷயத்தில் நடந்து கொண்ட இன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியின் அதே ஆட்சி, இம்முறை எதிர்பாராத விதமாக நடுநிலையான விசாரணையின் மூலம் அடுத்தச் சில தினங்களிலேயே அக்குண்டுவெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்ட உண்மையான தீவிரவாதிகள் யார் என்பதை வெளிக் கொண்டுவந்தது.

 

ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டக் குண்டு வெடிப்புக்குக் காரணமானவர்கள், “கவனத்தைத் திருப்புவது மட்டுமே எங்களின் இலட்சியம்” எனக் கூறியப் பொய்யும் தொடர்ந்து வந்த பிப்ரவரி 17 உடைக்கப்பட்டது. தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த பிப்ரவரி 17அன்று, தென்காசி குண்டு வெடிப்பின் சூத்ரதாரியான தலைமைத் தீவிரவாதி கைது செய்யப்பட்டான்.  ஊடகங்கள் மூலம் மக்கள் மனதில் ஊட்டப்பட்டது போன்று கைதான தீவிரவாதி ஒரு முஸ்லிம் அல்லன். தென்காசியின் பக்கத்து நகரமான கடையநல்லூரின் இந்துமுன்னணி பொதுச் செயலாளர் சிவா என்ற சிவானந்தம் என்பவன்தான் தென்காசிக் குண்டு வெடிப்புகளின் சூத்ரதாரி. அது மட்டுமல்ல; இந்தச் சிவா என்கிற தீவிரவாதி முன்னர் வேலை செய்திருந்த பக்கத்து மாநிலமான கேரளச் செங்கல் குவாரியிலிருந்து அம்மோனியம் நைட்ரேட் உட்பட குண்டுகள் தயார் செய்யப் பயன்படும் பொருட்களைத் தமிழகத்துக்குக் கடத்தி வந்த பயங்கரவாதி என்பதும் தெரிய வந்துள்ளது.

 

இவ்வாறு கடத்தப்பட்டப் பொருட்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளன என்பது போன்ற விவரங்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. அதே நேரம் செங்கல் குவாரியை மையமாகக் கொண்டு கேரளாவில் RSS-ஐச் சேந்தவர்கள் வெடிகுண்டு தயார் செய்வதாகக் கிடைத்தத் தகவலின் பெயரில் கேரளக் காவல்துறை செய்த மின்னல் பரிசோதனைகளில் மட்டன்னூருக்கு அடுத்த கருஞ்சி போன்ற இடங்களிலுள்ள செங்கல் குவாரிகளிலிருந்துப் பயங்கர வெடிபொருட்களைக் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 12 அன்று அதே மட்டன்னூரில் ஒரு RSSகாரனின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் அவன் வீட்டிலுள்ளோர் படுகாயம் அடைந்த சம்பவமும் நடந்தது.

இதை வாசித்தீர்களா? :   ஒரு பேரிடரின் முடிவு - உலகம் நிம்மதிப் பெருமூச்சு!

 

பிப்ரவரி 28 அன்று திருவனந்தபுரம் மேற்குக் கோட்டையிலுள்ள மித்ரானந்தபுரம் ஆலயத்தின் பின்புறமுள்ள RSS காரியாலயமான சக்திநிவாஸிற்கு அருகில் இதே போன்று பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியுள்ளது. கேரளத்தில் ஆர்.எஸ்.எஸினர் நடத்திய பல அக்கிரமச் சம்பவங்களின் பொழுது நடத்தப்பட்டச் சோதனைகளில் பலமுறை வெடிகுண்டுகள் உட்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட அதே RSS அலுவலகம் தான் இந்த சக்திநிவாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேற்கண்ட இத்தனை நிகழ்வுகளையும் கூட்டிப் பார்க்கும் பொழுது ஒரு விஷயம் தெளிவாகப் புலனாகிறது. வடக்கில் தங்களது பிரிவினை இலட்சியத்தினை மிகச் சரியாகப் பூர்த்தி செய்து கனி கொய்யும் சங்கபரிவாரக் கும்பல் தற்பொழுது தங்கள் இலட்சியமாகத் தென்னகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது என்ற பயங்கர உண்மைதான் அது. இருமுறை இந்தியப் பாராளுமன்றத்தை ஆளும் நிலைவரை வந்து விட்ட சங்கபரிவாரத்தால் அதனை தனிப்பெரும்பான்மையுடன் தக்க வைக்க முடியாமல் தடுமாறும் அதன் அரசியல் இயலாமையை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

 

வடக்கில் கிடைக்கும் வாக்குகளுக்கும் பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் இணையாகத் தெற்கில் கிடைக்காதது, சங்கபரிவாரத்தின் ‘நித்திய கண்ட’த்திற்குப் பிரதானக் காரணமாகும். பாபரி மஸ்ஜிதிலிருந்து, தேச விரோதம் வரைத் தங்களின் அனைத்துத் துருப்புச் சீட்டுகளையும் இறக்கி இயன்றவரை நன்றாக நிலை கொண்டு விட்ட வடக்கு போன்று தெற்கில் இவர்களால் இது வரை நிலை கொள்ள இயலவில்லை.

 

அறுதிப் பெரும்பான்மைக்கான ஒரே வழி, தெற்கில் குறிப்பிட்ட அளவு தொகுதிகளைக் கைப்பற்றுவது மட்டுமே ஆகும். அதற்கான உபயம் தான் வடக்கில் பரிசீலித்த “தீவிரவாதத்” தந்திரத்தைத் தற்பொழுது தெற்கில் செல்லுபடியாக்க முயல்வது. அதற்காகத் தென்னகத்தின் அனைத்து மாநிலங்களிடையே மிகத் தெளிவான கட்டமைப்புடன் “முஸ்லிம் தீவிரவாதிகளை” உருவாக்குவதற்கான வெடிகுண்டுகளைப் பெருவாரியாக RSS தலைமையங்களில் பதுக்கித் தென்காசியைப் போன்று தேவைக்கேற்பத் தேவைப்படும் இடங்களுக்குக் கடத்தி வெடிக்க வைத்தலாகும்.

 

அடித்துப் பிடித்துக் கர்நாடகத்தில் சில பாராளுமன்ற தொகுதிகளைப் பெற்றிருப்பதும் கேரளத்தில் இதுவரை ஒரு தொகுதி கூட வெற்றி பெற இயலாததையும் தமிழகத்தில் கிடைத்ததை அதிகரிக்க எல்லாவிதத் தந்திரங்களையும் சங்கபரிவாரம் கையாள்வதை ஊன்றி கவனிக்க வேண்டும். 1990 வரை தமிழகத்தில் கால் ஊன்ற இயலாத பாஜகவிற்கு அங்கு முதன் முதல்  கோயம்புத்தூர் தொகுதி கிடைத்த முறையினை நினைவில் நிறுத்தி சிந்தித்துப் பார்த்தால் தென்னகத்தில் சங்கபரிவாரத்தின் அண்மைகால அதிவேகச் செயல்பாடுகளின் காரணம் தெளிவாக விளங்கும்.

 

எது எப்படியிருப்பினும் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்புக்கு மாசு விளைவிக்கும் சங்கபரிவாரத்தின் செயல்பாடுகள் தற்பொழுது தென்னகத்தைக் குறிப்பாக அமைதிப் பூங்காவான தமிழகத்தைக் குறி வைத்திருப்பது மட்டும் மிகத் தெளிவாக விளங்குகிறது.

 

மனித இனத்திற்கு எதிரான பார்ப்பனீய விஷத் தந்திரங்களுக்கு விலை போகாமல் திராவிடர்கள் என இறுமாந்திருந்தக் காலத்தை மறக்கடிக்கும் விதத்தில் தமிழகத்தை மாற்றி எடுப்பது சங்கபரிவாரத்திற்கு மிகக் கடினமான காரியம் ஒன்றும் இல்லை. தனது சாத்வீகப் போராட்டத்தின் மூலம் உலகச் சமுதாயத்தையே தன்பக்கம் ஈர்த்த காந்தி பிறந்த மண்ணான குஜராத்தையே சுடுகாடாக மாற்றியவர்களுக்கு வெறும் பகட்டு திராவிடமும் தடம் மாறும் பெரியாரிசமும் கூறி பதவி விளையாட்டு நடத்தும் திராவிட ஆட்சியாளர்களைக் கொண்ட தமிழகம் சுண்டைக்காயைப் போன்று தோன்றக் கூடும்.

 

காலம் கடந்தெனினும் இவ்வுண்மையை விளங்கிக் கொண்டு உடனடியாக சங்பரிவாரத் தீவிரவாத்தையும் பார்ப்பனத் தீவிரவாதிகளையும் ஒடுக்குவதற்குண்டான வழிவகைகளைக் குறித்து அனைவரும் – முக்கியமாக – முஸ்லிம்கள், கட்சி, அமைப்பு, இயக்க வேறுபாடுகளை மறந்து ஆலோசனை செய்வதற்கும் செயல்படுத்துவதற்கும் முன்வர வேண்டும். இல்லையேல், விஹிப வெறியர்கள் கூறியது போன்று “தமிழகமும் ஒரு குஜராத்தாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை”