பாம்புக்கு வார்த்த பால்!

Share this:

{mosimage}பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் பழங்குடி மக்கள் நிறைந்து வாழும் பிரதேசத்தின் மீது அமெரிக்கக் கூட்டுப்படையினர் நடத்திய விமானத்தாக்குதலில் 11 பாகிஸ்தான் இராணுவத்தினர் உட்பட 21 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.



இரவு நேரத்தில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டப் பழங்குடியினர் அனைவரும் அப்பாவிக் குடிமக்களாவர். பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப்பிரதேசமான டியூரண்ட் லைனிலிருந்து நான்கு கிலோமீட்டருக்கு அப்பால் பாகிஸ்தானிலுள்ள கிராமத்துக்குள் அமெரிக்கக் கூட்டுப்படையினர் அத்துமீறி நுழைந்து குண்டுகளைச் சரமாரியாக வீசித் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலில் கொல்லப்பட்ட பதினொரு இராணுவத்தினருள் பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த ஒரு மேலதிகாரியும் அடங்குவார். பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் செக்போஸ்ட் நிறுவுவதற்கு முயன்ற அமெரிக்கக் கூட்டுப்படையினரின் முயற்சியைப் பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப்படை தடுக்க முயன்ற பொழுது அவர்களிடையே ஏற்பட்ட கைகலப்பே அமெரிக்கப்படையினரின் இவ்வெறிச்செயலுக்குக் காரணம் என்று சொல்லப் படுகிறது. ஆனால், 11 பாகிஸ்தான் இராணுவத்தினரும் 10 பழங்குடி அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டதை, “கூட்டுப்படையினருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை” என வழக்கம்போல் பெண்டகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியிலுள்ள பழங்குடி பிரதேசங்களில் சி.ஐ.ஏவின் இரகசிய கேம்ப்களை நிர்மாணிக்கப் பாகிஸ்தான் அதிபர் முஷர்ரஃப் அனுமதி வழங்கியிருந்ததாகவும் அதற்காக சி.ஐ.ஏ பொதுச் செயலாளருடன் பாகிஸ்தானில் நேரடியாக ஓர் இரகசிய உடன்படிக்கை செய்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவோடு செய்து கொள்ளும் உடன்படிக்கைகள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் எழுதி வைக்கப் படும் சாட்சி ஆவணத்திற்கு ஒப்பானதாகும் என்பதை அரசுகளும் அரசுகளை ஆளும் தலைவர்களும் உணர்ந்து விழித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அடிமையாகப் போவது ஆள்வோர் மட்டுமல்ல; நாட்டில் வாழும் குடிமக்களுமாவர் என்பதை உணர்வதற்குள் காலம் கடந்து விடும்.

இராக்கை அடிமையாகவே ஆக்கிக் கொள்வதற்கு அமெரிக்கா வகுத்த இரகசியத் திட்டமும் அதற்காக வெளியில் சொல்வதற்காக உருவாக்கப் பட்ட “ஜனநாயக ஆட்சி” என்ற முழக்கமும் இப்போது திரை விலக்கப் பட்டுள்ளது.

2003ஆம் ஆண்டு கொடுங்கோல் ஆட்சியை நீக்கிக் குடியரசை நிறுவப் போவதாகச் சொல்லி இராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தது என்பது அந்நாட்டைத் தனது காலனியாக்கத்தான் என்பது குறித்து ஏதேனும் ஐயமிருந்தால் அதைத் துடைத்தெறிவதுபோல் உண்மையைத் தெளிவாக்கும் ஆவணங்கள் தற்போது தகவல் பெறும் உரிமைச் சட்டங்கள் மூலம் வெளியாகியுள்ளன.

இராக் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளின் மிக முக்கியமான குறிக்கோள் அந்நாட்டைத் தனது ‘மத்திய கிழக்கு நடமாட்டங்களுக்குத் தடையற்ற ஒரு காலனியாகப் பயன்படுத்தவே’ என்ற உண்மையும் தற்போது தெளிவாகியுள்ளது.

இந்த ஆவணங்களில் காணப்படும் திடுக்கிடும் தகவல்களின்படி அமெரிக்கா இராக்கைக் காலனியாக்கிக் கொள்வதன் மூலம்:

  1. உள்ளூர் இராக்கியர்களைப் பயங்கரவாதிகள் என்ற பெயரில் எவ்வித விசாரணையுமின்றிச் சிறையிலடைத்தல்
  2. கொடூரமான சித்திரவதைகள் மூலம் ஐயத்திற்கு உட்படும் எவரையும் பிடித்துப் போய் விசாரித்தல்
  3. அமெரிக்க இராணுவத்தினரோ அவர்தம் சேவைக்காக அமர்த்தப்படும் அமெரிக்க ஒப்பந்தக்காரர்களோ எல்லாவித உள்நாட்டுச் சட்டங்களிலிருந்தும் பன்னாட்டுச் சட்டங்களிலிருந்தும் தண்டனையில்லாக் காப்பு பெறல்
  4. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வரிகள், சுங்கத் தீர்வைகள் அனைத்திலிருந்தும் அமெரிக்கர்கள் விலக்குப் பெறல்

போன்றவற்றைச் சாத்தியப் படுத்தத் திட்டம் தீட்டியிருந்ததும் தெரிய வந்துள்ளது.

2003 நவம்பரின் போதே இராக்கில் பெயரளவில் இயங்கிய பொம்மை அரசுடன் இது போன்ற கட்டற்ற உரிமைகளையும் அதிகாரங்களையும் தரும் உடன்படிக்கையை அமெரிக்கா செய்ய விரும்பியது. ஆனால், அப்போது அமெரிக்கா விரும்பாத சில எதிர்விளைவுகள் ஏற்பட்டதால் அது தள்ளி வைக்கப் பட்டிருக்கிறது என்பதும் ஆவணப் படுத்தப்பட்டுள்ளது.

புஷ் அரசின் உரத்த முழக்கமான இராக்கில் குடியரசை நிறுவுதல் என்பது வெறும் உதட்டளவில் சொல்லப்படும் வெற்று வார்த்தைகள் என்பதையும் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிரந்தரமாக மத்தியகிழக்கில் நிறுவவே இராக்கின் மீது போர் தொடுத்துச் சீரழித்தது என்பதையும் அமெரிக்காவின் தேசிய ஆவணக் காப்பகத்தின் இந்த ஆவணங்கள் ஆணித்தரமாக நிறுவுகின்றன.

புஷ் தலைமையிலானத் தற்போதைய அமெரிக்க அரசு தற்போதைய இராக்கியப் பிரதமர் நூரி அல் மலிக்கியை இந்த உடன்படிக்கைகளை ஏற்று ஜூலை 2008க்குள் ஒப்பமிடக் கடும் நெருக்கடி கொடுத்து வந்தாலும் இராக்கியர்களிடையே இவ்வொப்பந்தங்களுக்கு மிகக்கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

இராக்கியர்களை இந்த உடன்படிக்கையின் மூலம் நிரந்தர அடிமைகளாக வைக்கத் துடிக்கும் அமெரிக்காவின் கொடிய திட்டத்தை அமெரிக்க ஆக்கிரமிப்பின் எதிர்ப்பாளர்கள் அறிவார்களா? அடிமைத் தனத்தை ஒழித்து உலகிற்கே மக்களாட்சியின் வழிகாட்டியாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அமெரிக்காவின் முகமூடி இன்னொருமுறை கிழிபட்டுத் தொங்குவதை, ‘நல்ல’ பாம்புக்குப் பால் வார்க்கும் எல்லா நாடுகளும் கண்டு கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.