ஒரு பேரிடரின் முடிவு – உலகம் நிம்மதிப் பெருமூச்சு!

இராக்கைச் சின்னாபின்னமாக்கிய புஷ்
Share this:

உலகப் பத்திரிகைகள் பலவும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாக்கர் புஷ்ஷின் பதவிக்காலம் முடிந்ததை ஒட்டி  தலையங்கங்கள் தீட்டியுள்ளன. பெரும்பாலான பத்திரிக்கைகள் புஷ் ஒரு தகுதியில்லாத, பண்பு சிறிதுமற்றத் தலைவர் என்றே சித்தரித்துள்ளன.

HTML clipboard

பெரும்பான்மைப் பத்திரிகைகள் “புஷ் செய்த அநியாயங்களுக்கு வரலாறு ஒருபோதும் அவரை மன்னிக்காது” எனத் தெரிவித்துள்ளன.

ஜெர்மனியின் Sueddeutsche Zeitung நாளிதழ், “பெரும்தோல்வி” என்ற பொருளில் “The Failure” என்ற தலைப்பிட்டு அவரைப்பற்றி எழுதுகையில் “உறுதியான கொள்கைகளுக்கும் விவேகமற்ற முரட்டுத்தனத்திற்கும் வேறுபாடு அறியாதவர்” என்று குறிப்பிட்டு எழுதி, “தன் பதவியின் மாபெரும் பொறுப்பை உணராத, தகுதியற்ற தலைவர்” என வருணித்துள்ளது.

அதோடு தேவையற்ற இரு போர்களை அமெரிக்க மக்களின் மீது திணித்து எண்ணிலடங்கா ஆப்கன், ஈராக் பொது மக்களைக் கொன்று குவிக்க புஷ் காரணியாக இருந்தார் எனவும் நல்ல நிலையில் கையிலெடுத்த அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து அதள பாதாளத்தில் தள்ளி உலகப் பொருளாதாரத்தை ஆட்டம் காணவைத்து உலகின் பல்வேறு மக்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்த ‘பெருமை’ இவரைச் சாரும் என்றும் அது கூறியுள்ளது.


அதேவேளை, ‘ஜெருஸலம் போஸ்ட்’ என்ற பெயரில் இஸ்ரேலில் இருந்து வெளியாகும் நாளிதழோ, “கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் புஷ்ஷைப் போன்று இஸ்ரேலின் உற்ற நண்பராயிருந்த அதிபரைக் காண இயலாது” என்று  புகழாரம் சூட்டியிருந்தது. “இஸ்ரேலும் அமெரிக்காவும் விடுதலை விரும்பிகள்; அதனால் இரு நாடுகளுக்கும் இருந்த பொது எதிரிகளைச் சரியாகக் கண்டறிந்து அழிக்க இஸ்ரேலுக்குப் பெரும் உதவிகள் செய்தவர் புஷ்” என்றும் தெரிவித்திருந்தது.

கனடாவின் ‘டொரண்டோ ஸ்டார்’ என்ற நாளிதழ், “உலகம் இதுவரை கண்டிராத ஆக மோசமான அதிபரை வழியனுப்பி விடையிறுப்போம்” என்று கூறியதோடு, “ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றி புஷ் ஒரு கடுமையான, தடுக்க இயலாத (unmitigated) கோமாளிக் கொடுங்கோலன்” என்றும் வருணித்துள்ளது. “ஆப்கன், இராக் போர்களைக் கையாண்ட விதத்திலாகட்டும், கட்ரீனா புயலின் பேரழிவைக் கையாண்ட விதத்திலாகட்டும், பொருளாதாரச் சீரழிவினைக் கட்டுப்படுத்துவதிலாகட்டும், புஷ் ஒரு தகுதியற்ற அதிபராகத்தான் இருந்தார்” எனச் சாடியுள்ளது.

பிரிட்டனின் ‘டெய்லி மெயில்’ நாளிதழ், “மத்தியக் கிழக்கைப் பற்றி எரியும் நெருப்பிலும் அமெரிக்காவைக் கடும் பொருளாதாரப் பற்றாக்குறையிலும் விட்டுச் செல்கிறார் புஷ். அவரது ஒரே சாதனை செப்டம்பர் 11, 2001க்குப் பிறகு அமெரிக்க மண்ணில் வேறு தாக்குதல்கள் நடைபெறாமல் பார்த்துக் கொண்டதே” எனக் கூறியுள்ளது.

ஸ்காட்டிஷ் நாளிதழான ‘டெய்லி ரெக்கார்டு’, “அமெரிக்காவை உலக மக்களில் பெரும்பாலானோர் வெறுப்பதற்கு மூல காரணமாகத் திகழ்ந்தவர் புஷ். அவரது போர்வெறி உலகைப் பாதுகாப்பற்ற ஓரிடமாக ஆக்கியுள்ளது; அவரது பொருளாதார அறிவின்மை அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீரழித்ததால் அதனைச் சார்ந்தே இயங்கும் உலகப் பொருளாதாரத்தையும் சீரழித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

பிரெஞ்சு நாளிதழான ‘Le Monde’, “புஷ்ஷை ஒரு பேராபத்து என்று வர்ணிக்காத ஒரே ஒரு வரலாற்றாய்வாளரைக் கூடக் கண்டுபிடிப்பது கடினம்” என்று கூறியுள்ளது.

அதே வேளை, ஜெர்மனியின் ‘ஸ்டெர்ன்’ நாளிதழ், “புஷ் தனது தகுதியின்மையால் உலகின் மிகப் பலம் பொருந்திய நாடான அமெரிக்காவைச் சிதைத்து விட்டார். பேரழிவு ஆயுதங்கள் என்ற பெயரில் கணக்கிலடங்காப் பொய்களை அவிழ்த்துக் கொட்டி, விடுதலை என்ற பெயரில் அப்பாவிகளைக் கடும் சித்திரவதை செய்து உலகை நாசப்படுத்தியவர் அவர்” எனக் கூறியுள்ளது.

அரபகத்தின் பல நாடுகளில் வெளிவரும் அரபி நாளிதழான ‘அல்-ஹயாத்’, “விதி வலியது என்பர். உண்மை தான்; அமெரிக்க மக்களை ஃப்ளோரிடா வாக்கு எண்ணிக்கையில் கைவிட்ட விதி, எட்டு ஆண்டுகள் அவர்களை மட்டுமின்றி உலகையே வாட்டியது” என்று நையாண்டி செய்திருந்தது. “எனினும் புஷ் தனது பதவிக்காலத்தில் பாதி நாட்களைச் சுற்றுப் பயணத்தில் கழித்ததால் இது போன்ற இருமடங்கு சேதம் விளைவிப்பதிலிருந்து விதி நம்மைக் காப்பாற்றியுள்ளது” என்று தொடர்ந்து எழுதியுள்ளது.

ஆஸ்திரியப் பத்திரிக்கையான ‘Wiener Zeitung’, “புஷ்ஷை விட ஈரானிய அதிபர் மஹ்மூத் அஹமதிநிஜாத் ஒரு சிறந்த உலகத் தலைவராவார்” என எழுதியுள்ளது. “நீதியின் சின்னமாக விளங்கிய அமெரிக்காவை நாசமாக்கியவர் புஷ்; ஆனால் உலகில் மனித நேயத்துடன் அனைவருக்கும் குரல் கொடுப்பவர் அஹமதிநிஜாத்” என்று தெரிவித்துள்ளது.

புஷ்ஷை அவர் மொழியில் வர்ணிப்பதானால் நாம்தான் அவரை “misunderestimate” செய்து விட்டோமோ எனத் தோன்றுகிறது.

முஸ்லிம் உலகு புஷ்ஷுக்குக் கொடுக்க வேண்டிய பட்டத்தை ஏற்கனவே வெனிஸுலா அதிபர் கொடுத்து விட்டார்.

கிருமிகள் ஒழியட்டும்; உலகு தழைக்கட்டும்!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.