பயங்கரவாதமும், மேற்கத்திய உலகமும்!

Share this:

சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்ற கட்டுரை. – சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு

 

 

முன்னுரை:

 

ஐரோப்பிய நாடுகளில், நபி(ஸல்) அவர்கள் சம்பந்தமாக அச்சான கேலிச்சித்திரங்கள், ஒரு பயங்கரவாதமாகும். நபி(ஸல்) அவர்கள் உலகம் முழுக்க வசிக்கும் 150 கோடி முஸ்லிம்களின் வாழ்வியல் முன்மாதிரி. 24 மணிநேரமும் விடாமல் உலகின் ஒவ்வொரு மூலையிலும் அல்லாஹ்வுக்கு அடுத்தபடியாக சதா உச்சரிக்கப்படும் – முஸ்லிம்களின் வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டிய தலைவரின் பெயர் முஹம்மத் நபி(ஸல்).

 அவர்களை இறைத்தூதராக ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவரும், அன்னாரின் பெயர் உச்சரிக்கப்படும் போது, மாபெரும் அவரது ஆளுமையால் ஈர்க்கப்பட்ட இதயங்களிலிருந்து, "அல்லாஹ்வே! எங்களருமை நபி(ஸல்) அவர்கள் மீது சாந்தியும், சமாதானமும் பொழிவாயாக" என்று பீரிட்டு வரும் இறைஞ்சுதலோடுதான் உச்சரிப்பார்கள்.

 

நபியின் சிறப்பு:

 

வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல; மறைந்த பின்னரும் மிகச் சிறந்த பண்பாளராக இன்றுவரை உலக அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப் படுகிறார்கள் நபி(ஸல்). மனித இனத்துக்கான மிகச் சிறந்த முன்மாதிரி, முழுமனித இனத்துக்காக இறைவனால் அனுப்பப்பட்ட திருத்தூதர் அவர்கள். இறைவனின் கட்டளைகளின்படி இம்மியும் பிசகாமல், நடமாடும் உதாரணமாக வாழ்ந்தவர் நபி(ஸல்). "அவர்களது வாழ்க்கை எப்படி இருந்தது?" என்பதைக் குறித்து அறிந்து கொள்ள வந்த நபித்தோழர்களிடம், "'நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனின் போதனைகளின்படியே இருந்தது" என ஆயிஷா(ரலி) பதிலளித்தார்கள்.

 

ஒழுக்கதூய்மை:

 

நபி(ஸல்) அவர்களின் ஒழுக்கத் தூய்மை தனி நபர் வாழ்க்கையில் மட்டுமல்ல, சமூக-கூட்டு வாழ்விலும் மலர்ந்து மணம் வீசியதே, அவர்களது ஆளுமையின் ஒப்பற்ற சிறப்பு.

 

சக உயிர்களின் துன்பங்களைக் கண்டு இரங்குபவராக..

அனைத்து மத மனிதர்கள் மீதும் அளவற்ற கருணை கொண்டவராக.

ஆதரவற்றோருக்கு புகலிடம் அளிப்பவராக..

பிழைகளைப் பொறுக்கும் பெருந்தன்மையாளராக.

மிகவும் பணிவு மிக்கவராக.

எதற்கும் அஞ்சா நெஞ்சுரம் கொண்டவராக.

சொல் திறன் மிக்கவராக

சிறந்த அறிஞராக.

திட்டமிடுபவராக

மக்களை ஒன்றுபடுத்துபவராக.

சமூக பிரக்ஞை மிக்கவராக

தலைசிறந்த இறைநம்பிக்கையாளராக.. திகழ்ந்தவர்.

 

சதா சர்வ காலமும் மக்கள் பணியில் திளைத்தவர். உறவு முறைகளைப் பேணியவர். தவறாமல் இறை வணக்கங்களில் ஈடுபட்டவர். இரவு நேரங்களில் விழித்திருந்து அவரைப் போல இறைவனை வனங்கியவர் வேறு எவருமிலர். நல்லாசிரியராக, ஆன்மீகத் தலைவராக, அரசியல் தலைவராக, நீதிபதியாக, படைத்தளபதியாக, மிகச் சிறந்த கணவராக, பாட்டனாராக, வணிகராக, அண்டை வீட்டாராக இதுவரையிலும் யாரும் இருந்ததில்லை. இந்தக் குணங்கள் மிகைப்படுத்திக் கூறப்படுபவையல்ல; துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ள வரலாறுகளாகும்.

 

நபித்துவத்திற்கு முன்:

 

இறைத்தூதராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பாக, மக்காவாசிகளால், "உண்மையாளர் (அஸ்ஸாதிக்), நம்பிக்கைக்குரியவர் (அல் அமீன்)" போன்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டவர். அவரது எதிரிகள் கூட நபி(ஸல்) அவர்களிடம் எந்தக் குறையையும் காணவில்லை. சாமான்யரோடு, மிகவும் சாமான்யமானவராகவே அவைகளில் அமர்ந்திருப்பார்கள். முதன்மை இருக்கைக்கு எப்போதுமே முந்தியதில்லை. அவர்களை முதன் முறையாகக் காண்பவர்கள், அன்னாரை அடையாளம் தெரிந்து கொள்ள முடியாது. 23 ஆண்டுகால தியாகங்களுக்குப் பிறகு மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது, எதிர்க்க எவருமின்றித் தனது பிறந்த மண்ணில் வெற்றி வீரராக நுழைந்த போதும் அவர்களிடம் எவ்வித இறுமாப்போ, செருக்கோ இல்லை.

 

கருத்துச் சுதந்திரம்:

 

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரால், காலங்காலமாக, மேற்கத்திய உலகம் இஸ்லாம் மீதும் முஸ்லிம்கள் மீதும் காட்டிவரும் துவேஷத்தின், பயங்கரவாதத்தின் தொடர்ச்சிதான், நபி(ஸல்) அவர்களை அவமதித்து வெளியிட்டுள்ள கேலிச்சித்திரங்கள். மேற்கத்திய சமூகம் நடந்து கொண்ட விதம் முட்டாள்தனமானது; விஷமத்தனமானது. கருத்துச் சுதந்திரம் என்ற போர்வைக்குள் மற்றவர் உள்ளங்களைக் காயப்படுத்தக் கூடாது.

 

பயங்கரவாதம்:

 

'பயங்கரவாதம்' என்பது சர்வதேச ரீதியாகவோ அல்லது ஏதாவதொரு நாட்டிலோ காணப்படும் நிறுவனமயப்பட்ட சமாதான ஒழுங்குக்கு எதிராக, சட்டபூர்வமற்ற வன்முறையை அல்லது வன்முறை அச்சுறுத்தலைப் பயன்படுத்தி அதற்கான காரணம் நியாயமானதா இல்லையா என்பதற்கு அப்பால் நின்று கிளர்ச்சி செய்வதாகும்.

 

இதன்படி, பயங்கரவாதம் என்பது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட, சட்டபூர்வமான அரசுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் கிளர்ச்சியைக் குறிக்குமே தவிர, இன்று நாம் காண்பதுபோல ஆக்கிரமிப்புப் படைகளால் நிறுவப்படும் பொம்மை அரசுகளுக்கெதிராக மேற்கொள்ளப்படும் கிளர்ச்சியைக் குறிக்காது. வலிமையுள்ள நாடுகளால், பலவீனமான நாடுகளுக்கெதிராகப் பிரயோகிக்கப்படும் அரசு மட்டத்திலான ஆக்கிரமிப்பும் பயங்கரவாதம்தான். இந்தப் பின்னணியில் கடந்த நூற்றாண்டைத் திரும்பிப் பார்ப்போமாயின், எவ்வித நியாயமோ, சட்டபூர்வமோ அற்ற படையெடுப்புகளுக்கும் காலனியத்துவத்திற்கும் சுரண்டலுக்கும் பொறுப்பானவர்கள் யார் என்பதை மிகத் தெளிவாகக் கண்டு கொள்ள முடியும். உண்மையில் இன்று மேற்கத்திய நாடுகளால் மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறைகளுக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் பலியாகுபவர்கள் முஸ்லிம்களாகவே உள்ளனர்.

 

உண்மைக்கு புறம்பு:

 

'அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாதிகளல்ல; ஆனால், அனைத்து பயங்கரவாதிகளும் முஸ்லிம்களே!' மேற்குலகத்தால் திரும்பத் திரும்பப்  பேசப்படும் இக்கருத்து, முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும்.

 

பயங்கரவாதம் புதிதல்ல:

 

கி.பி. 1881ஆம் வருடம் கிளர்ச்சியாளர்கள் இரண்டாவது அலெக்ஸாண்டரையும், அவரருகிலிருந்த 21 நபர்களையும் கொன்றார்கள். கி.பி. 1901இல் கிளர்ச்சியாளர்கள் அமெரிக்க அதிபர் மெக்கின்லியையும் இத்தாலி அரசர் முதலாவது ஹம்பர்ட்டையும் கொன்றார்கள். கி.பி. 1914 ல் ஆஸ்திரியா நாட்டின் கோமகன் ஃபெர்டினான்ட் கொலை செய்யப்பட்டார். கி.பி. 1948இல் நமது தேசத் தந்தை என்று அழைக்கப் பட்ட காந்திஜி சுட்டுக் கொல்லப் பட்டார். நமது முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தியும் அவர் மகன் ராஜீவ் காந்தியும் வன்முறைக் கூட்டத்தால் கொல்லப் பட்டனர். இவ்வன்முறைத் தாக்குதல்கள் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்டதல்ல.

 

பகத்சிங், சந்திரசேகர் ஆஸாத் மற்றும் இந்திய விடுதலைப் போராளிகள் பலரையும் ஆங்கில அரசு பயங்கரவாதிகள் என்றே குறிப்பிட்டது. இவர்கள் முஸ்லிம்களல்லர். மாஸேதுங்(சீனா), ஹோசிமின்(வியட்நாம்), கேஸ்ட்ரோ(கியூபா) ஆகியோர் ஆட்சியிலமரும் வரை பயங்கரவாதிகள் என்றே அழைக்கப்பட்டனர். அவர்களில் எவரும் முஸ்லிம்களல்லர். இரண்டாம் உலகப்போருக்குப் பின், யூதக்குழுவினர்கள் – ஹகனாஹ், இர்குன், ஸ்டேர்ன்கேங் ஆகியோர் யூதநாட்டைத் தோற்றுவிக்க விரும்பி, பலஸ்தீனத்தில் வன்முறை, பயங்கரவாதத்தில் ஈடுபட்டனர். அப்போதைய பிரிட்டிஷ் அரசு அந்த யூதக் குழுவினர்களை பயங்கரவாதிகள் என்றே அழைத்தது. அவர்தம் வழித் தோன்றல்கள் இன்றுவரை பயங்கரவாதத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டு, பலஸ்தீன மண்ணின் மைந்தர்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.

 

ஜெர்மனியில் கி.பி. 1992 வரை பாடர் மெய்ன் ஹாஃப் குழுவினர் எண்ணற்றவர்களைக் கொன்றார்கள். இத்தாலியில் செம்படையினர் முன்னாள் பிரதமர் அல்டோமோரோவைக் கடத்திச் சென்று கொலை செய்தனர். ஜப்பானின் புத்த அமைப்பான அவும் தின்ரிக்யோ, டோக்கியோ நகரின் பாதாள ரயில் பயணிகள் ஆயிரக்கணக்கானோரை கி.பி. 1995-இல் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் விஷவாயுவைப் பயன்படுத்தி கொன்றது. அயர்லாந்து குடியரசுப்படை ஒரு பயங்கரவாத அமைப்பாகும். இ.டி.ஏ. என்ற அமைப்பும் அப்படியே. உகாண்டாவில் செயல்பட்டு வரும் 'கடவுளின் இரட்சண்ய சேனை' (L.S.A) எனும் கிறித்தவ அமைப்பும் இலங்கையில் விடுதலைப்புலிகள் எனும் அமைப்பும் பயங்கரவாத அமைப்புகளே. இந்தியாவில், பஞ்சாப் தீவிரவாதிகள், அஸ்ஸாம் மாநில ஐக்கிய விடுதலைப்படை, அஸ்ஸாமிய போடோ வன்முறைக்குழு, மிசோரம் கிறித்தவ வன்முறைக்குழு, மாவோயிஸ்ட் வன்முறைக்குழு ஆகிய அத்தனை அமைப்புகளும் பயங்கரவாத அமைப்புகளே. இருப்பினும், வன்முறை அமைப்புகள் அனைத்தும் முஸ்லிம் அமைப்புகளே என்று பரவலாகக் கருதப்படுவதற்குக் காரணம் மேற்கத்திய உலகின் ஊடகங்களின் தொடரான பொய்ப் பிரச்சாரமேயாகும்.

 

இஸ்லாம் என்பது உலகம் முழுதும் அமைதியை விரும்புகின்ற – அமைதியை நிலைநாட்ட வந்த ஒரு வாழ்க்கை நெறியாகும்.

 

முடிவுரை:

 

மேற்காணும் விவரங்களிலிருந்து, இஸ்லாத்திற்கும், நிகழ்கால பயங்கரவாதத்திற்கும் தொடர்பு இல்லை என புலப்படுகிறது.

 

துணை நின்றவை:

 

1. அல்-ஜிஹாத் வல் இர்ஹாப் பேராசிரியர். ரமளான் ஜுமுஆ இஸ்லாமிய சர்வதேச பல்கலைக்கழகம், இஸ்லாமாபாத் பதிப்பு ஏப்ரல் 200

2. பயங்கரவாதம் முஸ்லிமின் தனி உரிமையல்ல சுவாமிநாதன் சண்டே டைம்ஸ் ஆஃப் இந்தியா, புது தில்லி பதிப்பு ஆகஸ்ட் 2006

ஆக்கம்: மீ. அப்துல்லா

 

2007-ஆம் ஆண்டுக்கான சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டியில் பங்கு கொண்டு கட்டுரையை அளித்த சகோதரர் மீ. அப்துல்லா அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதோடு எதிர்காலத்தில் பரிசுகள் வெல்ல வாழ்த்துகிறோம்! – சத்தியமார்க்கம்.காம்
  
2007-ஆம் ஆண்டு சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப்போட்டி முடிவுகளை அறியவும் பரிசுகளை வென்ற அனைத்துக் கட்டுரைகளையும் படிக்கவும் இங்கு சொடுக்குங்கள்

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.