மீடியாக்களின் மறைத்தலும் திரித்தலும் – தீர்வு என்ன?

Share this:

சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்ற கட்டுரை. – சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு


முன்னுரை:


உலகம் நாளுக்கு நாள் மாறி வருகிறது. ஒரு காலத்தில் உலகின் இரும்புத் திரையாய் இருந்த சோவியத் ரஷ்யா நம் சமகாலத்திலேயே சிதறிப்போனது. அந்த வெறுமையைப் பயன்படுத்திக் கொண்டு தற்போது ஆயுத பலத்தால் அமெரிக்கா உலக நாடுகளை ஆக்கிரமித்து வருகிறது. இந்த அராஜகத்திற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. துப்பாக்கி முனைகள் தீர்வாகாது என்று உணரத் தொடங்கியுள்ளன.


சித்தாந்தங்கள்:

உலகின் அனைத்துச் சித்தாங்களும் இஸங்களும் மனிதரிடையே நம்பகத் தன்மையை இழந்து நிற்கின்றன. இது மிகவும் ஆபத்தானது. மறைமுகமாக இஸ்லாத்தை சேதப்படுத்தும், இஸ்லாமியக் கதிரொளியை மறைக்கும் முயற்சி. ஆனால் பயப்படத் தேவையில்லை குர்ஆன் கூறுகிறது. “மெய்யாகவே கஷ்டத்துடன் சௌகரியம் இருக்கின்றது” (அல்குர்ஆன் 94:6).


ஒவ்வொரு கஷ்டத்திற்குப் பிறகும், ஒரு சௌகரியம் உலகில் ஏற்பட்டு வரும் அனைத்து நிகழ்விலும் இறையருளால் பெருகி வருகின்றன. இது இஸ்லாத்திற்கு சாதகமாகும்.


தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம்:

இன்றைய நாட்களில் உலக மக்களால் இஸ்ஸாம் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கு முக்கிய காரணம், திட்டமிடப்பட்டு இஸ்லாத்துக்கு எதிரான பொய்ச் செய்திகளைப் பரப்ப தொடர் முயற்சிகள் செய்து வரும் மீடியாக்கள். அவை, பத்திரிக்கைகள் போன்ற பிரிண்ட் மீடியாவாக இருந்தாலும் சரி, அல்லது டி.வி போன்ற விஷ்வல் மீடியாக்களாக இருந்தாலும் சரி, முஸ்லிம்களுக்கெதிரான கருத்துத் திரிபுகளை உருவாக்க அனைத்துவகை ஊடகங்களும் முனைப்புடன் செயல்பட்டுவருகின்றன. “தீவிரவாதிகள்”, “மதவாதிகள்”, “ஆள் கடத்துபவர்கள்”, “விமானக் கடத்தல் காரர்கள்”, “கொடூரமானவர்கள்”, “சர்வாதிகாரிகள்”, “காட்டு மிராண்டிகள்” போன்ற சொற்பிரயோகங்கள் முஸ்லிம்களுக்கான செய்திகளில் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றன.


இஸ்லாமியத் தீவிரவாதம், பழமை வாதம், கற்காலத் தண்டனைகள், கலகக்காரர்கள் போன்ற பதங்களை இஸ்லாத்தோடு சேர்த்துப் பயன்படுத்த மீடியாக்கள் தயங்குவதில்லை. அதே நேரத்தில், முஸ்லிம்களின் தரப்பிலோ, இஸ்லாத்திற்கு எதிரான இந்தப் பிரச்சாரத்துக்குப் போதிய அளவில் எதிர்வினை இல்லை. இதை முறியடிக்கும் முயற்சிகளில் தகவல் தொடர்புக் களத்தில் முஸ்லிம்கள் முழு மூச்சாக இறங்கவும் இல்லை. இதை ஒரே நாளில் முறியடித்து விடவும் முடியாது.


ஊடகங்களின் இரட்டை முகம்:

சொந்த நாட்டை அநியாயமாகக் கைப்பற்றிக் கொண்ட அமெரிக்கர்களை எதிர்க்கும் இராக்கியர்கள் பயங்கரவாதிகள் என்று செய்திகளில் கூறப்படுகிறார்கள். ஆனால், அப்பாவி இராக்கியர்களையும் ஆப்கானியர்களையும் கொன்று குவிக்கும் அமெரிக்கப்படையினரை, “ஆக்கிரமிப்பாளர்கள்”, “பயங்கரவாதிகள்’ என்று அவர்கள் சார்ந்துள்ள சமய அடையாளங்களை வைத்து இதே ஊடகங்கள் அழைப்பதில்லை. அதேபோல, சொந்தத் தாய் மண்ணை இழந்து நிற்கும் பலஸ்தீன சுதந்திரப் போராட்ட வீரர்களைத் “தீவிரவாதிகள்” என்கின்றன மீடியாக்கள். ஆனால், ஐ.நா.வின் எந்தக் கட்டளைக்கும் உலக நீதிமன்றத்தின் எந்த அறிவுரைக்கும் அடிபணியாத இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களை “யூதத் தீவிரவாதி”களாக இதே மீடியாக்கள் குறிப்பதில்லை.


இந்த அளவுகோலின்படியே இந்திய மற்றும் மேற்கத்திய ஊடகங்கள் கொஞ்சமும் குறையாமல் செய்திகளைத் தருகின்றன. மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் உண்மைக்கு எதிரான செய்திகளை வெளியிடுகின்றன.

  • பாபர் மசூதியை இடித்தவர்கள்
  • அதற்குத் தூண்டுகோலாக இருந்தவர்கள்
  • அதைத் தொடர்ந்து நடந்த படுகொலைகளுக்கு காரணமானவர்கள்

முன்னாள் பிரதமர் வாஜ்பேயிலிருந்து தமிழகத்தின் இல. கணேசன் உட்பட சங்பரிவார் கும்பலைச் சேர்ந்த அனைவரும் பயங்கரவாதிகள், இந்துத் தீவிரவாதிகள் என்று இந்த மீடியாக்கள் பிரச்சாரம் செய்திருந்தால், இந்த பாசிஸ்டுகளை ஆட்சியில் ஏற விடாமல் தடுத்திருக்கலாம். இந்திய வரலாற்றில் களங்கம் ஏற்படாமல் காத்திருக்கலாம். ஒருமைப்பாட்டிற்கும் சமய நல்லிணக்கத்திற்கும் அடித்தளம் இட்டிருக்கலாம். நரேந்திர மோடிகள் போன்ற மனித மாமிசத் தின்னிகளை கடுமையாகத் தண்டித்திருக்கலாம்.


விளைவு?:

இந்த ஒரு சார்புடைய போக்கினால், பாதிக்கப்படுவது முஸ்லிம்கள் மட்டுமல்ல; ஒடுக்கப்பட்ட அனைவரும் தான். இதற்கு விலை கொடுக்கப்போவது முஸ்லிம்கள் மட்டுமல்ல; நாளைய இந்திய ஒட்டுமொத்தத் தலைமுறையும்தான்.


தீர்வு:

அநீதிக்கு எதிரான மாற்றாக சத்தியத்தை இன்னும் பல மடங்கு உத்வேகத்தோடு எடுத்து வைக்க வேண்டும். அசத்தியம் என்னும் காரிருளை விரட்டவேண்டும். சத்தியம் எனும் பேரொளியை ஏற்றவேண்டும். இதில்தான் நமது இம்மை மறுமை வெற்றி அடங்கியிருக்கிறது. இஸ்லாம் சம்பந்தமாகத் தவறாகப் பரப்பபட்ட பிரச்சாரத்திற்கு எதிராக உண்மையை எடுத்துரைக்க வேண்டிய பெரும்பணி இது. முஸ்லிம்கள் தங்கள் அழைப்புப் பணியை முடுக்கிவிட வேண்டிய நிலை. இல்லையெனில், இந்த ஊடகப் பிரச்சாரங்கள் முஸ்லிம் இளைய சமுதாயத்தைக் கடுமையாக பாதிக்கும். தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். கற்பனையான குற்ற உணர்வு பிடித்தாட்டும். இறையருள் பெற்ற மார்க்கத்தில் பிறந்ததற்குத் தங்களை நொந்து கொள்ளவேண்டிய மோசமான சூழ்நிலை உருவாகும்.


முடிவுரை:

அசத்தியத்தை விரட்டியடிக்கும் துடிப்பு, முஸ்லிம் சமுதாயத்திற்கு முதலில் தேவை. இழந்து போன ஆளுமையை முஸ்லிம்கள் திரும்பப் பெற வேண்டும். மனிதகுல நன்மைக்காக ஒன்று திரண்டு பாடுபட வேண்டும். இதற்காக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை ஓரணியில் திரட்டி அழைப்புப் பணியை முடுக்க வேண்டும்.


இன்று முழுமனித குலத்திற்கும் மிக மிக அத்தியாவசிய தேவை ஒரு சீரிய வழிகாட்டுதல். அது இஸ்லாத்தால் மட்டுமே முடியும்.


துணை நின்றவை

  1. இஸ்லாத்திற்கு எதிரான விமர்சனங்களும், விளக்கங்களும் – அபுஆஸியா – ஃபுர்கான் டிரஸ்ட், சென்னை 94, பதிப்பு 2001.
  2. அழைப்புப்பணி – அபுஆஸியா – ஃபுர்கான் டிரஸ்ட், சென்னை 94. பதிப்பு 2001
  3. தேசியவாதமும், இஸ்லாமும் – அப்துல்ஹமீது – இலக்கியச் சோலை, சென்னை 3. பதிப்பு 2002.
  4. இஸ்லாமிய பிரச்சாரம் – அப்துல் பதி ஸக்கர் –  இலக்கியச் சோலை, சென்னை 3. பதிப்பு 2002.
  5. முன்மாதிரி முஸ்லிம் – முஹம்மத் அல்ஹாஷிமி – தாருல் ஹுதா, சென்னை 1, பதிப்பு 2003.


ஆக்கம்: முஹம்மத் அபூபக்கர்.


2007-ஆம் ஆண்டுக்கான சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டியில் பங்கு கொண்டு கட்டுரையை அளித்த சகோதரர் முஹம்மத் அபூபக்கர் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதோடு எதிர்காலத்தில் பரிசுகள் வெல்ல வாழ்த்துகிறோம்! – சத்தியமார்க்கம்.காம்

2007-ஆம் ஆண்டு சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப்போட்டி முடிவுகளை அறியவும் பரிசுகளை வென்ற அனைத்துக் கட்டுரைகளையும் படிக்கவும் இங்கு சொடுக்குங்கள்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.