பாலையில் வருமா சோலை?

வைகறைக் குழந்தையைப் பெற்றுப் போட்டு விட்டு இரவுத்தாய் ஓய்வெடுத்துக் கொண்டாள்.

வேலைக்குப் புறப்பட ஆயத்தம் செய்து கொண்டிருந்த ஆட்களை அழைத்துச் செல்வதற்காக கேம்ப் வாசலில் வந்து நின்ற வாகனத்திலிருந்து எழுப்பப் பட்ட நீ……ண்ட ஹார்ன் ஓசையில் அரபு டிரைவரின் அவசரம் தொனித்தது.

உடலும் உள்ளமும் ஒருசேரத் தந்த சோர்வில் இன்று நான் வேலைக்குப் போகவில்லை. நேற்று உம்மாவிடமிருந்து கடிதம் வந்திருந்தது . கடுமையான தொடர்க் காய்ச்சலாம்!

“… நாளுக்கு நாள் என் உடல்நிலை மோசமாகி வருகிறது . எல்லா வைத்தியமும் பார்த்தாகி விட்டது; குணமில்லை. உன்னை மறுபடியும் பார்க்க முடியாமலேயே அல்லாஹ் என்னை மவுத்தாக்கி விடுவானோ என்னவோ! இந்தக் கடிதம் கண்டதும் உடனே புறப்பட்டு வா “

கடிதத்தில் கண்டிருந்த வாசகங்கள் என் இதயத்தையே கசக்கிப் பிழிந்தன! பாலோடு சேர்த்துப் பாசத்தையும் ஊட்டி, அன்புமழை பொழிந்து என்னை ஆளாக்கி, இன்று எனக்கென இவ்வுலகில் உயிர்வாழும் ஒரே ஆதரவு என் உம்மா! அவர்களுக்கு ஏதும் நேர்ந்து விட்டால் … என் சிந்தனையை, ‘அப்படியெல்லாம் நினைத்துப் பார்க்காதே!’ என்று அறிவு தடுத்து நிறுத்தப் பார்க்கிறது.

கடிதத்தைப் படித்த மறுகணமே பறந்தோடிச் சென்று என் உம்மாவைப் பார்க்க வேண்டுமென மனம் கிடந்து துடிக்கின்றது! ஆனால் என் நிலை …? பக்கத்து ஊரா? பஸ் ஏறிப் போய்ச் சேர! அன்னைபூமியை விட்டும் ஆயிரக் கணக்கான மைல்கள் தாண்டி அரபு நாட்டிலன்றோ வந்து சிக்கிக் கொண்டேன்! ஒப்பந்தக் காலம் முடியுமுன் ஊருக்குப் போவதென்பது இந்தக் கம்பெனியில் ஆகக்கூடிய காரியமா? எனக்குத் தெரிந்து அப்படி யாருக்கும் அந்தச் சலுகை கிட்டவில்லை.

என்னதான் செய்வது?

ஆ…! என் சினேகிதன் ஷிஹாபுதீன் மூலமாக முயன்று பார்க்கலாமா? ஆம், அதுதான் சரி! வேலையாட்களுடைய அன்பிற்கும் நிர்வாகத்தின் நம்பிக்கைக்கும் ஒருசேரப் பாத்திரமானவன் அவன்தான். ஏறத்தாழ நம்ம ஊர் லேபர் யூனியன் மாதிரி. அவனாலான உதவிகளை மற்றவர்க்குச் செய்வான். ஆனால்… யாருக்கும் சிபாரிசு செய்ய மாட்டானே! என்றாலும் … நான் இங்கு வந்துதான் பத்தொன்பது மாதங்களாகி விட்டனவே ? ஒப்பந்த காலம் முடிவடைய இன்னும் ஐந்தே ஐந்து மாதங்கள்! உள்ளதைச் செல்லி ஊருக்குப் போக உதவி செய்யுமாறு கேட்டுப் பார்க்கலாம். அதற்குமேல் அல்லாஹ் விட்ட வழி!

()()()

“என்னப்பா பக்கத்திலே ஆளு வந்து நிக்கிறதுகூட தெரியாம பெரிய யோசனையிலே மூழ்கிப் போயிட்டே? நேத்து மிஸ்ரிக்கும் உனக்கும் தகராறாமே?” கேட்டவாறே வந்து அமர்ந்தான் ஷிஹாபுதீன் .

“அதெல்லாம் சரியாப் போச்சு. உன்னத்தான் நெனச்சுக்கிட்டிருந்தேன், நீ வந்து நிக்கிறே! நீயும் இன்னக்கி வேலைக்குப் போகலையா ?”

இதை வாசித்தீர்களா? :   பாலையில் வருமா சோலை? (இறுதி பகுதி)

“இன்னைக்குச் சம்பள நாளாச்சே ! நேத்து ஆபீஸ் போயிருந்தப்போ மேனேஜர் செக்கைத் தந்து , ‘காலையிலேயே பேங்குக்குப் போய் பணம் எடுத்து வந்துடு’ ன்னாரு. நேத்து உனக்கு ஒரு தபால் வந்திருந்திச்சி. உன்னத்தேடிப் போனா, நீ O.T. கட் அடிச்சிட்டு கேம்புக்குப் போயிட்டதா ஆளுங்க சொன்னாங்க . அப்புறமா கொண்டு வந்து தரலாம்னு நானே வச்சிக்கிட்டேன்; ஆனா நேத்து வரமுடியாம போயிடுச்சி . அப்புறம் …”

“அப்புறம் நடந்ததெல்லாம் சாவாகாசமா நாளக்கிச் சொல்லு; இப்ப தபாலைத் தா!”

பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு கசங்கிப் போயிருந்த கடிதத்தை எடுத்தான். பிடுங்காத குறையாக வாங்கி அனுப்பு முகவரி பார்த்தேன்.

மாமாவா …? மிக முக்கியமான செய்தி இல்லா விட்டால் எனக்கு எழுத மாட்டாரே! உம்மாவைப் பற்றிய செய்தியோ?

“சரி … நான் புறப்படுறேன் . ம் … ஏதோ என்னப் பத்தி நெனச்சிக்கிட்டிருந்ததா சொன்னியே …?”

“ஒரு முக்கிய செய்தி உன்னிடம் பேசனும்; சாயங்காலம் வேலய முடிச்சிட்டு வாயேன். வரும்போது என் சம்பளப் பணத்தையும் கேட்டு வாங்கி வந்துடு!”

“சரி, சரி நான் புறப்படுறேன்” நண்பன் சென்று விட்டான்.

ஆவலும் அச்சமும் போட்டியிட, மனதை ஒருவாறாக அமைதிப் படுத்திக் கொண்டு கடிதத்தை மெல்…லப் பிரித்துப் படிக்கலானேன் . உம்மாவுக்குக் காய்ச்சல் குணமாகி வருகிறதாம். இரண்டொரு தினங்களில் பூரண நலமடைந்து விடுவார்களென்று மருத்துவர்கள் கூறி இருப்பதாக மாமா எழுதியிருந்தார்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் என்னுடைய துஆவை ஏற்றுக் கொண்டு விட்டான்! ஒருகணத்தில் என் சஞ்சலங்கள் யாவும் எங்கோ பறந்தோடி மறைந்தன.

தொடர்ந்து படிக்கலானேன். படிக்கப் படிக்க இதயம் நொறுங்கி சுக்கல் சுக்கலானது..

ஆக்கம்: ‘மதி நா’ ஜமீல்