அவன் போட்ட கணக்கு!

Share this:

அது ஃபஜ்ரு நேரம்!

பாங்கின் ஒலி காலை இளந்தென்றலில் தவழ்ந்து ஒவ்வொரு வீட்டின் திரைச்சீலையையும் விலக்கி உள்ளே எட்டிப் பார்த்தது. பாங்கு சொல்லும் அப்துல்லாவின் அந்தக் கணீரென்ற குரல் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களையும் தட்டி எழுப்பி விடும்.

மரியம் ‘ஃபஜ்ரு’த் தொழுகையை முடித்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக இப்ராஹீம் சாஹிபின் வீட்டை அடைந்தாள். அடுக்களையில் ஆயிஷா, சுவையும் மணமும் கலந்த தேநீர் தயாரித்துக்கொண்டு இருந்தாள். அவளது கைப்பக்குவத்தில் தயாரிக்கும் தேநீருக்கு ஒரு தனிச்சுவை உண்டு.

“அக்கா வந்துட்டீங்களா?, இன்னும் காணோமேன்னு அல்லாடிக்கிட்டு இருந்தேன். சீக்கிரம் நாஷ்டா ரெடி பண்ணுங்க, அவரு வெளியே கிளம்பனும்”.

“இதோ ஒரு நொடியில் தயாராயிடும்”. பம்பரமாகச் சுழன்றாள் மரியம். வேலைக்கு அமர்த்தப்பட்டப் பெண்ணாக இருந்தாலும் தாய்-பொண்ணு பாசம்தான் இருவருக்கும்.

தும்பைப்பூ போன்ற இடியாப்பம், தேங்காய் பால், ஆட்டுக்கால் பாயா, மல்லிகைப்பூ இட்லி, கோழிக் குருமா, நெய் தோசை, பொதினா சட்டினி அனைத்தும் டைனிங் டேபிளை அலங்கரித்தன.

ஆயிஷா கணவனுக்குப் பார்த்து பார்த்து பறிமாறிக்கொண்டு இருந்தாள். “என்னங்க, இன்றைக்கு வெள்ளிக்கிழமை. எந்த வேலையாக இருந்தாலும் ‘ஜும்மா’ தொழுகையை மறந்திடாதீங்க! மறக்காம தொழுகையில கலந்துக்குங்க!”

“என்ன ஆயிஷா, நான் இன்றைக்கு வியாபார விஷயமாக ஒருத்தரை சந்திக்கனும். ரொம்ப நாளைக்கப்புறம் இன்றைக்குத்தான் அப்பாயிம்மெண்ட் கிடைச்சி இருக்கு. கைநழுவி போயிடுச்சின்னா பெரிய நஷ்டமாகி விடும். முயற்சி செய்றேன். நீதான் 24 மணி நேரமும் ஆண்டவன் பின்னாலேயே இருக்கிறேயே. ‘பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்’ன்னு சொல்லுவாங்க. உன் இபாதத்தில் எனக்கும் பங்கில்லையா?”, கண்சிமிட்டி குறும்பாகச் சிரித்தார் இப்ராஹீம் சாஹிப்.

“ரொம்ப தப்புங்க! இப்படியெல்லாம் பேசி ஆண்டவன் கோபத்திற்கு ஆளாகிடாதீங்க. முஸ்லிமா பொறந்த ஒவ்வொருவருக்கும் ‘தொழுகை’ கடமைங்க”.

“சரி சரி விடு. அவசரமா போகனும். வந்து பேசிக்கலாம்.” கிளம்பி விட்டார் இப்ராஹீம்.

மரியம் ஆயிஷாவுக்காகப் பரிதாபப்பட்டாள். “இந்தப் பொன்ணும் எவ்வளவோ சொல்லிப்பாக்குது. தினமும் இதற்காகவே இரவு கண்விழித்து தஹஜ்ஜுத் தொழுது தம் கணவர் திருந்திடவும் ஈமானோடு வாழ்ந்திடவும் அல்லாஹ்விடம் மன்றாடுகிறது. என்ன செய்றது. இவரு பொறந்ததுமே அத்தாவும் அம்மாவும் ஆக்ஸிடண்ட்லே மவுத் ஆயிட்டாங்க. வளர்த்தவங்களும் சரியில்லே, சேர்க்கையும் சரியில்லே. ஓதிப்படிச்ச பொண்ணை கட்டிவச்சா சரி ஆகிடும்னு நினைச்சாங்க. முடியலே. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்… அவருக்கும் ஒரு நேரம் வரும்”. மனசுக்குள்ளேயே புலம்பிப் தீர்த்தாள்.

“அக்கா வாங்க, நாஷ்டா செஞ்சுட்டு மதிய வேலையப் பார்ப்போம். ஆண்டவன் மேலே பாரத்தை இறக்கி வச்சுட்டேன்”.

“ஸபுர் செய்யும்மா, உன் மனம் போல் நடக்கும்”, ஆறுதல் கூறினாள் மரியம்.

“ஹஜ்ஜுக்குப் போகப் பணம் கட்டிட்டீங்களா அக்கா?”

“இன்னும் இல்லையேம்மா! எனக்கு விவரம் தெரிந்த நாள்ளேயிருந்து ஹஜ்ஜுக்குப் போகணூம்னு கொள்ளை ஆசை. கொஞ்சம் கொஞ்சமா 60ஆயிரம் கட்டிட்டேன். இன்னும் 20 ஆயிரம்தான் பாக்கி. இன்ஷா அல்லாஹ் இந்த வருஷம் என் ஹாஜத் நிறைவேறிடும் என்று நினக்கிறேன்.” கண்கள் கலங்க பதிலுரைத்தாள் மரியம்.

“இன்ஷா அல்லாஹ்” ஆண்டவன் நிறைவேற்றி வைப்பான், சாப்பிடுங்க” நம்பிக்கை ஊட்டினாள் ஆயிஷா.

மாலை ஆறு மணிக்கு வீடு திரும்பினார் இப்ராஹீம் சாஹிப். கை கால் அலம்பி ஆயாசமாக சோபாவில் சாய்ந்தார். ஆயிஷா ஆவி பறக்க தேநீர் கொண்டு வந்து வைத்தாள். கணவனுடன் எவ்வளவு மனக்கஷ்டம் இருந்தாலும் தன் கடமையிலிருந்து அவள் தவறுவதே இல்லை.

இப்ராஹீம், மனைவியின் முகத்தைப் பார்த்தார். முகம் வாடி இருப்பதன் காரணம் அவருக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் வாயைத் திறக்காமல் இருப்பதே ‘ஸலாமத்’ என்று கண்டும் காணாதது போல் இருந்து விட்டார்.

கணவர் தினசரி படித்துக்கொண்டு நல்ல மூடில் இருப்பதைக் கவனித்த ஆயிஷா ஆர்வமுடன் அருகில் வந்தாள். “என்னங்க, அக்கா மரியம் ஹஜ்ஜுக்குப் போக ரூ.60 ஆயிரம் கட்டிட்டாங்களாம். இன்னும் ரூ.20 ஆயிரம்தான் பாக்கியாம். அதை நாமே கட்டிட்டு, இன்ஷா அல்லாஹ்! நாமும் ‘ஹஜ்’ செய்திடலாங்க!.”

“என்னது! ரூ.20 ஆயிரமா? அஞ்சு, பத்து பஸ்ஸுக்குக் கொடுத்து அனுப்புங்கன்னு சொல்ற மாதிரில்லே பேசறே. இதை சம்பாதிக்க நான் எவ்வளவு கஷ்டப்படுறேன்னு தெரியுமா உனக்கு”

“ஏங்க பணம் பணம்னு பணத்திலேயே குறியா இருக்கிறீங்க. ‘தீன்’ மேலேயும் கொஞ்சம் நாட்டம் வைங்க. நமக்கு திருமணம் ஆகி 10 வருஷம் ஆகுது. பேருசொல்ல ஒரு பிள்ளை இல்லை. இருக்கிற சொத்து தலைமுறைக்கும் போதும்”.

“சரி ஆயிஷா, இப்போதைக்கு வாக்குவாதத்தை நிறுத்தி விடுவோம். பேசப் பேச மனக்கஷ்டம்தான் மிஞ்சும். எது எப்போ நடக்குமோ அப்போதான் நடக்கும். உள்ளே போய் வேலை இருந்தாப் பாரு. நான் கொஞ்சம் கணக்கு வழக்குப் பார்க்கனும்.”

“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்… மேலே ஒருத்தன் கணக்கு பண்ணிக்கிட்டுத்தான் இருக்கான். நீங்க போடுற கணக்கு எல்லாம் எம்மாத்திரம்.”

“என்ன முணுமுணுப்பு அங்கே”. இரைந்தார். “ஒண்ணுமில்லே” எனக்கூறி ஓடி மறைந்தாள் ஆயிஷா.

வாசலில் நிழலாடியது. நிமிர்ந்து பார்த்தவர், “யாரது லத்தீப் பாயா! என்ன விஷயம்?உள்ளே வாங்க”.

நம்ம ஊர் ‘ஜமாத்’ உங்களைப்பார்க்க வந்து இருக்காங்க. வரச்சொல்லுட்டுங்களா?

“அதான் வந்துட்டாங்கில்லே! வரச்சொல்லு”.

“அஸ்ஸலாமு அலைக்கும்”

“வலைக்கும் ஸலாம், உட்காருங்க”.

இவர்கள் வந்ததை அறிந்த ஆயிஷா அனைவருக்கும் தேநீர் கொடுத்தனுப்பினாள் லத்தீப் பாயிடம். வந்த காரணத்தை ஆரம்பித்தார் ஜமாத் செயலாளர் மொய்தீன். “நம்ம ஊரு பள்ளி வாசல் ரொம்ப நாளா கூரைக்கட்டிடமாவே இருக்கு. இடமும் போதுமானதா இல்லே. ஜும்மா தொழுகை, பண்டிகை தொழுகை எல்லாத்துக்கும் பக்கத்து ஊருக்கு போக வேண்டி இருக்கு. நம்ம பள்ளி வாசலை பக்கா கட்டிடமா கட்டித் தந்தா நல்லா இருக்கும். அது உங்களாலேதான் முடியும்”. “வரப்போற மழைக்குத் தாங்காது. பெண்கள் தொழவும் இடம் ஒதுக்கனும்” மற்றவர்களும் இடைஇடையே யோசனை கூறினார்கள்.

“எல்லாம் சரிதான். நீங்க சொல்றதைப் பார்த்தா சிம்பிளா கட்டினாக்கூட கிட்டத்தட்ட மூன்று லட்சம் வரை ஆகும் போல இருக்கே” சற்று நேரம் மவுனமாக இருந்தவர், “யோசித்து சொல்றேன், போயிட்டு வாங்க”. நறுக்கென வார்த்தைகளை முடித்துக்கொண்டார். எதிர்ப்பார்ப்போடு வந்தவர்கள் மனக்கஷ்டத்தோடு திரும்பினர்.

இவர்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்த ஆயிஷாவுக்கு வழக்கம்போல் ஏமாற்றம் தான். சமையலறைக்கும் வாசலுக்கும் நடந்துக்கிட்டு இருந்த மனைவியைப் பார்த்து, “ஏன் குட்டிப்போட்ட பூனையைப்போல இங்கிட்டும் அங்கிட்டும் தவிச்சிக்கிட்டு இருக்கே?” எரிச்சல் பட்டார் இப்ராஹீம்.

இன்னும் அக்கா வரலீங்க. மணி 9 ஆகுது. ஒண்ணுமே ஓடலே. இதுவரைக்கும் இப்படி நடந்ததில்லே. என்ன ஆச்சுன்னு தெரியலே!

“இன்னும் வரலையா? எல்லாம் நீ கொடுக்குற எடம்தான். யார் யாரை எங்கு வைக்கணுமோ அங்குதான் வைக்கனும். அப்போதான் நம்மிடம் பயம் இருக்கும்.” சந்தடி சாக்கில் கந்துப்பொடி ஊதினார் இப்ராஹீம்.

விடிந்ததும் விடியாததுமாக வந்து சேர்ந்தாள் மரியம். ஆயிஷாவுக்கு ஆச்சரியம். “என்னக்கா ! சொல்லிக் கொள்ளாம நிக்க மாட்டீங்களே… உடம்பு சரியில்லையா?

“இல்லம்மா கண்ணு! திடீரென எதிர்பாராத சூழ்நிலை. வேலை முடிய ராத்திரி 11 மணி ஆயிடுச்சி”.

“அப்படியா! எனக்குத் தெரியாம அப்படி என்ன பிரச்சனை உங்களுக்கு?”.

மரியம் குரலைக்கேட்டுக் கொல்லைப்புரம் வந்த இப்ராஹீமை, அவர்களின் பேச்சு தடுத்து நிறுத்தியது.

“நேற்று வேலைக்கு வழக்கம்போல் வந்துக்கிட்டு இருந்தேன். வழியில் என் பழைய சினேகிதி ஜைனப்பைப் பார்த்தேன். அவளுடைய நிலை என்னை நிலை குலைய வச்சுடுச்சும்மா. ஓரளவுக்கு நல்லா வாழ்ந்த குடும்பம். திடீரென வியாபாரம் நொடிஞ்சிப் போயிடிச்சி. அவள் கணவனும் படுக்கையில் விழுந்திட்டாரு. மகள் திருமணத்திற்கு வைத்திருந்த பணமும் சேர்ந்து செலவானதுதான் மிச்சம். அவரும் ‘மவுத்’ ஆகிட்டாரு. சொந்தபந்தமும் கையை விரிச்சிட்டாங்க. பரிசம் போட்ட மாப்பிள்ளை வீட்டாரும் குடும்ப பாரம் தன் மகன் தலையில் விழுந்திடுமோ என பயந்து நழுவிட்டாங்களாம். பாவம்! சொல்லி கதறி அழுதது இன்னும் என் கண் முன்னாலேயே நிக்குது”.

வயசுக்கு வந்த இரண்டு மகள்களின் எதிர்காலத்தை எண்ணிக் கண்கங்கினாள். நான்தான் தைரியம் சொல்லி தேற்றினேன். அப்போ எனக்கு திடீர்ன்னு ஒரு யோசனை வந்தது. எனக்குத் தெரிஞ்ச ஓதிப்படிச்ச பையன் ஒருவன் இருந்தான். அம்மா இல்லே. அத்தா மட்டும்தான். வசதி குறைவு. இருந்தாலும் பையன் தங்கக் கம்பி. இரண்டு வீட்டாரிடமும் பேசி முடித்தேன். ஹஜ்ஜுக்குக் கொடுத்தப் பணத்தை திருப்பி வாங்கி, செலவுக்கு ஜைனபிடம் கொடுத்துட்டு வரேன். இனிமேல் அல்லாஹ் பார்த்துக்குவான்”.

ஒரு கன்னிப் பெண்ணிற்கு வாழ்க்கையையும் அமைத்துக் கொடுத்து தன்னுடைய வாழ் நாள் உழைப்பையையும் உபகாரமாக கொடுத்து, தன்னடக்கத்தோடு பேசும் மரியம் பீபியின் உயர்ந்த உள்ளம் இப்ராஹீம் சாஹிபை உலுக்கிப் போட்டது!

பேச்சு தொடர்ந்தது…

“என்னக்கா சொல்றீங்க! உங்களுடைய பல்லாண்டு கனவாச்சே! ரெத்தத்த வியர்வையா சிந்தி ஓடா உழைத்த பணமாச்சே!

“அட போம்மா. பணமாவது ஒண்ணாவது. நாம வாழும் இந்த வாழ்க்கையே நிலையில்லே! இந்த உலகத்திலே நமக்கு எத்தனை நாளைக்கு ‘ரிஸ்க்’குன்னு தெரியலே. கண்மூடி திறக்குறத்துக்குள்ளே என்னன்னமோ நடந்துடுது. நாம உசிரோடு இருக்கும்போதே நம்மால் ஆன நல்லதை, யோசிக்க நேரம் கொடுக்காமே செய்திடணும். யோசிக்க ஆரம்பிச்சா ‘ஷைத்தான்’ கெடுத்துடுவான். அப்புறம் அந்தச் சந்தர்ப்பம் நமக்கு கிடைக்குமோ இல்லையோ?.”

“ஹஜ்க்கு போக பேர் கொடுக்க இன்னும் இரண்டு மாதம் இருக்கு. இதுக்குள்ளே அல்லாஹ் நாடினா எவ்வளவோ மாறலாம். எதுவும் நம் கையிலில்லே. ஆதரவற்ற எத்தீம் பிள்ளைகளுக்கு கலியாணம் செய்வது, பள்ளி கட்டுவது எல்லாம் ஆண்டவனுக்கு பிடித்தமானதுன்னு சொல்லுவாங்க”.

“நாம் சந்தோஷப்படுவதைவிட மற்றவர்களைச் சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதான் உண்மையான சந்தோஷம். எம்மனசு இப்போ நிறைஞ்சு இருக்கு. அண்ணன் சத்தம் போடுவார். நீ போய் அவரை கவனி. நான் என் வேலையைப் பார்க்கிறேன்”.

மரியம் பீபியுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் ‘சம்மட்டி அடியாய்’ இப்ராஹீம் சாஹிபின் இதயத்தில் ஆழமாக இறங்கின; அவரைச் சிந்திக்கவும் செய்தன. நாம் வாழும் வாழ்க்கையும் பணமும் நிலையானது இல்லை; ‘தீன்வழியில்’ நடப்பதும் மார்க நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதும்தான் ஒரு உண்மையான முஸ்லிமுக்கு அடையாளம் எனத் தெளிந்தார். உடம்பில் புதிய இரத்தம் பாய்ந்தது போல இருந்தது அவருக்கு. இந்த மன சாந்தி இதுவரை நமக்கு கிடைக்கவில்லையே! இதுதான் ஹிதாயத்தோ! ஆச்சரியப்பட்டார்!!.

இது நாள்வரை அவருடைய ஆழ்மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த ‘இப்லீஸ்’ கல்லெடுத்து அடிக்காமலேயே காத தூரம் பறந்தான்.

இதுநாள்வரை யாருடைய அறிவுரையையும் ஏற்காத அவருடைய உள்ளம், நல்ல காரியங்களுக்குச் செவி சாய்க்காத அவருடைய குணம் எல்லாம் ஒரு ஏழைப் பெண் மரியம் பீபிவுடைய உயர்ந்த நோக்கத்தாலும் செயலாலும் மாறிப் போனது; அவரைப் புது மனிதனாகியது. சுறுசுறுப்பாகச் செயல்பட ஆரம்பித்தார்.

மொய்தீன் பாய் வீட்டிற்குச் சென்று பள்ளி வாசல் கட்ட விருப்பம் தெரிவித்தார். ஐந்து லட்சம் ரூபாயில் கட்டிடம் ஆரம்பிக்க ஆவன செய்யும்படி உணர்ச்சி பொங்க கூறினார். ஒரே நாளில் அவருடைய மாற்றத்துக்கு காரணம் புரியாமல் வியந்தார் மொய்தீன் பாய். இருந்தாலும் ஆண்டவனுக்கு நன்றி கூறிக் காரியத்தில் இறங்கினார்.

“ஆயிஷா ! உன் விருப்பம் போலவே உன் அக்கா மரியம், நாம் இருவர் ஆக மூவரும் ‘ஹஜ் பயணம்’ இன்ஷா அல்லாஹ் போகப்போறோம். என்ன! சந்தோஷந்தானே! இன்ப அதிர்ச்சிக் கொடுத்தார் இப்ராஹீம்.

ஆயிஷாவுக்கு அவருடைய மாற்றத்தைக்கண்டு வியப்பாக இருந்தது. “ஆமீன், ஆமீன்; யாரப்பல் ஆலமீன்”, அவளையும் அறியாமல் அவளுடைய வாய் முணுணுத்தது. சந்தோஷத்தில் வானமே கீழிறங்கி வந்ததுபோல் குதூகலத்தில் மயங்கிச் சாய்ந்தாள்.

இப்ராஹீம் சாஹிப் துடித்து விட்டார். ‘வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்தது போல, “யா அல்லாஹ், என் குடும்பத்தைக் கொண்டு என்னை சோதித்து விடாதே! யா அல்லாஹ்!!”, இரு கையேந்தி துவா கேட்டார்; அழுதார். மரியம் ஆறுதல் கூறினாள்.

லேடி டாக்டர் வரவழைக்கப்பட்டார். அவரது பதிலுக்காக இதயம் படபடக்கக் காத்திருந்தனர் அனைவரும். டாக்டர் அறையைவிட்டு வெளியே வந்தார். சிறிய மவுனத்திற்குப்பின், “பாய்! பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்யுங்க! நீங்க அத்தாவாகப் போறீங்க”. காதில் தேன் பாய்தது. “யா அல்லாஹ்! நீயே மிகப்பெரியவன். எல்லாப்புகழும் உனக்குத்தான். நான் மனம் மாறிய குறுகிய காலத்திலேயே நாங்கள் ஏங்கித் தவித்த மிகப்பெரிய பாக்கியத்தைக் கொடுத்து விட்டாய்! அவரையும் அறியாமல் கண்கள் கலங்கி விட்டன.

மகிழ்ச்சியோடு மனைவியைப் பார்த்தார் இப்ராஹீம். வெட்கத்தால் ஆயிஷா முகம் சிவந்து இருந்தது. மனம் அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹு அக்பர்!! என்று ஆர்ப்பரித்தது.

அள்ளிக்கொடுப்பதில் அரசருக்கெல்லாம் அரசனான அல்லாஹ்வை யார் மிஞ்ச முடியும்? அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!!

ஆக்கம் : கல்லை நூர்ஜஹான் ரஹீம்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.