நிலைபெறச் செய்வாய், இறைவா!

யா அல்லாஹ்!

தாகத்தில் தொண்டை
தகிக்கையில்
ஒவ்வொரு துளி நீரின்
மூலக்கூறும்
உன்னருள் பொதிந்த
மூலம் கூறும்.

புசிக்காமல்
பசியின் சுவையை
ருசித்திருந்தோம்
சாவைக்கூட
சாத்தியப்படுத்தும்
பட்டினி பற்றிப்
பட்டுத் தெளிந்தோம்.

உறக்கம் ஜெயிக்கும்
வைகறைப் போதில்
இமைகளில் ஏறிய
சுமைகள் அழுத்த
நின்னருள் நாடி
விழித்திருந்தோம்.

“பொருளில்லார்க்கும் இவ்வுலகுண்டு;
நம்மில் அவர்தம் பங்குண்டு”
உன் வேதம் பயின்று
பொருளில்லார்க்குப்
பரம்பொருள் நின்றன்
அருள்தனை நாடி
மெய்ப்பொருள் அறிந்து
கைப்பொருள் பகிர்ந்தோம்

சில்லறையாகவும் மொத்தமாகவும்
நற்செயல் செய்தோம்
பதிந்து வைப்பாய் இறைவா!
மறுமையின் மைதானத்தில்
எழுப்பப்படும் நாளில்
கூட்டியும் பெருக்கியும் நன்மையை
ஏட்டில் வைப்பாய் – சொர்க்கம்
காட்டிவைப்பாய்.

எல்லா நேரமும் உன்
நினைவிருந்தும்
ஐவேளை வணக்கத்தில்
அமைதி கண்டோம்
இரவிலும் தொழுதோம்
இறையுனைத் துதித்து.

இறைமறைதனை
அனுதினம் ஓத
அனுக்கிரகம் செய்தாய்
புரிந்த வசனங்களால்
புல்லரித்த போதும்
பொருளறியா வசனங்கள்
பலநூறு கடந்தும்
புனிதம் புரிந்தே
படிப்பதைத் தொடர்ந்தோம்.

தூறல் அருட்கொடை மாறி
சாரலாய்ப் பொழிய
கடைசிப் பத்தில்
அடைமழை கண்டோம்
அகக்குடை மடக்கி
அளவற்ற நின்றன்
அருள்மழையில் நனைந்தோம்.

இருளைக் களைந்து
நின்றன்
அருளொளி நிறைத்த
இத்தகு மாதம்
இனியொரு முறை
எம்மை அடைய
அருள்புரி இறைவா!

அதுவரை இந்த
அற்புத மாதம்
அருளிய மாற்றம்
நிலைபெறச் செய்வாய், இறைவா!

– சபீர்

இதை வாசித்தீர்களா? :   முல்லைப் பெரியாறு