கலங்கரை இதோ கைக்கெட்டும் தூரத்தில்…

Share this:

{mosimage}தூக்கம் வருவதில்லை;
துயர உள்ளம் நினைந்து
பாடும் பாட்டெல்லாம் முகாரிதான்; என்ன செய்ய
புலம்புவது எனக்கு புதிய அனுபவமல்ல!

வார்த்தைகள் முழுவதும் கண்ணீர் மழை, வெப்பம்
வாய்ப்புகள் நிறைய இருக்கிறதென்று
வானிலை அறிக்கை கேட்டேன்
எதற்கும் கொஞ்சம் தள்ளி நின்றே கேளுங்கள்!

"ஒற்றுமையில்தான் அபிவிருத்தி உள்ளது"
உன்னத போதனை உலகிற்கு வந்ததறிவோம்!
உணர்ந்தோமா நாம் – அதை ஒவ்வொருவர்
உடன் பிறந்தோரையே பகைக்கின்றோம்! ஏன்?

"…ஒருவரை ஒருவர் பலப்படுத்திக்கொள்ளுங்கள்"
உலகமறை போதனையை ஒப்புக்கொண்டோமா நாம்?
கொஞ்சம் பொறுங்கள், கொட்டும் அருவி போல்
குபீர் அழுகை என்னை குறி பார்த்து அணைக்கிறது!

கருத்து வேறுபாடுகளை களத்திலிறக்கினோம்
கடுமையான சண்டையிலும் களிப்பு மிகு வெற்றிதான் – விளைவு?
கடும் குழப்பத்தில் மக்கள்! அதை சரி செய்ய
குழுக்கள் இன்னுமொரு ஆயிரம்!!

கழகம், ஜமாத், இயக்கம், கொள்கை, நிலைப்பாடு…
பட்டியல் நீண்டு கொண்டே போகிறது
பெருமைப்பட முடியவில்லை, ஆகவே அழுகிறேன்
பலனின்றி போகாது என்ற எதிர்பார்ப்பில்…

செய்யும் முறை முக்கியமல்ல – சீரீய
சிந்தனைகள்தான் முக்கியம்…! இதை
கேட்பதற்கே இத்தனை குதூகலமென்றால்
கிஞ்சித்தும் நடைமுறைக்கு சாத்தியமில்லையோ? சிந்திப்போமே!

மன்னிப்பு சமரசத்திற்கு வரும்வரை
நிறுத்தப்பட்டிருக்குமே! அய்யகோ!
மனமொத்த சகோதரர்களே
சமாதானம் பேச சக்தியிழந்து விட்டீர்களே!

முகம் பார்த்து புன்முறுவலித்து
ஸலாம் சொல்லி கை கோர்த்து சகோதரர்களாய்,
நபி வழியே நம் வழி என்று
சேர்ந்தே உலா வருகின்றோம் பாசத்துடன்…

சந்தோஷம் ஏனோ அதிக நேரம் நீடிக்கவில்லை…

விழித்துக்கொண்டேன்! கனவு கலைந்து விட்டது!!

காலம் கடந்துவிட்டது – கவின்மிகு
நம் படகு கரையை தொலைத்து விட்டது;
முயற்சி செய்வதில் பயனில்லை;
மூழ்கிப்போய் விட்டோமென்கிறார்கள் சிலர்!

இல்லை! இல்லை!!

இதோ கேளுங்கள் பாங்கொலியை – சகோதரர்களே
வேறுபாடுகளை விடுத்து நம் வல்லோனை தொழ
வாருங்கள் விரைந்தோடி – வான்புகழ் நபி வழியில்
வளம் சேர்க்க போகலாம் வாஞ்சையுடன்!!

கலங்கரை இதோ கைக்கெட்டும் தூரத்தில்!!

 

ஆக்கம்: அபு ஷிஃபா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.