
இழுப்பிலும் உமிழ்விலும்
உள்ளே வெளியே
உலாச்சென்ற சுவாசம்
வெளியே சென்றதோடு
மூப்பிலும் பிணியிலும்
உள்ளே வராமல்
நின்றுவிட
அகவை முதிர்ந்த
அப்பா ஒருவர் மவுத்தானார்!
(அவனிடமிருந்தே வந்தோம்
அவனிடமே மீளுவோம்)
அவரின்
அத்தனை அபிமானிகளையும்
வெளியே இருத்தி
உடலை
உட்கூடத்தின்
உள்ளே கிடத்தி
அவர்தம்
அனுமதியின்றி
துணிமணி அகற்றி
உள்ளுடல் பிதுக்கி
வெளியுடல் குளிப்பாட்டி
நறுமண மூட்டி
நல்லுடை அணிவித்து
உள்ளேயோ வெளியோவோ அன்றி
நடுவீட்டில் கிடத்தி…
பின்னர் …
அண்ணாரைச் சுமந்து
அவருக்காகத் தொழுது
தெருவிற்கு வெளியே உள்ள
மையவாடியின்
உள்ளே சென்றபோது…
மண்ணுக்கு மேலேயும்
மட்டப்பாவிலும்
மகிழ்ந்திருந்த மனிதருக்கு
மண்ணுக்குக் கீழே
சதுர அடிக் கணக்கிட்டு
அறை ஒன்று
தயார் நிலையில் இருக்க…
பச்சைப் பாம்புகளென
காய்கள் தொங்கும்
முருங்கை மரத்திலிருந்து
மூன்றல்லது நான்கடிக்கு உள்ளே
அடை மழைக்கு முன்னே
அடக்கம் செய்த
வாப்பாவின் கபுரைத்
தேடிப் பிடித்துக்
கண்கள் வருடின!
கபுரின் தலைமாட்டிலும்
கால்மாட்டிலும்
குத்தி இருந்த
கட்டைகள்
கோணங்கள் பிசகி
சாய்ந்திருக்க
பிரண்டைக் கொடிகள்
சறுகுக ளாகியிருக்க
அவற்றிற்கிடையே
வெளியே மேடிட்டிருந்த
வாப்பாவின் கபுருஸ்தான்
உள்ளே சற்றே அமிழ்ந்தும்…
வசிப்பின் உள்ளே
இருந்தபோது
வசீகரித்த வாப்பா
கபுருக்கு வெளியே
என்னை நிறுத்த…
பனித்தன விழிகள்!
என் காற்றும்
வெளியே நிற்கும் நாளில்
என்னுடலை
உள்ளே கொணரும்போது
வாய்க்கப்போகும் கபுர்
இங்கேயா அங்கேயா என
கேள்விகளோடு
மையவாடி விட்டு
வெளியே வந்து
இம்மைக்கு உள்ளே புக…
உள்ளே இழுத்தது
ஸ்தம்பித்து
உயிரையும் உணர்வையும் பிசைந்து
பெரிதாக
வெளியே வந்தது!
– சபீர்