
படைத்தவனை மறந்துவிட்டு
பராமுகமாய் இருந்துவிட்டு
போதுமென்ற மனமின்றி
பொருள் சேர்க்கும் மானிடரே!
கொண்டதும் தர்மமெனக்
கொடுத்ததும் முன்னர்
உண்டதும் உடலில்
உடுத்தியதும் அன்றி
உங்களுக்கென் றொன்றுமில்லை
உய்கின்ற உலகினிலே – நீவிர்
சேர்த்ததுவோ செல்வங்களோ
செத்துவிட்டால் உமதில்லை!
இருப்பதுவே நிலைக்குமென்ற
இறுமாப்பில் – நீவிர்
இறைவனையே மறந்துவிட்டு
இம்மையிலே மூழ்கிவிட்டீர்!
மண்ணறையில் கிடத்தும்வரை
மதிகெட்ட மாந்தர்களே
மறைவானவற்றை மறுத்து
மயங்கித் திரிவீரோ?
அந்நாளதிக தூரமில்லை
அறிவீரோ – நீவிர்
அடங்கிவிழும் காலத்தை
அருகிலேயே காண்பீர்கள்!
கண்டிப்பாய்ச் சந்திப்பீர்
மண்ணறையின் முழு இருட்டை
தன்னுடலும் புதையுண்டு
தரைக்குள்ளே சிதையுவதை
அஞ்ஞான நிலைமாறி
மெய்ஞான வழிகொண்டு
அறிய முயன்றிருந்தால்
இனிதா யிருக்குமிப் பயணம்!
உறுதியாகப் பார்ப்பீர்கள்
இறுதியாகப் பெருநெருப்பை
ஐயமறக் காண்பீர்கள்
அனல்கக்கும் நரகத்தை!
தங்குமிடம் தரணியிலே
தழைத்து நின்ற தாவரங்கள்
தெளிந்த நீர்நிலைகள்
தேன் மற்றும் திரவியமும்
அலைகடலும் மலைமுகடும்
மிதமழையும் மலர்வனமும்
அளிக்கப்பட்ட அருட்கொடைகள்
அந்நாளில் வினவப்படும்!
oOo
-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
(மூலம்: அல் குர்ஆன் / சூரா 102: தகாதுர்)