புத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்! (பகுதி-3)

Share this:

லங்கை: இந்தியாவின் பக்கவாட்டில் பர்மிய புத்தத் துறவிகளுக்குச் சற்றும் குறையாத வகையில் கீழே சிங்கள புத்த பயங்கரவாதத் துறவிகளின் அக்கிரமம் அரச ஒத்துழைப்புடன் ஜெகஜோதியாக நடைபெற்று வருகிறது.

மஹிந்த ராஜபக்’ஷே ஆட்சியில் அமர்வதற்கான அடித்தளங்களை அமைத்துக் கொடுத்த சிங்கள புத்த பிட்சுகள்,  இப்போதைக்கு முஸ்லிம்களை இலங்கையின் மூன்றாம் தரக் குடிமக்களாக்கி பின் சிறுகச் சிறுக ஒட்டுமொத்தமாக அழித்தொழிப்பதற்கான திட்டங்களை செயல்படுத்தத் துவங்கி விட்டனர். ராஜபக்’ஷேவைப் பொறுத்தவரையில் விடுதலைப்புலிகள் அழிப்பு Phase-I என்றால் முஸ்லிம்கள் ஒழிப்பு Phase-II

அங்கு, முஸ்லிம்களின் இறைத்தலங்கள் மற்றும் சொத்துக்கள் குறிவைத்துச் சூறையாடப்படுவதோடு, முஸ்லிம்களின் உடை,  வியாபார,  இருப்பிட, வாழ்வாதார உரிமைகள் அனைத்தையும் பறிப்பதற்கான முயற்சிகள் திட்டமிட்டு நடத்தப் படுகின்றன. பள்ளிவாசல்களில் பன்றிகளின் படங்கள் வரையப்பட்டு அவற்றின் இரத்தத்தைப் பூசுவதும் தொடர் தாக்குதல் நடத்திப் பள்ளிவாசல்களை மூடவைப்பதும் தொடர்ந்து மிகச் சாதாரண நிகழ்வாகி விட்டன.

இவற்றையெல்லாம் செய்வது சிங்கள – புத்தத் துறவிகளால் நடத்தப்படும் பொது-பல-சேனா (Bodu Bala Sena -BBS – Buddhist Power Forces) என்ற சிங்கள தேசியவாத அமைப்பு! (கூடுதல் விபரங்களை பெட்டிச் செய்தியில் காண்க.)

இந்தியாவின் ரவுடி அமைப்புகளான சிவசேனா, ராமசேனா ஆகியவற்றுடன் இலங்கையின் “சேனா” கள்ளத் தொடர்பு கொண்ட ஒன்று தான் என்று தனியாக வேறு சொல்ல வேண்டுமா?

பொது பல சேனா (Bodu Bala Sena) ஜூலை-2012

இலங்கை அரசுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கிய விடுதலைப் புலிகளை அழித்தொழித்ததன் பின்னர், கடந்த ஜூலை 2012 ஆம் ஆண்டு திடீரென இந்த பொது-பல-சேனா தோற்றம் பெற்றது. ஜதிக ஹெல உருமய(JHU) என்ற புத்த பிட்சுகளின் அமைப்பில் அங்கம் வகித்திருந்த கிரம விமலஜோதி மற்றும் கலகொட அத்தே ஞானசார தேரோ ஆகிய இரு புத்தத் துறவிகள் அதிலிருந்து விலகினர். புத்த மதத்தைப் பாதுகாப்பதற்குப் போதுமான அளவுக்கு முந்தைய அமைப்பில் சக்தி இல்லை; அதற்கான திட்டங்களும் தெளிவாக இல்லை எனக் குற்றம்சாட்டி, புத்தமதத்தைப் பாதுகாக்கப் போகிறோம் என்ற பெயரில் பொது-பல-சேனா வைத்துவக்கினர்.


புத்த கலாச்சார மையம் (மே-15, 2011)

கலகொட ஞானசார தேரோ, 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் JHU ஆல் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலகொட ஞானசார செயலாளராகவும் விமலஜோதி தலைவராகவும் கொண்ட பொது பல சேனாவின் தலைமை அலுவலகம், கொழும்புவிலுள்ள ஸ்ரீசம்புத்த ஜெயந்தி மந்திராவில் இயங்குகிறது. ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி மந்திரா, “புத்த கலாச்சார மையத்திற்கு”ச் சொந்தமானது. இந்தப் புத்த கலாச்சார மையத்தினைத் தோற்றுவித்தவரும் கிரம விமலஜோதியே! 2011 மே 15 ஆம் தேதி இந்த மையத்தைத் திறந்து வைத்தவர் சாட்சாத் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவேதான்! மட்டுமல்ல, பொது பல சேனா அமைப்பின் நிர்வாகத்தில் மஹிந்த ராஜ பக்ஷேவின் உறவினர்களே கோலோச்சுகின்றனர்.

28 ஜூலை 2012 அன்று பண்டாரநாயகா நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பொது-பல-சேனாவின் முதல் தேசிய மாநாடு நடைபெற்றது. அதில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • ஆண்கள்/பெண்களுக்கு அரசு சுகாதார மையத்தில் செய்யப்படும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையினைத் தடை செய்ய வேண்டும்.
  • பல்வேறு இனங்களுக்கு நடைமுறையில் இருக்கும் வெவ்வேறு விதமான சட்ட அமைப்புகளை நீக்கிப் பொதுவான சட்டம் கொண்டு வர வேண்டும்.
  • புத்தமத வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்குப் பல்கலைக் கழகங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
  • அரசுப் பள்ளிகளில் வரலாறு மற்றும் பிற வகுப்புகளை நடத்த புத்தமதத் துறவிகளை நியமிக்க வேண்டும்.
  • நாட்டின் இனப் பிரச்சனைக்கு இனம்/மத அடிப்படையில் தீர்வு காணக்கூடாது.

இந்தியாவில், மதவெறியை ஏற்படுத்தி, தேசியவாத வியாபாரம் செய்து கல்லா கட்டும் ஹிந்துத்துவாவினர் மேற்கொள்ளும் அதே திட்ட வழிமுறைகளைப் பொது-பல-சேனா அப்படியே பின்பற்றுகிறதே என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் பேசத் துவங்கும் வண்ணம் பொது-பல-சேனாவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

துவக்கத்தில் ஒரு சில கிறித்துவ, இந்து ஆலயங்களுக்கு எதிராகவும் தாக்குதல்களைத் தொடங்கிய சேனா, விரைவிலேயே முஸ்லிம்கள் மட்டுமே தன் மைய இலக்கு என்று வியூகத்தை மாற்றி அமைத்தது.

“இந்த வியூகம் மாறியதற்குக் காரணம் இருக்கிறது. புத்த சித்தாந்தத்தை தகர்த்து எறியும் சக்தி எங்கேயுள்ளது என்பதைக் கூட்டிக் கழித்து புரிந்து கொண்ட புத்த பயங்கரவாதிகளின் இஸ்லாமோஃபோபியா தான் இதற்கெல்லாம் காரணம்!” என்கிறார் இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் சந்திரா தர்மா.

புத்த மடங்களுக்கு அருகிலுள்ள பள்ளிவாசல்கள், கோயில்கள், கிறிஸ்தவ ஆலயங்களை இடித்துத் தள்ள வேண்டுமென அரசுக்குக் கோரிக்கை விடுத்ததோடு நிற்காமல், துறவிகளுக்குரிய “முற்றும் துறத்தலை”த் துறந்து விட்டு, ரவுடியிசத்தைக் கையிலெடுத்துக்கொண்டு பல பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் தொடுத்தது. (Sri Lanka government orders removal of Dambulla mosque: http://www.bbc.co.uk/news/world-asia-17805202 )

கடந்த வருடத்தில், தம்புள்ள (Dambulla) விலுள்ள ஒரு பள்ளிவாசலை அகற்றக் கோரி புத்த பிட்சுகள் பேரணி நடத்திய நிகழ்வில் அவர்கள் முஸ்லிம்களை நோக்கி விட்ட எச்சரிக்கைக் கோஷங்களை உலக ஊடகங்கள் பதிவு செய்துள்ளன. “இன்று எங்கள் கையில் புத்த கொடியோடு வந்து போராட்டம் நடத்துகிறோம். ஆனால், இனிமேல் எங்கள் கையில் வேறு தான் இருக்கும்” (வாசிக்க: http://caravanmagazine.in/perspectives/spoils-victory)

http://news.bbcimg.co.uk/media/images/66482000/jpg/_66482836_66482835.jpg“உண்ண அனுமதிக்கப்பட்டவை” என முஸ்லிம்களுக்கு உத்தரவாதம் வழங்கும் “ஹலால் சான்றிதழ்” முறையினை ஒழித்துக் கட்டுவதில் துவங்கி, ஆடு/மாடுகள் அறுக்கக் கூடாது, பெண்கள் புர்கா, ஹிஜாப் அணியக்கூடாது என்பதுவரை முஸ்லிம்களின் கலாச்சார, அடையாளக் குறியீடுகள் அனைத்திலும்  பொது-பல-சேனா தனது ஆக்டோபஸ் கரங்களை நீட்டி வருகிறது. (வாசிக்க: BBC யின் The hardline Buddhists targeting Sri Lanka’s Muslims – http://www.bbc.co.uk/news/world-asia-21840600)

 

இதில், “ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் இனி இலங்கை உலமா சபைக்கு இருக்கக் கூடாது” என்ற பொது-பல-சேனாவின் பயங்கரவாதக் கோரிக்கைக்கு ராஜ பக்’ஷே செவி சாய்த்துள்ளார்.  நினைத்ததை எட்டியது பொது-பல-சேனா. (Halal labelling withdrawn in Sri Lanka – http://www.abc.net.au/news/2013-03-11/an-halal-labelling-withdrawn-from-sri-lanka/4566242 )

இந்த அறிவிப்பு வெளியானதும் வெற்றிக் கொக்கரிப்பு நடத்திய ஞானசார தேரர்,  தனது அடுத்த இலக்கு முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாபுக்குத் தடைவிதிப்பதே எனக் கூவியுள்ளார்.

பொது-பல-சேனாவின் அடுத்தடுத்த சில திட்டங்கள், கோரிக்கை வடிவில்:

* ஹலால் முத்திரையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்

* ஹிஜாப் அணிவதைத் தடை செய்யவேண்டும்

* சிறுபான்மையினர்களுக்குச் சாதகமான 13 ஆம் சட்டத் திருத்தத்தை நீக்கவேண்டும்

* நாட்டிலுள்ள சிறுபான்மை அமைப்புகள் அனைத்தையும் தடை செய்யவேண்டும்

* இது புத்த நாடு, எனவே எங்கு வேண்டுமானாலும் புத்தர் சிலை வைக்கலாம்!

* முஸ்லிம்கள் எண்ணற்ற குழந்தைகளைப் பெற்றுப் பெருகி வருகின்றனர். இது நாட்டுக்கு அபாயம். எனவே, சிங்களவர்கள் கருத்தடை சாதனங்கள் ஏதும் உபயோகிக்காமல் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

* முஸ்லிம்களின் கடைகளில் பொருட்களை வாங்கக்கூடாது; முஸ்லிம்களைப் பொருளாதார ரீதியாக வலிமை பெற வைத்துவிடுவது ஆபத்து.

* முஸ்லிம் மருத்துவர்களிடம் மருத்துவம் செய்து கொள்ளக் கூடாது.

* இலங்கையின் உண்மையான உரிமையாளர்கள் சிங்களவர்களே!

* முஸ்லிம் அடிப்படைவாத மையப்புள்ளிகளாக பள்ளிவாசல்கள் விளங்குகின்றன. எனவே அவற்றைப் பூட்ட வேண்டும்!

ஏற்கனவே மேற்கண்ட பட்டியலை எங்கோ வாசித்திருக்கிறோமே என்ற நினைவு வந்தால் பலே! – நீங்கள் இத் தொடரின் நீரோட்டத்தில் சுயநினைவுடன் நீந்துகிறீர்கள் என்று அர்த்தம். இந்தியாவின் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளிடமும் பர்மாவில் புத்த பயங்கரவாதிகளிடமும் உள்ள அதே பட்டியலின் நகல் தான் இது.

இந்தியாவின் அதே போலி தேசியவாதம் + மதவெறியை முன்னிறுத்திய செயல்பாடுகள் இலங்கை மற்றும் பர்மாவில் ஒரு சேரப் பிரதிபலிப்பதைக் கவனிக்க வேண்டும்.

இலங்கையின் நிலவரங்களை ஓரளவு நடுநிலையாகப் பதிவு செய்து விமர்சிக்கும் ஊடகங்களைக்கூட பொது-பல-சேனா விட்டு வைக்கவில்லை. பல ஊடகவியலாளர்களுக்கு எதிராக பொது-பல-சேனா நடத்திய வன்கொடுமைகள், இதுவரை எந்த ஒரு விசாரணையும் இன்றி முடக்கப்பட்டு விட்டன.

“புத்த மதத்தைப் பாதுகாக்க” என்ற ஒற்றை வரிக் குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்ட பொது-பல-சேனாவை மேற்கண்ட பட்டியலோடு உள்வாங்கினால்,  பின்னணியில் மிகப் பெரிய சதித் திட்டமொன்று இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய ஞானசார தேரர், “ஜுலை மாதத்தில் வரும் எசல போயாவிற்கு முன்பாக இந்நாட்டில் இயங்கும் சிறுபான்மை அமைப்புகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால்,  இந்நாட்டின் உத்தியோகபூர்வமற்ற காவல்துறையினர் என்ற ரீதியில் நாங்களே சிறுபான்மை அமைப்புகள் மீது தாக்குதலை மேற்கொள்வோம்” என்று எச்சரித்துள்ளதோடு “இனிவரும் காலங்களில் சிங்களக் கிராமங்களுக்குள் நுழையும் அந்நிய இனத்தவர்களை அடித்து விரட்டும் நோக்கில் பௌத்த பாதுகாப்புக் குழுவொன்றை அனைத்து சிங்களக் கிராமங்களிலும் உருவாக்கப் போகிறோம்” எனவும் இனவெறியுடன் பேசியுள்ளார்.

இத்தனை களேபரங்களுக்குப் பிறகும் பொது-பல-சேனா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத ராஜபக்’ஷே, பொது பல சேனாவின் உருவாக்கத்தின் பின்னணியில் தாம் இல்லை என்றும் “நிகழ்வுகளின் எதிர்வினையின் உருவாக்கம் அது”(I did not create the Bodu Bala Sena, it was a creation as a reaction to what was happening) என ஒரு பேட்டியில் கூறியுள்ளார். குஜராத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் இனசுத்திகரிப்பிற்கு, “இந்துக்களின் கோபத்தின் வெளிப்பாடு அது” என இன்றும் பாஜக நியாயப்படுத்துவதை இதனுடன் ஒப்பிட்டால், இலங்கையினைச் சிங்கள நாடாக்குவதற்கான அரச பயங்கரவாதத்தின் திட்டமிட்ட சதியே இவை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தொடர்புடைய பிரஸ் டிவியின் ஆவணப்படம்:

Sri Lanka: Muslims under threat again (Part 1)

{youtube}AtelwMMt1t0{/youtube}

 

Sri Lanka: Who’s behind anti-Muslim violence? (II)
{youtube}Cu6NKOmtX-E{/youtube}

“பொது-பல-சேனா அமைப்பின் இந்தப் பயங்கரவாதப் போக்கு இலங்கையை மற்றொரு இன அழிப்புக்கு இட்டுச் செல்லும்!” என சர்வதேச சமூகச் சிந்தனையாளர்கள் அச்சம் தெரிவிக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், “மதங்கள் மூலமாக நல்லிணக்கம்” என்ற பொருளில் கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் கடந்த 23-07-2013 அன்று முக்கியமான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய வரலாற்றுப் பேராசிரியர் ரொஹான் குணரத்ன,  “30 வருடகால யுத்தம் தற்போது நிறைவுக்கு வந்துள்ள நிலையிலும் ஆளும் அரசு சரியான பாடத்தைக் கற்க தவறியுள்ளது. இந்நிலையில் தலை தூக்கிவரும் மத அடிப்படையிலான தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த அரசு தவறுமாயின் சமூக நல்லிணக்கம் என்பது சாத்தியமற்றதாக போகும். குறிப்பாக பொது-பல-சேனா, ஒரு புத்த இயக்கமோ அல்லது அரசியல் இயக்கமோ அன்று. அது முழுமையானதொரு தீவிரவாத அமைப்பாகும். இதனை நான் உறுதிப்பட தெரிவிக்கிறேன். இவ்வாறான அமைப்புக்களை கட்டுப்படுத்தும் வரை நல்லிணக்கம் என்பது சாத்தியமற்றது” எனத் தெரிவித்துள்ளார். (இவரது உரையை வாசிக்க: http://www.kadirgamarinstitute.lk/events/event_23072013/doc/Rohan%20Gunaratna.pdf )

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சர்வோதயா அமைப்பின் தலைவர் கலாநிதி ஆரியரத்ன, “இலங்கையில் நிலவும் தற்போதைய அரசியல் கலாசாரம் தொடர்ந்தும் நீடிக்குமானால் இலங்கையில் சமூக நல்லிணக்கம் என்பதே சாத்தியமற்றுப் போகும். மக்கள் மனதில் நிம்மதியை ஏற்படுத்துவதன் மூலமே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்” எனத் தெரிவித்துள்ளார். (http://www.kadirgamarinstitute.lk/events/event_23072013/doc/Dr.%20A.%20T.%20Ariyaratne.pdf )

சமூக, வரலாற்றுச் சிந்தனையாளர்களிடையே எழுந்துள்ள இந்தத் தூரநோக்கு, அரசியல்வாதிகளிடையே இல்லை என்பது துரதிருஷ்டமான விஷயம். பர்மாவைப் போன்றே, ஆளும் ராஜபக்’ஷேவின் ஆசி பெற்ற பொது-பல-சேனாவின் அக்கிரமங்களுக்கு எதிராக இலங்கை எதிர்கட்சிகளும் கள்ள மவுனம் சாதிப்பதிலிருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம்.

பர்மா (பகுதி-2), இலங்கை (பகுதி-3) ஆகியவற்றை வாசித்த பின்பு நிலவரங்களை ஓரளவிற்குப் புரிந்து கொண்டிருப்பீர்கள். அடிக்கடி இனச்சுத்திகரிப்பு செய்து கொன்றொழிக்க இயலாத சூழலில் அடுத்த பாகத்தில் வரவுள்ள, இந்திய முஸ்லிம்கள் மீது ஹிந்துத்துவா போடும் பழிகளையும் இணைத்துப் பார்த்தால் இத் தொடரின் முப்பரிமாணம் தெளிவாக விளங்கும்.

– அபூ ஸாலிஹா

< பகுதி-1  |  பகுதி-2 | பகுதி-3 | இறுதிப்பகுதி >


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.