பழகு மொழி (பகுதி-17)

Share this:

“ஒரு பகுபதத்தில் ஆகக் கூடுதலாக இடம்பெறத் தக்க உறுப்புகளின் எண்ணிக்கை ஆறாகும்” எனப் பாடம் 2.3இல் படித்தோம். அவை:

பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் எனப்படும். ஒரு பகுபதத்தின் தொடக்க உறுப்பாக,  பகுக்கமுடியாத பகாப்பதப் ‘பகுதி’யும் அதன் இறுதி உறுப்பாக ‘விகுதி’யும் அமைந்திருக்கும். பகுதிக்கும் விகுதிக்கும் இடையில், இடமிருந்து வலமாக ‘சாரியை’, ‘இடைநிலை’, ‘சந்தி’ ஆகிய உறுப்புகள் இடம்பெறும். விகாரம் எனும் தனித்த ஓர் உறுப்பு இல்லையென்றாலும் சந்தியும் இடைநிலையும் புணரும்போது ஏற்படும் எழுத்தின்/ஒலியின் மாற்றம் விகாரம் எனப்படும். புணரியல் விதிப்படி பகுதிச் சொல்லானது, சிலபோது விகாரம் ஏற்று மாறுதல் அடையும்.

கடந்த பாடத்தில் படித்த ஏவல் வினைகளான
நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை,நொ, போ, வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு (நன்னூல் 147)

ஆகிய 23 பகாப் பதங்களான பகுதிகளோடு பிற உறுப்புகளை ஒட்டி, அவற்றைப் பகுபதங்களாக மாற்றலாம்.

(2) 3.2.1 வினைப் பகுபதம்

நட(பகுதி) +(ந் சந்தி) +த்(இடைநிலை) +அன்(சாரியை) +அர்(விகுதி) என ஐந்து உறுப்புகள் சேர்ந்து “நட்தனர்” என்றாகி இருந்தது. ஆறாவதாக, இச்சொல்லின் சந்தியில் உள்ள தகர வல்லின ஒற்று (த்), புணரியல் விதிப்படி நகர மெல்லின ஒற்று (ந்)ஆக விகாரம் (மாற்றம்) பெற்று, “நடந்தனர்” என்றானது. இந்த வினைச் சொல்லின் தெரிநிலையான இறந்த/கடந்த காலத்தை உணர்த்துவது இடைநிலையாகும். “நடந்தனர்” எனும் சொல்லில் உள்ள பன்மை, பலர்பால், உயர்திணை, படர்க்கை ஆகிய அனைத்தையும் “அர்” எனும் விகுதிதான் உணர்த்தி நிற்கிறது.

மேற்காணும் ஆறு உறுப்புகளும் பகுபதங்களுக்கு உரியன என்பதை,
பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை,
சந்தி, விகாரம் ஆறினும் ஏற்பவை
முன்னிப் புணர்ப்ப முடியும் எப்பதங்களும்
என்று நன்னூல் (133) விளக்குகிறது.

“எப்பதங்களும்” எனும் நன்னூலின் குறிப்பு, எந்தப் பகுபதமானாலும் இந்த ஆறு உறுப்புகளுக்குள் அடக்கம் என்கிறது. அதாவது ஒரு பகுபதத்தின் உறுப்புகள் இரண்டிலிருந்து ஆறுவரை என்பது கணக்கு.

வா(பகுதி) +(ந் சந்தி) +த்(இடைநிலை) +ஆள்(விகுதி) = “வந்தாள்” எனும் வினைச் சொல்லில் நான்கு உறுப்புகளோடு, புணரியல் விதிகளின்படி, இரு விகாரங்களும் உள்ளன. பகுதியான “வா” எனும் நெடில், “வ’ எனக் குறுகியது முதல் விகாரம். சந்தியில் உள்ள ‘த்’, ‘ந்’ஆக மாறியது இரண்டாவது விகாரம். ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய ஐம்பாலுக்கும் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களுக்கும் பொதுவானதாக இடைநிலை(‘த்’) திகழ்வதோடல்லாமல் (இறந்த/கடந்த) காலத்தையும் காட்டி நிற்கிறது. ஓரெழுத்துக்குள் எத்தனை கூறுகள்? என்னே தமிழின் சிறப்பு! இதை,

தடறஒற்று இன்னே ஐம்பால் மூவிடத்து
இறந்த காலம் தரும்தொழில் இடைநில என்று நன்னூல் (142) எடுத்தியம்புகிறது. த்,ட்,ற் ஆகிய மூவெழுத்துகளுள் ஏதேனும் ஒன்று இடைநிலையாக வந்தால், அஃது இறந்தகால வினைச் சொல் என எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இவ்வாறு புரிந்து கொள்வதற்குத்தான் ‘பதவியல்’ நமக்குக் கட்டாயப் பாடமாகிறது.

இறுதியில் அமைந்துள்ள “ஆள்” விகுதி, வந்த ‘ஆள்’ படர்க்கை என்பதையும் படர்க்கையான ‘அவள்’ பெண்பால்+உயர்திணை+ஒருமை என்பதையும் ஒருசேர உணர்த்துகிறது.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

அதி. அழகு

<முன்னுரை | பகுதி-1 | பகுதி-2 | பகுதி-3 | பகுதி-4 | பகுதி-5 | பகுதி-6 | பகுதி-7 | பகுதி-8 | பகுதி-9 | பகுதி-10 | பகுதி-11 | பகுதி-12 | பகுதி-13 | பகுதி-14 | பகுதி-15 | பகுதி-16 >


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.