பழகு மொழி (பகுதி-16)

Share this:

(2) 3.2 வினைப் பதவகைகள்

செயல்களை அடிப்படையாகக் கொண்ட சொற்களை வினைச் சொற்கள் என்போம். வினைச் சொற்களின் வகைகளை,

01 – ஏவல் வினை
02 – தெரிநிலை வினை
03 – குறிப்பு வினை
04 – தன் வினை
05 – பிற வினை
06 – செய்வினை
07 – செயப்பாட்டு வினை
08 – உடன்பாட்டு (இயல்மறை) வினை
09 – எதிர்மறை வினை
10 – (செயப்படு பொருள்) குன்றிய வினை
11 – (செயப்படு பொருள்) குன்றா வினை
12 – முற்று வினை (வினைமுற்று)
13 – எச்ச வினை (வினையெச்சம்)
14 – வியங்கோள் வினை
15 – துணை வினை

எனப் பிரிக்கலாம்.

(2) 3.2.1 வினைப் பகாப் பதம்

வினைச் சொல் வேற்றுமை ஏற்காது; தெளிவாகவோ குறிப்பாகவோ காலம் காட்டும்:

வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது
நினையும் காலை காலமொடு தோன்றும்.
காலம்தாமே மூன்று என மொழிப.
இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம் முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும்
மெய்ந் நிலை உடைய தோன்றலாறே
– தொல்காப்பியம், வினையியல் 1-3.

எல்லா வகை வினைச் சொற்களும் மூன்று காலங்களான இறந்தகாலம், நிகழ்காலம் வருங்காலம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு காலத்தைத் தெளிவாகவோ குறிப்பாகவோ உணர்த்தும். அதனாற்றான், வினைச் சொற்களுக்குக் ‘காலக்கிளவி’ என்று இன்னொரு பெயரும் உண்டு.

காலத்தைத் தெளிவாகக் காட்டுபவை ‘தெரிநிலை வினை’ என்றும் குறிப்பாக உணர்த்துபவை ‘குறிப்பு வினை’ என்றும் இருவகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன.

ஒரு சொற்றொடரின் பிரிக்க முடியாத பகுதியாக வினைச் சொல் அமைந்திருந்தால் அது ‘தெரிநிலை வினை’ ஆகும்; பகுதியானது பெயர்ச் சொல்லாக இருப்பின் அது, ‘குறிப்பு வினை’ எனப்படும்.

காட்டுகள்:

‘சென்றான்’ எனும் சொல் கடந்த காலத்தைத் தெளிவாகக் காட்டும் தெரிநிலை வினை(முற்று). இதன் பகுதியான, ‘செல்’ என்பது ஏவற் சொல்லாகும் (செல்+ஆன்= சென்றான்).

‘அவன் அழகன்’ எனும் இரு சொற்களில் இறுதிச் சொல்லானது, ‘அழகு’ எனும் பண்புப் பெயரைப் பகுதியாகக் கொண்டுள்ளது. ஆனால் காலத்தை(த் தெளிவாக)க் காட்டவில்லை. எனினும்,

அவன் அழகன் ஆக இருந்தான்; அவன் அழகன் ஆக இருக்கிறான்; அவன் அழகன் ஆக இருப்பான் என்று காலங்களைக் குறிப்பாக உணர்த்துவதால் ‘குறிப்பு வினை’ என்றானது.

“வினைக் குறிப்புக் காலமொடு தோன்றுங்கால், பண்டுகரியன், இதுபொழுது கரியன், என இறந்த காலமும் நிகழ் காலமும் முறையானே பற்றி வருதலும் நாளைக்கரியனாம் என எதிர் காலத்து ஆக்கமொடு வருதலும் அறிக!” – தொல்காப்பிய வினையியல் உரையில் சேனாவரையர்.

ஆதலின், நாம் பாடம் (2) 3.1 (பெயர்ப் பகுபதங்கள்)இல் படித்த அறுவகைப் பெயர்ப் பகுபதங்களும் குறிப்பு வினையாக வரும்.

தலைப்பு (2) 3.1இல் குறிப்பிட்டுள்ள 15 வகை வினைகளுள் முதலாவதாக இடம்பெற்றுள்ள ஏவலில் முடியும் முற்றுவினைச் சொற்களைப் பற்றி, பாடம் (2) 2.1.2இல் படித்திருக்கிறோம். ஏவல் (முற்று)வினைச் சொற்கள், பகுக்க முடியாத பகாப் பதங்களாகவே அமைந்திருக்கும்:

நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை,
நொ, போ, வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின்,
தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு என்று
எய்திய இருபான் மூன்றாம் ஈற்றவும்
செய் என் ஏவல் வினைப் பகாப்பதமே
நன்னூல் 147.

மேற்காணும் 23 சொற்களும் ‘சொல்வதைச் செய்’ என ஏவுவதாக இருப்பதால் இதனை, ‘செய் வாய்பாடு’ என அழைக்கின்றனர். ‘செய்’ வாய்பாட்டில் வரும் அனைத்தும் வினைப் பகாப் பதங்களாகும்.

– தொடரும், இன்ஷா அல்லாஹ்.

அதி. அழகு

<முன்னுரை | பகுதி-1 | பகுதி-2 | பகுதி-3 | பகுதி-4 | பகுதி-5 | பகுதி-6 | பகுதி-7 | பகுதி-8 | பகுதி-9 | பகுதி-10 | பகுதி-11 | பகுதி-12 | பகுதி-13 | பகுதி-14 | பகுதி-15 >


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.