தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங்பரிவாரங்கள் (பகுதி 2)

Share this:

“கலைகள் தந்த தஞ்சை, கவலைகள் தருகிறது” என்ற மலர்மன்னனின் அபத்தக் கட்டுரையில் முஸ்லிம்களின் வழிபாடுகளைக் குறித்த துவேசங்களுக்கான பதில் வினையை முதல் பகுதியில் விரிவாகப் பார்த்தோம்.  அதில் தஞ்சை முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு வேண்டுமென்றே துவேஷக் கருத்துகள் இந்துத்துவ வாதிகளால் விதைக்கப்படுகின்றன எனக் கண்டோம்.  அடுத்து, தஞ்சை மாவட்ட முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான காழ்ப்புக் கருத்துக்களைக் காண்போம். முதலில் அவர் வடிக்கும் முதலைக்கண்ணீர்.

காவியச் சுவை மிக்க கம்ப ராமாயணத்தை இயற்றிய கவிஞர் கம்பரின் சொந்த ஊர்தான் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தேரெழுந்தூர். அங்கு கம்பர் வாழ்ந்திருந்ததாக நம்பப்படும் கம்பர் மேடு இன்று வெறும் குப்பை மேடாகக் கிடக்கிறது. அங்கு கம்பர் நினைவாகக் கட்டப்பட்ட மண்டபம் படுத்துத் தூங்குவோர் பயன்படுத்தும் இடமாக மாறிப் போனது. திருமங்கை ஆழ்வார் தனது சுவைமிக்கதமிழ்ப் பாசுரங்களால் மங்களா சாசனம் செய்த வைணவத் திருக்கோயில்களையும் பெற்றிருக்கும் பெருமை உள்ளதுதான் தேரெழுந்தூர். இவையாவும் இன்று சோபையிழந்து மங்கிக் கிடக்கின்றன.

அதே சமயம், அந்தச் சிற்றூரில் பிரமாண்டமாகப் பல மசூதிகள் வானளாவ எழும்பிநிற்கக் காண்கிறோம். கம்பர் நினைவு மண்டபத்தின் அருகிலேயே புதுக் கருக்கு அழியாத பள்ளிவாசலைக் காணலாம்! அரபு மொழி கற்பிக்கும் மதரசா ஒன்றும் தேரெழுந்தூரில் ஆலயங்களுக்கு அருகிலேயே நிறுவப்பட்டுள்ளது என்கிறார்கள். தஞ்சை மாவட்டம் தனது பாரம்பரியமான பண்பாட்டை இழந்து வருகிறது என்பதற்கு இதுபோல் பல ஆதாரங்களைக் காட்ட முடியும்

கம்பரின் நினைவிடம் சிலருக்குத் தூங்கும் இடமாக ஆனதற்கு மட்டும் கவலைப்பட்டிருந்தால் ஓரளவு நியாயமிருக்கும். ஆனால், பள்ளிவாசல் கட்டப்பட்டதற்கும் சேர்த்து பிதற்றி இருப்பது, அவருக்கு கம்பரின் நினைவிடத்தின் மீதான அக்கரையை விட முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்கள் மீதான காழ்ப்புணர்வே மிகுந்துள்ளதை வெளிப்படுத்துகிறது.

பாப்ரி மஸ்ஜிதை வன்முறையாக இடித்துத் தரைமட்டமாக்கி ராமருக்கு கோவில் கட்டிக் கொண்டது போன்று, முஸ்லிம்கள் ஒன்றும் கம்பர் நினைவிடத்தை இடித்து பள்ளிவாசல் கட்டிக் கொள்ள வில்லையே! கம்பர் ‘பிறந்ததாக நம்பப்படும்’ ஊரிலுள்ள கட்டிடத்தை ஏற்றுக் கொண்ட மலர்மன்னனால், அவ்வூரிலேயே பிறந்து வளர்ந்து இன்றும் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள், அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு வழிபாட்டுக் கட்டிடத்தைக் கட்டிக் கொண்டால் ஏன் உறுத்துகிறது? தேரெழுந்தூரில் பிறந்த கம்பருக்குத் தேரெழுந்தூரிலேயே கட்டிடம் இருக்கும் போது, தேரெழுந்தூர் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் சென்றா பள்ளிவாசல் கட்டிக் கொள்வார்கள்?

தஞ்சை மாவட்டம் தனது பாரம்பரிய பண்பாட்டை இழந்து வருவதாக ஊளையிடும் மலர் மன்னன், தஞ்சையில் சோபையிழந்து புதர்க்காடுகளாகியுள்ள சைவக் கோவில்கள் பற்றிக் கவலைப்படாதது ஏன்? தஞ்சை பெரிய கோவிலில் காலடியெடுத்து வைக்கும் ஆட்சியாளர்களின் பதவிக்கும் உயிருக்கும் ஆபத்து வரும் என்ற ஐதீகம் ஆயிரம் ஆண்டுகளாக நிலவுகிறதே, அது பற்றியும் கவலைப் பட்டிருக்கலாமே? கலியுகக் கோவில் காவலர்களாக அவதாரமெடுத்துள்ள அத்வானியையோ, வாஜ்பாயையோ ஒரேயொரு முறையேனும் தஞ்சைப் பெரிய கோவிலுக்கு அழைத்து முதல் மரியாதை செய்து அனுப்பி இருக்கலாமே?

சோழ மன்னர்களின் வாரிசுகளுக்குப் பூரணகும்ப முதல்மரியாதை செய்யப்பட்ட சிதம்பரம் நடராசர் கோவில், இன்று தீட்சிதர்களின் ஆதிக்கத்தால் தமிழில் ஆராதனை மறுக்கப்பட்டுள்ளதே! அது பற்றியும் கொஞ்சமாவது கவலைப் பட்டிருக்கலாமே?

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்திருக்க வேண்டிய சங்கரமடத்தை, காஞ்சிக்குக் கடத்திச் சென்றார்களே! தஞ்சை மாவட்டத்தில் பிறந்த சங்கராச்சாரியார் சுப்ரமணியன் அவர்களிடம் எடுத்துச் சொல்லி, சங்கரமடம் மீண்டும் கும்பகோணத்திற்கே திரும்ப வரச் செய்யவும் கொஞ்சம் கவலைப் பட்டிருக்கலாமே? தொடரும் பித்தலாட்டம் நிறைந்த அவரது நீலிக்கண்ணீரைப் பாருங்கள்.

மக்கா, மதீனாவிலேயே சிறு தெய்வ வழிபாடு வழக்கத்தில் இருந்து வந்தது. முகமதியம் தனது செல்வாக்கு பெருகும்வரை பொறுமையாக அதனைச் சகித்துக் கொண்டிருந்து விட்டு, தனது ஆதிக்கம் ஸ்திரப்பட்டவுடன் சிறிதும் தயை தாட்சண்யம் இன்றி அரேபியரின் பாரம்பரிய தெய்வ நம்பிக்கைகளையும் வழிபாட்டு முறைகளையும் அழித்து ஒழித்தது..

பாகன்களுக்கும் முந்தைய இஸ்லாமியப் பாரம்பரிய பண்பாடு, மக்கா-மதினாவில் இடைப்பட்ட காலகட்டத்தில் தோன்றிய பாகன்களால் அழிக்கப்பட்டதைக் கண்டு கொள்ளாமல் போனதற்கு, அவருக்கு இஸ்லாமிய வரலாறு தெரியாதது காரணமாக இருக்கலாம். சிற்றூர்கள் என்ற நிலையிலிருந்து நகரங்கள் என்ற வளர்ச்சிநிலை வரை சிலை வணக்கம் என்பதையே அறியாதவர்கள்தாம் மக்காவிலும் ம‌தீனாவிலும் வாழ்ந்திருந்தனர். பாகன்களால் அறிமுகப் படுத்தப்பட்ட ‘சிலைக் கலாச்சாரம்’ என்பது மக்கா‍ மதீனாவில் திணிக்கப் பட்டதும் பின்னர் அகற்றப் பட்டதுமாகும். திணிக்கப்பட்ட ஒன்றை, பாரம்பரிய கலாச்சாரம் என்பது வரலாற்றுப் புரட்டல்லவா? அது அழிந்ததாகக் கவலைப்படுவது முரண்பாடாகத் தெரியவில்லையா?

மலர்மன்னன் அவர்களே! உங்கள் வாதப்படியே “அரேபியரின் பாரம்பரிய தெய்வ நம்பிக்கைகளையும்” மீறி, நீங்கள் ”முகம்மதியம்’ என்று வேண்டுமென்றே தவறாகக் குறிப்பிடும் இஸ்லாம், உலகம் முழுதும் செல்வாக்குப் பெற என்ன காரணம் என்று சிந்தித்துப் பாருங்கள்! அரேபியாவில் மட்டும்தானே முகம்மது நபி வாழ்ந்தார். அதையும் தாண்டி இந்தியாவிலும், சீனாவிலும் இன்ன பிற நாடுகளிலும் இஸ்லாம் காலூன்ற ‘எந்த ஆதிக்கம்’ காரணமாக இருந்தது என்றும் சொல்வீர்களா?

இந்து மதம் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவமுடையது என்று போலியாகச் சொல்லித் திரியும் நீங்கள், இந்து மதத்தின் பெயரால் நடக்கும் மூடப்பழக்கங்களைச் சாடி, மாற்றங்களை வலியுறுத்திய பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் உருவச்சிலையை, அரங்கநாதர் ஆலயத்தின் வாயிலில் வைத்ததால் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டது என்று கூக்குரல் இட்டீர்களே! அதேபோல், ஆதம் நபி தொடங்கி, இப்றாஹிம் நபி வழியாக சிலைகளற்ற இறையில்லமாக இருந்து வந்த கஅபாவின் உள்ளே இருந்த இடைக்காலச் சிலைகளை அகற்றியதற்கும் இதே ‘புனிதக்’ காரணம்தான் இருந்தது என்பதை அறிவீர்களா வரலாற்றுப் புரட்டுச் செய்ய முயலும் மலர்மன்னன் அவர்களே?

அடுத்து, அக்ரஹாரங்களை அழிந்த அமெரிக்க மோகம் மற்றும் தஞ்சை முஸ்லிம்கள் குறிவைக்கப்படும் பின்னணிக் காரணங்கள் பற்றியும் இனி வரும் பகுதியில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்…

ஆக்கம்:  N. ஜமாலுத்தீன்

முன்னுரை  |  பகுதி 1  |  பகுதி 2  |  பகுதி 3  >


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.