மீண்டும் ஒரு ரமளான்… (பிறை-3)

Share this:

ல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْقَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமை ஆக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் இறையச்சம் உடையவர்களாகலாம். (அல்குர்ஆன் 2: 183)

இந்த நோன்பைப் பற்றி ஏக இறைவனாகிய அல்லாஹ் கூறும் போது, “இது உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தினர் போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டிருக்கிறது …” என்று தொடங்கி, அதன் உன்னதமான நோக்கத்தையும் அதைத் தொடர்ந்து நமக்குத் தெளிவுபடுத்துகின்றான்.

….لَعَلَّكُمْ تَتَّقُونَ………

…..நீங்கள் இறையச்சம் உடையவர்களாகலாம்.(அல்குர்ஆன் 2:183)

அதாவது இந்த நோன்பினால் இறைவனுக்கு ஏதும் தேவையோ, இலாபமோ பயனோ ஏற்படாது. இதை நாம் நோற்கத் தவறினால் இறைவனுக்கு நஷ்டம் எதுவும் ஏற்படாது. இதனை முறையாக நோற்றால், இதனால் மனிதன் இறையச்சம் கொண்டவன் ஆகலாம் (அதன் மூலம் அவனுக்கும், அவன் குடும்பத்தினர், அவனைச் சார்ந்துள்ள அவன் வாழுகின்ற சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும் நிச்சயமாகப் பலன்கள் உண்டு) என்று கூறுகின்றான். ஆகையால் இந்த நோன்பின் மகத்துவத்தையும் அது நமக்கு ஏற்படுத்தக் கூடிய பலன்கள் என்ன? அதனால் சமூகம் பெறும் நன்மைகள் யாவை? என்பனவற்றை ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

நோன்பை நோற்பதற்கு மக்கள் பல காரணங்களை (உதாரணமாக, இதன் மூலம் அனைவரும் ஏழைகளின் கஷ்டத்தையும், வறுமையையும், பசியையும், தாகத்தையும் உணர முடிகிறது, இது உடல்ரீதியாக ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமான நல்ல ஒரு பயிற்சி, இன்ன பிற போன்றவற்றைக்) கூறினாலும் இதன் முக்கியமான பலன், நோக்கம், மற்றும் மகத்துவத்தைப் பற்றி படைத்த இறைவன் என்ன கூறுகின்றான் என்பதே முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

தக்வா என்ற அரபிச் சொல்லிற்கு ‘பாவங்களிலிருந்து தற்காத்துக் கொள்வதன் மூலம் பெறுகின்ற இறையச்சம்’ என்று பொருள். அதாவது மனிதனையும் இந்தப் பேரண்டத்தையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்து நிர்வகித்து வரும் (படைப்பாளி) ஏக இறைவனாகிய “அல்லாஹ்” நம்மை எங்கிருந்தாலும் எந்நேரமும் கண்காணிக்கின்றான். நம்முடைய ஒவ்வொரு செயலும் தனிமையிலோ கூட்டத்திலோ, இருளிலோ பகலிலோ, நீரிலோ அல்லது மலைக் கோட்டைகளிலோ, சந்திர மண்டலத்திலோ இன்ன பிற கிரகங்களிலோ, இயற்கை அல்லது செயற்கைக் கோள்களிலோ என்றாலும் எதுவும் அவன் பார்வைக்கு மறைந்தது அல்ல. நாம் நிச்சயமாக நம் அனைத்துச் செயல்களுக்கும் பதில் சொல்ல வேண்டும், நன்மைகளுக்குப் பரிசும் தீமைகளுக்கு (மன்னிப்பு இல்லையெனில்) தண்டனையும் பெறுவோம் எனும் எண்ணத்தில் உறுதியாக வாழ்வது என்று பொருள்.

அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணத்தில் அல்லாஹ்வுக்குப் பயந்து, அவன் ஏவியவற்றைச் செய்தும், விலக்கியவற்றையும் தடை செய்தவைகளையும் தவிர்த்து வாழ்வது மூலம் ‘தக்வா’வைப் பெற்றுக் கொள்ளலாம்.

உதாரணமாக ஒரு நோன்பாளி அவர் சிறுவராக இருந்தாலும் வயதான முதியவராக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தனிமையில் இருக்கும் போது பசியிருந்தும், தாகம் இருந்தும், சுவையான ஹலாலான உணவு வகைகள் வீட்டில் இருந்தாலும்கூட அதை நெருங்க மாட்டார்கள். தன்னை யாருமே பார்க்கவில்லையே என்று அதனைச் சாப்பிடலாம் என எண்ண மாட்டார்கள்.

தனிமையில் இருந்தாலும் நம்மை இறைவன் (அல்லாஹ்) கண்காணிக்கின்றான் எனும் எண்ணம் அனுமதிக்கப்பட்ட ‘ஹலாலான’ உணவை உண்டாலும், நாம் நோன்பை முறித்த பாவத்திற்கு அல்லாஹ்விடம் தண்டனை பெறுவோம் என்று இறைவனுக்கு அஞ்சி தமது பசியை தமது தாகத்தைக் கட்டுப்படுத்தி வைக்கின்றார்கள்.

இப்பயிற்சியின் பலனாக, மனத்தில் இறையச்சம் மிகுந்து என்றைக்கும், எங்கும், எந்நிலையிலும் ‘ஹராமானவற்றை’ அதாவது, அல்லாஹ்வால் அனுமதிக்கப்படாத உணவுகளோ, போதைப்பொருட்கள், மற்றும் மது போன்ற பானங்களோ, அல்லது தவறான முறையில் ஏமாற்றுதல், திருடுதல், மோசடி செய்தல் போன்ற விலக்கப்பட்ட காரியங்கள் செய்து அதன் மூலம் சம்பாதித்தால் அல்லாஹ்விடம் கடுமையான தண்டனை உண்டு என்று எண்ணம் எற்பட்டு ஹராமானவற்றை விட்டு விலகி நேர்வழியில் வாழவும் இது வழி வகுக்கிறது.

இந்தச் சிந்தனை சிறுவர்களான பள்ளி மாணவ மாணவியர் முதல் வீட்டில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கணவன், மனைவி, தந்தை, தாய், சகோதரன், சகோதரி, அண்டை வீட்டார், உற்றார், உறவினர், நண்பர்கள் என்று முழுச் சமுதாயத்திற்கும் இறையச்சத்துடன், சீராக நீதமாக சுமூகமாக உண்மையாளர்களாக வாழக்கூடிய ஒரு நல் வாய்ப்பை அளிக்கிறது.

நோன்பின் மூலம் பெறும் இறையச்சத்தின் மூலம் சமுதாயத்தில் உள்ள எல்லா வகையான பிரச்சினைகளும் தீர்ந்துவிட வாய்ப்புள்ளது என்பதைப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.

இறையச்சம் இல்லாதது, அல்லது தற்காலிகமாக இருப்பது தான் பெரும்பாலான அல்லது எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம் என்றாலும் மிகையாகாது. உலகில் மனிதன் சந்திக்கும் சூழ்நிலைகளும் அதன் மூலம் அவன் எடுக்கும் எந்த முடிவும் இந்த இறையச்சம் இருப்பது அல்லது இல்லாமல் இருப்பது எனும் நிலையிலேயாகும்.

இறையச்சமின்மையே இவ்வுலகில் ஒவ்வொரு தனி மனிதன் முதல், பெரிய நாடுகளின் நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது. பிரச்சினைக்குத் தீர்வு என்று மக்களைக் கொன்று குவிப்பது முதல் ஒரு தனி மனித கொலைக்கோ (மன்னிப்பற்ற) தற்கொலை முடிவுக்கோ ஒருவர் தள்ளப்படுவதும் இதே இறையச்சம் இன்மையால்தான்.

இறையச்சம் நிரந்தரமாக உள்ள நிலையில், நாம் தற்கொலை புரிந்தாலும் இறைவனுக்கு முன் நிற்க வேண்டும்; இதனை அவன் மன்னிக்கவே மாட்டான் என்று நினைவில் கொண்டால், தற்கொலை செய்வது இவ்வுலகில் சந்திக்கும் வறுமை, கடன், விரக்தி, ஏமாற்றம், தேர்விலோ வாழ்க்கையிலோ ஏற்படும் தோல்விகள், தாங்க முடியாத நோய்கள், இன்ன பிறவுக்கு ஒரு தீர்க்கமான முடிவு என்றும் கருத மாட்டார்கள்.

மரணத்தோடு மனித வாழ்க்கை முடிவு பெறுவதில்லை. மரணித்ததன் பின்னர் இறுதித் தீர்ப்பு கொடுக்கப்பட்டு மறுமை எனும் நிரந்தர வாழ்க்கை துவங்குகின்றது. இம்மை எனும் இவ்வுலகில் எடுக்கப்படும் இதுபோன்ற அவசர முடிவுகளால் நிலையான மறுமை வாழ்க்கைக்கு மாபெரும் இழப்பு ஏற்படும் என்றும் உணர்வார்கள்.

ஆக, சுருக்கமாக இந்த இறையச்சச் சிந்தனை இருந்தால் மட்டுமே இன்று சமுதாயம் சந்தித்துவரும் வன்முறைகள், மோசடிகள், பொருளாதாரச் சுரண்டல்கள், காழ்ப்புணர்ச்சி, ஏற்றத்தாழ்வுகள், பற்பல ஊழல்கள், சொத்துத் தகராறுகள், மாமியார்-மருமகள், கணவன்-மனைவி, சகோதரர்கள் பிரச்சனைகள் உட்பட ஏனைய குடும்பப் பிரச்சினைகள், வரதட்சணைக் கொடுமைகள், தேர்வில் முறைகேடு செய்தல், (தேர்வுக்கு முன்பே) கேள்வித்தாள் விற்பனை, பொய்ச்சான்றிதழ்கள் விற்பனை, போதைப் பொருட்கள் வியாபாரம் தொடங்கித் தீய நோய்கள், பெண்களை இழிவு படுத்துதல், வல்லுறவு, விபச்சாரம் போன்ற சமுதாயச் சீர்கேடுகளும் அகல நிச்சயம் வழிபிறக்கும்.

ரமளானில் நோன்பு நோற்பதன் மூலம் நாம் இந்த அரிய இறையச்சத்தைப் பெறுவதற்கு அல்லாஹ் அருள் புரிந்துள்ளான். இந்த இறையச்சச் சிந்தனை இந்த ரமளான் மாத நோன்போடு முடிந்து விடக்கூடாது. வாழ்க்கை முழுவதிலும் மற்ற நாட்களில் ஒவ்வொரு நொடியும் இதே எண்ணத்தோடு ஒவ்வொரு முஸ்லிமும் வாழவேண்டும். ஹலாலான உணவை மட்டுமே எல்லாக் காலங்களிலும் உண்ணவேண்டும்.

இந்த எண்ணத்தோடு வாழ்ந்தால்தான் தொழாதவர் ஏன் தொழவில்லை? இத்தொழுகையைக் கடமையாக்கிய இறைவன் என்னை இன்றும், என்றும் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று நினைத்துத் தொழ ஆரம்பித்துவிடுவார்.

பாவங்களில் ஈடுபடக்கூடியவர் அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.அவன் தண்டிப்பான் என்று நினைத்து அதை விட்டுவிடுவார்.  பாவங்களில் இருந்து மன்னிப்புப் பெற வேண்டும், தப்ப வேண்டும் என்று இறையச்சத்துடன் இருப்பார்.

யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ அவர் தமது உணவையும் குடிப்பையும் விட்டுவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை” என்று நபி(ஸல்) கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1903)

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும். எனவே நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்; அறிவீனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 1894)

இன்னும் சிலர் நோன்பு வைத்த நிலையிலும் தீமைகளைக் கைவிடாமல், பொய் பேசுவது, கெட்ட வார்த்தைகள் பேசுவது, சினிமா வீடியோக்கள், சீரியல்கள், இணையம் என்று பல விதமான மார்க்க முரணான கேளிக்கைகளில் ஈடுபடுவது என்று தமது நோன்பையும் நன்மைகளையும் தமது மறுமை வாழ்க்கையையும் பாழாக்கிக் கொண்டு தன்னுடைய நோன்புக்கும் பிரதிபலனாக நன்மை, மன்னிப்பு உண்டு என்று அலட்சியமாக வாழ்வதையும் பார்க்கலாம். அல்லாஹ் அவர்களுக்கும் நேர்வழி காட்டுவானாக என்று பிரார்த்திப்பதுடன் இதன் தீமையை அவர்களுக்கும் நல்ல முறையில் உணர்த்தி அவர்களையும் நேர்வழிப்படுத்த நாம் முயல வேண்டும்.

சிலர் இந்த மாதத்திலும் நோன்பு மட்டும் வைத்துக் கொண்டு தொழாமல் பாராமுகமாக இருப்பதும், இன்னும் சிலர் தூங்குவதில் அதிக நேரத்தைச் செலவிடுவதும் உண்டு. இதைவிடவும் வேதனை, இன்னும் சிலர் அலட்சியமாக நோன்பும் வைக்காமல் தொழுகைக்கும் செல்லாமல் வெறுமனே ஈத் பெருநாள் அன்று மட்டும் பள்ளிக்கு வருபவர்களும் உண்டு.

அல்லாஹ் அவர்களுக்கும் நேர்வழிகாட்டுவானாக.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒருவாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். “நோன்பாளிகள் எங்கே?” என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள். (அறிவிப்பாளர்: ஸஹ்லு(ரலி) நூல்: புகாரி – 1896)

நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும். நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே நற்பலனை அளிப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும். எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம். கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம். யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் ‘நான் நோன்பாளி’ என்று அவர் சொல்லட்டும். முஹம்மதின் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் வாடையைவிட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும்போது அவன் மகிழ்ச்சியடைகிறான். மற்றொன்று தன் இறைவனைச் சந்திக்கும்போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 1904)

அல்லாஹ்வின் தூதர் நபி முஹம்மது (ஸல்) நோன்பை ஒரு கேடயம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். எப்படி ஒரு கேடயம் உறுதியாக இருந்தால் ஒருவர் தன்னைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள இயலுமோ, அதேபோல் நோன்பு எனும் இக்கேடயம் உறுதியாக இருந்து இறையச்சத்தை வழங்கினால் இந்த வாழ்க்கையில் சந்திக்கும் பல விதமான தீய காரியங்களின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இயலும் என்று இதன் மூலம் உணரலாம்.

மேலும் படைவீரர்கள் எவ்வாறு அன்றாடம் பயிற்சிகளும் சிறப்புப் பயிற்சிகளும் பெற்றுக் கொண்டே எப்போது நடக்கும் என்று அறியாத, அல்லது சில நேரங்களில் ஒரு போரும் நடைபெறாமல் ஓய்வு பெறும் நிலையிலும், போருக்குத் தயார் நிலையில் இருக்க பயிற்சி தொடர்ந்து எடுக்கின்றனரோ அதேபோல் நாமும் இந்த ரமளான் மாத நோன்பு மற்றும் திங்கள், வியாழன், மாதம் மூன்று நோன்புகள் என்று ஸுன்னத்தான நோன்புகள் மற்றும் உபரியான, நஃபிலான நோன்புகள் மற்றும் இறையச்சத்தை எற்படுத்தும் காரியங்கள் மூலம் நமது ஈமானையும் இறையச்சத்தையும் உறுதியாக்கி சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் வழிகேடுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முயல்வோமாக!

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள்புரிவானாக! ஆமீன்!

oOo

ஆக்கம்: இப்னு ஹனீஃப்

(மீள் பதிவு)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.