மீண்டும் ஒரு ரமளான்… (பகுதி-1)

{mosimage}ஆண்டுதோறும் முஸ்லிம்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், றைவனின் அருட்கொடைகளும், நன்மைகளும் நிறைந்த புனிதமான ரமளான் மாதத்தை மீண்டும் ஒரு முறை பெறக்கூடிய நற்பாக்கியத்தை அல்லாஹ் வழங்கியுள்ளான். அதற்காக முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இறைவனுக்கு நன்றியினை சமர்ப்பித்தல் அவசியம்.  

 

இம்மாதத்தின் மகத்துவத்தினைக் குறித்து நபி(ஸல்) அவர்கள்,

 

 

'ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன"…. – (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி), நூல்: முஸ்லிம் 1957) என்றும்,

'ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 761) என்றும் அறிவித்தார்கள்.

ரமளான் மாதம் நன்மைகளை அதிகமதிகமாகப் பெற்று தரும் மாதம். ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை நன்மைகளை பெற்றுக்கொள்ள வாய்ப்பான ஒரு மாதம் என்பதை முஸ்லிம்களாகிய ஒவ்வொருவரும் மிக நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்.

 

இதனாலேயே ஒவ்வொரு ஆண்டும் ரமளானை எதிர்பார்த்து அதில் நோன்பின் நிலையில் அதிகமான வணக்க வழிபாடுகள், தர்மங்கள், குர்ஆன் ஓதுதல், அதிகமாக மார்க்க விஷயங்களில் ஈடுபடுதல் போன்று நன்மைகளில் மது நேரத்தை அதிகமாக கழிக்கின்றனர்.ம்மிடமிருந்து சொல்லாலோ செயலாலோ பார்வையாலோ எந்த ஒரு தவறும் நிகழக்கூடாது என்று எல்லாவித சிறிய பெரிய பாவங்களிலும் இருந்து நோன்பின் நிலையில் தவிர்த்தும் வாழ்கின்றனர்.

 

முஸ்லிம்களாகிய சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை நோன்பு நோற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். தமது ஐவேளைத் தொழுகைகளை மற்ற நாட்களில் சரியாக நிறைவேற்றாதவர்களும் கூட மிக ஆர்வமாக இம்மாதத்தில் நோன்புகளை  நோற்பதையும், பள்ளிவாசலில் சென்று தொழுவதையும், அதிகமாக குர்ஆன் ஓதுவதையும் காணலாம்.

 

அதிகமாக நன்மைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், முஸ்லிம்களிடம் இம்மாதத்தில் மிகுந்து இருப்பதைக் காணமுடியும். எப்படியாவது தான் அல்லாஹ்விடம் நன்மைகளை பெற்று கொள்ள வேண்டும்; தான் செய்த பாவங்களில் இருந்து மன்னிப்பு பெற்று மீட்சி அடைந்திட  வேண்டும் என்று ஒவ்வொருவரும் மிகவும் கவனமாக இருக்கின்றனர்.

 

புனித ரமளானின் ஒரு மாத கால அளவில் காணப்படும் இச்செயல்கள் நோன்பிற்கு பின்னர் மீண்டும் தலைகீழாக மாறிவிடும் நிலையை சமூகத்தில் பரவலாக காண முடிகிறது. நோன்பு சமயங்களில் செய்த நல்லறங்கள், பேணிய ஒழுக்கங்கள், காட்டிய நற்பண்புகளை அடுத்த பதினொன்று மாதங்களுக்குப் பூட்டி வைக்கும் நிலையைக் குறித்து இச்சமூகம் இன்னும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஏன் இந்த நிலை? புனித ரமளான் மூலம் தான் அடைந்த நன்மை என்ன? அதற்கான பிரதிபலன் பெறும் தகுதி தனக்கு உள்ளதா? என தன் நிலையைக் குறித்து சுயபரிசோதனை செய்ய முஸ்லிம்கள் தவறி விடுகின்றனர்.

இதை வாசித்தீர்களா? :   ரமளான் சிந்தனைகள் - 17

 

தொழுகை போன்ற முக்கியமான கடமை முதல் குர்ஆன் ஓதுதல், தர்மங்கள் செய்தல், பிறர் நலம் நாடுதல், மார்க்கச் சொற்பொழிவுகள், அழைப்புப் பணி நிகழ்ச்சிகள் என்று எல்லாவற்றிலும் தொடர்ந்து வரும் 11 மாதங்களில் கவனம் குறைந்து, ஈடுபாடு குறைந்து காணப்படுகிற நிலையில் தான் பெரும்பாலானோர் வாழ்க்கை கழிகிறது.

 

ரமளான் தினங்களில் தினம் தோறும் அக்கறையாக கவனத்துடன் கூட்டாக பஜ்ர் தொழுகை எனும் அதிகாலை தொழுகையையும் கடைபிடித்தவர்கள், ரமளான் அல்லாத காலங்களில் பஜ்ர் தொழுகையைத் தொழாமல் தூங்கிவிடுவதும், இதர தொழுகைகளில் கவனக்குறைவாக அக்கறையின்றி செயல்படும் நிலையையும் பரவலாக காண முடிகிறது.

 

குர்ஆனை அதிகமாக ஓதியவர்கள், குர்ஆனை விட்டு தூரம் ஆகிவிடுவதும் அவரவர் வாழ்க்கையில் இருந்து குர் ஆனும் நபிவழியும் தூரமாகி, மீண்டும் புறம், கோள், மோசடி, விரயமான கேளிக்கைகள் என்று ரமளானில் பெற்ற நன்மைகளை விடப் பல மடங்கு அதிகமாக சொல், செயல், செவி, பார்வைகளின் மூலம் தொடர்ந்து வரும் 11 மாத கால அளவில் தீமைகளில் மூழ்கிவிடுகின்றனர்.

 

இதிலிருந்து கிடைக்கும் செய்தி என்ன? ரமளானில் குர்ஆனைப் படித்தவர்கள் தமது உள்ளத்தில் அதன் கட்டளைகள் பதியுமாறு அதனை படிக்கவில்லை என்பதை இதன் மூலம் பறை சாற்றுகின்றனர். ரமளான் மாத இரவுகளில் நின்று வணங்கியவர்கள் இறை அச்சத்துடன் தாங்கள் அத்தொழுகைகளை நிறைவேற்றவில்லை என்பதை உரக்க அறிவிக்கின்றனர்.

 

ரமளான் மாத நோன்புகளை நோற்றவர்கள் நோன்பை எந்த நோக்கத்திற்காக இறைவன் விதித்தானோ அந்நோக்கத்தை மனதில் ஏந்தி அந்நோக்கத்தில் முழுமை பெறுவதற்காக நோன்புகளை நோற்கவில்லை என்பதை உலகிற்கு கூறாமல் கூறுகின்றனர்.

 

"…. நீங்கள் (உள்ளச்சம் பெற்று) பயபக்தியுடையவர்களாகலாம்."  (அல்குர்ஆன் 2: 183)

 

ஒரு செயலை செய்யும் பொழுது அச்செயல் எந்நோக்கத்திற்காக செய்யப்பட்டதோ அந்நோக்கம் முழுமை அடைவதைப் பொறுத்து அச்செயலின் பிரதிபலன் கிடைக்கிறது. இது எல்லாச் செயல்களுக்கும் பொருந்தும். அது போலவே தான் நோன்பும். ரமளான் மாத 29 அல்லது 30 நாட்களில் பகல் முழுவதும் அருந்துவதையும், பருகுவதையும் இன்னபிற செயல்களையும் விட்டுத் தவிர்ந்து வாழ்ந்த இந்நோன்பின் பிரதிபலன், அந்நோன்பு எந்நோக்கத்திற்காகக் கடமை ஆக்கப்பட்டதோ அந்நோக்கம் நிறைவடைவதைப் பொறுத்தே அதன் பிரதிபலன் இறைவனிடத்திலிருந்து கிடைக்கப்பெறும்.

 

எனில் நோன்பின் பிரதிபலனை இறைவனிடமிருந்து பெற நோன்பு நோற்றவரிடம் காணப்பட வேண்டிய மாற்றம் தான் என்ன? நோன்பு முடிந்து வரும் அடுத்த 11 மாதங்களில் நோன்பு காலங்களில் கடைபிடித்த ஒழுக்கங்கள், நற்பண்புகள், மற்ற இன்னபிற நற்செயல்களை விட்டு விலகி வாழ்வதா? அல்லது நோன்பு காலங்களில் தன்னைக் கண்காணித்த அதே இறைவன் தான் மற்ற காலங்களிலும் தன்னை கண்காணிக்கின்றான் என்ற உணர்வுடன் அந்நற்பண்புகளை விட்டு விலகாது தொடர்ந்து அவற்றை செய்வதா? என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதை வாசித்தீர்களா? :   ரமளான் சிந்தனைகள் - 9

 

"அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததைப் பற்றி சாட்சியம் கூறும்"".  (அல்குர்ஆன் : 24:24)

 

 

"அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும, கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்". (அல்குர்ஆன் : 41:20)

 

நாளை மறுமையில் மது சொல், செயல், செவி, பார்வைகள் அனைத்தும், கேள்விக்கு உட்படுத்தப்படும் என்பதை மறந்து ரமளானைத் தொடர்ந்து வரும் அடுத்த 11 மாதங்களில் குர்ஆன் போதனைகள் மற்றும் நபிவழிக்கு மாற்றமாக தமது வாழ்கையை அமைத்துக் கொள்பவர்களுக்கு மேற்கண்ட இரு வசனங்களும் எச்சரிக்கை விடுக்கின்றன. அடுத்த ரமளானில் இக்காலகட்டத்தில் செய்பவைகளுக்கு பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என இறுமாந்து இருப்பவர்கள் அடுத்த ரமளான் வருவதற்குள் இதே நிலையில் தான் மரணித்தால் தன் நிலை என்ன என்று சற்றும் கவலையற்றவர்களாக இருக்கின்றனர். அல்லாஹ் அருள் புரிந்து பாதுகாப்பானாக.

 

இனிமேலாவது இந்நிலையிலிருந்து தான் மாற வேண்டும் என்று ஒவ்வொருவரும் தன் மனதில் சங்கல்பம் எடுத்துக் கொண்டு இந்த புனித ரமளான் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும். உலகில் புத்தாண்டு தீர்மானங்கள், பழைய ஆண்டு தீர்மானங்கள் என பல தீர்மானங்கள் (resolutions) நிறைவேற்றுவதை போல் இப்புனித ரமளானின் ஆரம்பத்திலும் சில தீர்மானங்களை ஒவ்வொருவரும் மனதில் எடுக்கலாம்.

 

இன்ஷா அல்லாஹ்!

 

  • இந்த ரமளான் முதல் நான் தினம் ஐந்து வேளை தொழுகைகளை ஜமாத்தோடு தொழுவது முதல், எல்லா வற்றிலும் முறையாக குர்ஆன் நபி வழியில் வாழ்ந்து வருவேன்.
  • எல்லாவித தவறுகளில் இருந்தும் விடுபட்டு உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து இம்மை மறுமை வெற்றிக்கு பிராத்திப்பேன்.
  • அதிகமதிகமாக நன்மைகளை, தர்மங்களை செய்வேன்.
  • மார்க்க பணிகளில் எனது உபரி நேரத்தை கழிப்பேன்.
  • அதிகமாக முறையாக பாவமன்னிப்பு தேடுவேன்.
  • தீய பழக்கங்கள் / தீய காரியங்களில் ஈடுபடமாட்டேன்.
  • இறை சிந்தனையுடன், இறையச்சத்துடன் வாழ்வேன்.
  • குர்ஆனை பொருள் உணர்ந்து படிப்பேன், அதை எனது வாழ்க்கையில் செயல் படுத்துவேன்.
  • செய்யும் எந்த நற்செயலையும் தொடர்ந்து இடைவிடாமல் செய்ய முயல்வேன்……

போன்ற பல தீர்மானங்களை மனதில் நிறைவேற்றி உறுதியான ஈமானுடனும் இறை நம்பிக்கையுடனும் வாழ்ந்து மரணிக்க சங்கல்பம் செய்து கொண்டு இப்புனித ரமளானை ஆரம்பிக்க முயல வேண்டும். இதுவே நிரந்தரமான, முறையான பயனாக அமையும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்; பிறருக்கும் இதை உணர்த்தும் வகையில் தன் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படுத்தி முன்னுதாரமாக திகழ முயல வேண்டும். இத்திட சங்கற்பத்தை மனதில் ஏந்தியவர்களாக இவ்வரிய புனித ரமளானை ஆரம்பிப்போம்.

 

ஆக்கம்: இப்னு ஹனீஃப்

 

தொடர் 2 >