ஜிஹாத்: பயங்கரவாதத்திற்கு இஸ்லாம் கொடுக்கும் மறுபெயரா? (பகுதி 1)

Share this:

ஜிஹாத் எனும் வார்த்தை ஜுஹ்த் எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். ஜுஹ்த் எனும் அரபிச்சொல்லுக்கு, “கடுமையாக முயற்சி செய்தல்” அல்லது “வெற்றி கிடைக்கும் வரை கடுமையாக போராடுதல்” அல்லது “விடாப்பிடியான எதிர்ப்பு முயற்சி (Struggle)” என்று பொருள்.ஒருவர் தன்னுடைய இலட்சியத்தை அல்லது நோக்கத்தை அடைய தன்னால் இயன்ற எல்லா வழிகளிலும் முயற்சி செய்தல் என்பது தான் இதன் அர்த்தம்.

இறை நம்பிக்கையாளர்கள் தங்களுக்குக் கட்டளையிடப்பட்ட விஷயங்களில் எல்லா இடையூறுகளையும் எதிர்த்து பல வழிகளில் கடுமையாக போராடி வெற்றி கொள்வதை குறிக்கும் ஒரு சொல்லாகத்தான் இஸ்லாம் “ஜிஹாத்” என்ற சொல்லை பயன்படுத்துகின்றது.

தனக்கு மிகவும் அன்பானவர்களையும், தன்னையும், தன் செல்வத்தையும் விட, இறைவனையும் இறைத் தூதரையும் நேசிக்க அதாவது சுருக்கமாக இறைவனின் கட்டளைகளை முழுமையாக நிறைவேற்ற ஒரு முஸ்லிம் அல்லும், பகலும் போராடும் அந்த அடிப்படை விஷயத்தை பிரதிபலிக்கும் ஒரு சொல்லாகவே ஜிஹாத் தொன்றுதொட்டு இருந்தும் வந்திருக்கின்றது.

ஆனால் அதே நேரம் இன்று இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி ஜிஹாதின் அர்த்தமாக உலகமெல்லாம் ஏகாதிபத்தியவாதிகளால் திணிக்கப்படும் “புனிதப்போர்” என்ற சொல்லுக்கு அரபியில் “ஹர்ப் முகத்தஸா” என்று வழங்கப்பெறும். அதாவது அரபியில் “ஹர்ப் முகத்தஸா” என்றாலே “புனிதப்போர்” என்று பொருள் வரும். இது திருக்குர்ஆனில் எங்குமே காணக்கிடைக்காத ஒரு சொல்லாகும். போர் என்ற சொல்லுக்கு இணையான இன்னொரு அரபுப்பதம் “கித்தால்” என்று அர்த்தம். எனவே போர் என்றாலும் புனிதப்போர் என்றாலும் ஜிஹாத் என்று அர்த்தம் கொள்ள முடியாது.

போர் என்பது தற்செயலாக, எதிர்பாராமல் அல்லது திட்டமிட்டு நிகழ்வது. இது எப்பொழுதாவது நிச்சயம் முடிவுக்கு வரும்; வந்தே ஆக வேண்டும். ஆனால் ஜிஹாத் என்பது தொடர்ந்து இடையறாது நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு செயல்; இரவிலும் பகலிலும் இறை நம்பிக்கையாளனின் மனதில் நீக்கமற ஊன்றி நிலைபட்டிருக்கும் எண்ணம் அது.

இடையறாது நிகழும் இந்த ஹிஜாத் என்பது ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இறைவனின் விருப்பத்திற்கு முற்றிலும் அடிபணிய முயல்வது, இறைவனின் விருப்பத்திற்கு அடிபணிவதில் ஏற்படும் தடங்கல்கள், இடர்பாடுகள் எல்லாவற்றையும் இன்முகத்துடன் எதிர்கொண்டு அதில் உறுதியாக இருத்தல் ஆகிய பண்புகள் ஆகும். இது நபருக்கு நபர் அவரவரின் சூழ்நிலைகளுக்கேற்ப மாறுபடும்.

பரந்து விரிந்த பல பொருள் கொண்ட இவ்வார்த்தை இடத்திற்கும், கால சூழலுக்கேற்பவும் மாறுபடுகிறது. சமாதான சூழலில் செய்ய வேண்டிய ஜிஹாத் வேறு; போர் முனைகளில் செய்ய வேண்டிய ஜிஹாத் வேறு; செல்வந்தன் செய்ய வேண்டிய ஜிஹாத் வேறு; ஏழை செய்ய வேண்டிய ஜிஹாத் வேறு; பலசாலி செய்ய வேண்டிய ஜிஹாத் வேறு; பலகீனமானவன் செய்ய வேண்டிய ஜிஹாத் வேறு; கற்றவன் செய்ய வேண்டிய ஜிஹாத் வேறு; கல்லாதவன் செய்ய வேண்டிய ஜிஹாத் வேறு.

எடுத்துக்காட்டாக சுயவிருப்பங்கள், ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற மனத்தூண்டுதல்கள், சமுதாய மரபுகளால் ஏற்படும் நிர்பந்தங்கள், சொத்து செல்வம் மீது உண்டாகும் பற்று, தான் எனும் அகங்காரம் ஆகிய யாவும் நற்கிரியைகளைத் தடை செய்யக்கூடியவை, தீமைகளில் ஈடுபட வழி வகுப்பவை இவற்றிலிருந்து மனதைக் கட்டுபடுத்துவதும் ஜிஹாத் ஆகும்.

அப்படியிருக்க இன்று உலகில் “ஜிஹாத்” என்றாலே “புனிதப்போர்” தான் என்பது போன்ற அர்த்தம் வலிந்து திணிக்கப்படுகிறது. அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை ஒட்டுமொத்தமாக ” தீவிரவாதிகள்” என்ற சொல் கொண்டு அடையாளப்படுத்தி இறைவனின் மார்க்கமான இஸ்லாத்தை “இஸ்லாமியத் தீவிரவாதம்” என்ற வார்த்தையை கொண்டு களங்கப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இறைவழியில் இடைவிடாது கடின முயற்சியில் ஈடுபடுவோரை அரபியில் முஜாஹித் என்பர். அதாவது ஜிஹாத் செய்பவர்கள் முஜாஹித் என்று அழைக்கப்படுகின்றனர். இம்முஜாஹித்களின் சில பணிகளைக் குறித்து முஸ்னத் அஹ்மத் எனும் நபிமொழி நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவை

1. அல்லாஹ்விற்காகத் தன் மனசாட்சியோடு போராடுபவன் முஜாஹித்.

2. அல்லாஹ்விற்காக (நற்செயல்கள் புரிந்து) போராடுபவன் முஜாஹித்.

3. அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அடிபணிவதற்காகத் தன் மனசாட்சியோடு போராடுபவன் முஜாஹித்.

மேற்கண்ட முஜாஹித்களின் பணிகளில் ஜிஹாத் என்றால் என்ன என்பதற்கு தெளிவான விளக்கங்கள் உள்ளன.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஒரு விஷயத்திற்கான விளக்கம் வெறும் வார்த்தைகளின் அர்த்தங்களோடு முடிந்து போவது அன்று. அதற்குத் தெளிவான விளக்கம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கையாகும். ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை தனது வாழ்வில் கடைபிடிக்கும் எவ்விஷயத்திற்கும் நடைமுறை விளக்கத்திற்கு முன்மாதிரியாக இறைத்தூதரின் வாழ்வை தான் எடுத்துக் கொள்ளவேண்டும். அங்கு அனைத்திற்கும் முன்மாதிரி உள்ளது. எனவே ஜிஹாதிற்கான விளக்கத்தையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இருந்து தான் பெற வேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழி ஒன்று நபி(ஸல்) அவர்களின் செயல்பாட்டின் பொதுவான ஒரு நெறிமுறையை அறிவிக்கின்றது.

“இரண்டு வழிமுறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்படும்போது நபி(ஸல்) அவர்கள் அவற்றுள் எளிதானதையே தேர்ந்தெடுப்பார்கள். ஏதேனும் ஒரு காரியத்தில் இரு கருத்துக்கள் எழும்போது அவற்றுள் கடினமானதை விட்டுவிட்டு எளிதானதையே தேர்ந்தெடுப்பார்கள் என்பது தான் இதற்குப் பொருள்” என ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்களின் இந்த வழிமுறை அன்றாட விவகாரங்களுக்குப் பொருந்துவதோடு கடினமான வழிமுறையைப் பரிந்துரைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் காரியங்களுக்கும் பொருந்தும்.

அவ்வாறெனில் நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் அவர்கள் ஏன் அதிகமான போர்கள் செய்தார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பு தான். இக்கேள்வியை அடிப்படையாக வைத்து ஜிஹாத் என்றாலே அர்த்தம் போர் தான் என விளங்கி விடக்கூடாது. அதற்கான காரணம் முன்னரே விளக்கப்பட்டுவிட்டது. பின்னர் ஏன் நபி(ஸல்) அவர்கள் போர்களில் ஈடுபட்டார்கள் என்ற கேள்விக்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்வை அக்காலகட்டத்தோடு ஆராய்ந்து பார்ப்பது அவசியமாகும்.

நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையை ஆராயும் போது, அவர்கள் தாமாகவே எந்த போர் நடவடிக்கைகளையும் பரிந்துரைத்ததில்லை என்பதை அறிய முடியும். அன்னாருடைய எதிரிகள் அவர்களைப் போரில் சிக்க வைக்க முயன்றபோதெல்லாம் ஏதாவது ஒரு வழிமுறையை உபயோகித்துப் போரைத் தவிர்க்கவே முயன்றார்கள். வேறு வழி அறவே இல்லாமலிருந்த சூழ்நிலையில் தன் மீது போர் திணிக்கப்பட்ட போது தான் போரிடும் நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். எனவே நபி(ஸல்) அவர்களின் வழிமுறைபடி ஒருவரையோ அல்லது ஒரு நாட்டையோ பிடிப்பதற்காக அல்லது தாக்குவதற்காக போரிடுவது என்பது இஸ்லாமிய வழி முறையன்று. இஸ்லாம் தற்காப்புக்காக மட்டுமே போரிட அனுமதித்துள்ளது. அதுவும் வேறு வழியே இல்லாத நிலையில் மட்டுமே.

ஒருமுறை தபூக் யுத்தத்திலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் நபி(ஸல்) அவர்கள் “சிறிய ஜிஹாதிலிருந்து பெரிய ஜிஹாதிற்கு நீங்கள் திரும்பிக் கொண்டிருக்கிறீர்கள்” என சஹாபா பெருமக்களை நோக்கிக் கூறினார்கள். சஹாபாக்கள் ஆச்சரியமாக “அது என்ன?” எனக் கேட்டபொழுது “உங்கள்மனோஇச்சை” என நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

உண்மையான ஜிஹாத் என்றால் என்ன என்பதற்கு இச்சம்பவம் தெளிவான பதிலைத் தருகிறது. ஜிஹாத் என்ற பதத்திற்கு “புனிதப்போர்” தான் உண்மையான பொருள் எனில் நபி(ஸல்) அவர்கள் ஏன் இவ்வாறு கூற வேண்டும். தீயவற்றிற்கு எதிராக , தீய எண்ணங்களுக்கு எதிராக போராடும் மனவலிமையைத் தான் உண்மையான ஜிஹாதாக இஸ்லாம்இங்கு வரையறுக்கிறது.

இஸ்லாம் தீமைக்கெதிராக, அடக்கு முறைக்கு எதிராக, அநியாயத்திற்கு எதிராக நம்பிக்கையாளர்கள் எப்பொழுதும் முன்னணியில் இருக்க வலியுறுத்துகிறது. இதற்காக நம்பிக்கையாளர்கள் தனது மனதை பக்குவப்படுத்துவதை தான்மனோஇச்சைக்கு எதிரான போராட்டமாக – ஜிஹாதாக இஸ்லாம் கற்றுத்தருகிறது.

இதனை மற்றொரு நபி மொழியின் மூலமாகவும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:”ஜிஹாதிலேயே உயர்ந்தது அநியாயக்காரனின் முன்னிலையில் நியாயத்தை எடுத்துக் கூறுவதாகும்”.

இதற்கு உதாரணமாக திருக்குர்ஆன் நபி மூஸா(அலை) அவர்களின் வரலாற்றை நம்பிக்கையாளர்களுக்கு கற்றுத்தருகிறது.

மிகப்பெரும் கொடுங்கோலனான ஃபிர்அவ்னின் முன்னிலையில் நன்றாக வாய் பேச இயலாத திக்கு வாய் கொண்ட மூஸா(அலை) அவர்கள் அவனின் அநியாயங்களை நெஞ்சுறுதியுடன் எடுத்துக் கூறி அவனை எதிர்த்த சம்பவம் அநியாயத்திற்கெதிரான போராட்டத்தின் “ஜிஹாதின்” மணிமகுடமாகும்.

“அல்லாஹ்வையும் அவனது தூதரையும், உலகின் மற்ற எவரையும் , எல்லாவற்றையும் விட அதிகமாக நேசிக்கும் வரை ஒருவர் உண்மை நம்பிக்கையாளராக ஆக முடியாது” என்று இறை தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழி இங்கு நினைவு கூரத்தக்கது. நன்றாக வாய்பேசக்கூட இயலாமல் இருந்த மூஸா(அலை) அவர்கள் எதற்காக ஒரு கொடிய கொடுங்கோல் அரசனின் முன் சென்று அவனுக்கு எதிராக அடக்குமுறைக்கு ஆளான பாவப்பட்ட மக்களுக்காக போராட வேண்டும்? இங்கு இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவது மட்டுமேமூஸா(அலை) அவர்களின் நோக்கமாக இருந்தது. இதிலிருந்து நம்பிக்கையாளர் ஒருவர் இறைவன் காட்டிய நேர்வழியில் நடப்பதற்கும் அவனின் கட்டளையை நிறைவேற்றப் போராடுவதும் தான் ஜிஹாத் என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஜிஹாத் என்பதற்கு புனிதப்போர் என்ற அர்த்தம் கிடையாது என்பதற்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த மற்றொரு சம்பவத்தையும் உதாரணமாக கூற இயலும். ஒருமுறை பெண்களும் போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்கப்பட்ட போது இறை தூதர் நபி(ஸல்) அவர்கள், “மிகச்சிறந்த ஜிஹாத் என்பது சிறப்பான, பிழையற்ற முறையில் நிறைவேற்றப்படும் ஹஜ் ஆகும்” என்று கூறினார்கள். இங்கும் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதில் நம்பிக்கையாளர் எடுக்கும் சிரத்தையும் முயற்சியும் மட்டுமே ஜிஹாதாக இறைத்தூதரால் சுட்டிக்காட்டப்படுகிறது. உண்மையில் ஜிஹாத் என்பதற்கு புனிதப்போர் தான் அர்த்தம் எனில் பெண்களுக்கு நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு ஏவியிருக்க மாட்டார்கள். ஏனெனில் இறைக்கட்டளையை முன்பின் மாற்றம் இல்லாமல் உள்ளதை அப்படியே எடுத்துரைப்பதிலும் வழிகாட்டுவதிலும் எம்பெருமானார்(ஸல்) அவர்களை சிறந்த முன்மாதிரியாக இறைவன் அடையாளம் காட்டியுள்ளான்.

இன்னுமொரு சந்தர்ப்பத்தில், ஒருவர் இறை தூதர்(ஸல்) அவர்களிடத்தில் ஒருபோரில் பங்குபெற அனுமதி கேட்டார்.அதற்கு இறை தூதர்(ஸல்)அவர்கள், அவரிடம் அவருடைய பெற்றோர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? என வினவினார்கள். ஆம் என்று பதிலளித்த அந்த மனிதரிடம், இறை தூதர்(ஸல்) அவர்கள், “நீங்கள் உங்கள் பெற்றோர்களுக்கு சேவை செய்வதன் மூலம் ஜிஹாத் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டார்கள்.

ஜிஹாத் என்றால் போர் செய்வது மட்டும் தான் அர்த்தம் எனில் எதற்காக நபி(ஸல்) அவர்கள் இம்மனிதரைத் தடுத்து பெற்றோர்களுக்கு சேவை செய்ய அனுப்பினார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பல பரந்து விரிந்த பொருளை கொண்ட, யாருக்கு வேண்டுமெனிலும் அவரவருக்கு இயைந்தது போல் எப்படி வேண்டுமெனிலும் திரித்துக் கூறவும் அதன் அடிப்படையில் விளக்கமளிக்கவும் முடியக்கூடிய ஒரு சொல்லே ஜிஹாதாகும். எனவே அதன் உண்மையான பொருளையும் அது எங்கே யாருக்கு எதிராக எவ்வாறு செய்யப்பட வேண்டியது என்பது போன்றவற்றின் விளக்கத்தினை இஸ்லாத்தின் பார்வையில் பார்த்தலே சரியான அணுகுமுறையாகும். தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட இந்த ஜிஹாதைக் குறித்து இன்னும் தெளிவான விளக்கங்களை இஸ்லாத்தின் பார்வையில் இன்ஷா அல்லாஹ் இனி வரும் பகுதிகளில் காண்போம்.

ஆக்கம்: இப்னு ஆதம்

< முன்னுரை | பகுதி 2 இன்ஷா அல்லாஹ் விரைவில்…


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.