தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனா?

Share this:

– டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி,பி.எச்.டி, ஐ.பி.எஸ்(ஓய்வு)


அது 25.1.2009 ந்தேதி இரவு. என்.டி.டி.வி பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியான ஒரு நிகழ்ச்சி நடந்தேறியது.

 

கர்நாடகா மாநிலம் மங்களூரில் பார் வசதியுடன் கூடிய ஒரு ஹோட்டலுக்குச் சென்ற பெண்கள், மாணவிகள் ஆபாசத்தில் ஈடுபட்டதாகக் கூறி திரு. பிரமோத் முத்தலிக் தலைமையில் இயங்கி வரும் ஸ்ரீராம் சேனா கும்பலைச் சார்ந்தவர்கள் பெண்கள் என்றும் பாராது தலை முடியைப் பிடித்து இழுத்தும் அவர்களை கீழே தள்ளியும் அணிந்திருந்த மேலாடைகளைக் கிழித்தும் ஓட ஓட விரட்டி அடித்தக் காட்சி தான் நாடையே உலுக்கியது.

 

அதற்கு ஸ்ரீபிரமோத் அளித்த விளக்கம் என்ன தெரியுமா?, “பெண்கள் பண்பாடு தவறி நடந்து கொண்டதால் “மாரல் போலிஸிங்கில்” ஈடுபட்டதாக” கூறுகிறார்.


“மாரல்” என்ற ஆங்கில சொல்லுக்கு தமிழில் சரி, தவறு என்று முடிவு செய்யும் கொள்கை என்று அர்த்தம். “போலீஸிங்” என்ற ஆங்கில சொல்லுக்கு “அரசால் நியமிக்கப்பட்ட அலுவலர்” என்று தமிழில் கூறலாம்.

 

ஜனநாயகத்தில் ஒவ்வொரு அரசும் கட்டுக்கோப்பான நாகரீக சமுதாயத்தினைக் கட்டிக்காப்பது தன் மேலான கடமையாகும். ஆனால் அரசு அலுவல் செய்ய வேண்டிய “போலீஸிங்” வேலையை ஒரு தனிப்பட்ட அமைப்பு செய்யலாமா?, அவ்வாறு “போலீஸிங்” நடவடிக்கைகளில் ஈடுபடும்போது வன்முறைகளில் ஈடுபடலாமா? என்பது தான் முக்கிய கேள்வியே.

 

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. கே.டி. தாமஸ் 2000 ஆம் வருடம், நவம்பர் மாதம் 30ந்தேதி “போலீஸிங் இன் இந்தியா” என்ற தலைப்பில் கூறியிருப்பதாவது, “அரசால் நியமிக்கப்பட்ட காவலர் கூட தனது உடல், உயிருக்கு ஆபத்து இருந்தாலொழிய எந்த இந்தியக் குடிமகனுக்கும் உடலளவில் எந்த வன்முறையிலும் ஈடுபட உரிமையில்லை”.

 

தடி வைத்துக்கொள்ள அரசு ஆணைகளில் உரிமை உள்ள காவலர்களுக்கே அத்துமீறல் கூடாது என்று சட்டத்தில் இருக்கும்போது “போலீஸிங்கில்” ஈடுபட ஸ்ரீராம் சேனாவிற்கு எங்கே இருந்து அதிகாரம் வந்தது?. சீக்கியர்கள் மத கோட்பாடுகளுக்கிணங்க பெரிய வாள் வைத்துக் கொள்ளலாம், ஆனால் அடுத்தவர்களைத் தாக்கும் ஆயுதமாக அதை பயன்படுத்தும் போது இந்திய ஆயுதச்சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கலாம். ஆங்கில பழமொழியில் “குடை வைத்துக் கொள்ள உரிமை உண்டு, ஆனால் அது அடுத்தவர் முக்கை பதம் பார்க்கக்கூடாது” என்பார்கள்.

 

டி.வியில் இன்னுமொரு நிகழ்ச்சியையும் காட்டினார்கள். ஸ்ரீராம் சேனா தொண்டர்கள் பெண்களைத் தாக்கும் போது பஜ்ரங்தள் அமைப்பைச் சார்ந்த முன்னாள் தொண்டர் திரு. குமார் என்ற வாலிபர் பெண்களை மேல் விழும் அடிகளையும் தன்மேல் தாங்கிக்கொண்டு காப்பாற்றிய நிகழ்ச்சி தான் அது. நிருபர்களிடம் திரு. குமார் பேசும் போது, “பண்பாடு என்ற போர்வையில் பெண்களைத் தாக்க ஸ்ரீராம் சேனாவிற்கு யார் உரிமை கொடுத்தது?” என்ற கேள்வியை எழுப்பி, “இவர்களின் போக்கு பிடிக்காமல் தான் பஜ்ரங்தளிலிருந்து விலகியதாகவும்” கூறியுள்ளார் என்று பார்க்கும் போது இன்றும் இந்திய நாடு மத சார்பற்ற மக்களுக்கு சொந்தமான நாடே என்று கூற முடிகிறது.

நமது நாட்டில் மதத்தால், மொழியால், பகுதி தொகுப்பால், பண்பாடு என்ற போர்வையில் நடந்த அத்து மீறல் சம்பவங்களை உங்கள் பார்வைக்கு வைக்கலாம் என எண்ணுகிறேன்.

ஒரிஸ்ஸா மாநிலத்தில் வாழும் பழங்குடியினர் தொழு நோயால் பாதிக்கப்பட்டும், கல்வி அறிவில்லாமை அறிந்து, ஆஸ்திரேலியா நகரிலிருந்து ஒரிஸ்ஸா மாநிலத்தில் தொழுநோய் ஆஸ்பத்திரி நிறுவியும் பாடசாலை அமைத்தும் குடும்பத்துடன் தங்கி சேவை செய்து கொண்டு இருந்தார் டாக்டர் ஸ்டெய்ன்ஸ். அவர் மதத்தைப் பரப்புகிறார் என்று கூறி இரவில் டாக்டரும் அவரது மகனும் ஜீப்பில் தூங்கிக்கொண்டிருக்கும் போது தீயிட்டு உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டனர்.

அந்த படுபாதகச் செயலில் ஈடுபட்டவர்கள் வேறுயாருமில்லை, பஜ்ரங்தள் அமைப்பைச் சார்ந்த தாராசிங்கும் அவனது கூட்டாளிகளும் தான். இந்த நிகழ்ச்சிக்குப் பின் திருமதி. ஸ்டெய்ன்ஸிடம் நிருபர்கள், “உங்கள் கணவர், மகன் இறந்த பின் நீங்கள் ஆஸ்திரேலியா திரும்ப சென்றுவிடுவீர்களா?” என்ற கேள்விக்கு அந்த பெண்மணி, “என் கணவர் விட்டுச்சென்ற சேவைகளை தொடர்ந்து செய்வேன்” என்று சொன்னதன் மூலம், தாராசிங் அவரது கூட்டாளிகள் முகத்தில் கரியைப் பூசி விட்டார். சமீபத்தில் சர்ச்சுகள் தாக்கப்பட்ட சம்பவங்களும் மதத்தால் ஈடுபடும் போலீஸிங் என்ற அத்துமீறல் தான்.

26.1.09 குடியரசு விழா அன்று மகாராஸ்ட்ரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு பள்ளியில் குடியரசு விழாவும் மும்பையில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட காவல், ராணுவ அதிகாரிகளைக் கவுரவிக்கும் விதமாக பள்ளிச்சிறார்களை வைத்து ஒரு “கல்ச்சுரல்” நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பெற்றோர்கள், பார்வையாளர்கள் என ஏராளனமானோர் கூடியிருந்தனர். வடநாட்டைச்சார்ந்த மாணவர்கள் அவர்கள் மொழியில் பாட்டுப்பாடி மகிழ்ந்து இருந்த நேரத்தில் ராஜ் தாக்கரேயின் எம்.என்.எஸ் சேனாவினர், “ஏன் வேற்றுமொழி பாடல்களைப் பாடுகிறீர்கள்” என்று கேட்டு சிறுவர்கள், முதியவர், பெண்கள் என்று பாராது ஓட, ஓட குண்டாந்தடியாலும் பெல்ட்டுகளாலும் விரட்டி அடித்தனர். அது மட்டுமா? தியாகம் செய்த ராணுவ, காவல் அதிகாரிகளின் விளம்பர பேனர்களையும் கிழித்து எறிந்தனர். இது தான் மொழியின் பெயரால் ஈடுபடும் போலீஸிங்.

மேற்கு ரயில்வே டிவிசனில் வேலைக்கு ஆள் எடுப்பதற்காக விளம்பரப்படுத்தப்பட்டது. ஏராளமான வேலை வாய்ப்பில்லாத படித்த வடநாட்டு இளைஞர்கள் இரவே மும்பை வந்து பரீட்சை நடக்கும் கட்டிடத்தில் தங்கியிருந்தனர். மஹாராஸ்டிராவில் மஹாராஸ்ட்ரா மக்களுக்கு மட்டுமே வேலை அளிக்க வேண்டும் என்று ராஜ் தாக்கரேயின் எம்.என்.எஸ்ஸின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் ஒத்துக் கொள்ளலாம், மாறாக வடநாட்டு வாலிபர்களைத் தாக்கி விரட்டி அடித்தார்கள். இந்தச் செயல்தான் பகுதியின் பெயரால் அழைக்கப்படும் “போலீஸிங்” ஆகும். பண்பாட்டின் பெயரால் நடத்தப்படும் போலீஸிங் எடுத்துக் காட்டுதான் மங்களூரில் மேலே சொன்ன ஸ்ரீராம் சேனா நடத்திய போலீசிங் ஆகும்.

இது போன்ற போலீஸிங்குக்கு இந்திய அரசியல் சட்டம் என்ன சொல்கிறது? இந்திய அரசியலமைப்புச் சட்டம் 15 ஆவது பிரிவின் படி, “சட்டத்தின் முன்பு அனைத்து குடிமக்களும் சமம், அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு உண்டு”. 15 வது சட்டத்தின் படி சமயம், இனம், குலம், பாலினம், பிறப்பிடம்(தொகுதி) இவற்றை மட்டுமோ, அவற்றில் எதனை மட்டுமோ காரணங்களாகக் கொண்டு, குடிமக்கள் எவருக்கும் எதிராக வேற்றுமை காட்டக்கூடாது. “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற கொள்கையும், “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்னும் தமிழ் பண்பாட்டையும் போதிப்பது தான் நமது அரசியலமைப்பு. ஆனால் அதனை ஏன் பஜ்ரங்தளோ, ஸ்ரீராம் சேனாவோ, எம்.என்.எஸ் அமைப்போ மதிப்பதில்லை என்பது தான் புதிரானது. அவ்வாறு மதிக்காதவர்களை ஏன் மாநில அரசுகள் வளர விடுகின்றன?

ஒரு சமயத்தில் வி.எச்.பிக்கு மாற்றுக் கருத்தைச் சொன்ன மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் டெல்லி அலுவலகம் தாக்கப்பட்டு அங்கிருந்த தலைவர்களும் தாக்கப்பட்டார்கள். சாந்தி, சமாதானம், அஹிம்சா போன்ற கொள்கைகளைப் போதித்த மகாவீர், புத்தர், காந்தி போன்றவர்களின் கருத்துக்களைக் காற்றில் பறக்கவிட்டு விட்டார்களா மேலே சொன்ன தீவிரவாத அமைப்புக்கள்?

இந்திய குடிமகன் தானாக முன் வந்து மதமாற செய்ய தடை ஏதும் உள்ளதா? என்றால் இல்லை எனலாம். மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்த தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மக்கள் எதிர்ப்பை சமாளிக்க முடியாமலும் சட்ட சிக்கல் இருந்ததாலும் திரும்பப்பெற்ற சம்பவங்களெல்லாம் உண்டு. “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்று அறியாததால் வந்த விளைவுதான் அவைகள் எல்லாம். அரசியல் சட்டம் 16(2)ன் படி சமயம், இனம், குலம், பாலினம், கொடிவழி, பிறப்பிட, உறைவிடம் காரணங்களைக் கொண்டு வேலை வாய்ப்பு மறுக்கப் படக்கூடாது என்று இருக்கும் போது எவ்வாறு ராஜ் தாக்கரே ஆட்கள் இந்தியாவின் மற்ற மாநில குடிமக்கள் மீது தாக்குதல் நடத்த உரிமை பெறுகின்றனர்?. தங்கள் பகுதி புறக்கணிக்கப் படுவதாக அவர்கள் நினைத்தால் தங்கள் மக்கள் பிரதிநிதிகள் முலம் எடுத்துச் சொல்லி நிவர்த்தி செய்திருக்கலாமே?. இது போன்று பார்களில் பெண்கள் மது ஊற்றி ஆபாச நடனம் ஆடுவதாக வந்த புகாரின் பேரில் பாரில் பெண்களை வேலைக்கு அமர்த்துவதை மும்பை அரசே தடை செய்து விட்டதே. அதே போன்று ஸ்ரீராம் சேனாவும் கர்நாடகா பி.ஜே.பி அரசை அணுகியிருக்கலாமே? அதை விட்டு விட்டு குண்டர்கள் தடியினை சுழற்ற அனுமதிக்கலாமா?

நான் 1999ஆம் வருடம் அரசு அலுவலக விசயமாக மக்கா சென்றிருந்தேன். மக்கமே ஹரம் முதலாம் வாயில் எதிர் புறம் உள்ள பிஸ்மில்லா தெருவில் சிலர் நின்று கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது வெள்ளை நிற நீளமான அங்கி அணிந்த ஒரு அரபி கையில் குச்சியுடன் வந்து அவர்களை விரட்டினார். பின்பு ஒரு வேன் வந்து அவர்களை பிடித்துச் சென்றது. ஏனென்றால் யாசகம் இஸ்லாத்தில் அனுமதியில்லை.

சென்னையில் கூட ஸ்டார் ஹோட்டலில் ஆபாச நடனம் ஆடுவதாக தகவல் வந்தால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லையா? அது போன்ற சட்டத்திற்கு உட்பட்டு சட்டத்தால் நியமிக்கப் பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பது தானே நியாயம். அதை விட்டு விட்டு தனிப்பட்ட அமைப்பினர் தடியினை சுழற்ற அனுமதிக்கலாமா?

ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் பண்பாட்டினை சீர்திருத்துகிறேன் என்று சொல்வதோடு நின்று விடவில்லை, மஹாராஸ்ட்ரா மாநிலம் மாலேகான் நகரில் வெள்ளிக்கிழமை கூட்டுத்தொழுகை நடக்கும் போது ராணுவத்திலுருந்து திருடப்பட்ட ஆர்.டி.எக்.எஸ் வெடிமருந்தை உபயோகித்து ஆறு உயிர்களை பலி வாங்கிய ராணுவ அதிகாரி புரோகித், பெண் துறவி சாத்வியின கொடூர செயல் ஒரு ஆரம்பம் தான் என்றும் கூறுகிறார் என்றால் பாருங்களேன். அவர் அவ்வாறு பேசுவதிற்கு தைரியம் யார் கொடுத்தது? அண்ணல் நபி அவர்கள் தன் தோழர் அபூ ஹுரைராவிடம், யார் இறை நம்பிக்கையில்லாதவன் என்ற வினாவிற்கு,”எவருடைய அண்டை வீட்டார் பாதுகாப்போடு இல்லையோ அவர்கள் தான்” என்று மறுமொழி பகர்ந்தார்கள்.

இன்னொரு சமயத்தில் நபி பெருமானார் தோழர் ஜரீர் அவர்களிடம், “மாந்தர் அனைவருமே ஒரு தாய் மக்கள், எனவே அனைவருடனும் கருணையுடனும் பரிவுடனும் நடந்து கொள்ளுமாறு” சொன்னார்கள். ஆகவே வன்முறை தண்டல்கார்களிடமிருந்து நம்மையும் அண்டை வீட்டாரையும் பாதுகாக்க உறுதி மொழி எடுக்க வேண்டும்.

இந்திய நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கிற மக்களவை தேர்தல் ஏப்ரல்-மே மாதம் வரும் நிலையில் பி.ஜே.பி. பிரதம மந்திரி வேட்பாளர் திரு. அத்வானி இப்போதே முன்னாள் ராணுவ தளபதி திரு.முல்லிக், ஏர் சீப் மார்சல் திரு.டிப்னிஸ், உளவுப்படை தலைவர் ஆகியோர்களைக் கூட்டி மீட்டிங் போட்டுள்ளார். கடந்த 29.1.2009 அன்று மும்பையில் ஜனதாக்கட்சி தலைவர் சுப்ரமணிய சுவாமி மடாதிபதிகள் கொண்ட “தர்ம ரக்சா மன்ச்” என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதில் “முஸ்லிம்கள் தீவிரவாதத்திற்கு எதிராக பத்வா கொடுக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால் மும்பை மாலேகான் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ அதிகாரி புரோகித், பெண் சாமியார் சாத்வியின் செயலை அந்தக் கூட்டம் கண்டிக்க வில்லை என்பது நமக்கு ஆச்சரியமாக தெரியவில்லையா?.

அந்தக் கூட்டத்தில் பேசிய வி.எச்.பி. தலைவர் திரு. அசோக் சிங்கால் அவர்கள்,”இந்தியாவினை மதசார்பற்ற நாடு என்று அறிவித்ததின் மூலம் இந்தியாவின் தனித்தன்மை பறிபோய் விட்டதாகவும் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் அதற்கான தீர்வு கிடைக்கும்” என்றும் கூறுகிறார். எந்த அசோக் சிங்கால்? வறண்ட தென்தமிழகத்தின் வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்ட சேது சமுத்திர திட்டத்தை மதத்தின் பெயரால் எதிர்ப்பவர் தான். மத்தியில் மதசார்பற்ற ஐக்கிய முன்னணி ஆட்சி இருப்பதால் தான் ரு.145,000 கோடி மெட்ரோ ரெயில் திட்டம் சென்னைக்கும் மத்திய பல்கலை தழிழகத்திற்கும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களும் தமிழகமெங்கும் கூட்டு குடிநீர் திட்டங்களும் அகல ரயில் பாதைகளும் மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் அளவிற்கு வளர்ச்சி பணிகளுக்கான ஆணைகள் நமக்கு கிடைத்திருக்கிறது. மதசார்புள்ள ஆட்சி வந்தால் அத்தனை மக்கள் நல திட்டங்களும் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் மத நல்லிணக்கத்திற்கும் ஊறு செய்யும் குண்டர்கள் தர்பார் தான் அரங்கேறும். அதற்கு நாம் ஒரு போதும் அனுமதியோம்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.