ஆதரவற்ற முதியோர் இல்லம்!

Share this:

தூக்கி வளர்த்த பெற்றோர்களை ஏதோ சுமைகளைப்போலக் கருதித் தூக்கி வீசும் கொடூரமான பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள், தங்களின் கடைசி வாழ்க்கையை பிளாட்பாரங்களிலும், கடைகளின் வாசல்களிலும் தங்கிக் கழிப்பதை நாமெல்லாம் கண்டிருப்போம். சாப்பிடக்கூட வழியில்லாத அந்த முதியவர்கள் குப்பைத் தொட்டிகளில் விழும் எச்சில் இலைகளைத் தின்பதையும் சிலபோது நாம் கண்டிருப்போம்.

பெற்றோர்களை அதிகம் பேண வேண்டும் என்று வலியுறுத்தும் நம் இஸ்லாமிய மார்க்கத்திலும்கூட இதுபோன்று, சிலரால் கைவிடப்பட்டு நடுத்தெருவில் நாதியற்று ஒதுங்கி, வெயிலிலும் மழையிலும் அவதிப்பட்டு அசையக்கூட முடியாமல் கிடந்து, அங்கேயே அநாதைகளாய் இறந்து போகும் முதியவர்களையும் நாம் கண்டிருப்போம்.

சில சமூக ஆர்வலர்கள் இதுபோன்ற முதியவர்களைக் கூட்டிச் சென்று மற்ற மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அனாதை இல்லங்களில் சேர்த்து விடுகின்றனர். காலம் முழுவதும் ஈமானோடு இஸ்லாத்தைத் தன் வாழ்வியல் நெறியாய்ப் பின்பற்றி வாழ்ந்து வந்தவர்கள், இறுதிக் காலத்தில் வேறு வழியில்லாமல் உணவுக்காகவும் உறைவிடத்திற்காகவும் பிற மதக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு இணைவைப்பில் விழுந்து விடுகின்றனர். அவர்களின் வணக்கங்கள் முழுமையாக நாசமாகி, அவர்கள் நரகப்படுகுழிகளை நோக்கிப் பயணிப்பதற்கு நாமும் ஒரு வகையில் காரணமாகி விடுகின்றோம்.

இந்தநிலை இனி யாருக்கும் வந்துவிடக் கூடாது. நம் மக்கள் இனி அநாதைகளாக நடுவீதியில் செத்து விழக்கூடாது; உணவிற்காகக் கொள்கைகளைக் கொள்கை மாற்றிக் கொள்ளக்கூடாது என்ற தீர்மானத்தை அழுத்தமாகப் பதிந்துதான் சில இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் ஆதரவற்ற முதியோர் இல்லமொன்று ராஜகிரியில் துவக்கப்பட்டது. இறைவனின் பேரருளாலும் நம் சகோதரர்களின் பூரண ஒத்துழைப்பாலும் இந்த இல்லம் இப்போது தஞ்சை மாவட்டம் ராஜகிரி பண்டாரவாடையில் இயங்கி வருகின்றது. இப்போதைக்கு அங்கே 19 முதியவர்கள் தங்கியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 12/09/2011 திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் அங்கே தங்கியிருந்த சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி சபியா பீவி என்பவர் மவுத்தானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இந்த மூதாட்டி கடந்த பல மாதங்களாக இந்த இல்லத்தில்தான் தங்கியிருந்தார். இவர் அசைந்து எழுந்து நடக்கக்கூட முடியாத நிலையில் இருந்தார். நம் சகோதரர்கள், அந்த மூதாட்டியைக் கருணையோடு கவனித்து வந்தனர். இவர் மவுத்தானதும் இவருக்குச் செய்ய வேண்டிய அனைத்துப் பணிகளையும் செய்து, குளிப்பாட்டி, கபனுடை தரித்துத் தயார்படுத்தினார்கள். அந்த இல்லத்தில் உள்ள அனைத்து முதியவர்களும் இரவெல்லாம் விழித்து அங்கேயே அமர்ந்திருந்தார்கள்.

இரவு நேரம் என்பதால் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளைக் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து அனைவரும் இருந்து விட்டனர். காலையில், ஒரு பெரிய பள்ளிக்கு(பெயர் வெளியிடுவது நல்லெண்ணம் கருதி தவிர்க்கப்படுகிறது) ஃபஜ்ரு தொழுகைக்குச் சென்ற நம் சகோதரர்கள் அந்த ஊர் நிர்வாகிகளிடம் மூதாட்டி வஃபாத்தான விசயத்தைச் சொல்லி அவரை அடக்கம் செய்வதற்கு அனுமதி தருமாறு கேட்டனர். “இது சம்பந்தமாக நாங்கள் கலந்தாலோசிக்க வேண்டும்; எனவே காலை 8 மணிக்கு நாங்களே தகவல் அனுப்புகிறோம்” எனச் சொல்லி நம் மக்களை அனுப்பி வைத்தனர் ஊர் நிர்வாகிகள்.

காலை மணி 9 ஆகியும்கூட எவ்விதத் தகவலும் வராத காரணத்தால் நேரடியாகச் சென்று கேட்டு விடுவது என முடிவு செய்து அவர்களை அணுகியபோது அவர்கள் சொன்ன பதில் நம் மக்களுக்கு நெஞ்சை அடைப்பதாக இருந்தது. “எந்த ஊரென்றே தெரியாதவருக்கெல்லாம் எங்கள் ஊரில் அடக்கம் செய்ய இடம் தரமுடியாது. நீங்கள் வேறு எங்கு வேண்டுமானாலும் அடக்கம் செய்து கொள்ளுங்கள்; உங்களுக்கு என்ன முடியுமோ அதைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என வெடித்தனர்.

ஜனாஸாவைச் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இருந்த நம் சகோதரர்கள் அவர்களிடம், “ஜனாஸாவைத் தடுக்காதீர்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அதற்கு மனமிரங்காத அந்தக் கல் நெஞ்சம் கொண்டவர்கள், “முடியவே முடியாது; நீங்கள் இங்கிருந்து இடத்தைக் காலி செய்யுங்கள்”, என தங்களின் வெறுப்புணர்வைக் கொட்டித் தீர்த்தனர். அதற்கும் கோபப்படாத நம் மக்கள் மிகத் தெளிவாக சொன்ன பதில், “அனாதையாய் வீட்டை விட்டு விரட்டப்பட்ட ஒரு மூதாட்டியின் ஜனாஸாவுக்குத்தானே நாங்கள் உங்களிடம் வந்து பேசிக் கொண்டிருக்கிறோம். பிள்ளைகளால் வீட்டைவிட்டு துரத்தப்பட்டு மனம் நொந்துபோய் தங்கள் கடைசி வாழ்க்கையை வாழ்ந்து இறந்துபோன அவர்களின் ஜனாஸாவையாவது நிம்மதியாகப் போக விடுங்கள். உங்கள் மையவாடியில் ஆறு அடி நிலம் தந்து விடுவதால் உங்களுக்கு ஒன்றும் குறைந்து போய்விடாது” என்று மீண்டும் கேட்டுப் பார்த்தனர்.

‘எதற்கும் இரங்காத மனம், ஜனாஸாவைப் பார்த்தாவது இரங்கும்’ என்பார்கள். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் ஓர் அனாதை மூதாட்டியின் ஜனாஸாவை அடக்கம் செய்வதில் முரண்டு பிடித்து நின்றனர் அந்த ஊர் ஜமாஅத்தார்கள்.

இனி இதற்கு மேலும் இங்கே நின்றால் வேலைக்காகாது என்று அருகில் உள்ள ஊரான திருமங்கலக்குடியை அடுத்த குறிச்சிமலை ஜமாஅத்தார்களை அணுகினர் நம் சகோதரர்கள். இந்த விசயத்தைக் கேட்டதும் அந்த ஊர் நாட்டாமை ஹபீப் முஹம்மது அவர்களும் மற்றும் நிர்வாகிகள் இன்ஜினியர் ஜாபர், ஹாஜா மற்றும் ஜாபர் ஆகியோரும் எவ்வித ஆலோசனையும் இன்றி உடனடியாக ஜனாஸாவை இங்கே அடக்கம் செய்து கொள்ளுங்கள் என தெரிவித்ததைத் தொடர்ந்து, தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் உடனடியாக இந்தத் தகவலை பண்டாரவடை கிளைக்குத் தெரிவித்தனர்.

இறைவனின் உதவி அறியாப்புறத்தில் இருந்து வரும் என்ற இறை வசனத்திற்கேற்ப எவ்வித இடையூறும் இன்றி, ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு அனுமதி தந்த அந்த ஊர் ஜமாஅத் நிர்வாகிகளுக்காக நம் மக்கள் துவா செய்தனர்.

உடனடியாக காலை 10.45 மணிக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அந்த மூதாட்டியின் ஜனாஸாவை ஏற்றிச் சென்று சரியாக 11.30 மணிக்கு குறிச்சிமலை சென்றடைந்தனர். அதே பள்ளிவாசலில் அந்த ஜனாஸாவிற்குத் தொழுகை நடத்தி, அந்த மூதாட்டிக்காகத் தங்கள் கைகளால் குழி வெட்டி, கடைசிவரை உடனிருந்து ஜனாஸாவை அடக்கம் செய்து முடித்தனர். சரியாக 12.40 மணியளவில் அந்த மூதாட்டியின் நல்லடக்கம் முடிந்தது.

ஜனாஸாவை அடக்கம் செய்ய வேண்டும் என்று சொன்னவுடன் எவ்விதத் தயக்கமும் காட்டாமல் உடனடியாக அனுமதி தந்த குறிச்சிமலை ஜமாஅத்தார்களுக்கு நம் மக்கள் நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்தனர். அந்த மக்களுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக!

எந்த ஊர்? எந்தக் குடும்பம்? என்பதையெல்லாம் பார்க்காமல் ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதி தந்த குறிச்சிமலையினர் மலையளவு உயர்ந்து நிற்கின்றனர். ஆதரவற்ற ஜனாஸாவை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த ராஜகிரியினர் குன்றைவிடக் குறைந்து போயினர். எந்தரக மண்ணுக்கு யார் போய்ச் சேரவிருக்கின்றனர் என எவருக்கும் தெரியாது. அனைவரும் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள்.

ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதே. கியாமத் நாளில்தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு, சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை என்பது ஏமாற்றும் சுகபோகங்களைத் தவிர வேறில்லை (அல்குர்ஆன் 3:185).

– க.கா.செய்யது இபுராஹிம்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.