இடஒதுக்கீடுச் சட்டமும் முஸ்லிம்களின் கடமையும்

உரிமைக் குரல்
Share this:

என் இனிய சொந்தங்களே!

இடஒதுக்கீடு சம்பந்தமாக சமீப காலத்தில் பரபரப்பாகச் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.

  • “முஸ்லிம்கள், தலித் மக்களைவிடக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பின்தங்கி உள்ளனர்” -நீதிபதி சச்சார்.

  • “முஸ்லிம் மக்களுக்கு 10சதவீத ஒதுக்கீடு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வழங்கப்பட வேண்டும்” -உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா.

  • “முஸ்லிம்களுக்கு மாநில அரசு வழங்கிய நான்கு சதவீத ஒதுக்கீடு செல்லாது” -ஆந்திர மாநில உயர்நீதி மன்றம்.

  • “முஸ்லிம்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழக்கப்படும்” -மேற்கு வங்க முதல் அமைச்சர்.

முஸ்லிம்களுக்கு ஏற்கனவே கர்னாடகா மற்றும் மணிப்பூர் அரசுகளின் 4 சதவீத ஒதுக்கீடும் கேரள அரசு 10லிருந்து 12 சதவீதம பல்வேறு முறையிலும் இடம் ஒதுக்கியுள்ளன.

இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் இடஒதுக்கீடு பற்றி என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்றும், அந்தச் சட்டத்தில் முஸ்லிம்கள் ஒதுக்கீடு பெற்று, சமூகத்திலும் பொருளாதாரத்திலும் கல்வியிலும் முன்னேற என்ன செய்யலாம் எனவும் இந்தக் கட்டுரையின் மூலம் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

அரசமைப்புச் சட்டம், பிரிவு 14இன்படி, சட்டத்தின்முன் எல்லோரும் சமம் என்றும், ஒத்த தகுதி நிலையில் உள்ளவர் அனைவரும் சட்டத்தால் ஒரே சீராக நடத்தப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.

சட்டப்பிரிவு 15(1) என்பது, ஒத்த தகுதி நிலை கொண்ட எவரையும் மதம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது அவற்றில் ஏதாவது காரணத்தால் அரசு வேற்றுமை பாராட்டுவதைத் தடை செய்கிறது. ஆனால் வேறுபட்ட மக்களின் வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ப வகைப்படுத்தி சட்டம் இயற்றுவது தவறாகாது என்கிறது. இதுவே இடஒதுக்கீட்டுக் கொள்கையின் சட்ட அடிப்படை.

பிரிவு 15(3)இன்படி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சிறப்பு வகைமுறைகள் கொண்டுவர அரசுக்கு அதிகாரம் உண்டு. அதேபோல் பிரிவு 15(4)இன்படி சமூகம் மற்றும் கல்வி வழி பின்தங்கிய குடிமக்கள், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் ஆகியோருக்குச் சிறப்பு வகைமுறை செய்வதற்குத் தடையில்லை என்று சொல்கிறது.

ஆகவேதான் தலித் மக்கள், பழங்குடியினர் ஹிந்து மதத்தவராக இருந்தாலும் அவர்கள் ஹிந்து சமூக அமைப்பில் நசுக்கப்பட்டு, பின்தங்கியிருந்ததால் அவர்களுக்குத் தனி ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, ஹிந்து மதத்தில் சில நலிந்த பிரிவினருக்கும் ‘பிற்பட்ட வகுப்பினர்’ என்ற தகுதி சட்டத்தில் வகுக்கப்பட்டது.

சட்டப்பிரிவு 16(4)இன்படி “எந்த பிற்பட்ட சமூகமும் அரசு நிறுவனங்களில் சரியாக பணியமர்த்தப் படவில்லையென அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப் பட்டால் அவர்களுக்காகத் தனிச்சட்டம் இயற்றலாம்” என்று சொல்கிறது.

பின் ஏன் ஆந்திர அரசின் 4 சதவீத இடஒதுக்கீட்டின் சட்டத்தை ஆந்திர மாநில உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது?

அதற்குக் காரணம் அந்த அரசு மொத்த முஸ்லிம்களுக்கும் “மதத்தின் பெயரால்” இடஒதுக்கீடு செய்தது. ஆந்திர மாநிலத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு கல்வி, வேலை வாய்ப்பில் பின்தங்கி இருக்கிறார்கள் என்று அரசு ஆய்வு செய்து அதன்பின்பு இடஒதுக்கீடு வழங்கியிருந்தால் ஆந்திர உயர்நீதி மன்றத்தில் இடஒதுக்கீடு தள்ளுபடி ஆகியிருக்காது.

ஆந்திர உயர்நீதி மன்ற உத்தரவை முன்னுதாரணமாகக் கொண்டு, தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு அண்மையில் வழங்கப் பட்ட மூன்றரை சதவீத ஒதுக்கீட்டிலும் பாதிப்பு எற்படுமோ என்ற ஐயப்பாடு எழுவது நியாயமே. அவ்வாறான ஐயத்தை நாம் கைவிட வேண்டும். ஏனெனில், “முஸ்லிம்கள், மற்ற பின்தங்கிய மக்களைப்போல் எவ்வாறு பின்தங்கியுள்ளார்கள்?” என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜே.ஏ. அம்பாசங்கர் தலைமையிலான 1985ஆம் ஆண்டு நியமிக்கப் பெற்ற கமிட்டி சமர்ப்பித்த ஆய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே தமிழக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை (பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு) இப்போது வழங்கியுள்ளார்கள்.

அந்த அறிக்கையில் முஸ்லிம் சிறுபான்மையினரைச் சார்ந்த 27,05,960 பேரில் பிற்பட்ட வகுப்பினருக்கான பட்டியலில் 25,60,195 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் கிறித்துவ சிறுபான்மை 31,91,989 பேரில் 24,69,519 பேர் பிற்பட்டோர் பட்டியலிலும் 78,675 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் முஸ்லிம்களுக்கான பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் யாரையும் சேர்க்கவில்லை.

இத்தனைக்கும் முஸ்லிம்கள் இந்த நாட்டில் தலித் மக்களைவிடக் கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கிறார்கள் என்று அறிந்தும்கூட. அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு, தமிழ்நாடு சட்டம் 45, 1994 படியும், அதன் பின்பு தமிழ்நாடு சட்டம், பிரிவு 12, 2006இன்படியும் பிற்பட்ட மக்கள் கல்வி நிலையங்களிலும் அரசின் கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்களில் தனி ஒதுக்கீடு பெற்று வருகின்றனர். அதன் பின்பு, கிறித்துவரும் முஸ்லிம்களும் மற்ற பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கான பட்டியலிலுள்ள பிற சமூகத்தினருடன் போட்டியிட இயலவில்லை என்பதால் தங்களுக்கென்ற தனி ஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கை அரசிடம் வைக்கப்பட்டது. அவர்களின் கோரிக்கை, பிற்பட்டோர் கமிஷனிடம் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது.

ஐ ப்பீ எஸ் Indian Police Service அதிகாரிகளுள் ஒரு முஸ்லிம் அத்திப்பூ!

பெயர் : முஹம்மது அலீ. பிறந்த நாள் : 15.06.1946; பெற்றோர் : பீர் முஹம்மது அம்பலம்-காதர்பீவி; பிறப்பு-பள்ளிப் படிப்பு: இளையான்குடி; 1961-1964 என்.ஸீ.ஸீயில் சார்ஜண்ட்வரை; இளங்கலைக் கல்வி: சென்னைப் புதுக்கல்லூரி; முதுகலைக் கல்வி: சென்னை மாநிலக் கல்லூரி; விரிவுரையாளர்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் கல்லூரி (மூன்றாண்டு காலம்); நேரடித் தேர்வில் காவல்துறை இணை கண்காணிப்பாளர் (DSP மதுரை, சென்னை, கோவை); காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளர் (SP தூத்துக்குடி, சேலம், தர்மபுரி); காவல்துறை இணை ஆணையர் (DC சட்டம்-ஒழுங்கு, சென்னை); காவல்துறைத் துணைத் தலைவர் (DIG விழுப்புரம்); சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரிடம் பதக்கம் (2000); “பெண் காவலர்களின் சமுதாயச் சேவை” ஆய்வுக்கான முனைவர் பட்டம் (2005); எழுதியுள்ள நூல்கள் : “ஒரு காக்கிச் சட்டை பேசுகிறது”, “A Clarion Call By a Police Officer”

இவை எல்லாவற்றுக்கும் மேலாக முஸ்லிம் சமுதாயத்தின் மீது, அதன் முன்னேற்றத்தின் மீது ஆழ்ந்த, அயராத சிந்தனை உள்ளவர். அவற்றைத் தம் எழுத்தால் வடித்து வழி காட்டுபவர், முனைவர் A.P. முஹம்மது அலீ, M.A, Ph.D, IPS(R) அவர்கள். அவர்தம் பயனுள்ள சமுதாயச் சிந்தனைகளை வாசகர்களுக்கு வார்த்துத் தருவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்!

– சத்தியமார்க்கம்.காம்

கமிஷனின் ஆய்வறிக்கை, “இரு சமூகத்தினரின் கோரிக்கை சரியானதுதான்” என்று அறிவித்தது. அதனை ஏற்று அரசு 2007ஆம் ஆண்டு தமிழக அரசு அவசரச் சட்டம் பிரிவு 4, 2007இன்படி கிறித்துவ மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் கல்வி நிலையங்கள் (தனியார் கல்வி நிலையம் உள்பட) அரசு நியமனங்களில் அல்லது பதவி ஒதுக்கீடுகளில் கிறித்துவர்களுக்கு 4 சதவீதமும், முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அதன்பின் வருங்காலங்களில் அதிகமாகக் கல்வியறிவு பெற்ற கிருத்துவ மக்கள் தொகையினைக் கொண்ட திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் படித்த இளைஞர்கள் அதிகமாகக் கல்வி, அரசு வேலை வாய்ப்புகள் பெற முடியவில்லையென அறிந்து அந்த நான்கு சதவீத ஒதுக்கீடு தேவையில்லை என்றும் தாங்கள் “பிற்பட்போருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி அடிப்படையில் இதைவிட அதிகம் பயன் பெற முடியும்” எனவும் அரசிடம் வலியுறுத்தி, அதனை ரத்துச் செய்ய சொல்லி விட்டார்கள். அந்தக் கிறித்துவ மக்கள் கூற்றுப்படிப் பார்த்தால் அதிகம் படிக்காதவர்கள், கல்வி, அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெற முடியாதவர்கள் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள்தாம் என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறதல்லவா நண்பர்களே!

இந்திய நாட்டின் மொத்த ஜனத்தொகையில் பிற்படுத்தப் பட்ட மக்கள் 41 விழுக்காடு ஆவர். ஆனால் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடுக்கு வழிவகுத்த முன்னோடி திரு. பிந்தேஷ்வரி ப்ரசாத் மண்டல் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஒன்று 1979ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, அக்குழு தனது 1980ஆம் ஆண்டு டிசம்பர் மாத அறிக்கையின்படி “இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்கள் எண்ணிக்கை 52 விழுக்காடு” என்று அறிவித்தது.

ஆகவேதான் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு ஒதுக்கி சட்டம் வகுத்தது மத்திய அரசு. இந்தப் பிற்படுத்தப்பட்ட மக்களில் 78 விழுக்காடு கிராமப் புறத்திலும் 22 விழுக்காடு நகரப் பகுதியிலும் வசிக்கிறார்கள். ஆனால் முற்பட்ட மக்கள் ஊரக, நகரப் பகுதி இரண்டிலும் 37.7 விழுக்காடு வாழ்கின்றனர். ஆகவேதான் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்தால் முற்பட்ட மக்கள் கல்வி, வேலை வாய்ப்பில் கூடுதலான இடங்களைப் பெற்று விடுகின்றனர்.

இந்தியாவிலே தமிழகத்தில்தான் 74.4 சதவீத பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். இது தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் (என்.எஸ்.எஸ்.ஓ) நடத்திய ஆய்வின் கூற்றாகும். ஆகவேதான் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோருக்கு 20 விழுக்காடு ஒதுக்கீடும், முஸ்லிம்களுக்கு மூன்றரை விழுக்காடு ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கிறித்துவ மக்கள், “நான்கு சதவீத ஒதுக்கீடு போதாது நாங்கள் பிற்பட்டோர் ஒதுக்கீடுகளில் அதிக ஒதுக்கீடு பெற வாய்ப்புண்டு” என்று கேட்டுக் கொள்ள, அதனை அரசும் ரத்து செய்தபோது, தமிழகத்தில் ஒரேயொரு முஸ்லிம் பெரியவர் மட்டும், “முஸ்லிம் மக்கள் இடஒதுக்கீடு பெறாது முன்னேற வேண்டும்” என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் “புனித ஹஜ் செய்ய அரசின் சலுகையினைப் பெறாது செல்ல வேண்டும்” என்றும் சொன்னதாக அனைத்துப் பத்திரிகையிலும் ஒரு செய்தி வெளிவந்து, அதனைக் கண்டித்து நோட்டீசும் சில அமைப்பினரால் வெள்ளிதோறும் பள்ளிவாசல்களில் கொடுக்கப்பட்டது.

அவர் யார் என்று கேட்கிறீர்களா? நம் நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் பிரிட்டிஷ் அரசின் எடுபடியாக இருந்து, வட மாவட்டங்களில் அவர்களுக்கு வரிவசூல் செய்யும் ஏஜெண்டாக ஒருவர் இருந்தார். அவர் பிரிட்டிஷ் அரசின் வரிவசூல் ஏஜெண்ட் மட்டுமில்லை. பிரிட்டிஷ் ஆதிக்கத்தினை எதிர்த்த மதுரை மருதநாயகம் என்ற அஹமது கான், சிவகங்கை மன்னராக இருந்த சின்ன மருது, பெரிய மருது, வேலு நாச்சியார், ஊமைத்துரை போன்றவர்களை வேட்டையாட பிரிட்டிஷ் படையினருடன் தன் கூலிப்படையையும் அனுப்பியவர். அதற்குக் கூலியாக பிரிட்டிஷ் அரசு இந்திய நாட்டினை விட்டு வெளியேறியபோது அவருக்கு மட்டும் இந்தியாவில் தனிக் கொடியுடன் உள்ள அந்தஸ்து கொடுத்து, தனது சமஸ்தான சொத்தினையும் அநுபவிக்க உரிமை வழங்கியது. அவர்தான் ஆற்காடு நவாப்.

ஆனால் தன் மகன்கள் கொல்லப்பட்டாலும் கடைசி மூச்சு இருக்கும்வரை பிரிட்டிஷாரை எதிர்த்த டெல்லி முகலாயக் கடைசி சக்கரவர்த்திக்குக் கிடைத்த பரிசு என்ன தெரியுமா? பர்மாவிற்குக் கடத்தப்பட்டு சொந்த இந்திய மண்ணில்கூட தனது கடைசி வாழ்நாளைக் கழிக்க முடியாத நாடு கடத்தல். பரிதாபமாகத் தெரியவில்லையா உங்களுக்கு?

ஆங்கிலேய ஏஜெண்ட் வழிவந்த ஆற்காடு நவாப் சொல்கிறார் “அரசிடமிருந்து முஸ்லிம்கள் சிறப்புச் சலுகை பெறக்கூடாது” ஏழை, எளிய மக்கள் வாழ்வில் ஒளியேற்ற என்னதான் செய்வது? அவர்களுக்கு இனாமான கோடிக்கணக்கான சொத்தா இருக்கிறது? ஏழை முஸ்லிம்கள் அரசின் சலுகையினைத்தானே நாட வேண்டியிருக்கிறது? ஆற்காடு நவாப் போன்ற பெரியவர்கள் உதவி செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தால் ஏழை, எளிய முஸ்லிம்கள் சலுகை பெற வாய்ப்பாக அமையும்.

இந்தியாவில் இடஒதுக்கீடு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நீடிக்க பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஆகவே இதில் முஸ்லிம்களாகிய நமது கடமை என்ன என்பதை விளக்கலாம் எனக் கருதுகிறேன்.

இதற்குக் கடந்த 10.2.2010ஆம் தேதி டெல்லியில் என்.எம்.எம்.ஆர் (நேஷனல் மூவ்மெண்ட் ஃபார் முஸ்லிம் ரிசர்வேசன்) அதாவது முஸ்லிம்கள் இடஒதுக்கீடு பெற வேண்டிப் போராடும் தேசிய இயக்கம் ஒரு மாபெரும் மாநாட்டை நடத்தியது. முன்னாள் ஐ.எப்.எஸ் அதிகாரி செய்யது சகாபுதீன் தலைமையில் நடந்த அம்மாநாட்டில் நீதிபதி சச்சார் கமிட்டியில் இடம் பெற்ற செயலர்-உறுப்பினர் அபூஸாலிஹ் ஷரீஃப் அவர்கள், “சமுதாயத்தில் உயர்ந்த நிலையிலுள்ள முஸ்லிம்கள் பிற்பட்ட முஸ்லிம் மக்கள் முன்னேற வழிதேட வேண்டும்” எனச் சொல்லியுள்ளார். அதனை உதாரணமாக எடுத்துக்கொண்டு கல்வியறிவு, சமகால உலகறிவு, அனுபவம் ஆகியனவற்றில் ஓரளவு மேம்பட்ட மக்கள் என்ன என்ன செய்ய வேண்டுமென இங்கு விளக்க ஆசைப்படுகிறேன்.

  1. 18வயதிற்கு மேற்பட்டோருக்கு ஓட்டுரிமை உண்டு. மக்கள் தொகை கணக்கெடுக்க வரும்போது கண்டிப்பாக வீட்டிலுள்ள அனைவரையும் வாக்காளராகச் சேர்க்கச் செய்ய வேண்டும். கண்டிப்பாக ஓட்டர்ஸ் லிஸ்ட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு அடையாள அட்டை கேட்டுப் பெறவேண்டும். வெளிநாட்டில் வாழும் குடும்ப உறுப்பினர்களையும் அதில் சேர்க்க வேண்டும். ஏனென்றால் இந்திய நாட்டில் 13 விழுக்காடு உள்ள முஸ்லிம்களுக்கு எதிர்காலத்தில் மக்கள் பிரதிநித்துவ (புரப்போஷனல் ரெப்பரசென்டேஷன்) அடிப்படையில் இடஒதுக்கீடு வந்தால் அது நிச்சயமாகப் பலனளிக்கும்.

  2. கல்வியில் முஸ்லிம்கள் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்று அறிய ஒவ்வொரு ஊரிலும் (1)பள்ளி இறுதிவரை படித்தவர், (2)பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவர், (3)கல்லூரிவரை படித்தவர், (4)தொழிற்கல்வி படித்தவர், (5)டிப்ளமோ பட்டம் பெற்றவர் (6)பள்ளிப்பக்கம் தலை காட்டாதவர் என்ற கணக்கெடுப்பு வேண்டும். அப்போதுதான் நாம் எவ்வளவு அளவிற்குக் கல்வியில் பின்தங்கி/முன்னேறி இருக்கிறோம் எனத் தெரிந்து கொள்ளலாம்.

  3. டவுன் பஞ்சாயத்து, தாலுகா, முனிசிபாலிடி, மாநகரங்கள் தோறும் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களில் அரசு வேலைக்கான வழிகாட்டும் ஆலோசனை (கவுன்சலிங்) நடத்த வேண்டும். அதேபோன்று பள்ளி மேல்படிப்பிற்கு மேல் என்ன படிக்கலாம்? மேலை நாடுகளில் எந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கலாம்? இந்தியாவில், வெளிநாட்டில் திறமை வாய்ந்த மாணவர்கள் பட்டமேற்படிப்புப் படிக்க என்னென்ன ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது? வெளிநாட்டில் உயர்கல்விக்கான விசாவிற்கு எப்படி மனுச் செய்யலாம்? போன்ற ஆலோசனைகளை வழங்கத் தகுதியான தகவல் மையம் அமைக்க வேண்டும். இந்திய நாட்டில் அரசு வங்கிகளில் மாணவர்கள் மேல்படிப்பிற்கான அரசு லோன் பெறுவதற்கு வழிகாட்டும் உதவியும் செய்ய வேண்டும்.

  4. தோல், கட்டுமானம், ஷிப்பிங் போன்ற தொழில் துறைகளைச் சேர்ந்த பெரிய தொழில் முனைவர்களை அணுகி, ‘ஹிந்து’ பத்திரிகை, வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவதுபோல நாமும் முஸ்லிம்களுக்கு ‘ஜாப் ஃபேர்ஸ்’ நடத்தலாம்.

  5. கிராமங்களில், நகரப் பஞ்சாயத்துகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்து அருகில் உள்ள பிளாக் டெவலப்மெண்ட் ஆஃபீஸர் (பி.டி.ஓ) மூலம் அரசு உதவி வாங்கிக் கொடுத்து சிறு கைத்தொழில் தொடங்க உதவி செய்யலாம்.

  6. அரசுக் கல்லூரிகளில் பி.காம், பி.எஸ்ஸி படிக்கும் மாணவர்கள், படிக்கும்போதே வேலை வாய்ப்பினைப் பெற அவர்களுக்கான ஆறுமாத அல்லது ஒரு வருட தொழில் கல்விச் சான்றிதழ் படிப்பைப் படிக்க அரசு உயர்கல்வித்துறை கடந்த 8.2.2010இல் வகை செய்துள்ளது.

  7. அந்தப்படிப்பில் 1-மல்டி மீடியா, 2-டேலி, 3-ஏ.சி.டெக்னாலஜி, 4-கம்ப்யூட்டர் ஹார்டுவேர், 5-டொமஸ்டிக் ஒயரிங், 6-நெட் ஒர்க்கிங், 7-வெப் டிசைனிங் & அனிமேசன், 8-இ.காமர்ஸ், 9-டிரைவிங், 10-பியூட்டிசியன், 11-கார்மென்ட் குவாலிடி இன்ஸ்பெக்சன் & எக்ஸ்போர்ட் மெர்கண்டைசிங் 12-கம்யூனிகேசன் ஸ்கில், 13-ஆஃபிஸ் ஆட்டோமேசன், 14-சர்வேஈ 15-டி.டி.பி ஆகியவை உள்ளன. அந்தப் படிப்பிற்கான சான்றிதழுக்கு உயர்கல்வித்துறை வகை செய்ய வழிவகுத்துள்ளது. அந்தப் படிப்பிற்கு ஆறு மாதக் கட்டணமாக ரூபாய் 1,500உம் ஆண்டுக் கட்டணமாக ரூபாய் 3000உம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நமது மாணவர்களை இந்தப் படிப்பில் சேர்ந்து வாய்ப்பினைத் தேடிக்கொள்ளச் செய்ய வேண்டும். அதேபோன்ற படிப்புகளை 20க்கு மேல் முஸ்லிம்கள் நடத்துகின்ற கல்லூரிகளிலும் அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் சுயநிதி (செல்ஃப் பைனான்ஸிங்) வழியில் தொடங்கவேண்டும். அதேபோன்ற படிப்புகளை சென்னை தேனாம்பேட்டையிலுள்ள ஜஸ்டிஸ் பசீர் அஹமது மகளிர் கல்லூரி முன்மாதிரியாகச் செயல்படுத்தி வருகிறது.

  8. மத்திய அரசின் மைனாரிடிக்கான 15 அம்சத் திட்டத்தின்படி முஸ்லிம்களின் வேலை வாய்ப்பு ரயில்வேயிலும், அரசுத்துறையிலும் 2006-2007இல் 6.92 சதவீதத்திலிருந்து 2008-2009இல் 9.19 விழுக்காடு என அதிகரித்தாலும் முஸ்லிம்களின் ஜனத்தொகையான 13 விழுக்காடுக்கு அது குறைவே எனலாம். ஆனால் பொது நிறுவனங்களிலும் அரசு வங்கிகள், மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் முஸ்லிம்கள் வேலை வாய்ப்பு 2008-2009இல் வெறும் 7.9 விழுக்காடிலிருந்து 8.87 விழுக்காடு (48,070 வேலைகளில்) தான் இருக்கிறது. இன்னும் அரசு வங்கிகளுக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், கோல் இந்தியா, ஸ்டீல் அத்தாரிடி ஆப் இந்தியா போன்ற பொது நிறுவனங்களின் வேலைகளுக்கு முஸ்லிம்கள் மனுச் செய்து வேலை வாய்ப்பினைப் பெற முஸ்லிம் கல்வி நிலையங்களும் தொண்டு நிறுவனங்களும் இளைஞர்களை தயார் படுத்த வேண்டும். அரசுடமையாக்கப் பட்ட வங்கிகளில், எளிதாகப் பெறத் தக்கக் கல்விக்கடனைப் பெறுவதற்கு முஸ்லிம் மாணவர்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதினை ஏழை பெற்றோர்களிடம் கேட்டால் தெரியும். முஸ்லிம்கள் அந்த வங்கிகளில் பணியில் இருந்தால் நமது மாணவர்களுக்கு அரசுக் கல்விக்கடன் எளிதாகக் கிடைக்க உதவி செய்வார்களல்லவா? இது போன்றுதான் மற்றப் பொது நிறுவனங்களிலும் வேலை கிடைத்தால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதோடு, தம் சமுதாயத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் உதவி செய்வார்களல்லவா?

  9. தமிழ்நாடு மைனாரிடி கமிஷன் தலைவராக எப்போதும் கிறித்துவ மதத்தினரையே தேர்வு செய்கின்றனர். ஆனல் முஸ்லிம்கள்தாம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பின்தங்கி இருக்கிறார்கள். அத்தோடு அல்லாமல் அம்பாசங்கர் அறிக்கை மூலம் முஸ்லிம்களில் 27,60,195 பிற்பட்டவர்களும், கிறித்துவர்கள் 25,48,194 பிற்பட்டோர்களும் உள்ளனர். ஆகவே பிற்பட்டோர் பட்டியலில் சமநிலையில் இருந்தாலும் முஸ்லிம்கள் மைனாரிட்டி சேர்மன் பதவியினைக் கேட்டுப்பெற முடியவில்லை. அப்படிப் பெறுவார்களெனில் முஸ்லிம் மக்களுக்கு உதவி செய்ய அவர்களால் முடியும். ஆகவே அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் முஸ்லிம்களுக்கும், கிறித்துவர்களுக்கும் சமமாக ஒவ்வொரு தடவை (சுற்று முறையில்) தலைவர் பதவி கொடுக்க வற்புறுத்த வேண்டும்.

மேற்கூறிய யோசனைகள் நமது சமுதாயம் முன்னேறுவதற்கான கடல் போன்ற யோசனைகளில் சிறு துளி நீர் போன்றதே. துடிப்பான இளைஞர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் நமது சமூதாயத்தில் இல்லாமலில்லை. அந்த இளைஞர்கள், நிறுவனங்கள் நமது சமுதாய மக்கள் பின்தங்கிய நமது சமுதாயத்தை முன்னேறிய சமுதாயமாக மாற்ற வேண்டும். அத்துடன் நமது உரிமையான அரசுச் சலுகைகளையும் நாம் நழுவ விடக்கூடாது என வேண்டி முடிக்கிறேன்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.