பகுத்தறிவாளர்களின் கடவுள்!

Share this:

ஓரிறையின் நற்பெயரால்!


தான் (மட்டும்) ஏற்கும் அல்லது மறுக்கும் நம்பிக்கை சார்ந்த ஒரு விசயத்தை அறிவு ரீதியாகப் பிறருக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை. அத்தகைய நிகழ்வைப் பிறர் விரும்பினால் உண்மையென ஏற்கவும் அல்லது பொய்யென மறுக்கவும் செய்யலாம்.

“கடவுள்” – என்ற நிலையை இஸ்லாம் அல்லாத மற்ற மதங்கள் யாவும் மேற்கண்ட நிலைப்பாட்டிலேயே வைத்து காண்கிறது. ஆகவேதான் கடவுள் குறித்த விமர்சனங்களுக்கு அங்கு பதில் தருவதில்லை என்பதைவிட பதில் இல்லையென அறிந்து கடவுள் மறுப்புக்குப் பலர் ஆளாகின்றனர். ஆக, கடவுள் மறுப்புக் கொள்கைக்கு இஸ்லாம் அல்லாத ஏனைய மதங்களின் தவறான கடவுள் சார்ந்த கோட்பாடே பிரதான காரணம் என்றால் அது மிகையாகாது. ஆக, இஸ்லாம் கூறும் கடவுள் குறித்த வரைவிலக்கணம் பகுத்தறிவிற்குப் பொருத்தமானதா? என்பதை பார்க்கும் முன் கடவுளை மறுக்கும் நாத்திகச் சிந்தனை பகுத்தறிவிற்கு உகந்ததா… பார்ப்போம்.

நாத்திகம்
பொதுவாக ஒருவரின் நாத்திகச் சிந்தனைக்கு அடிப்படைக் காரணம் தேடுதலில் விருப்பங்கொண்ட அவரின் சுய அறிவு. அது பாராட்டத்தக்கதே..! எனினும்., அவ்வறிவால் தம்மைச் சுற்றி நடைபெறும் கடவுள் பெயரால் அரங்கேறும் போலி வழிபாடுகளும் அனாச்சாரங்களும் அறிவிற்குப் பொருந்தாத மூடப் பழக்க வழக்கங்களும், மிக முக்கியமாக கடவுள் பெயரால் நடைபெறும் சமூகப் புறக்கணிப்பும்தான் ஒருவரது கடவுள் மறுப்புகொள்கைக்கு மிக முக்கியக் காரணியாகிறது.. இன்னும் சற்று ஆழமாக அதன் வெளிபாட்டை இஸ்லாத்திலும் காண்பிக்க குர்ஆன் மற்றும் ஹதிஸ்களுக்குத் தவறான புரிதலோடு தங்களின் சுய விளக்கத்தை அளித்து, கடவுள் மறுப்புக்கு மேலும் மெருகேற்றுகிறார்கள். எனினும் அதற்கு நமது (இணைய) சகோதரங்கள் பலரால் தெளிவாக மறுப்பும் விளக்கமும் தரப்படுகிறது, அல்ஹம்துலில்லாஹ்..!

இங்கு கவனிக்கத்தக்க ஒரு விசயம் … கடவுளை மறுக்க கடவுள் பெயரால் ஏற்படும் தவறுகளை முன்னிருத்தி மட்டுமே கடவுள் மறுப்புக்குச் சான்று தரப்படுகிறது. மாறாக, நேரடியாக கடவுள் இல்லையென மறுக்கத் தெளிவான காரணம் இல்லை.

“பரிணாமக் கொள்கை” அறிவியல் ரீதியாகக் கடவுள் மறுப்புக்கு மாபெரும் ஆயுதமாகக் கொண்டாலும் அதுவும் பயனற்றுதான் போகும். ஏனெனில் இதுவரை நிகழ்வுற்ற பரிணாம கோட்பாடுகளை ஒருவேளை உண்மையென நம்பினாலும்(?)கூட “ஏற்பட்ட உயிரின மாற்றத்தைப் பற்றித்தான் பரிணாமம் பேசுகிறதே தவிர அஃது உயிரினங்கள் ஏன் மாற்றமடைந்தன என்பதற்கு தகுந்த சான்றின்றி இன்னும் கேள்விக்குறியோடுதான் ஆய்வைத் தொடர்வதாக அறிவியலார் பதில் தருகின்றனர்.

ஆக, அறிவியல் ரீதியாகக் கடவுளை மறுக்க பரிணாமம் துணைக்கு வராது. சுருங்கக்கூறினால், “எதுவுமல்லாத சூன்யத்திலுருந்து ஓர் உயிரை அறிவியலார் உண்டாக்கினால் மட்டுமே விஞ்ஞானத்தால் கடவுள் இல்லை என்பதை ஆணித்தரமாக மறுக்க முடியும். அதுவரை கடவுளை மறுக்கத் தர்க்கரீதியான வழிகளைத்தான் தேட வேண்டும். எனினும் பகுத்தறிவுப் பார்வையில் அதுவும் சாத்தியமா என்றால்… இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்..

எந்த ஒன்றை மறுப்பதும், ஏற்பதும் அவரவர் உரிமை. அதேநேரத்தில் பொதுவில் அறுதியிட்டுக் கூறும் தம் வாதத்தை மெய்ப்பிப்பதாக இருந்தால் அதற்கான சான்றுகளை தருவது அவரது கடமையாகும். இதுவே ஒரு செயல், ஒரு தன்மை அல்லது ஒரு நிகழ்வை உண்மைப்படுத்தலின் வரைவிலக்கணம் ஆகும்.

இதனடிப்படையில் கடவுள் குறித்த நிகழ்வைப் பொதுவில் நிறுத்தி ஏற்பதாக இருந்தாலும் மறுப்பதாக இருந்தாலும் அதற்கான வரைவிலக்கணம் தெளிவாக முன்னிருத்தப்பட வேண்டும். அஃதில்லாமல் கூறும் வாதங்கள் நம்பிக்கை சார்ந்த அளவில் மட்டுமே பார்க்கப்படும். இந்நேரத்தில் கடவுள் குறித்த வரைவிலக்கணம் குறித்துப் பார்க்கும்போது சகோ ஜாகிர் நாயக் அவர்களின் அழகிய எளிய உதாரணத்தையும் இங்குக் குறிப்பிடுவது அவசியம் என நினைக்கிறேன்.

“என் கையில் ஒரு பேனாவை வைத்துக்கொண்டு இது ஒரு புத்தகம் என்று நான் கூறினால் இதனை ஒருவர் மறுப்பதாக இருந்தால் கண்டிப்பாக அவருக்குப் பேனாவைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். பேனாவைப் பற்றி தெரியாவிட்டாலும் புத்தகத்தைப்பற்றிக் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நான் கையில் வைத்திருப்பது புத்தகம் இல்லை என அவரால் கூற இயலும்” என அவர் கூறினார்.

மேற்கண்ட கேள்வி எதிர் மறையாக இருப்பதால் விடைக்கான இரு பொருட்களில் ஒன்றை மட்டும் நாம் அறிந்திருந்தாலே போதுமானது. மற்றொரு பொருள் குறித்து அறியாமாலிருந்தாலும் நமது நிலைப்பாட்டை உண்மையாக்கலாம். இப்படித்தான் மேற்கண்ட நாத்திகச் சிந்தனை, கடவுளுக்கான கேள்விக்கு எதிர்மறை விளக்கத்தைக் கையாளுகிறது.

ஆனால் இதே கேள்வி நேர்மறையாக கேட்கப்பட்டால்..!
என் கையில் ஒரு பொருளை வைத்துக் கொண்டு அதைப் பிறர் முன்னிலையில் காட்டி இது பேனா என்கிறேன். இதை ஒருவர் மறுப்பதாக இருந்தால் பேனாவைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களின் வரைவிலக்கணம் குறித்துத் தெரிந்திருந்தாலும் இக்கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியாது. மாறாக பேனாவின் வரைவிலக்கணம் தெரிந்திருந்தால் மட்டுமே உண்மையான பதில் தருவது சாத்தியம்.

ஆக, இந்த உதாரணத்தை மேற்கோளாகக் கொண்டு கடவுள் குறித்த வரைவிலக்கணத்தோடு ஒப்புநோக்கும்போது கடவுளை ஏற்பதாகவோ அல்லது மறுப்பதாகவோ இருந்தால் அவருக்குக் கடவுள் குறித்த வரைவிலக்கணம் கண்டிப்பாகப் தெரிந்திருக்க வேண்டும் அப்போது மட்டுமே இக்கேள்விக்கு உண்மையான பதில் தர இயலும்.

மிகத் தெளிவாக, எளிதாக,

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் என்பவன் ஒருவனே (112:1).
அல்லாஹ்
(எவரிடத்தும்) தேவையற்றவன் (112:2).
அவன்
(எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை (112:3).
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை (112:4).

இப்படி குர்ஆனில் கடவுளுக்கு  இஸ்லாம் வரைவிலக்கணம் தருகிறது. இவ்வரிகளை நம்பிக்கை என்ற அளவுகோலையும் தாண்டி மனித அறிவு ஏற்றுக்கொள்ளும் வாதமாகவும், அதேநேரத்தில் மனித எண்ணங்களால் வரையறுக்க இயலாத ஓர் உயரிய சக்திக்குப் பொருந்தும்படியான முறையான செய்கைகளும் இருப்பதால் மேற்கண்ட வரைவிலக்கணத்தை ஏற்றுக்கொள்வதில் பகுத்தறிவாளர்களுக்கு எந்தவித ஆட்சபனையும் இருக்கக்கூடாது.

கடவுளுக்கான ஓர் உயரிய வரைவிலக்கணத்தை முன்னிருத்தி, இஃது உண்மையானது என குர்ஆன் கூறும் போது, மேற்கண்ட கோட்பாட்டைப் பொய்யென மறுப்பதாக இருந்தால் அவ்வாறு தாங்கள் மறுக்கும் கடவுளுக்கு உண்மையான வரைவிலக்கணத்தை நாத்திகச் சிந்தனையாளர்கள் தரவேண்டும். ஆனால் இன்றுவரை தாங்கள் மறுக்கும் கடவுளுக்கு உண்டான வரைவிலக்கணத்தை நாத்திகச் சிந்தனை தரவே இல்லை. இது ஆச்சரியமான விஷயமும்கூட.

ஏனெனில், கடவுள் குறித்த நிலைப்பாட்டை ஏனைய மதங்கள் நம்பிக்கை சார்ந்த விசயமாக அணுகி கொண்டிருக்க… இஸ்லாம் மட்டுமே எப்படிப்பட்டவர் கடவுளாக இருக்க முடியும் அல்லது இருக்க வேண்டும் எனக் கடவுள் குறித்து ஒரு தெளிவான வரைவிலக்கணத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது எனும்போது எதையும் நம்பிக்கை கடந்து பகுத்தறிவுக் கண் கொண்டு ஆராயும் நாத்திகம், கடவுள் இல்லை என்பதை நிருபிக்க எப்படிப்பட்டவர் கடவுளாக இருக்கமுடியாது? ஏன் கடவுளாக இருக்க முடியாது? என்பதற்கு ஒரு வரைவிலக்கணம் நாத்திகம் உருவான முதல்நாளே இயற்றி இருக்கவேண்டுமல்லவா? இதுவரைக்கும் அப்படி ஒரு வரைவிலக்கணத்தை நாத்திகம் ஏற்படுத்தாதது மிகப்பெரிய கேள்விக்குறியே..! இனி ஏற்படுத்த முனைந்தாலும் மதங்கள் வணங்கும் போலிக் கடவுளர்களைத்தான் தங்கள் மறுப்புக்குரிய கடவுளர்களாக நாத்திகர்கள் இனங்காட்ட முடியும்.

போலிக் கடவுளர்களை மறுப்பதற்குப் பெயர்தான் நாத்திகச் சிந்தனையென்றால்… நாங்களும் அத்தகையப் போலிக் கடவுளர்களை இல்லை என்றுதான் சொல்வோம்.

பகுத்தறிவு விதையில் மலர்ந்தது நாத்திகப்பூவென்றால் இனிமேலாவது நாத்திகம் மறுக்கும் கடவுளுக்கு ஒரு வரைவிலக்கணம் தரட்டும். அதுவரை கடவுள் மறுப்பாளர்கள் என தங்களைச் சொல்ல வேண்டாம். வேண்டுமானால் கடவுள் எதிர்ப்பாளர்கள் என்று – அதுவும் மதங்கள் சமைத்த போலிக் கடவுள்களின் எதிர்ப்பாளர்கள் என்று தங்களை சமூகங்களில் அடையாளப் படுத்தட்டும். உங்களின் அறிவுச் சிந்தனைக்கு ஆணவ திரையிட வேண்டாம் என்பதே இப்பதிவின் நோக்கம் நாத்திகச் சகோதரங்களே!

 

“நான் முஸ்லிம்” குலாம்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.