இறைவனுக்காக…

Share this:

‘தொழுகிறேன்-தொழுகிறேன் அல்லாவிற்காக

வைக்கோல் திருடுறேன் மாட்டுக்காக’

 

நோன்பு மாதத்தில் சேவல் கூவுவதிற்கு முன்பும் கதிரவன் தன் செங்கதிர்களைப் புவியில் விரிக்கும் முன்பும் தூக்கத்தினை விட்டு எழுந்து சஹர் வைத்து அதன் பின்பு டி.வியில் வரும் மார்க்க சம்பந்தமான மவ்லவிகள்-இமாம்கள் ஆற்றும் பேருரைகள் கேட்க முற்படும்போது அங்கே நிமிடத்திற்கு நிமிடம் பல்வேறு தொழில் சம்பந்தமான விளம்பரங்கள் ஒலி-ஒளிக்கின்றன. அவை, வித விதமான தங்க ஆபரண மாளிகை, பட்டு ஜவுளிகள், கூரியர் சர்வீஸ்கள், ரியல் எஸ்டேட்டுகள், லாட்ஜ்கள், யுனானி மருத்துவம், அத்துடன் இஸ்லாம் தடைசெய்யப்பட்ட லாலி பீடி விளம்பரங்களும் அடங்கும். மார்க்க அறிவு பெற்ற அறிஞர்களுக்குப் பதிலாக விளம்பரதாரர்களின் பிள்ளைகளைப் பேச்சாளர்களாக அறிமுகம் செய்வது போன்ற நிகழ்சிசிகளும் நடந்து கொண்டு இருந்தன.

 

தஹஜ்ஜுத் தொழ வேண்டிய நேரத்தில் டி.வி முன்பு அமர்ந்து விளம்பரதாரர் நடத்தும் குவிஸ் போட்டியில் தங்களுக்கு அரைக்காசு தங்க நாணயம், தள்ளுபடி சேலைக்கிடைக்காதா என ஏங்கும் நிலையையும் பார்க்கலாம். விளம்பரம் செய்வதற்கு சஹர் நேரம்தானா கிடைத்தது? அவ்வாறு விளம்பரம் செய்யும் சிலருடைய தொழிலைப் பார்த்தால் போலியாகவும் உள்ளது. “சென்னையில் விற்பனையாகும் 40 சதவீதத் தங்கம், கலப்படமானது” என்ற ஆய்வு அறிக்கையினை அவர்கள் எங்கே அறியப்போகிறார்கள்?

 

சில ஆண்டுகளுக்கு முன்பு வாணியம்பாடி யுனானி மருத்துவர் ஒருவர், சினிமா ஸ்டண்ட் நடிகர் ஜஸ்டினுடன் பேட்டி கொடுத்தார். அதில், “தனக்கு வந்த நரம்பு நோயைத் தீர்த்த யுனானி மருத்துவர் எனக்கு கடவுள்” என்றார் ஜஸ்டின். அதனை கேட்டு அந்த யுனானி மருத்துவரும் தான் “வெறும் வைத்தியம் செய்யும் மருத்துவர் தான் இறைவனல்ல” என்று மறுப்புச் சொல்லவில்லை. மாறாக அகமகிழ்ந்து வாய்விட்டு சிரித்தார். ஆனால் சரியாக இரண்டு மாதத்திற்குப் பின்பு அந்த ஸ்டண்ட் நடிகர் நோயால் இறந்துவிட்ட செய்தி பததிரிக்கையில் வெளியானது. அதற்குப் பின்பு அந்த யுனானி டாக்டர் சிலகாலம் வெளியில் தலைகாட்டவில்லை. சென்னை ஜாம்பஜார் ஜானே ஜான் தெருவில் இருக்கும் “இறை வைத்தியர்” என்ற விளம்பரப் பலகையே மக்களை ஏமாற்றப் பேடப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். அந்த யுனானி ஹக்கீம் மட்டும் இறை வைத்தியர் என்று ஏன் விளம்பரம் செய்ய வேண்டும். இதனை எதற்குச் சொல்கிறேன் என்றால் நோன்பு நேரத்தில் மேற்சொன்ன சுய விளம்பரங்களால் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள் என்ற வேதனையினால்தான்.

 

இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் கல்வி அறக்கட்டளை சார்பாக உறையாற்றிய ஓர் இளைஞர் சொன்னார், “செல்வமுள்ள முஸ்லிம்கள் இன்ஜினீரியங் கல்லூரி ஆரம்பித்து பணத்தை அள்ளோ அள்ளோ என்று அள்ளுங்கள்” என்றார். “இன்ஜினீரியங் கல்லூரி ஆரம்பித்து ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு உதவி செய்யுங்கள்” என்றால் ஒத்துக் கொள்ளலாம்-மாறாக அவர் வார்த்தையில் சொல்ல வேண்டுமெண்றால் பணத்தைப் போட்டு பணத்தை எடுங்கள் என்கிறார். டொனேசனே வாங்கக் கூடாது என்ற அரசு விதி முறை இருக்கும் போது வேதாளம் வேதம் ஓதிய கதையினைச் சொன்னார் அந்த இளைஞர் என்றால் பாருங்களேன்!

 

முஸ்லிம் இளைஞர்களைத் தவறான பாதையில் வழி நடத்திச் செல்லும் சில இயக்கங்கள் சில வீடியோக் காட்சிகளைக் காட்டிவிட்டு, தங்களுக்கு ஸக்காத்-சதக்கா-ஃபித்ரா பணத்தினை நன்கொடையாகத் தாருங்கள் என்றும் வேண்டுகோள் வைத்தனர். ஆனால் அவ்வாறு வசூல் செய்யப்பட்ட பணம், உரிய வகையில் வழங்கப் படாமல் சிலரது சொந்தச் செலவுக்காக துஷ்பிரயோகம் செய்யப் படுவதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.

 

இத்துடன் ஒரு புகைப்படத்தினைத் தந்துள்ளேன். அதில் வளைகுடா நாடுகளில் தழிழ் நாடு முஸ்லிம் இளைஞர்கள் எவ்வாறு அரை வயிற்றுக்கஞ்சியுடன், குடியிருக்க புறாக்கூண்டு போன்ற இடத்தில் வசித்து மிஞ்சிய பணத்தினை தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்று பார்த்தால் புரியும். அதில் மிஞ்சியதினை “மார்க்கம் சொல்கிறது” என்று நம்பிக் கொண்டு நன்கொடையாகச் சில இயக்கங்களுக்குத் தருகிறார்கள். ஆனால் அதன் தலைவர்கள் வெறும் வாய் ஜாலங்களால் வார்த்தை வியாபாரிகளாக மாறி, முஸ்லிம் இளைஞர்களின் பணத்தினைப் பெற்று தவறான பாதையில் செலவளிக்கின்றனர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

 

அதற்கு ஓர் உதாரணத்தினைத் தருகிறேன்: சில மாதங்களுக்கு முன்பு “துபாய், மலேசியாவிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்காக இரு அறிவு ஜீவிகள் வருவதாகவும் அவர்களது கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்” எலக்ட்ரானிக் மீடியா மூலம் வேண்டுகோள் விடப்பட்டது. அவர்கள் வாய்ச்சொல்லில் வீரர்கள் என்றும் நன்கொடை பெறுவதற்காக முகஸ்துதி பாடுவர் என்றும் அனைவரும் அறிவர். ஆகவே முஸ்லிம் இளைஞர்கள் அவர்கள் கல்விப்பணி பயணத்திற்கு அள்ளித்தந்திருப்பார்கள் என்பதினை மறுக்க முடியாது. ஆனால் நடந்தது என்ன? சமீபத்தில் அவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட சங்கத்தின் கூட்டம் சென்னையில் நடந்தது. அதில் சமர்ப்பித்தக் கணக்கினை அதன் முக்கிய நிரவாகி ஒருவர் என்னிடம் சொல்லிப் புலம்பினார் என்றால் பாருங்களேன். அதாவது துபாயில் வசூல் செய்தது ரூபாய் 4லட்சம். அதில் அவர்கள் பயணச் செலவு ரூபாய் ஒரு லட்சத்து நாற்பதாயிரம். மலேசியாவில் வசூல் ரூ.40 ஆயிரம். ஆனால் பயணச் செலவு ரூ பதினாயிரம். யார் யார் பணம் கொடுத்தார்கள் என்ற விபரம் இன்னும் சமர்ப்பிக்கவில்லையாம். அவர்கள் தங்குவதற்கான செலவினையும் பயணச் செலவினையும் அங்குள்ள நண்பர்கள் செய்த பின்னரும் இது போன்ற தவறான கணக்குக் காட்டப்பட்டது வருத்தமளிக்காமலில்லையா?.

 

ஆகவே நன்கொடை கொடுப்பவர்கள் இனிமேல்  அதற்கான ரசீது கேட்பது மட்டுமல்லாது, கொடுத்த நன்கொடை விபரங்களை அந்த இயக்கங்களின் தலைமை நிலையத்திற்குத் தெரிவித்தோமென்றால் இது போன்ற ‘வைக்கோல் பிடுங்கும்’ நிலை ஏற்படாமல் தடுக்கலாம். அது மட்டுமல்லாமல் அந்தப் பொது நிறுவனங்கள் தங்களது வரவு-செலவினைப் பத்திரிகையிலும் இ-மீடியாவிலும் வெளியிட வேண்டும் என வற்புறுத்த வேண்டும். அப்போது தான் பைத்துல்மால் பணம் சீரழியாமல் காப்பாற்ற முடியும்.

 

கலீஃபாபா உமர் ரலியல்லாஹ் அவர்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்க ஐந்து தோழர்கள் கமிட்டி அவருடைய மகளார் மூலம் தெரிவித்தபோது உமர் கோபம் கொண்டு, “என்னை நரகத்திற்கு அனுப்ப முடிவு செய்து விட்டீர்களா?” என்று கடிந்து கொண்டதாகவும் ஹதீஸ் உள்ளது.  நாம் பொதுச் சொத்தில் தவறிழைக்க விடலாமா?

 

ஆக்கம்: AP. Mohamed Ali   


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.