ஊக்கமது கைவிடேல்

நெப்போலியன்
Share this:

நான் 2010 ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னை மண்ணடியிலுள்ள முன்னாள் புதுக்கல்லூரிச் செயலாளர் ஒருவருடைய அலுவலகத்தில் இரண்டு முன்னாள் செயலாளர்கள் மற்றும் மியாசி(The Muslim Educational Association of Southern India) புதுக்கல்லூரி உறுப்பினர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, “முஸ்லிம் மாணவர்களுக்கு அரசு வேலைகளுக்கான (ஐ.ஏ.எஸ்-ஐ.பீ.எஸ், தமிழகத் தேர்வுகள்) ஒரு பயிற்சி மையம் புதுக்கல்லூரியில் ஆரம்பிக்க வேண்டும்” என்று ஆலோசனை தெரிவித்தேன். அதற்கு, “போங்க, நம்ம பசங்க என்ன பயிற்சி கொடுத்தாலும் முன்னேற மாட்டார்கள். கிரசண்டு இன்ஜினீரிங் கல்லூரியில் ஐ.ஏ.எஸ் பயிற்சி கொடுக்கிறார்கள் ஆனால் தேர்வு பெற்றவர்கள் எத்தனை பேர் சொல்லுங்கள் பார்ப்போம்” என்று மறுப்புத் தெரிவித்தார் தற்போதைய உதவித் தலைவர். அவர் தோல்விகளை முன்னுதாரணமாக எடுத்துச் சொன்னார். அதே நேரத்தில் நாட்டிலுள்ள 649 ஐ.ஏ.எஸ் வேலைக்கு, சென்னை மனிதநேய மையம் நடத்தும் பயிற்சியில் 83 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள் என்ற வெற்றி உதாரணத்தினை எடுத்துக்கொண்டு தோல்வியினை முறியடித்து வெற்றிக்கனி பறிப்பது எவ்வாறு? என்ற நேர்மறைச் சிந்தனை செய்யவும் செயலில் இறங்கவும் அவர் மனம் மறுக்கிறது.  இதைத்தான் ஆங்கிலத்தில், ‘Defeatism’ அதாவது ‘கையாலாகாத்தனம்’ என்று சொல்லுகிறார்கள்.

பிரான்ஸ் நாடு பல ஆண்டுகளுக்கு முன்னால் போரில் தோல்விகளை அடுக்கடுக்காகச் சந்தித்துக் கொண்டிருந்தது. அந்த நாட்டுத் தலைவருக்கு ஒருநாள் பல இளைஞர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த இளைஞர் கூட்டத்தில் நெப்போலியனும் இருந்தான். அந்தத் தலைவரிடம் நெப்போலியன், “ஏன் பிரான்ஸ் நாடு போரில் தோல்விகளையே சந்தித்து வருகிறது? உங்களுக்கு வெற்றி பெறும் திறமையில்லையா?”  என்று வினவினான். அப்போது அந்தத் தலைவர் நெப்போலியனைப் பார்த்து, “உன்னால் முடியுமா? எனக் கேட்டார். அதற்கு ஒரேவரியில் நெப்போலியன், “முடியும்” என்றான். பின்பு நெப்போலியன் மிகவும் குறைந்த உயரமே கொண்டிருந்தாலும் பார்ப்பதற்குச் சிறுவன்போல தோற்றமளித்ததாலும் பிரான்ஸ் நாட்டின் தலைவனாகப் போரில் வெற்றிக்கு மேல் வெற்றி ஈட்டினான். தனது வெற்றியினை, “பிரான்ஸ் நாட்டின் மகுடம் தரையில் வீழ்ந்து கிடப்பதினைக் கண்டேன், அதனை நான் எனது கத்தியால் எடுத்தேன் ( I found the crown of France lying on the ground, and I picked it up with my sword )” என்று நெப்போலியன் சொன்னதாக வரலாறு குறித்து வைத்திருக்கிறது. ஆகவே சாதிக்க நினைத்தால் தோல்வி நம்மை நெருங்காது.

அமெரிக்காவில் மெம்பிஸ் கிறித்துவ சர்ச்சுகளுக்கு மக்கள் வருகை குறைந்து போயிருந்தது. ஆகவே சர்ச் நிர்வாகிகள் எவ்வாறு கூட்டத்தினை அதிகரிப்பது? என்று ஆலோசனை செய்தார்கள். அப்போது, “சர்ச்சுகள் அருகில் உள்ள மைதானத்தில் குத்துச்சண்டை நிகழ்ச்சிகள் வைத்தால் மக்கள் பார்க்க அதிகம் வருவார்கள். அப்படியே சர்ச்சுக்கும் வந்து பிராத்தனை செய்வார்கள்” என்று முடிவு செய்யப்பட்டது. உடனே குத்துச்சண்டை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. என்ன ஆச்சரியம்? அவர்கள் எதிர்பார்த்ததுபோல் ஏராளமானோர் சண்டையும் பார்த்துவிட்டு சர்ச்சுக்கும் வந்தனர். அதேபோல் 700 இவாஞ்சலி சர்ச்சுகளிலும் டி.வி. நிகழ்ச்சி ஏற்பாடு செய்து மக்களை இழுத்தார்களாம். இதனை இங்கு ஏன் சொல்கிறேனென்றால் சர்ச் நிர்வாகிகள் தோல்விக்கான காரணத்தை அலசி, அறிஞர் சாக்ரடீஸ் சொன்னதுபோல யோசித்து மாற்று நடவடிக்கை எடுத்ததால் அவர்கள் முயற்சியில் வெற்றி பெற்றார்கள்.

கட்டுக்கோப்பான முஸ்லிம் சமுதாய அமைப்பினைக் கொண்டுள்ள நம்மால் சரியான வழியில் நேர்மறையாகச் சிந்தித்துச் செயல்படுத்த முடியாதா?

சென்னை சைதாப்பேட்டை மனித நேய மையம்போல் இலவச உணவு, தங்கும் இடம், பயிற்சி அளிக்க நமது முஸ்லிம் அமைப்புகளிடம் வசதி குறைவா?

எத்தனை லட்சம் ரூபாய் நன்கொடையாக வருகின்றன? மானியம் கிடைக்கிறது, வங்கியில் பிக்ஸட் டெப்பாசிட்டில் கோடிக்கணக்கான பணம் தூங்கும்போது முஸ்லிம் இளைஞர்களுக்கு ஏன் சென்னை மையப்பகுதியில் அரசுப்பணிகளுக்குப் பயிற்சி அளிக்கத் தயங்குகிறார்கள்?

முஸ்லிம் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்-ஐ.பீ.எஸ் மற்றும் மாநிலத்தில் நடைபெறும் சர்வீஸ் கமிஷன் தேர்வுகள், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுகள் சம்பந்தமாகவும் நான் விரிவாக 12.9.2009 அன்று ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையும் 6.2.2010 அன்று தமிழில், “வெற்றிக்கொடி நாட்டுங்களேன்; வீறு நடை போடுங்களேன்” என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதியுள்ளேன் என்பதை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். தனி நபராக ஐ.ஏ.எஸ் பயிற்சி பற்றி எழுதினாலும் அல்லது முகாம்கள் நடத்தினாலும் அதைவிட ஓர் இயக்கத்தின்/அமைப்பின் சார்பாக நடத்தப்படும் பயிற்சி முகாம்கள் பலர் கவனத்தினை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை. ஆகவே இப்போது நடக்கும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்விற்கு ஐ.என்.டி.ஜே சார்பாகவும், தமுமுக மாணவரணி சார்பாகவும் பயிற்சி முகாம் நடத்தப் படுவது வரவேற்கத் தக்க ஒன்று. அவர்களுக்குத் தேவையான சில யோசனைகளையும் நான் தெரிவித்துள்ளேன்.

அவர்களுடைய சிறிய துவக்கம் நிச்சயமான பெரிய ஆலமரம்போல் பிற்காலத்தில் வளரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. சிறிய ஒரு கல், ஒரு சட்டி சிமிண்ட் கலந்த மண்ணிலிருந்துதான் பெரிய கட்டடங்களின் தொடக்கம் உருவாகிறது. அது போலத்தான் சில எழுத்துகள் சேர்ந்து சக்திமிக்கச் சொற்கள் உருவாகின்றன. பலவீனமான சில பட்டு நூல்களின் கூட்டுச் சேர்க்கையால்தான் ஓர் உறுதியான முழுப் பட்டுப்புடவை நெய்து முடிக்கப் படுகின்றது. உதிரிப் பூக்களால்தான் ஆளுயர பூமாலைகள் உருவாக்கப் படுகின்றன.

வெற்றியினைத் தங்கத்தட்டில் வைத்து யாரும் தாரை வார்ப்பதில்லை. நாம்தான் சரியான நோக்கில் சிந்தித்து, தகுதியானவர்களை இணைத்துக் கொண்டு, விடாத கடும் முயற்சி செய்து, வெற்றிக்கனி பறிக்க வேண்டும்.

எப்போதும் ஒரு மனிதன் தாழ்வு மனதோடு இருந்தால் வெற்றிக்கனியினைப் பறிக்க முடியாது. அதற்கு உதாரணமாக ஒரு சிறு உண்மை நிகழ்ச்சியினைச் சொல்லலாம். சென்னை நகரத்தில் 89 வயதான, ஓய்வு பெற்ற டாக்டர் ஒருவர், ஒரு பார்க்கிற்குப் பேரக்குழந்தைகளுடன் சென்றார். அப்போது அங்கு விளையாடும் குழந்தைகளை உற்சாகப்படுத்துவதற்காக ஒரு பந்தை எடுத்துச் சென்று வீல் சேரில் உட்கார்ந்து கொண்டு அந்தப்பந்தைத் தூக்கி எறிவதும் சிறு குழந்தைகள் அதனை எடுத்து வந்து அவரிடம் தருவதுமாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஓர் ஒன்பது வயது சிறுமி அந்தப் பந்தை எடுத்து வந்து தந்து விட்டு, “ஏன் தாத்தா உங்களால் எழுந்து நடக்க முடியாதா?” என்று கேட்டாள். அதற்கு அந்தப் பெரியவர், “முடியுமே” என்றார். உடனே அந்தச் சிறுமி தனது கால் சட்டையினைத் தூக்கிக் காட்டினாள். அவளது வலக்கால், முட்டிக்குக் கீழே விபத்தில் எடுக்கப்பட்டு செயற்கைக்கால் பொருத்தப் பட்டிருந்தது. அதனைப் பார்த்து அதிர்ந்த அந்த முதியவர் வீல்சேரை விட்டு எழுந்து நடக்கலானார். இந்த உண்மை நிகழ்வு நமக்கு எதை உணர்த்துகிறது? நம்மை எந்தச் சூழலிலும் தாழ்வு மனப்பான்மை என்ற இருள் சூழ்ந்து கொள்ளக் கூடாது என்பதை உணர்த்தவில்லையா?

தோல்வி/தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களின் அறிவுரையினை நாம் ஏற்கக் கூடாது என்பதற்கு ஒரு சிறு நீதிக் கதை:

ஒரு நீர்நிலை உள்ள குளத்தின் அருகில் உள்ள உயர்நத மரத்தின் அடியிலே கூடியிருந்த தவளைகளிடையே ஒரு போட்டி எழுந்தது. அதாவது அந்த மரத்தின் உயரத்துக்கு எந்தத் தவளை வேகமாக முதலில் ஏறுகின்றது என்ற போட்டிதான் அது. போட்டி ஆரம்பமானது. சில தவளைகள் கீழே நின்று கொண்டு மரமேறும் தவளைகளுக்கு உற்சாகமூட்டிக் கொண்டிருந்தன. தவளைகள் ஒன்றை ஒன்று முந்தி ஏறத் தொடங்கின. கீழே நிற்கும் தவளைகள் உற்சாகமூட்டுவதால் அவற்றைத் திரும்பிப் பார்த்து, சக போட்டித் தவளைகளையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டே வேகமாக ஏறின. ஆனால் ஒரே ஒரு தவளை மட்டும் கீழே நின்றுகொண்டு உற்சாகமூட்டும் தவளைகளையோ தன்னுடன் போட்டியில் பங்கு கொண்ட சக போட்டியாளர்களையோ பார்க்காது வெகுவேகமாக ஏறி, வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டி முடிந்து, எல்லாத் தவளைகளும் கீழே இறங்கி வந்தன. அப்போது அங்கே இருந்த தலைவர் தவளை, “எப்படி நீ மற்றத் தவளைகளைப் பார்க்காமல், கீழே இருக்கின்ற தவளைகளின் உற்சாகத்தை ஆரவாரத்தையும்  கவனிக்காமல் ஏறினாய்?” என்று வெற்றி பெற்றத் தவளையைக் கேட்டது. “இன்னும் கொஞ்சம் உரக்கக் கேளுங்கள் தலைவரே” என்று வெற்றிபெற்ற தவளை கேட்டுக் கொண்டது. தலைவர் தவளை தான் கேட்ட கேள்வியை மீண்டும் உரக்கக் கேட்டது. அப்போது வெற்றி பெற்ற தவளை, “கீழே நின்ற தவளைகள் சத்தம் போட்டார்களா? அது எனக்குக் கேட்கவில்லை, ஏனென்றால் எனக்குக் காது மந்தம்” என்றதே பார்க்கலாம். ஆகவே தோல்வி/தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களின் கருத்துகளை எப்போது முஸ்லிம் சமுதாயம் விட்டொழிக்கிறதோ அப்போதுதான் நாம் எல்லாத்துறையிலும் வெற்றி பெறுவோம்.

ஆகவே சிறிய துவக்கமே சிறந்த முடிவாக இருக்கும் என்பதை வலியுறுத்தி, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுப் பயிற்சியில் தங்களை ஈடுபடுத்தும் ஐ.என்.டி.ஜே அமைப்பினரையும் த.மு.மு.க அணியினரையும் வாழ்த்தி வரவேற்பதோடு மற்ற அமைப்பினரும் பல்வேறு அரசு வேலைகளுக்கு நமது சமுதாயத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

பெரும்பாலும் காவலர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுகளில் ஓட்டப்பந்தயம் 100, 400, 1500 மீட்டர்கள் இருக்கும். 1500 மீட்டர் ஓட வேண்டுமென்றால் நாம் தினமும் மூன்று கிலோ மீட்டர் தூரமாவது ஓடிப் பழகவேண்டும். பெரும்பாலும் நமது இளைஞர்கள் கயிறு ஏறுதல், நெஞ்சு விரிவு போட்டிகளில் தோல்வி அடைவார்கள். அதற்குக் காரணம் கயிறு அல்லது மரம் ஏறிப் பழக்கம் இருக்காது. ஆகவே ஃபுல்அப்ஸ் எடுத்துப் பழகவேண்டும். மரத்தில் கயிறு கட்டி ஏறிப் பழகவேண்டும். அடுத்தது நெஞ்சு விரிவு ஐந்து செண்டி மீட்டர் இருக்கவேண்டும். ஆனால் சிறு வயதில் தண்டால் அல்லது பெஞ்ச் பிரஸ் போன்ற பயிற்சி இல்லாதவர்களின் நெஞ்சு, ஐந்து செண்டிமீட்டர் விரிவடையாது. மூச்சு இழுத்து 10வினாடி நிறுத்தும் பழக்கமிருந்தால் நெஞ்சு விரிவடையும். அதுபோல நீளத்தாண்டுதல், உயரத்தாண்டுதல் பழக்கமிருந்தால்தான் நெஞ்சு விரிவு ஐந்து செண்டி மீட்டர் வரும்.

முஸ்லிம் சமுதாய மக்கள் கூடுதலாக வாழும் ஊர்களில் உள்ள கல்வி நிலையங்களில் பணியாற்றும் விளையாட்டு ஆசிரியர்களைக் கொண்டு மேற்காணும் பயிற்சிகளைக் கொடுக்கலாம். சில இளைஞர்கள் பள்ளிக்கூடங்களில் பயிலும்போது விளையாட்டில் ஈடுபடுவார்கள். ஆனால் பள்ளிப் படிப்பினை முடித்து விட்டு, கல்லூரியில் பயிலும் பெரும்பாலோரும் வேலை வாய்ப்பு வேட்டையில் ஈடுபட்டிருப்போரும் விளையாடுவது, ஓடுவது, உடற்பயிற்சி செய்வது இல்லை. ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இதுபோன்ற பயிற்சி கொடுப்பதை, சென்னை மிண்ட் அருகில் உள்ள பள்ளியிலும் பொது பார்க்குகளிலும் பலரும் பார்க்கலாம். நாம் எல்லா வயதிலும் உடற்பயிற்சியினைக் கைவிடக்கூடாது. அவை நம் வேலைக்கு மட்டுமல்ல, நம் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும்.

அடுத்தது, ஒரு தேர்வில் தேர்வு பெறவில்லையென்றால் மனந்தளராது உங்கள் ஊக்கத்தினைக் கைவிடாது உங்களது குறிக்கோளில் முனைந்து செயலாற்றினால் வெற்றி நிச்சயம் உங்கள் கையில்தான். ஆகவேதான், “ஊக்கமது கைவிடேல்” என்றேன் என் சொந்தங்களே!.

–  முனைவர் A.P. முஹம்மது அலீ, M.A, Ph.D, IPS(R)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.