வருது, வருது மதிமயக்கும் தேர்தல் வருது!

Share this:

1951ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பின்பு மக்களவைக்கும் மாநில சட்டசபைகளுக்கும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வாக்காளர்கள் கதவுகளைத் தேர்தல் வந்து தட்டும். சில அசாத்தியமான சமயங்களில் ஐந்தாண்டுகளுக்கு முன்பே தன் தலையினை வெளிக்காட்டும். “யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” என்ற பழமொழிக்கிணங்க, இந்தியக் குடிமக்கள் அதனை அறிந்து கொள்ளும் விதமாகப் பொதுச்சுவர்களிலும் தனியார் சுவர்களிலும் போட்டி போட்டுக் கொண்டு வண்ண வண்ண எழுத்துகளில் தங்கள் கட்சி சின்னங்களை பொறித்து விளம்பரம் செய்கின்றன. துண்டு நோட்டீஸிலிருந்து மெகா சுவரொட்டிவரை அச்சடித்து விநியோகித்தும் சுவர்களிலும் ஒட்டியும் தட்டிகளில் ஒட்டியும் செய்யப்படும் எளிமை(!)யான விளம்பரங்கள் ரோடு ஓரங்களில் வைக்கப்படும்.

அவை போதாதென்று ஃபிளக்ஸ் பேனர்கள், டிஜிட்டில் போர்டுகள் அலங்கரிக்கும். மின்சாரத் திருட்டுகள் நடத்தி தலைவர்கள் படங்கள், கூட்ட நிகழ்ச்சித் தகவல்கள் அலங்கார விளக்குகள் மூலம் கண்ணைப் பறிக்கும்.

ஊர்வலம், பொதுக்கூட்டம், சைக்கிள் பேரணி, தெருமுனைக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் நடக்கும். கூடவே பாட்டுக் கச்சேரி, நடனம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற ஆட்டம் பாட்டம் பாடி மானை ஓடவிட்டும் மயிலைக் கிறங்க வைத்தும் பல மனமகிழ் நிகழ்ச்சிகளுக்கும் பஞ்சமிராது. பணத்தினை தண்ணீராக வாரி இறைக்கும் ஒரு நடவடிக்கைதான் தேர்தல் என்று வாக்காளப் பொதுஜனம் சாதாரணமாக நினைக்கும் அளவுக்குத் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்படும்.

இத்தனை ஆட்டம், பாட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் திரு. டி.என். சேஷன் தேர்தல் கமிஷனராக இருந்தவரை தன் வாலை சுருட்டிக் கொண்டு மூலையில் முடங்கிக் கிடந்தது. ஆனால் இன்று அந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுத் தேர்தல் என்பது ஒரு திருவிழா நிகழ்ச்சிபோல நடக்கின்றது. பேரளவிற்குக் கட்சி நடத்துபவர்களும், சமூக அமைப்பினரும் முக்கிய அரசியல் கட்சிகளிடம் பேரம் நடத்தி நாலு காசு பண்ணும் பொன்னான நேரம்தான் தேர்தல் நேரம்.

வீதிகளில் உண்டியல் குலுக்குவதிலிருந்து வியாபாரிகள் கடையினை மூடிவிட்டு ஓடும் அளவிற்கு பயமுறுத்தி தேர்தல்நிதி வசூல் வேட்டை ஆடுகளம்தான் தேர்தல் களம். கட்சித் தேர்தல் நிதியென்று தலைவர்களிடமுள்ள கறுப்புப்பணத்தினை சூட்கேசில் நல்ல நோட்டுக்களிடையே வெற்றுப் பேப்பரை வைத்து பத்திரிக்கைகள் வெளிச்சம் போட்டுக் காட்டி, “தேர்தல் நிதி வசூல் கோடிகளில்” என்று வரியில்லா நிதி சேர்ப்பதுதான் தேர்தல் நேரம். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். அது என்ன? வேலையில்லாத அத்தனை ஆண்கள், பெண்களுக்கும் தேர்தல் ஒரு தற்காலிக வேலைவாய்ப்பு முகாமாகவே செயற்படும்.

நான் சிறுவனாக இருந்தபோது எங்களூர் இளையாங்குடியினை உள்ளடக்கிய மானாமதுரை சட்டமன்ற தேர்தல் 1957ல் நடந்தபோது எனக்கு வயது ஒன்பது. என்னைப் போன்ற சிறுவர்களையெல்லாம் அழைத்து, “சிங்கப் பெட்டிக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று தெருவில் சப்தம் போடச் சொல்லி அதன் பிறகு ஆரஞ்சுக் கலர் மிட்டாய் என்ற புளிப்பு மிட்டாய் கொடுத்து அனுப்பியது இன்றும் பசுமையாக உள்ளது. அதன் பின்பு 1967, 1971ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் புதுக்கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவனாக இருந்தபோது திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து தேர்தல் வேலை செய்துள்ளேன். 1977லிருந்து 2001வரை பல்வேறு தேர்தல்களில் தேர்தல் எஸ்.பியாகவும், டி.ஐ.ஜியாகவும் பணியாற்றி அரசியல் நீரோட்டங்களை ஆராய்ந்துள்ளேன்.  தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள்.  தேர்தல் நேரங்களில் மிகவும் தெளிவான தீர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.  தொங்கு சட்டசபைக்கே வாய்ப்பளித்ததில்லை என்பது பாராட்டுதலுக்குரியது.

தேர்தலில் ஓட்டுப்போடும் இரண்டு விதமான வாக்காளர்கள் இருப்பர். ஒரு பிரிவினர் தாங்கள் சார்ந்துள்ள கட்சிக்கோ அல்லது அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிக்கோ வாக்களிப்பர். அடுத்தப் பிரிவினர் எந்தக் கட்சியும் சாராத நடுநிலை வேட்பாளர்கள். பொதுவாக நடுநிலை வேட்பாளர்களே அதிக எண்ணிக்கையில் இருப்பர்.  அரசியல் கட்சிகள் அந்த நடுநிலை வேட்பாளர்களை எந்த விதத்தில் கவர்ந்து தங்களது கட்சிக்கோ, அல்லது கூட்டணிக்கோ ஓட்டளிக் வைப்பது என்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவர். ஆளும் கட்சியும் எதிர்கட்சிகளும் தங்களது வாக்குறுதிகளை வானம் முட்டுமளவிற்கு அள்ளி விடுவர். ஆள்பலம் உள்ள அம்பலக்காரர்கள் நலிந்த பிரிவினரை மிரட்டியே தங்கள் பக்கம் பணிய வைப்பர். ஆட்சிகளில் கள்ளப்பணம் புரட்டிய கட்சிகள் தங்களது பண பலத்தினை வைத்தே “பணம் பாதாளம் வரை பாயும்” என்ற பழமொழிக்கிணங்க பணத்தினைத் தேர்தல் விதிமுறைகளையும் மக்கள் பிரதிநிதிச் சட்டத்தினையும் மீறி, தண்ணீராக வாரி இறைப்பர். சில அரசியல்வாதிகள் தங்கள் வாக்குறுதிகளைக் கல்மனசும் கலங்குமளவிற்கு அள்ளித் தெளிப்பர். “என்ன செய்வது? யாருக்கு ஓட்டுப் போடுவது?” என்று அறியாமல் தடுமாறும் நடுநிலை வேட்பாளர்களை, கலங்கிய குட்டையில் பிடிக்கும் மீனைப்போல் அரித்தெடுக்கும் ஆற்றலும் நம் அரசியல் கட்சித் தலைவர்கள் பலருக்கு உண்டு.

சர்வாதிகார நாடுகளில் வாழும் மக்களுக்கில்லாத அரிய வாய்ப்பு ஜனநாய இந்தியக் குடிமக்களுக்குத் தங்கள் பிரதிநிதிகளையும் ஆட்சி பீடத்தில் அமரும் கட்சிகளையும் நிர்ணயிக்கும் தலையாய கடமையாக வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பொன்னான வாய்ப்பினை மக்கள் நழுவ விடக்கூடாது. வாக்குச்சாவடி நோக்கி நடைபோடுமுன் தங்கள் வாக்கினை எந்த அடிப்படையில் பதிவு செய்யப் போகிறோம் என்று சற்றுச் சிந்திக்க வேண்டும். அவை யாவை எனப் பார்ப்போம்:

  1. தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் கடந்தகால வரலாறும் தேர்தல் நேரத்தில் அவைகள் எடுத்த நிலைப்பாடும்.

  2. கட்சிகளை நடத்திச் செல்லும் தலைவர்களுடைய கடந்தகாலப் பின்னணி, தலைவர்கள் கட்சியினை நடத்திச் செல்லும் விதம். அந்தத் தலைவர்கள் தனித்தன்மையுடன் செயலாற்ற தகுதியானவர்களா அல்லது அவர்களை ஆட்டிப்படைக்கும் ‘கிச்சன் கேபினெட்’ என்ற சிறுக் கூட்டங்களின் கைப்பாவையா எனச் சிந்திக்க வேண்டும்

  3. அரசியல் கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகம் காப்பாற்றப் படுகிறதா?

  4. அனைத்துச் சமூகத்தினருக்கும் குறிப்பாக நலிந்த மக்களுக்கும் பெண்களுக்கும் கட்சியில் பிரதிநித்துவம் வழங்கப்படுகிறதா?

  5. கட்சி உறுப்பினர்களுக்கிடையே சகோதரத்துவம், சமத்துவம் நடைமுறைப்படுத்தப்படுகிறா?

  6. அன்னை இந்திரா காந்தி ஒரு சமயத்தில் ஊழலைப்பற்றி குறிப்பிடும்போது, “ஊழல் என்பது சர்வதேச நடைமுறை” என்றதுபோல எல்லாக் கட்சிகளும் தாங்கள் ஆட்சி பீடத்தில் இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள்தாம். இருந்தாலும் எந்த அரசியல் கட்சியினர் ஊழலில் ஊறினவர்கள்?

  7. மக்கள் நலப்பணிகள் எந்தக் கட்சியின் ஆட்சியில், எந்தளவிற்கு சாதாரண மக்களைப் போய்ச் சேர்ந்தது?

  8. சமுதாய ஒற்றுமை ஓங்கி அமைதிப் பூங்காவாக எந்த ஆட்சி காலத்தில் நாடு இருந்தது?

  9. தொழில் வளர்ச்சி பெற்று விலைவாசி எந்த ஆட்சியில் மக்கள் வாங்கும் திறனுக்குட்பட்டிருந்தது?

  10. எந்த ஆட்சியில் தமிழக நலன் காக்கப் பெற்றது?

மேலே குறிப்பிட்ட பத்து அம்சங்களில் எந்தக் கட்சி  சிறப்பாக செயல்பட்டது என்று சீர்தூக்கி சிந்தித்து வாக்காளர் ஓட்டளிக்க வேண்டும்.

முஸ்லிம் சமுதாய மக்கள் ஓட்டுச் சாவடிகளுக்குச் செல்வதற்கு முன்பு தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் உள்கட்டமைப்புக் கொள்கைகள் பற்றிச் சற்றே சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அவை:

  • மதவெறியில்லாத கட்சி

  • பாபர் மஸ்ஜிதை இடித்துத் தள்ளத் துணை சென்ற கட்சிகள்

  • முஸ்லிம்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு தரவேண்டும்/தரக்கூடாது என்ற கட்சிகள்

  • முஸ்லிம் மந்திரி அங்கம் வகித்த/வகிக்காத கட்சிகளின் ஆட்சிகள்

  • முஸ்லிம் அதிகாரிகளுக்கு முக்கிய இலாகா பொறுப்புகள் வழங்கிய/வழங்காத ஆட்சிகள்

  • முஸ்லிம் அதிகாரிகள் பந்தாடப்பட்ட ஆட்சி

  • முஸ்லிம்கள் தொழில் வளர்ச்சி பெற வழிவகுத்த/வழிவகுக்காத ஆட்சிகள்

  • முஸ்லிம்கள் கருவாட்டு வியாபாரிகள் என ஏளனம் பேசப்பட்ட ஆட்சி

  • முஸ்லிம் தலைவர்கள் தங்கள் சமுதாய பிரச்னைகளுக்கு சுலபமாக காரியம் சாதிக்க முடிந்த/முடியாத ஆட்சிகள்

  • இமாம்கள், உலமாக்களுக்கு ஓய்வூதியம் வழங்கிய/வழங்காத ஆட்சிகள்

  • முஸ்லிம் கல்வி நிலையங்கள் அதிகமாக உருவான/உருவாகாத ஆட்சிகள்

  • சமுதாய ஒற்றுமை ஓங்கிய ஆட்சி

  • ரதயாத்திரை மற்றும் விநாயகர் ஊர்வலங்கள் முஸ்லிம் வணக்க ஸ்தலங்கள் முன்பாக அனுமதித்து, கலவரங்களுக்குக் காரணமான ஆட்சி

மேற்கூறிய முஸ்லிம் சமுதாய மக்களுக்கு பாதமான காரியங்களில் ஈடுபட்ட கட்சிகளுக்கு நிச்சயமாக வாக்களிக்கக்கூடாது. தேர்தல் நேரத்தில் முஸ்லிம்களுக்கு அள்ளி வீசும் வாக்குறுதிகளுக்கும் தூக்கி வீசும் எலும்புத் துண்டுகள் போன்ற பணத்திற்கும் மதி மயங்கிவிடக் கூடாது. சமுதாய நலனுக்கு எந்தக் கட்சி ஆட்சி சிறந்தது? என்ற முடிவெடுப்பதே சரியாகும்.

சில முஸ்லிம் அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் தங்களுக்குள்ளே இருக்கின்ற கருத்து வேறுபாடுகள் காரணமாக ஹிந்துத்துவா கொள்கையினை ஆதரிக்கும் கட்சிகளுக்குத் துணை போகக் கூடாது. அவ்வாறு ஆதரிப்பது ஒட்டு மொத்த சமுதாயத்தையே காட்டிக் கொடுத்த கீழ்த்தரமான செயலாகுமென்றால் மிகையாகுமா?

ஏனென்றால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் முஸ்லிம்கள் மீதும், வணக்க ஸ்தலங்கள் மீதும் நடத்திய குண்டு வெடிப்புகளால் 117 பேர்கள் கொல்லப்பட்டும் மற்றும் 500 பேர்களுக்கு மேல் காயம்பட்டதாக புலனாய்வில் தெரிந்துள்ளதாக ஊடகங்கள் சொல்கின்றன. அப்படி ஒட்டு மொத்த சமுதாயத்தினுக்கே தீங்கு விளைவிக்க நினைக்கும் வெறியர்களின் ஆதரவாளர்களுக்கு முஸ்லிம் ஓட்டுகள் விழக்கூடாது.

நமது பொது எதிரியான ஹிந்துத்துவா சக்திகளும் அதன் ஆதரவாளர்களும் மறுபடியும் தமிழகத்தில் தலை தூக்க வழிவகுக்காது பார்த்துக் கொள்ளவும், சமுதாய இட ஒதுக்கீடு மற்ற பல நலன் கோரிக்கைகளை வைத்து  அனைத்து சமுதாய தலைவர்கள் ஒன்று கலந்து தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற கூட்டு முடிவு எடுத்தால் ஒட்டு மொத்த சமுதாயமும் பயன் பெறும். மாறாக தனித்தனியே முடிவெடுத்தால் நமது சமுதாயத்திற்கு குறைந்த எம்.எல்.ஏ சீட்டுகளும் நசிந்த பலனுமே கிடைக்கும் என்பது வெள்ளிடை மலை!

இப்போது ஓட்டளிக்கும் முறையில் ஒரு தனிப் பிரிவு உள்ளது. அது என்ன என்று பார்ப்போமானால் ‘தான் எந்தக் கட்சிக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை’ எனகிற விதி. சிலர் அந்தப் பிரிவினை தேர்ந்தெடுப்பதாகக் கூறுகின்றனர். அவ்வாறு செய்வது நமது வோட்டுரிமையினை வீணாக்கி ஜனநாயகத்திற்கு வேட்டு வைக்கும் செயல் என்றால் மிகையாகாது. ஜனநாயகத்தில் எந்தக் கட்சி அல்லது கூட்டணிக்கு மக்கள் அதிமாக வாக்களிக்கிறார்களோ அந்தக் கட்சி அல்லது கூட்டணிதான் வெற்றி பெறும். எனக்கு எந்தக் கட்சிக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என்று குறிப்பிடுவது நமது வாக்குரிமையை இழக்கும் செயலாகும். சில சமயங்களில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாய்ப்பினை இழந்த சட்டசபை, பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒரு ஓட்டு வித்தியாசத்தில்ஆட்சி மாற்றத்தினை இந்திய அரசியல் கண்டுள்ளதையும் மறந்து விடக்கூடாது. “ஜனநாயகம் மூலம் மக்கள் வறுமை, வேலையின்மையினை ஒழிக்க முடியாது; ஆகவே தேர்தலைப் புறக்கணித்து ஆயுதமேந்துங்கள்” என்று அறைகூவல் விடும் நக்ஸல்பாரிகளுக்கும், “நாங்கள் யாருக்கும் ஓட்டுப்போட மாட்டோம்” என்று சொல்பவர்களும் என்ன வித்தியாசம் உள்ளது என சற்றுச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

அரசியல் கட்சிகள் செய்யும் சித்து வேலைகளுக்கெல்லாம் மசியாது, உங்களது சொந்தத் தீர்ப்பை தேர்தல் நேரத்தில் எழுத, தயங்காமல் ஓட்டுச் சாவடி நோக்கி வீறு நடைபோட வேண்டும் என் சொந்தங்களே!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.