… என்ன குடுப்பியோ? – 2

ஆண்களின் பங்கு
பெரும்பாலான ஆண்கள் வரதட்சணை விஷயத்தில் நடந்து கொள்ளும் விதம் நயவஞ்சகத் தனமானது. பெற்றோருக்கு அந்தச் சமயத்தில் மகன் கொடுக்கும் மரியாதை கண்களில் ரத்தம் வரவைக்கும். “அம்மாவுக்கு வயசாச்சு. ‘நல்ல படியா’ என் கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு ஆசை. நாம குறுக்கே நிக்க முடியுமா?”. என்னமோ பெண் வீட்டில் பிச்சையெடுத்துத் தன் குடும்பத்திற்குப் பகிர்ந்தளித்துவிட்டால் தாய்க்குச் சொர்க்கவாசல் நேரடியாகத் திறந்து விடுவது போலிருக்கும் பேச்சு.

பல குடும்பங்களில் குடும்பத் தலைவன் என்ற பிரகிருதிகளின் கோமாளித் தனங்களுக்கு எல்லையே இருக்காது. “அதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம்.. ஹி..ஹி..வாங்கினனாலும் இல்லேன்னாலும் நமக்கென்னா … கேட்டியளா..?” என்று, உழைக்காமல் வரப்போகும் ‘ஹராமை’ நினைத்துப் பல்லிளிக்கும் ‘சாதுக்கள்’ ஒருவிதம்.”பையனை நல்லபடியா வளர்த்து இன்சினீருக்குப் படிக்கவெச்சிருக்கோமா இல்லியா?. நல்ல சம்பளம் வாங்கறானா?. இனி அவன் சம்பாத்தியம் எல்லாம் பொண்ணுக்குத் தானே? என்னா அஞ்சுக்கும் பத்துக்கும் கணக்குப் பாக்கியோ சேச்சேச்சே… “. பரம யோக்கியர்களாகத் தங்களை நினைத்துக் கொள்ளும் ‘பரிதாபத்திற்குரியவர்கள்’ (ஈமானை அடகுவைத்ததால்) ஒருவிதம். “நாங்களா கேக்கோம். பெண்ணைப் பெத்தவன் குடுக்கான் … வாங்கோம்…யருக்கென்னா?” பின்னால் 3 கிராம் குறைந்து விட்டெதென்றால் குட்டிக் கரணம் போடும் குடுகுடுப்பைகள் வேறுவிதம்.

‘படித்த’ டிகிரிக்களின் எண்ணிக்கைக்கேற்ப ‘ஹராம்’ வாங்குவதும் கூடிக்கொண்டே போகும். நான் அதிகம் படித்து விட்டேனாதலால் எனக்கு அதிகம் ‘ஹராம்’ செய்யுங்கள் என்று என்ன ஒரு அருமையான முரண்பாடு (irony) பாருங்கள்.  வருமானம் வருவதால் வரதட்சணைக்கு ‘ஹலால்’ அந்தஸ்துக் கொடுக்கும் பல ‘மவுல்விகளை’ எனக்குத் தெரியும்.

மஹர் கொடுத்துத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று இறைவன் சொல்கிறானே”. (பெண்களுக்கு) அவர்களுக்கான மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்” (அல்குர்ஆன் 4:4). என்று கேட்டால், “சரி அதுக்கென்ன? குடுக்கமாட்டோம்ணா சொல்றோம். இந்தப்பா ஆயிரொத்தொண்ணு ரூவா ‘மஹுறு’ எழுதிக்கோ.” மஹரின் தாத்பரியத்தையே புரிந்தகொள்ள இயலாத மதியீனர்கள். வாங்குவது இரண்டு இலட்சமாக இருக்கும். சாமர்த்தியமாக இறைவனை ஏமாற்றிவிட்டதாக இம்மாதிரி ஆண்களுக்கு நினைப்பு.

கட்டாயச் சீதனம் கடும் தண்டனைக்குரியது
சீதனம் கேட்டுக் கட்டாயப்படுத்தி, பெண்ணைப் பெற்றவர்களைப் பிழிந்து எடுப்பது ஒரு முஸ்லிமுக்குத் தடுக்கப் பட்டிருக்கிறதென்பது மட்டுமல்ல இறைவனிடத்திலும், இந்தியச் சட்டத்திலும் தண்டனைக்குரியது. இப்படிப்பட்டக் கேவலம் நாகரிக உலகின் வேறு எந்தப்பகுதியிலும் நடப்பதாகத் தெரியவில்லை. கட்டாயப்படுத்திச் சீதனம் வாங்கும் எல்லா முஸ்லிம்களும் இறைவனின் சட்டத்தைத் தெரிந்து கொண்டே ‘தைரியமாக’ வாங்குகிறார்கள் என்பது ‘உள்ளங்கை நெல்லிக்கனி’.

சமூகம் படுகுழியில் வீழ்ந்து கொண்டிருக்கிறது. இரண்டாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்தால், கள்ளிப்பால் தேடும் கலாச்சாரம் நம் சமூகத்தினுள் நுழைய அதிக நாளில்லை. ‘என்ன குற்றத்திற்காக அவள் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்ட பெண்பிள்ளை வினவப்படும் போது’ மிக மிகக் குறைந்த பட்சம் என் மனதாலாவது வரதட்சணையை, கட்டாயச் சீதனத்தை வெறுத்து ஒதுங்கியிருந்தேன் என்ற நிலைப்பாட்டிற்கு மன்னிப்பு கிடைத்தால் நாம் பாக்கியவான்கள்.

இதை வாசித்தீர்களா? :   இனி ஆப்கோவுக்கு அவசியமில்லை

பாதிரியார் இஸ்லாத்தைத் தழுவினார், பாஸ்ட் பவுலர் இஸ்லாத்தைத் தழுவினார் என்று கேட்டு புளங்காகிதம் அடையும் நாம் எப்போது இஸ்லாத்தை ‘முழுமையாக’த் தழுவப்போகிறோம்?

 

– அபூ பிலால்