தாடி வைப்பது எங்கள் தார்மீகக் கடமை!

அரசு ஆதரவு பெற்ற சிறுபான்மைக் கல்வி நிறுவனமான ‘நிர்மலா கான்வென்ட் ஹயர் செகண்டரி ஸ்கூல்’ மத்தியப் பிரதேசத்தில் இயங்கிவருகின்றது.  இக்கல்வி நிலையம் தனக்கென்றே சில தனிக் கொள்கைகளை வகுத்துக்கொண்டு செயல்பட்டுவருகின்றது.  அவற்றுள் ஒன்று, ‘மாணவர்கள் கிளீன்ஷேவ்’ பண்ணிக்கொண்டு வகுப்புகளுக்கு வரவேண்டும் என்பதாகும்.

‘இது என்ன கட்டாயச் சட்டம்?’ எனச் சிந்தித்தார் முஸ்லிம் மாணவர் ஒருவர்.  முஹம்மத் சலீம் எனும் பெயருடைய அம்மாணவர், மார்க்கப் பண்போடு தன் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டவராக இருந்ததால், தனது மார்க்கம் தனக்கு அழகான வழிமுறையாக்கிய ‘தாடி’யை வைக்கத் தொடங்கினார்.

அவ்வளவுதான்!  ஒரு பிரளயமே வெடிக்கத் தொடங்கிற்று, அவருடைய வாழ்க்கையில்; பள்ளிப் படிப்பில்!  அந்தப் பள்ளிக்கூடத்தில் சலீம் தொடர்ந்து படிக்கக் கூடாது என்று கட்டளையிட்டு, பள்ளி நிர்வாகம் அம்மாணவரைப் பள்ளியிலிருந்து நீக்கிவிட்டது!  அம்மாணவரின் மார்க்க உணர்வு, அவரைச் சும்மா இருக்க விடவில்லை.  தனது நீக்கத்திற்காக ‘ஸ்டே’ வாங்கி, மத்தியப் பிரதேச உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.  விளைவு?

சென்ற மார்ச் 30 ஆம் தேதியன்று உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு வந்தது, அவருக்கு எதிராக!  “தாடி வைப்பது, தாலிபானிசம் ஆகும்” என்று குறிப்பிட்டிருந்தனர், நீதிபதி மார்க்கண்டேய கட்ச்சுவைத் தலைமையாகக் கொண்ட நீதிபதிகள்.  மாணவரின் சார்பாக வழக்கை நடத்தத் தொடங்கிய வழக்குரைஞர் B.A. கான், மீண்டும் டில்லி உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கை எடுத்துச் சென்றார்.  இந்தியப் பிரஜை ஒருவரைத் தாலிபான்களுக்கு ஒப்பிட்டு, அவருடைய உரிமையைத் தடை செய்வது, இந்தியத் திருநாட்டின் மதிப்பைக் குறைப்பதோடு, நீதித் துறைக்கே இழுக்கை ஏற்படுத்துவதாகும்; முஸ்லிம் மக்களின் மார்க்க உணர்வைக் காயப் படுத்துவதாகும் என்ற அடிப்படையிலும், இந்திய அரசியல் உரிமைகளுள் 25 வது (தனக்கென்று மார்க்கம் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பின்பற்றுவது என்ற) பிரிவின்படியும், உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு முரணானது என்று வாதிட்டார்.

இந்தியத் தலைமை நீதிபதி K.G. பாலகிருஷ்னன் அவர்களின் ஆணைப்படி, இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  மாணவர் சார்பாக ஆஜரான முதிர்ந்த வழக்குரைஞர் B.A. கானிடம் இவ்வழக்கை ஏற்று நடத்திய நீதிபதிகளான அகர்வாலும் சிங்வியும் விசாரனை செய்தார்கள்.

“இந்த மாணவர் தாடி வைத்திருந்தார் என்ற காரணத்தால் மட்டுமே பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாரா?” என்று நீதிபதி சிங்வி கேட்டார்.

“ஆம்” என்ற வழக்குரைஞரிடம், நீதிபதி கூறினார்:  “அப்படியானால், நாளை இந்தப் பள்ளி நிர்வாகத்தினர் சீக்கிய மாணவர்களைச் சேர்க்க மாட்டோம் என்பார்கள்.  தற்காலத்தில் பையன்கள் தங்கள் காதுகளில் பெண்களைப்போல் வலையங்களைப் போட்டுக்கொள்கிறார்கள்.  அப்போதும் அனுமதிக்க மாட்டார்களா?  இது வேடிக்கையாக இருக்கிறது.”

இதைக் கேட்ட அடுத்த நீதிபதியான அகர்வால், “நாளைக்கு இந்தப் பள்ளிக்கூட நிர்வாகிகள் மாணவர்களின் நிற வேறுபாட்டிற்காகப் பள்ளியில் இடம் தர மறுப்பார்களோ?” என்று கேட்டுவைத்தார்.

இதை வாசித்தீர்களா? :   திமுக ஆதரவு முஸ்லிம்களுக்கு!

இவ்வழக்கின் தீர்ப்பு, கடந்த வெள்ளிக்கிழமையன்று வழங்கப்பட்டது.

எப்படி?  மாணவர் முஹம்மத் சலீமுக்குச் சார்பாகத்தான்!

அல்ஹம்து லில்லாஹ்!

 

தகவல் : அதிரை. அஹ்மது


மாணவர் ஸலீம் குறித்து, சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தலையங்கம் : http://www.satyamargam.com/1198