… ஆதலினால் புறம் பேசேல்

Share this:

மூக இணைய தளங்களான யூ டியூபிலும் பேஸ் புக்கிலும் ஒரு வீடியோ சுற்றிக்கொண்டு வருகிறது. தலைப்பு: ‘பிணம் தின்னும் சாமியார்கள்’. இதில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது என்று தெரியவில்லை. தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. அந்த வீடியோவை நான் பார்க்கவும் இல்லை. அதிர்ச்சி தருவதாகவும் அருவருப்பின் உச்சக்கட்டம் (Shocking & Disgusting) என்றும் கருத்து எழுதியிருக்கிறார்கள். இருக்கட்டும்.

உண்மையாக இருக்கும்பட்சத்தில், யாருடைய பிணத்தையோ யாரோ தின்பதற்கே இப்படிப் பதறும் நாம்,  சொந்த சகோதர (அ) சகோதரியின் பிணத்தைத் தினமும் தின்று கொண்டிருப்பதற்கு ஒப்பான புறம் பேசுதலை இலயித்து, அனுபவித்து, சந்தோஷத்துடன் செய்துகொண்டிருக்கிறோம் என்பதை அறிய நேர்ந்தால் ஆயுள் முழுதும் சாவதானமாக வாந்தியெடுத்துக் கொண்டே இருக்கலாம்!!!

புறம்பேசுவதைப் பற்றி இவ்வளவு கடுமையாகத் தாக்கீது அனுப்பியிருப்பது  வேறு யாருமல்ல. பிரபஞ்சத்தின் அதிபதி!!. இதுதான் தாக்கீது:

“உங்களுள் ஒருவர் மற்றவரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். எவராவது தம்முடைய இறந்த சகோதரரின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா?” (அல்குர்ஆன் 49:12).

‘சகோதரரின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா’ என்று கூடக் கேட்கவில்லை. அப்படிச் சொன்னால் அது கொஞ்சம் மென்மை(?)யாகிவிட வாய்ப்பிருக்கிறது. ‘இறந்த’ சகோதரரின் மாமிசம்!!.  ஆம்!.  பிணம், சவம் தின்பது!!

நமது பகுதியில் முஸ்லிம்கள், குறிப்பாகப் பெண்கள் ஒன்று கூடும் சபைகளில் சர்வ சாதாரணமாக, சர்க்கரைப் பொங்கல் சாப்பிடும் ஆனந்தத்துடன் புறம் பேசுகிறார்கள். கல்யாணம், கஞ்சிவைப்பு, காதுகுத்து, நிச்சயதார்த்தம், சுன்னத், சடங்கு, பால் காய்ச்சு வூடுகாணுதல் (பெண் வீட்டில் கொள்ளையடிப்பதற்கு வேறுபெயர்), அட  இதெல்லாம் என்ன,  மரண வீட்டில் மைய்யித்தை வைத்துக் கொண்டே புறம் பேசும் ‘வீராங்கனைகளை’ நான் பார்த்திருக்கிறேன். நடக்கும் கூத்துக்களைப் பார்த்தால் இந்த வைபவங்கள் எல்லாம் புறம் பேசுவதற்காகவே பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டவைதாமோ என்ற சந்தேகம் வராமலிருக்காது. பேசுவார்கள், பேசுவார்கள், பேசிக் கொண்டே இருப்பார்கள். பெரும்பாலானாவர்களுக்குக் கிளர்ச்சி, கொண்டாட்டம், குதூகலம், போதை, வக்கிரம்  போன்ற எல்லா ‘சிற்றின்பங்களும்’ புறம் பேசுவதில் கிடைத்து விடுகிறது. அரபியில் இந்த மகாபாவம் ‘கீபத்’ (Gheebah) என்று அறியப்படுகிறது.

புறம் பேசுவதென்பதாகப்பட்டது, ஒருவரைப்பற்றி அவர் செவியுற விரும்பாதவற்றை அவரின் புறமாகப்(அதாவது அவர் இல்லாத இடத்தில் வேறு நபரிடம்) பேசுவது. அது உண்மையாயிருந்தாலும் கூட.

ஏன் புறம் பேசுகிறார்கள் என்பதற்கு உளவியல் ரீதியாகப் பல காரணங்களை அடுக்கும் உளவியல் நிபுணர்கள், இது ஒரு வகையான மன வக்கிரத்தின் வெளிப்பாடு என்றே கருத்துத் தெரிவிக்கிறார்கள். தன்னைவிட மகிழ்ச்சியாக இருப்பவர்களைச் சகித்துக் கொள்ள இயாலாமைதான், புறமும் அவதூறும் பேசித் தனக்குத் தானே திருப்தி பட்டுக்கொள்ள வைக்கிறதாம்.

அநேக சமயங்களில் புறம் பேசுபவருக்குப் புறம் பேசப்படுபவரின் நன்மைகளான சமூக மரியாதை, மகிழ்ச்சியான வாழ்க்கை, நல்ல வாழ்க்கைத் துணை, உயர்குணம், இறை அருள், உயரம், வெளுத்த தோல், தோற்றம், செருப்பு,  இன்னும் என்ன வேண்டுமானலும் சேர்த்துக் கொள்ளுங்கள்.. இவற்றின்   மீதுள்ள  பொறாமை, விரோதம், குரோதம், ஆற்றாமை முதலியவற்றின் வெளிப்பாடே வாய் நாற்றமாக (உண்மைதான்!!. ஆங்கிலத்தில் இதற்கு Bad Mouthing என்ற ஒரு பெயரும் உண்டு) வெளியாகிறது. திருப்தியான இல்லற வாழ்வு கிடைக்காதவர்கள் பாலியல் வேட்கை தீராமல் புறம் பேசும் சீமான்களாக / சீமாட்டிகளாகச் சுற்றித் திரிவார்களாம்.

புறம் பேசுவது எவ்வளவு கீழ்த்தரமானது என்பதைக் கூறும் நாவையும், மர்மஸ்தானத்தையும் பேணிக்கொள்ளுங்கள் என்ற ஹதீஸை, இறையருட்கவிமணி பேரா. அப்துல் கஃபூர் அவர்கள்,

ஈரலகிடையே இருப்பதையும் இருகாலிடையே இருப்பதையும்
பேரழகுடனே காப்போர்க்குபேணும் சொர்க்கம் நபி மொழியாம்

என்று அழகு தமிழில் வடித்துள்ளார்கள்.

தன்னால் எதுவும் எப்பொழுதும் செய்ய இயலாத கோழைத் தனமும் புறம் பேசுதலாக வெளிப்படும். தன் இயலாமையை மறைக்க, உருப்படியாக ஏதாவது செய்தவனைப் பற்றிக் கொஞ்சம் புறம் பேசினால் போயிற்று. மனம் சமநிலை அடைந்துவிடும். அடுத்த இயலாமையைச் சந்திக்கும்வரைத் தாக்குப்பிடிக்கலாம்.

அருமையான உணவின் சுவையில், ரம்மியமான இயற்கைக் காட்சியில், அடித்து அடித்து எழுதிக் கொண்டிருக்கும்போது திடீரென்று பிழையில்லாமல் ஓடி நின்று சிரிக்கும் கணினிப் புரோக்ராமில், கையறு நிலையில் கிடைக்கும் பண உதவியில், துணையோடு இன்பமாக இருக்கும் அந்தரங்க நேரத்தில், கண்திறவா பிஞ்சுக் குழந்தையின் விரல் நுனி ஸ்பரிசத்தில் சாதாரண மனிதர்களுக்குக் கிடைக்குமே ஒரு மனம் கிளர்ந்த இன்பம், அதெல்லாம் புறம்பேசித் திரிபவர்களுக்கு தூசுக்குச் சமானம். உண்மையில் பரிதாபத்திற்குரியவர்கள்!!!

குடும்பத்திற்கு உள்ளேயே புறம் பேசித்திரியும் மனிதர்களின் கைங்கர்யத்தால் முறிந்த உறவுகள் கண்கூடு. நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தில்  புறம் பேசித்திரியும் ஒரு பிரகிருதி இரண்டு தடவை ஆஜரானால் அந்தக் குடும்பம் நரகம் ஆவதற்கு உத்தரவாதம்!!!. சொந்த சகோதர/ரி  ஆனாலும் சரியே. இதனால், ஆரம்பமாகாமலேயே முடிவுக்கு வந்து வாழ்க்கையைத் தொலைத்த அப்பாவிகளைக் கண்டிருக்கிறேன். தாய்க்கும் மகனுக்கும் உறவைப் பிரித்த நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள். விதியை அடகுவைத்து பாலைவனத்தில் எரியும் கணவனுக்கு மனைவியைப் பற்றிப் பக்கம் பக்கமாகப் புறம் எழுதி, உறவில் வேட்டுவைத்து வக்கிரம் தீர்க்கும் சகோதரிகளும் இருக்கிறார்கள்.

புறம் பேசும் சபைகளில் –  பெண்கள் சபையாய் இருந்தால் இன்னும் உசிதம். சிலசமயம் ஆண் ‘பொட்டைகளும்’ கூடஇருப்பது உண்டு –  பிறரின் மரியாதையைக் குறைக்க,  ‘குற்றங்கள்’ ஜோடிக்கப்பட்டு, மிகைப்படுத்தடும். நியாய/அநியாயங்களின் வரையறைகள் படு தமாஷாக இருக்கும். அதாவது, எல்லா வரையறைகளிலும் புறம் பேசப்படுபவனே தூக்குக் கயிற்றுக்குச் சொந்தக்காரன். குழுவின் பொது எதிரி. இறைவன் அருள் கிட்டாவிட்டல் இவர்கள் திருந்தவே முடியாது. புறம் பேசுவதில் இவர்களுக்குக் கிடைக்கும் இன்பம் இவர்களைத்  திருத்த விடாது. எந்தவித தர்ம நியாயங்களுக்கும் கட்டுப்படாதவர்கள்.

வாழ்க்கையில் கொள்கை என்பதே,

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்

மனிதர்கள். “ஒளவியம் பேசேல்” என்று ‘படித்து’ வளர்ந்தவர்களுக்குக்கூட புறம் என்பது புறமாகத் தெரிவதில்லை. நாம் விரும்பாவிட்டாலும் நமது வாழ்க்கையோடு விளையாடும் இவர்களை எப்படி எதிர்கொள்வது?

புறம் பேசுபவரைப் பற்றிய மர்பியின் 10 விதிகள் :-

  1. உங்களிடம் புறம் பேசுபவர், உங்களைப் பற்றிப் பிறரிடம் புறம் பேசுவார்.

  2. உங்களைப் பற்றிப் பேசப்படும் புறத்தின் தொகை, பேசுபவரின் வசதி வாய்ப்பைவிட  நீங்கள் எந்த அளவு அதிக வசதியாக, மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதன் நேர் விகிதத்தில் இருக்கும்.

  3. எந்தத் துறையிலும் நேர்மையாக எதையும் சாதிக்க இயலாதவர், இந்தத் துறையின் சாதனையாளர்.

  4. சகாக்களுடனான டீம் (புறம் பேசும் குழுவின்) ஸ்பிரிட் எப்போதுமே உச்சத்தில் இருக்கும்.

  5. யாரிடம் உங்களைப் பற்றிப் புறம் பேசினால் மிகச் சாரியாக, தாமதிக்காமல் உங்களை வந்தடையுமோ அந்தக் கூரியரை தேர்ந்தெடுப்பதில் கில்லாடிகள்.

  6. எல்லாப் புறங்களுக்கும், “இத அங்கே போய்ச் சொல்லிடாதே” என்று முன்னுரை இருக்கும்.

  7. உங்களிடம் சுமுக உறவு இல்லாதவர்க்ளிடம், அதி சுமுக உறவு கொண்டிருப்பார்கள்.

  8. முனாஃபிக்குகளுக்கான மூன்று அடையாளங்களுக்கும் சொந்தக்காரர்கள்.

  9. செய்நன்றி கொல்பவர்கள்.

  10. உங்களோடு நன்றாக இருக்கும் உறவுகளை (கணவன்,மனைவி – தாய், மகன்/ள் – சகோதரன்/ரி –  நண்பர்கள்)  வெட்டி விடுவதே நீண்டகால இலட்சியமாகக் கொண்டவர்கள்.

இந்த மாதிரி ஆசாமிகளை எதிர்கொள்ளச் சிறந்த வழி, அவர்களிடம் பரிதாபப்பட்டு  ஒரு பொருட்டாக நினைக்காமல், காலச் சக்கரச் சுழற்சியில் என்றாவது, “எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் திருந்தியவாராகப் பார்க்க எல்லாம் வல்ல இறைவா நீ அருள் புரிவாய்” என்ற துஆவோடு நாம் அவர்களிடமிருந்து ஒதுங்கிவிடுவதே.

அடுத்த முறை புறம் பேசும்போதும் அதைக் கேட்கும் போதும், கையில் முள் கரண்டியும், கத்தியும் தேக்கரண்டியும் வைத்துக் கொண்டு ஆடையில்லாத மய்யித்தின் முன், கூரிய பற்களுடன்,  இரண்டு கொம்புகளோடு உக்கார்ந்து ……

நவூது பில்லாஹ்!!!.  இறைவன் நம்மையும் நம் பரம்பரையும் இந்த இழிவிலிருந்து காப்பாற்றுவனாக!.

– அபூ பிலால்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.