அம்மாகிட்ட நெறய கேக்கணும் …

Share this:

தேசத்தின் தலைப்புச் செய்திகளில் கஷ்மீர் மீண்டும் இடம்பெறுகின்றது. ஆனால் இந்த முறை கல்வீச்சு, தனிநாடு போராட்டம், இறுதி ஊர்வலக் கலவரம் என்று வழக்கமாக வருவதைப் போல் இல்லாமல் வித்தியாசமான செய்தியுடன்.

கஷ்மீர் என்றாலே இந்திய மக்களுக்கு நினைவுக்கு வருவது இராணுவம் மீதும், காவல்துறை மீதும் கற்களை வீசும் சிறுவர்கள், வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த கையோடு இந்தியாவிற்கு எதிராகப் போராடும் தொப்பி, ஜிப்பா, தாடி வைத்த மக்கள். திரும்பத் திரும்ப இவற்றைத் தான் தேசிய ஊடகங்கள் என்று சொல்லப்படும் ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகள் நமக்குக் ‘கஷ்மீர்’ என்ற பெயரில் காட்டி வருகின்றன. நாமும் கஷ்மீர் என்றால் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதிகள் நிறைந்த பகுதி என்றே எண்ணுவதற்குப் பழகிவிட்டோம்.

ஆனால் உண்மையில் பனிச்சிகரங்களாலும், மலைகளாலும் சூழப்பட்ட இடம். பூக்களின் தேசம் என்று அழகுற அழைக்கப்பட்ட பள்ளத்தாக்கு. பார்ப்பதற்கு ரம்மியமான, பூமியின் சொர்க்கம் என்று வர்ணிக்கப்பட்ட கஷ்மீருக்கு இன்று ஏன் இந்த இழிநிலை? அமைதியாக வாழ வேண்டும் என்ற கனவுடன் இந்தியாவுடன் இணைந்த கஷ்மீரை, சொந்த தேசத்து இராணுவமே கற்பழிக்கின்றது. ‘இராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம்’ என்ற ஒற்றைச் சொல்லாடலில் இராணுவத் தீவிரவாதம் இராப்பகலாகத் தலைவிரித்தாடி வருகின்றது. சாலையில் சென்று வர, சாவினை வென்று வர வேண்டியுள்ளது. காலையில் கணவனைப் புன்னகையுடன் வழியனுப்பிய மனைவி, மாலையில் அவனது பிணத்தை வரவேற்கும் அவலம். தெருவில் விளையாடச் சென்ற குழந்தை, உயிருடன் திரும்ப வரும் என்று நிச்சயமில்லாத சூழல். பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் என்று யாரையும் விட்டு வைக்கவில்லை சீருடை அணிந்த அந்தக் கயவர் கூட்டம். அனைவரையும் தீவிரவாதி என்று பட்டமிட்டு துப்பாக்கித் தோட்டாக்களைப் பரிசாக வழங்கி வருகின்றது இராணுவம். மலர்களின் புன்னகையை மட்டுமே பார்த்து ரசித்த அம்மக்கள் துப்பாக்கித் தோட்டாக்களையும், மரண ஓலங்களையும் பார்க்க நேர்ந்தது. உரிமைக்காகப் போராடும் மக்களை, பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் கொடூரம். மனிதக் கேடயமாக கஷ்மீர் குடிமக்களைப் பயன்படுத்தும் மிருகத்தனம் அரங்கேறுகின்ற அவலம்.

ஆம்! அமைதி வேண்டி இந்தியாவுடன் இணைந்த அம்மக்களை அந்த இந்தியாவே புரிந்து கொள்ளாத நிலைதான் இன்றும் தொடர்கின்றது.

கஷ்மீரின் கத்துவார் மாவட்டத்தில் மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டு வந்த ஆசிஃபா என்ற 8 வயது சிறுமி, சில அரக்கர்களால் கடத்தப்பட்டு, 8 நாட்கள் ஒரு கோவிலுக்குள் அடைத்து வைக்கப்பட்டு, தொடர்ச்சியாக வன்புணர்வு செய்யப்பட்டு, இறுதியாகத் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தான் கடந்த சில நாட்களாக ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு (17 ஜனவரி 2018இல்) அரங்கேற்றபட்ட இந்த அரக்கத்தனம் வெளி உலகிற்கு வரவே இத்தனை நாட்கள் ஆகியுள்ளது.

காரணம், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் ஆளும் பாஜகவைச் சார்ந்தவர்களாக இருந்ததாலும் ஒரு காவல்துறை அதிகாரியும் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டிருந்ததாலும் உண்மை மூடி மறைக்கப்பட பெரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமீபத்தில் இந்தக் குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்யக் கூடாது என்று பாஜகவினரும், இந்துத்துவ இயக்கத்தினரும் ஊர்வலம் நடத்தியுள்ளனர். மேலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவிடாமல் பா.ஜ.க. வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி நீதிமன்ற நடவடிக்கைகளைப் பல மணி நேரம் தாமதப்படுத்தியுள்ளனர். இப்படி அரசியல்வாதிகள், காவல்துறை, நீதித்துறை என்று அனைவரும் இணைந்து மனிதத் தன்மையற்ற மாபாதகச் செயலைச் செய்துள்ளது தேசத்தையே உலுக்கியுள்ளது.

கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட ஆசிஃபா தனக்கு நடந்த அசிங்கங்களைச் சொல்லியிருந்தால் இப்படித்தான் சொல்லியிருப்பார்:

என் பேரு ஆசிஃபா. புஜ்ஜி என்னோட குதுர… அன்னைக்கு ஒரு நாள் அம்மா என்னெக் கூப்ட்டு புஜ்ஜிய வீட்டுக்குக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க… நானும் மேதோவுக்குப் போயி புஜ்ஜிய தேடிட்டு இருந்தேனா… அப்போ ஒரு தாத்தா, ‘உன்னோட குதிரை அந்தப் பக்கமா போனுச்சு பாப்பா, வா நான் உன்ன கூட்டிட்டுப் போரேன்னு’ சொன்னாரு. நானும் கூடவே போனேன்… திடீர்ன்னு அந்தத் தாத்தா என்னெ ஒரு இடத்துக்குள்ள கூட்டிட்டுப் போயி உள்ள வச்சிப் பூட்டிட்டாரு.

இன்னொரு அன்கிளும் அங்க வந்தாங்க… கையில எதோ மிட்டாய் மாதிரி வச்சுருந்தாங்க… அத என்னெ சாப்பிட சொன்னாங்க… அந்தப் புது அங்கிள் என்னோட கழுத்தப் புடிச்சு நெறிச்சு அந்த மிட்டாய சாப்ட வச்சாரு… கொஞ்ச நேரம் கழிச்சு என்னோட தொடைக்கு பக்கத்துல வலிச்சுச்சு, ஒன்னுக்கு போலாம்ன்னு தோணுச்சா, ரொம்ப வலிச்சு… சிகப்பு கலர்ல வந்துச்சு… வலி நிக்கவே இல்ல, அந்த தாத்தாவும், அன்கிளும் என்ன எதேதோ பண்ணாங்க, என் மேல ஏறி படுத்து வலிச்ச இடத்து மேல அமுக்குனாங்க, இன்னும் வலி அதிகமாச்சு, நான் கத்துனப்போ என் வாயில எதையோ வச்சு அடச்சு கத்த விடாம பண்ணிட்டாங்க… அப்பறம் என்ன நடந்துச்சுன்னு தெரியல…

இன்னொரு தடவ ஒரு புது அன்கிள் வந்தாரு, அவர் போலிஸ் போடுற ட்ரஸ் போட்ருந்தாரு… அவங்க எதோ பேசிக்கிட்டாங்க, அப்பறம் அந்த போலிஸ் ட்ரஸ் போட்ட அன்கிளும் அவங்க பண்ணுன மாதிரியே என்ன எதோ பண்ணாங்க… ஒன்னுக்கு போனப்பலாம் சிகப்பு கலர்லயே வந்துச்சு, ரொம்ப வலிச்சுச்சு, அம்மாகிட்ட போனும்ன்னு அழுதேன், அந்த தாத்தா, அன்கிள்லாம் சேந்து என்னோட தலைல கல்ல தூக்கி போட்டு அடிச்சாங்களா தலைல இருந்தும் சிகப்பு கலர்ல வந்துச்சு, மயங்கிட்டேன்… அப்பறம் முழிச்சுப் பாத்தா காட்டுக்குள்ள கிடந்தேன்… என்னோட ட்ரஸ் எல்லாமே சிகப்பு கலர்ல மாறிடுச்சி…

அம்மாவப் பாக்கணும், புஜ்ஜி வீட்டுக்கு வந்துடுச்சா, என்னெ ஏன் வீட்டுக்குக் கூட்டிட்டு போக யாரும் வரல, அந்தத் தாத்தா, போலிஸ் ட்ரஸ் போட்ட அன்கிள்லாம் யாரு, என்ன பண்ணுனாங்க என்கிட்ட, எதுக்கு என்ன அடிச்சாங்க, ஏன் ஒன்னுக்கு சிகப்பா வந்துச்சு, ஏன் வலிச்சுச்சி, இன்னும் அம்மாகிட்ட நிறைய கேக்கணும்…

oOo

{youtube}F8B3HUa6dUU{/youtube}

-அபுல் ஹசன்
9597739200


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.