தோழியர் – 5 – அஸ்மா பின்த் யஸீத் أسماء بنت يزيد

Share this:

அஸ்மா பின்த் யஸீத்
أسماء بنت يزيد

யர்முக் யுத்தம் முஸ்லிம்கள் ரோமர்களுடன் நிகழ்த்திய பிரம்மாண்டமான ஒரு போர். இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ரோமப் படையினர்; அவர்களை எதிர்த்து வெறும் நாற்பதாயிரத்துச் சொச்சம் முஸ்லிம்கள். அதில் முஸ்லிம் படைகள் அடைந்த வெற்றி ரோமர்களின் சாம்ராஜ்யத்தை உலுக்கி நகர்த்தி வரலாற்றில் பெரும் திருப்புமுனையை நிகழ்த்தியது. தோழர்கள் தொடரைப் படிப்பவர்களுக்கு இப்போரைப் பற்றிய முன்னறிமுகம் கிடைத்திருக்கும்.

போருக்குச் சென்றார்கள்; இரு படையினரும் போரிட்டார்கள்; இறுதியில் முஸ்லிம்களுக்கு வெற்றி என்று எளிதில் விவரித்துவிட முடியாத அளவிற்கு இதில் முஸ்லிம்கள் சந்தித்த சவால்கள் எக்கச்சக்கம். இருதரப்பிலும் ஏகப்பட்ட உயிரிழப்புகள், முக்கியமான பல தோழர்களின் மரணம் என்று நிறைய சங்கதிகள். படை அளவில் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் மிகக் குறைவு. எண்ணிக்கையிலும், தளவாட வசதிகளிலும் வல்லமை படைத்திருந்த வல்லரசுப் படைகளுடன் மோதுவதற்கு நிறைய வீரர்களைத் திரட்டி அனுப்ப வேண்டிய சவால் கலீஃபா அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுவுக்கு ஏற்பட்டிருந்தது. அனைத்துப் பகுதிகளுக்கும் தகவல் அனுப்ப, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவிற்குப் பிறகு புதிதாய் இஸ்லாத்தில் இணைந்திருந்த பல கோத்திரங்களின் வீரர்களும் முன்வந்து படை அணியில் சேர்ந்து கொண்டனர். அவர்களையும் களத்திற்கு அனுப்பி வைத்தார் கலீஃபா.

அக்காலத்தில் முஸ்லிம் படை அணியில் பெண்களும் இடம்பெற்றுப் போர் களத்திற்குச் செல்வது வழக்கம். களத்தில் போர் நிகழ, பின்னால் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்கியிருப்பார்கள் பெண்கள். காயமுற்ற வீரர்களுக்குச்  சிகிச்சை அளிக்க, பணிவிடை செய்ய என்று இதரப் பல பணிகளில் அவர்களின் பங்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது.

யர்மூக் யுத்தத்தில் முஸ்லிம் படையின் வலப்புற அணியின் தளபதி அம்ரு இப்னுல் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு. அவரது தலைமையில் பத்தாயிரம் வீரர்கள். இந்த அணியை ரோமப் படைகளின் இடப்புற அணி பெரும் உக்கிரத்துடன் தாக்கத் துவங்கியது. அதைத் தடுத்துக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தனர் அம்ரு இப்னுல் ஆஸும் அவர் படையினரும். எண்ணிக்கையில் மிகைத்திருந்த ரோமர்கள் முன்னேறிக் கொண்டே வர, முஸ்லிம்கள் பின்னால் நகர வேண்டிய நிலை ஏற்பட்டுப்போனது. முஸ்லிம்களின் இதர படை அணிகளும் கடுமையாய்ப் போரில் ஈடுபட்டிருக்க, இவர்களிடம் வந்து இணைந்து உதவ இயலாத இக்கட்டான தருணம் அது. ரோமர்கள் மூர்க்கமாய்த் தள்ளிக்கொண்டேவர, களத்தின் வெகுபின்னே அமைக்கப்பட்டிருந்த தம் பெண்களின் கூடாரம்வரை வந்துவிட்டனர் முஸ்லிம்கள். அந்நிலையில் புதிய முஸ்லிம் வீரர்கள் சிலர் அழுத்தம் தாங்காமல் தப்பியோட ஆரம்பிக்க, விந்தை ஒன்று நிகழ்ந்தது.

கூடாரங்களில் இருந்து இந்தக் களேபரத்தைப் பார்த்துவிட்ட முஸ்லிம் பெண்கள் வெளியில் ஓடிவந்தார்கள். தப்பியோடுவரைப் பிடித்து முகத்திலேயே குத்து. சரமாரியான குத்து. அம்ரு இப்னுல் ஆஸின் மகள் இரைந்து கத்தினார், “தன் மனைவியை விட்டு ஓடுபவனின் முகத்தை அல்லாஹ் அவலட்சணமாக்குவானாக. மானம், மரியாதையைப் பறக்க விட்டு ஓடுபவனை, அல்லாஹ் அவலட்சணமாக்குவானாக.”

மற்றொரு பெண்மணி, “எங்களை விட்டு ஓடினால் அப்படியே ஓடிப்போங்கள். நீங்களெல்லாம் எங்கள் கணவர்களே அல்லர்.”

‘கலகமாம்; பிரச்சினையாம். நமக்கெதுக்கு வம்பு. உள்ளே வந்துவிடுங்கள்’ என்று கணவனைப் பொத்தி உள்ளே இழுத்துக்கொள்ளும் கோழைத்தனம் அறியாத பெண் வேங்கைகள் அவர்கள். ஓடுபவனது புத்தியை எட்டி உதைத்தன அந்த வார்த்தைகள். பொளேரென்று அறை வாங்கியதுபோல் சடுதியில் நிதானம் தோன்றியது. புது உறுதி புத்தியிலும் புஜத்திலும் புடைக்க, அந்தப் புதியவர்களின் தாக்குதல் ரோமர்கள்மீது முன்னரைவிடக் காட்டமாய் இறங்க ஆரம்பித்தது.

இதற்குள் ரோம வீரர்களின் அணி பெண்களின் பகுதிவரை வெகுவாய் அண்மி வந்துவிட்டிருந்தது. அப்பொழுது அது நிகழ்ந்தது.  கூடாரம் அமைக்க நாட்டப்பட்டிருந்த பெரும் கோலை எடுத்துக்கொண்டு ரோம வீரர்களை நோக்கி திடுதிடுவென்று ஓடிவந்தார் ஒரு பெண்.

அவர், அஸ்மா பின்த் யஸீத், ரலியல்லாஹு அன்ஹா.

oOo

மதீனாவில் அக்காலத்தில் வாழ்ந்துவந்த இரு பெரும் கோத்திரங்கள் அவ்ஸ், கஸ்ரஜ். அப்துல் அஷ்ஷால் என்பது அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு கிளை. இந்த அப்துல் அஷ்ஷால் குலத்தைச் சேர்ந்தவரே அஸ்மா பின்த் யஸீத் இப்னுல் ஸகன். முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிற்றன்னை மகள் இவர்.

இக்குலத்தின் பெருந்தலைவராய்த் திகழ்ந்தவர் ஸஅத் இப்னு முஆத் ரலியல்லாஹு அன்ஹு. ஸஅதின் தாயார் பெயர் கப்ஷா பின்த் ரஃபீஉ.  இந்த இரண்டு பெண்மணிகளும் முக்கியமான இரு தோழர்களுக்கு நெருங்கிய உறவு என்பதை அறிந்து கொள்ளவே இந்த உறவுமுறை விளக்கம். நபியவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து வந்ததும் அவர்களிடம் சத்தியப் பிரமாணம் அளி்த்த முதல் இரு அன்ஸாரிப் பெண்கள் இவர்கள். ரலியல்லாஹு அன்ஹுமா.

அஸ்மாவிடம் சிறப்பொன்று அமைந்திருந்தது. தெளிவாகவும் அருமையாகவும் பேசும் நாவன்மை. அதற்கான சான்றிதழ் நபியவர்களிடமிருந்தே கிடைத்தது அவருக்கு. பெண்கள் கூடியமர்ந்தால் பலவற்றையும் பேசி மகிழ்வதும் அங்கலாய்ப்பதும் வழக்கமில்லையா? அதைப்போல் அக்காலத்தில் தோழியரும் கூடிப்பேசுவது வழக்கம்தான். ஆனால் முக்கியமான ஒரு வித்தியாசம், அது வெறும் வெட்டிப்பேச்சாக இல்லாமல் இஸ்லாம், ஈமான் சார்ந்த கவலைகள் அவர்களது பேச்சை ஆக்கிரமித்திருந்தன  என்பதே!.

ஒருநாள் நபியவர்கள் தம் தோழர்களுடன் அமர்ந்திருந்தபோது அங்கு வந்தார் அஸ்மா பின்த் யஸீத்.

“அல்லாஹ்வின் தூதரே! என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். முஸ்லிம் பெண்கள், அவர்தம் தூதுவராக என்னைத் தங்களிடம் அனுப்பியுள்ளார்கள். நான் அவர்கள் கூறியதைத் தங்களிடம் தெரிவிக்கிறேன். இங்கு நான் சொல்லப்போகும் அவர்களது கருத்தே என் கருத்தும்கூட. ஆண்கள் பெண்கள் இரு பாலாருக்கும் பொதுவாக அல்லாஹ் தங்களை அனுப்பி வைத்துள்ளான். நாங்கள் உங்களிடம் நம்பிக்கைக் கொண்டோம்; பின்பற்றுகிறோம். பெண்களாகிய நாங்கள் வீட்டின் தூண்களைப் போல் தனித்து வைக்கப்பட்டுள்ளோம். நாங்கள் கணவர்களுக்கு தாம்பத்ய சுகம் அளிக்கிறோம்; அவர்களின் பிள்ளைகளைச் சுமக்கிறோம். அவர்கள் ஜிஹாதுக்குச் சென்றுவிடும்போது அவர்களது வீடு, வாசல், செல்வத்தைப் பாதுகாத்து அவர்களின் பிள்ளைகளையும் வளர்க்கிறோம்.

ஆண்களுக்கோ கூட்டுத் தொழுகையும் ஜும்ஆத் தொழுகையும் பிரேத நல்லடக்கத்தில் ஈடுபவதும் ஜிஹாது புரிவதும் என்று பல நல் வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன.  அல்லாஹ்வின் தூதரே! அவர்களது நற்கூலியில் எங்களுக்கும் பங்கு இருக்க வேண்டுமில்லையா?”

தெளிவான, அழகான, நேர்மையான, சுருக்கமான உரை அது. வியந்துபோன நபியவர்கள் தம் தோழர்களிடம் திரும்பி, “தமது மார்க்கம் பற்றி இத்தனை அழகாக வேறு எந்தப் பெண்ணாவது கேள்வி எழுப்பி, பேசி கேட்டிருக்கிறீர்களா?”

“அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக இல்லை. ஒரு பெண் இந்தளவு தெளிவாய்ப் பேசக்கூடும் என்று நாங்கள் நினைத்ததில்லை.”

“அஸ்மா! உன் தோழியரிடம் சென்று சொல், ‘தம் கணவனுக்குச் சிறந்த இல்லத்துணையாகவும் அவனது மகிழ்வே தனது நாட்டமாகவும் அவனது தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியவளாகவும் ஒரு பெண் அமையும்போது ஆணின் நற்கூலிகள் என்று நீ விவரித்ததற்கு இணையான அனைத்தும் அவளுக்கும் கிடைத்துவிடும்’ என்று.”

இறைத் தூதர் சொல்லியதைக் கேட்டு மகிழ்ந்து இறைவனைப் புகழ்ந்தவாறு அங்கிருந்து விலகினார் அஸ்மா.

கணவனை மகிழ்வித்துக் குடும்பம் பேணுவதில் கிடைக்கும் நன்மையும் சிறப்பும் ஆண் அப்பட்டமாய்ப் புரியும் நற்காரியங்களுக்கு இணையானது எனும் ஆன்ம பலன்கள் இருக்கட்டும். அவ்வளவு உயரிய நற்பலன்கள் இகலோக குடும்ப வாழ்விலா? எப்படி இது? சிறிது யோசித்தால் தெளிவு தென்படும். ஓர் உயரிய சமூகம் உருவாவதற்கு இத்தகு குடும்பங்களே சிறப்பான அடித்தளம் அமைக்கின்றன. வீடு உயர நாடு உயரும் எனில் வீடு உயர, குடும்பத் தலைவி வழங்கும் அர்ப்பணிப்பு இருக்கிறதே, அது அச்சாணி!. உலகமும் உலகக் கல்வியும் கற்றுத் தருவது என்ன? அதற்கு நேர் மாறானவற்றை! அது இழுக்கு என்பதை! மாறாக அனாச்சாரமும் விபச்சாரமும் நம் சமகாலத்தில் சமூக அங்கீகாரம் பெற்ற நாகரிகத்தின் அடையாளங்களாகிவிட்டன. விளைவு? இன்று கெட்டழிந்து சின்னாபின்னமாகியிருக்கும் குடும்பங்களும் சமூகமுமே அதற்குச் சான்று.

ஒருமுறை அஸ்மா தம் தோழியருடன் அமர்ந்திருக்கும்போது அவரைச் சந்தித்தார்கள் நபியவர்கள். அவர்களுக்கு ஸலாம் பகர்ந்துவிட்டு நல்லுரை ஒன்று கூறினார்கள். “உங்களிடம் அன்பு காட்டுபவர்கள்மீது நன்றி தெரிவிப்பதில் கவனமுடன் இருந்துகொள்ளுங்கள்.”

அதன் உள்ளர்த்தத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ள நபியவர்களிடம் மேற்கொண்டு வினா தொடுக்கும் துணிவு அஸ்மாவுக்கு மட்டுமே இருந்தது. “அல்லாஹ்வின் தூதரே! அன்பு செலுத்துபவர்களிடம் நன்றி மறப்பது என்பது என்ன?”

நபியவர்கள் விளக்கமளித்தார்கள். “பெண்களாகிய உங்களில் ஒருவர் திருமணம் தாமதமாகி நீண்டநாள் பெற்றோரின் பாதுகாப்பில் இருந்திருப்பீர்கள். பின்னர் அல்லாஹ்வின் அருளால் அவளுக்குக் கணவன் அமைந்து, நல்ல வாழ்க்கையும் அமைந்து, பிள்ளைகளும் பிறந்திருக்கும். ஒருநாள் ஏதேனும் ஒரு சிறு விஷயத்தில் கணவனிடம் கோபமடைந்து நன்றி மறந்துபோய் அவள் கணவனிடம் உரைப்பாள், ‘உன்னிடமிருந்து எனக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை’ என்று.”

எவ்வளவு உண்மையான அறிவிப்பு இது?

“உன்னைக் கட்டிக்கொண்டு நான் என்ன பலனைக் கண்டேன்?” “அப்படி என்ன எனக்குப் பெரிதாய்ச் செய்துவிட்டாய்?” இத்தகு உரையாடல்கள் யதார்த்தமான நிகழ்வாகப் பல குடும்பங்களில் நடைபெறுவதை நாம் காணவில்லை? இந்தப் பாடங்களெல்லாம் சிறப்பாய்ப் படித்து புரிந்து கொண்டார் அஸ்மா. ஏறத்தாழ நபியவர்களின் 81 ஹதீஸ்களை அவர் அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

“நபியவர்களின் ஒட்டகமான அத்பாவின் சேணைக் கயிற்றை நான் பிடித்துக் கொண்டிருந்தபொழுது அவர்களுக்கு சூரா அல்-மாயிதா முழுவதுமாய் அருளப்பட்டது. அதன் கனம் எந்தளவு இருந்ததென்றால் ஒட்டகத்தின் கால்கள் அனேகமாய் ஒடிந்துவிடும் அளவிற்குப் பளு ஏற்பட்டுப்போனது” என்று அறிவித்துள்ளார் அஸ்மா. நபியவர்களுக்கு ஜீப்ரீல் அலைஹிஸ் ஸலாம் வஹீ அறிவிக்கும்போது அது எத்தனை கடினமாய் இருந்தது என்பதற்கு இந்த ஹதீதும் ஒரு சான்றாய்க் குறித்து வைக்கப்பட்டுள்ளது.

oOo

வீரம் அஸ்மாவின் குடும்பம் முழுவதும் வியாபித்துப் பரவியிருந்திருக்கிறது. உஹதுப் போரில் ஏற்பட்ட கடினச் சூழல் பற்றித் தோழர்கள் வரலாற்றில் ஆங்காங்கே படித்து இருப்பீர்கள். அந்தப் போரில் படைகள் சிதறி உக்கிரமான நிலை ஏற்பட்டபோது உறுதியுடன் நின்று போராடியவர்களில் அஸ்மாவின் சகோதரர் இமாராஹ் இப்னு யஸீதும் ஒருவர். அந்தப் போரில் அவர் கொல்லப்பட்டு உயிர் தியாகி ஆனார். அவரின் தந்தையும் தந்தையின் சகோதரரும்கூட அதே போரில் கொல்லப்பட்டனர்.

இத்தகு இழப்புகளெல்லாம் சோகம், விரக்தி போன்றவற்றுக்குப் பதிலாக அஸ்மாவினுள் வீரமும் திடமும் வளர்க்கவே உதவின. அல்லாஹ்வும் நபியும் அவர்களுக்குத் தங்களது உயிரைவிட மேல். நபியவர்களுடன் பலமுறை போரில் கலந்து கொண்டிருந்திருக்கிறார் அவர். மக்காவிற்கு நபியவர்கள் உம்ரா சென்றபோது அந்தக் குழுவில் அஸ்மாவும் ஒருவர். ஆனால் நபியவர்கள் குரைஷிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதும் பல விவாதங்களுக்குப் பிறகு ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்டதும் தனி வரலாறு.

ஹுதைபியா உடன்படிக்கை நிகழ்விற்கு முன்னர், உதுமான் ரலியல்லாஹு அன்ஹு கொல்லப்பட்டதாய்ச் செய்தி பரவிக் குழப்பம் தோன்றிய நேரத்தில், ‘உயிரைக் கொடுத்தும் போராடுவோம்’ என்று மரத்தினடியில் சத்தியப் பிரமாணம் செய்து கொடுத்தனர் தோழர்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பைஅத்துர் ரிள்வான்’ எனும் அந்தப் பிரமாணம் அளித்தவர்களில் ஒருவர் அஸ்மா.

இப்படி அவரது இயல்பிலும் உதிரத்திலும் வீரம் கலந்திருந்ததால் யர்மூக் போரின்போது களத்திற்குச் சென்றிருந்தார் அஸ்மா. இக்கட்டான போர்ச் சூழ்நிலையில், ரோம வீரர்களின் அணி பெண்களின் பகுதிவரை வந்துவிட்டிருக்க, கூடாரம் அமைக்க நாட்டப்பட்டிருந்த பெரும் கோலை எடுத்துக்கொண்டு ரோம வீரர்களை நோக்கித் திடுதிடுவென்று ஓடினார் அஸ்மா. மிரட்டி விரட்டும் காரியம் போலன்றி, அந்தக் கம்பைக் கையில் ஏந்தியவர் தனி ஆளாய் ஒன்பது ரோமப் போர் வீரர்களைக் கொன்று விட்டுத்தான் ஓய்ந்தார். சிலிர்க்கவைக்கும் வீரம் அவருடையது.

முன்னேறி வந்திருந்த ரோமப் படைகளைக் கன்னாபின்னாவென்று தாக்கிக் கொன்று அவர்களைப் பின் தள்ளியவாறு விறுவிறுவென்று முன்னேற ஆரம்பித்தனர் முஸ்லிம்கள். வலப்புற அணி தம் பகுதிகளை முழுக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவந்தது.

இந்தப் போரின் வெற்றிக்குப் பிறகு, முஸ்லிம்கள் வசம் ஸிரியா வந்ததும் அங்கேயே தங்கிவிட்டார் அஸ்மா. பெண்களுக்கு இஸ்லாமியப் பாடங்களைக் கற்றுத்தருவது அவரது தலையாய பணியாகிப்போனது. நீண்ட ஆயுளுடன் ஏறத்தாழ 90 வயதுவரை வாழ்ந்திருந்தார்.

ஹிஜ்ரீ 69ஆம் ஆண்டு மரணம் அவரைத் தழுவியது. டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள ‘பாபுஸ்ஸகீர்’ என்னும் அடக்கத்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார் அஸ்மா பின்த் யஸீத்.

ரலியல்லாஹு அன்ஹா!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

<தோழியர் – 2 | தோழியர் – 3>


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.