தோழர்கள் – 8 – அபூதர்தா – أَبُو الدَّرْدَاءِ، عُوَيْمِرُ بنُ زَيْدِ بنِ قَيْسٍ الأَنْصَارِيُّ

கடை மூடப்பட்டது
Share this:

 

உமர் இப்னுல் கத்தாபின் மறைவிற்குப் பிறகு உதுமான் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரின் வற்புறுத்தலுக்கு இணங்கி, ‘காழீ’ எனப்படும் இஸ்லாமிய நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார் அபூதர்தா. முஸ்லிம்களிடம் பெருகிவந்த செல்வம் அவர்களை ஆடம்பர வாழ்க்கைக்கு மேலும் மேலும் தூண்டி வருவது கண்கூடாய்த் தெரிந்தது. நபிகளாரின் காலத்திலும் அப்பொழுது அவர்களுடன் வாழ்ந்து மறைந்த தோழர்களும் எப்படியான எளிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்று ஓயாமல் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார் அபூதர்தா. எந்தக் காலத்தில் நல்ல அறிவுரை இனித்திருக்கிறது?  “என்ன இந்த முதியவர்? இறைவன் அள்ளிக் கொட்டும் வசதிகளையெல்லாம் தூக்கிக் குப்பையில் போடச் சொல்லுகிறாரா?” என்பதுபோல சலிப்படைந்தனர் மக்கள். அவர்களது சுகபோக உல்லாச வாழ்க்கைக்கு இவரது அறிவுரை இடைஞ்சலாகத் தோன்றியது.

பார்த்தார் அபூ தர்தா. ஒருநாள் மக்களைப் பள்ளிவாசலுக்கு வந்து குழுமச் சொன்னார். அவர்கள் வந்து சேர்ந்ததும் எழுந்து நின்றார், உரத்து உரையாற்றத் துவங்கினார்.

“டமாஸ்கஸ் நகர மக்களே, நீங்களெல்லாம் எங்களுக்கு இஸ்லாமியச் சகோதரர்கள், அண்டை தேசத்துக்காரர்கள், நம் நண்பர்கள், நம் எதிரிகளுக்கு நீங்களும் எதிரி. எனக்கு உங்களிடமிருந்து யாதொன்றும் வேண்டாம். நீங்கள் எனது செலவினங்களுக்காக எதுவும் செலவு செய்ய வேண்டியதும் இல்லை. நான் அளிக்கவிருக்கும் அறிவுரைகள் இலவசம். உங்கள் மீது நான் கொண்டுள்ள அக்கறையையும் ஆலோசனையையும் நீங்கள் மறுத்து ஒதுக்க மாட்டீர்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.

எனக்குச் சொல்லுங்கள். உங்கள் மத்தியில் மார்க்க அறிஞர்கள் வயது முதிர்ச்சியுற்று இறந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஏன் உங்களின் இளைஞர்கள் யாரும் அவர்களிடமிருந்து கல்வி கற்று அவர்கள் இடத்தை நிரப்பத் தயாராகவில்லை?

அல்லாஹ் உங்களுக்குத் தேவையானதை வாரி இறைத்திருக்கிறான். நீங்களோ மேலும் மேலும் செல்வம் சேர்ப்பதில்தான் உங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறீர்கள். ஏன் அவனுக்கு செலுத்த வேண்டிய கடமைகளை ஒதுக்கி வைத்து விட்டீர்கள்?

ஏன் உபயோகப்படுத்த வாய்ப்பில்லாத பொருட்களாய்ச் சேகரித்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஏன் வசிக்கும் தேவைக்கு மீறிய அளவு, வீடுகளை பிரம்மாண்டமாய்க் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?

ஆனால், மறுமையில் சொர்க்கத்தை மட்டும் எதிர்பார்க்கிறீர்கள், அதற்கென ஆயத்தம் ஏதும் செய்து கொள்ளாமலேயே!

உங்களுக்கெல்லாம் முன் சமூகங்கள் உங்களது சமூகத்தைப் போன்றே வாழ்ந்திருந்தன. அவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் தாங்கள் விரும்பியது கிடைத்து விடும் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அவர்கள் சேமித்து வைத்ததெல்லாம் யாதொரு மதிப்பும் இல்லாது போய்விட்டது. அவர்களது நம்பிக்கையெல்லாம் எவ்விதப் பயனுமின்றி முடிந்தது. மேலும் அவர்களது இல்லங்களோ மண்ணறையைப்போல உயிரற்றுப் போனது.

உங்களுக்கு முன் வாழ்ந்திருந்தது பிரம்மாண்டமான ஆத் எனும் சமூகம். அவர்கள் நிலங்களெங்கும் தங்களது செல்வத்தையும் சந்ததியையும் நிரப்பி வைத்திருந்தனர். இப்பொழுது, அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து இரண்டு திர்ஹம் பெருமானமுள்ள ஏதும் மிச்சமுள்ளதா? கொண்டு வந்து என்னிடம் தாருங்கள் பார்ப்போம்”

உண்மையிலேயே உணர்ச்சிகரமான உரை அது. அனைவரின் உள்ளங்களையும் தொட்டுவிட்டது. அவர் பேசி முடிக்கும் போது பள்ளிவாசலினுள் இருந்த மக்கள் கண்ணீர் விட்டு அழுத ஒலி எவ்வளவு பலமாய் இருந்ததென்றால் அவர்களின் விம்மல் பள்ளிக்கு வெளியில் கேட்டது.

தொடர்ந்தது அவரது வாழ்க்கை.

சிரியா நாட்டிற்கு மேற்கே அமைந்துள்ளது சைப்ரஸ் (Cyprus) தீவு. முஸ்லிம்களுடனான போரில் தோற்றிருந்த ரோமப் படையினர் அத்தீவிற்குத் தப்பிச் சென்று அதனைத் தங்களது கப்பற்படையின் தலைமையகமாக ஆக்கிக் கொண்டு போர்க் கருவிகளையெல்லாம் சேமித்து வைத்திருந்தனர். உமர் இப்னுல் கத்தாப் இறந்து போவதற்கு முன்னரே அதனைக் கைப்பற்ற முஆவியா திட்டமிட்டிருந்தார். அப்பொழுது அது நடைபெறவில்லை. பின்னர் உதுமான் கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் சைப்ரஸ் மீது படையெடுப்பதற்கு அனுமதியளித்தார். கடல் தாண்டி நடைபெறவிருந்த போர் அது. பாலையிலும் நிலத்திலும் போர் புரிந்திருந்த முஸ்லிம் படைகளுக்கு இது நிச்சயமாய் மிகப் பெரிய சவாலான படையெடுப்பு. அதனால் யாரையும் வற்புறுத்தி படையெடுப்பில் சேர்க்கக் கூடாது என்று நிபந்தனை விதித்தார் உதுமான். ஆனால் முக்கியமானவர்கள் அடங்கிய வீரர்கள் குழுவொன்று அதற்கு ஓடோடி முன் வந்தது. அப்துல்லாஹ் பின் ஃகைஸ் தலைமையில் படகில் ஏறி கடலில் கிளம்பிய படையில் அபூதர் அல் கிஃபாரீ, ஷத்தாத் இப்னு அவ்ஸ், உபாதா இப்னு ஸாமித், அவருடைய மனைவி உம்மு ஹரம் பின்த் மில்ஹான் ஆகியோருடன் அபூதர்தாவும் முக்கிய வீரர். வெற்றிகரமாய் முடிவுற்ற அப்போர் சைப்ரஸை முஸ்லிம்கள் வசமாக்கியதால் அதன் பின்னர் கான்ஸ்டன்டினோபில் (Constantinople) நோக்கி முஸ்லிம் படைகள் முன்னேற வாசலை அகலத் திறந்து கொடுத்தது. ஹிஜ்ரீ 28-29ஆம் ஆண்டு அப்போர் நடைபெற்றது.

ஏராளமான பொருட்கள் போரில் கைப்பற்றப்பட்டன. நிறைய செல்வம் முஸ்லிம்கள் வசமாகின. அதையெல்லாம் கண்ட அபூதர்தா அழ ஆரம்பித்து விட்டார். ஜுபைர் இப்னு நாஃபிர் என்பவர், “என்ன அபூதர்தா, அல்லாஹ் இஸ்லாத்திற்கு சக்தியும் வெற்றியும் அளித்திருக்கும்போது என்ன காரணத்திற்காக அழுகிறீர்?” என்று ஆச்சரியமாகக் கேட்டார்.

“ஜுபைர்! அல்லாஹ்வோ வெற்றிமேல் வெற்றி அளிக்கிறான். வெற்றியும் ஆட்சியும் மேலோங்கி, அதனால் கிடைக்கும் வெகுமதியில் மனம் மயங்கி, இறைவனுக்குரிய வணக்கத்தில் முஸ்லிம்கள் அலட்சியமாகிவிட்டால் எத்தகைய அற்பர்களாய் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் மாறிவிடுவார்கள்?”

‘நேற்று மாட்சிமையுடன் ஆட்சி புரிந்து கிடந்தவர்கள் எல்லாம் இறைவனை அறியாமல் மறந்து, அகங்காரத்தில் இருந்ததால் இன்று முஸ்லிம்களிடம் தோற்றார்கள். அதைப் போன்ற மனோநிலைக்கு முஸ்லிம்களும் ஆளானால் இன்றைய வெற்றி அவர்களுக்கு நாளை என்னவாகும்?’ என்ற எண்ணம் ஏற்பட்டபோது அழுதார் அபூதர்தா. நியாயமான அழுகை! ஆச்சரியமான தீர்க்க தரிசனம்!

தொடர்ந்தது அவரது வாழ்க்கை.

சொச்ச காலமும் டமாஸ்கஸ் நகர மக்களுக்குக் குர்ஆனை போதித்தவாறு தொடர்ந்த அபூதர்தாவின் வாழ்க்கை, அவரது 72ஆவது வயதில் இறுதி நிலையை அடைந்தது. மரணப் படுக்கையில் கிடந்த அவரைச் சந்திக்க வந்தனர் அவரது நண்பர்கள்.

“எதனால் நோய்வாய்ப்பட்டீர் அபூதர்தா?” என்று அக்கறையுடன் விசாரித்தனர்.

“எனது பாவங்களினால்” என்று பதில் வந்தது.

“நீர் ஏதாவது விரும்புகிறீரா?”

“ஆம்! என் இறைவனின் பாவமன்னிப்பை”

பிறகு அவர்களிடம் வேண்டினார். “என்னை உச்சரிக்க வையுங்கள், ‘வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை. முஹம்மது அவனுடைய தூதர் ஆவார்கள்’. இதை நான் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். உதவுங்கள்”

உச்சரித்தார். தொடர்ந்து உச்சரித்தார். உச்சரித்துக் கொண்டே உயிர் துறந்தார் அபூதர்தா. ரலியல்லாஹு அல்ஹு!

முடிந்தது அவரது இவ்வுலக வாழ்க்கை. அது ஹிஜ்ரீ 32.

அவ்ஃப் பின் மாலிக் அல்-அஷ்ஃபயி என்றொரு தோழர் இருந்தார். வீரஞ்செறிந்த போர் வீரர். முஸ்லிம்கள் மக்காவைக் கைப்பற்றியபோது தனது இனத்தின் கொடியை அதன் சார்பாய் எடுத்துக் கொண்டு மக்காவினுள் நுழைந்தவர். பிற்காலத்தில் இவர் சிரியாவிற்குக் குடிபெயர்ந்து அங்கு வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் அபூதர்தாவின் மறைவிற்குப்பின் ஒருநாள் கனவொன்று கண்டார்.

மிகவும் விசாலமான பசும்புல் நிலம். அதில் நிழல் தரும் வகையில் பலவித மரங்கள். அந்த நிலத்தின் நடுவில் கவிகை மாடக் கூடாரம். தோலினால் ஆன அந்தக் கூடாரத்தின் வெளியே அவரது வாழ்நாளிலேயே கண்டிராத வகையில் அழகான செம்மறியாட்டு மந்தை.

“யாருடையது இது?” என்று கேட்டார் இப்னு மாலிக்.

“அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபினுடையது” என்று யாரோ பதில் கூறினார்கள். திடீரென்று கூடாரத்தின் உள்ளிருந்து அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் எட்டிப் பார்த்தார்.

“இது, எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு குர்ஆனில் வாக்குறுதி அளித்தவை. அதோ தெரிகிறதே அந்தப் பாதையின் மீது ஏறிச் சென்றால் நீர் கற்பனைகூட செய்து பார்த்திராதவற்றை கண்ணுறுவீர், செவியுறுவீர்”

“அது யாருக்குச் சொந்தமானது அபூமுஹம்மது?” அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபிடம் கேட்டார் இப்னு மாலிக்.

“எல்லாம் வல்ல அல்லாஹ் அதனை அபூதர்தாவிற்காகத் தயாரித்து வைத்துள்ளான். ஏனெனில் அவர் உலகில் வாழும்போது தனது இரு கைகளாலும் தனது முழு சக்தியையும் கொண்டு உலகப் பொருட்களையெல்லாம் தள்ளிவிட்டுக் கொண்டே வாழ்ந்திருந்தார்”

மாபெரும் சேமிப்பொன்றின் அளவற்ற செல்வந்தனாகிப் போனார் அபூதர்தா. நம்மால் கற்பனைகூட செய்ய இயலாத செல்வம் அது.

ரலியல்லாஹு அன்ஹு!

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்!

< தோழர்கள்-1 | தோழர்கள்-2 | தோழர்கள்-3 | தோழர்கள்-4 | தோழர்கள்-5 | தோழர்கள்-6 | தோழர்கள்-7 >


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.