தோழர்கள் – 8 – அபூதர்தா – أَبُو الدَّرْدَاءِ، عُوَيْمِرُ بنُ زَيْدِ بنِ قَيْسٍ الأَنْصَارِيُّ

கடை மூடப்பட்டது
Share this:

 

தோழர்களின் வரலாற்றைப் படிக்கும்போது ஒரு முக்கியமான விஷயத்தை நாம் எப்பொழுதுமே கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் – பெருக்கல் கணக்கிற்கு வாய்பாடு மனனம் செய்து வைத்துக் கொள்வோமில்லையா அதைப்போல. நமது வாழ்க்கை முறையினாலும் உலக நடைமுறையினாலும் இல்லறம், துறவறம், வீரம், என்பதெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை போன்ற எண்ணங்கள்தாம் நமது மனங்களில் உள்ளன. அதெல்லாம் அல்லாத வேறு பரிமானம் அவர்களுடையது. உலக இச்சையைத் துறப்பது இறைவனுக்காக; இல்லறம் நடத்துவது இறைவனுக்காக; ஒழுக்கம் பேணுவது இறைவனுக்காக! இதற்கெல்லாம் இங்கேயே கூலி கிடைக்கிறதோ இல்லையோ, சேர்த்து வைத்து பெற்றுக்கொள்வோம் மறுமையில் ஒட்டு மொத்தமாக என்று ஆகாயம் தாண்டிய லட்சியப் புள்ளி அவர்களுடையது. அதனால் போர் நடைபெறப் போகிறது இறைவனுக்காக என்று நபிகளிடமிருந்து அறிவிப்பு வந்தால் போதும். வாள், அம்பு, ஈட்டி என்று ஆயுதங்கள் ஏந்தி முதல் ஆளாகத்தான் களத்தில் நின்றார்கள் அவர்கள். அதனால் இஸ்லாத்தினுள் நுழைந்தபின் உலக வாழ்க்கையில்தான் எளிமையின் உருவாய் மாறினாரே தவிர, பின்னர் நிகழ்வுற்ற போர்களில் எல்லாம் நபிகளாருடன் இணைந்து வீர யுத்தம் புரிந்தவர் அபூதர்தா.

எளிமையின் கம்பீரம் அவர்.

நபிகளார், அபூபக்ரு (ரலி) ஆகியோரின் மறைவிற்குப் பிறகு உமர் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக ஆட்சி புரிந்து கொண்டிருந்த நேரம். உமர், அபூதர்தாவை அழைத்தார். உடனே புரிந்திருந்தால் நீங்கள் தோழர்கள் தொடரை ஒன்று விடாமல் படிக்கக் கூடியவர் என்று பொருள்! ஆம், அதேதான். “சிரியாவிலுள்ள ஒரு மாகாணத்திற்கு உங்களை கவர்னராக அனுப்பப் போகிறேன்” என்றார் உமர். “மாட்டேன்” என்றார் அபூ தர்தா. வற்புறுத்தினார் உமர். இசைந்துக் கொடுக்கவில்லை அபூதர்தா. ஆனால் உமருக்கு உதவும் வகையில் வேறொரு யோசைனையை இறுதியில் சொன்னார்:

“தாங்கள் வற்புறுத்துவதால் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. மக்களுக்கு குர்ஆனையும்  நபிவழியையும் கற்றுக் கொடுப்பதற்கும் அவர்களுக்கு இமாமாக நின்று தொழவைக்கவும் வேண்டுமானால் நான் செல்கிறேன்” பட்டம், பதவி இதெல்லாம் வேண்டாம், சேவை மட்டும்தான் செய்வேன் என்பது அதன் சுருக்கம். வேறு வழியில்லாமல் அதற்கு ஒத்துக் கொண்டார் உமர். டமாஸ்கஸ் நகருக்குக் குடும்பத்துடன் கிளம்பினார் அபூதர்தா.

ரோமர்களிடமிருந்து முஸ்லிம்கள் கைப்பற்றிய சிரியா, செல்வவளத்தில் சிறந்திருந்த பகுதி. அங்கிருந்த மக்கள் செல்வமும் சுகபோகமும் ஆடம்பரமுமே வாழ்க்கை என்று சுகித்துக் கொண்டிருந்தனர். மக்கா, மதீனாவிலிருந்து அங்குப் புலம் பெயர்ந்திருந்த முஸ்லிம்களையும் அதில் ஓரளவு ஒட்டிக் கொண்டுவிட்டது.  சிரியா வந்தடைந்த அபூதர்தா இதையெல்லாம் கண்டு திகிலடைந்து விட்டார். அவர் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கைக்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் இருந்தது அங்கிருந்த சூழ்நிலை. இதையெல்லாம் பார்த்துக் கொண்டு “எக்கேடோ கெட்டுப் போங்கள்” என்று இருக்க முடியாது அவரால். அவரால் மட்டுமல்ல, நபித்தோழர்கள் எவராலும் முடியாது. தோழர்கள் அவர்கள்! ரலியல்லாஹு அன்ஹும்.

அன்றிலிருந்து டமாஸ்கஸ் மக்களுக்குச் சிறந்த இஸ்லாமிய ஆசிரியர், ஆலேசாகர் ஆகிப் போனார் அபூதர்தா. மக்களைக் கூட்டி வைத்து அவர்களிடம் உரையாற்றுவது, பாடம் நடத்துவது, கடை வீதிகளில் உலாவி அங்குள்ள மக்களுக்கு அறிவுறுத்துவது, பொறுப்பற்ற முறையில் திரிபவர்களுக்கு ஆலோசனை பகர்வது என்று நொடிப் பொழுதும் வீணாக்காமல் மக்களிடம் நன்மையை ஏவித் தீமையை தடுப்பதே தலையாயப் பணியாகிப் போனார் அவர்.

ஒருநாள் சாலையில் அவர் நடந்து சென்று கொண்டிருக்கும்பொழுது சிலர் குழுமி நின்று ஒரு மனிதனை அடித்துக் கொண்டும் திட்டிக் கொண்டும் இருப்பதைக் கண்டு அருகில் சென்றார் அபூதர்தா.

“என்ன பிரச்சினை?”

அவன் ஏதோ ஒரு பாவ காரியம் புரிந்து விட்டிருந்ததை அவரிடம் தெரிவித்தார்கள் மக்கள்.

“அப்படியா? அவன் ஒரு கிணற்றில் விழுந்திருந்தால் நீங்கள் அவனைக் கைத்தூக்கி காப்பாற்றியிருக்க மாட்டீர்களா?” அவர்களிடம் கேட்டார் அபூதர்தா.

“நிச்சயமாக!”

“பிறகு ஏன் இப்படி? அவனைத் திட்டாதீர்கள், அடிக்காதீர்கள். அதை விடுத்து அவனுக்கு அறிவுரை கூறுங்கள். அவனது பாவத்தை உணரச் செய்யுங்கள். அவன் தெளிவு பெற்று விடுவான். மேலும் அல்லாஹ் உங்களையெல்லாம் அத்தகைய பாவத்தில் விழுந்துவிடாமல் காப்பாற்றியிருப்பதற்கு அந்த இறைவனுக்கு நன்றி கூறுங்கள்”

“அப்படியானால், உங்களுக்கு அவன் மேல் வெறுப்பு ஏற்படவில்லையா அபூ தர்தா?” என்று கேட்டார்கள் அவர்கள்.

“அவன் செய்த பாவ காரியம் – அதை மட்டுமே நான் வெறுக்கிறேன். அதற்காக அவன் உளம் வருந்துவானாயின், அவனும் எனக்கு சகோதரனே, மற்றபடி அவன் மேல் எனக்கு வெறுப்பு இல்லை” எத்தகைய பக்குவம் அது! எத்தகைய உள்ளார்ந்த ஞானம் இருந்தால் அத்தகைய வார்த்தைகள் வெளிப்படும்!

அடி வாங்கி நைந்துப் போய்க் கிடந்த அந்த மனிதன் காதிலும் அது விழுந்தது. இத்தகைய சொற்கள் அத்தகைய காதுகளில் விழுந்தால் என்ன ஆகும்? அவனது கண்களிலிருந்து பொல பொலவென்று கொட்டியது கண்ணீர். விம்மல்தான் வார்த்தைகளாய் வெளிப்பட்டது. “என் பாவத்தை நிச்சயமாக நான் உணர்ந்து விட்டேன். இதோடு இப்பாவத்திற்கு முழுக்கு. இனி இதன் புறம் திரும்ப மாட்டேன்” என்று பாவம் அச் சகோதரனின் உள்ளத்திலிருந்து வெளியேறி, அவனது வாய்வழியே ஓடியது.

தொடர்ந்தது அவரது வாழ்க்கை.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.